நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

வில்லவன் இராமதாஸ்

நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை எப்படி உருவாக்க முடியும்?

டாக்டருக்கு மட்டுமல்ல, எல்லா பணிக்குமே தகுதியானவர்கள்தான் வரவேண்டும். ஆனால் ஒரு வேலைக்கான தகுதி என்பது வெறுமனே தகுதியான ஆளை தெரிவு செய்வது மட்டுமில்லை. முறையான பயிற்சி, அனுபவம் மற்றும் அதனை அளவிடும் தேர்வுகள் வாயிலாகவே தகுதியானவர்களை உருவாக்க முடியும். மருத்துவப் படிப்புக்கு பெரிய போட்டி இல்லாத நாடுகளில் சராசரி மதிப்பெண் எடுத்த மாணவர்களே மருத்துவப் படிப்பை தெரிவு செய்கிறார்கள். அப்படியானால் அவர்கள் தரமான மருத்துவர்களை உருவாக்கவில்லையா? தரமான மருத்துவர்கள்தான் தேவை என்றால் நாம் செய்ய வேண்டியது மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதுதான்.

இங்கே நாம் தகுதியின் அடிப்படையில் மருத்துவ மாணவர்களை தெரிவு செய்வதில்லை. எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நம்மிடையே போட்டி அதிகம் ஆகவே இருக்கும் வழிகளில் ஒன்றான மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்கிறோம். ஜப்பானில் அறுவை சிகிச்சை மருத்துவ சிறப்பு படிப்புக்கு அவர்கள் கை மற்றும் கண்களுக்கு இடையேயான ஒத்திசைவு ஒரு தகுதியாக சோதிக்கப்படும். இங்கே அப்படியெல்லாம் இல்லை. நாம் எளிமையான வழியான மதிப்பெண்ணை வைத்திருக்கிறோம்.

சரியான தகுதித்தேர்வு என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அமெரிக்க மாநிலம் ஒன்றில் பணியாற்றும் பேராசிரியர் சொல்லும் வழி இப்படி இருக்கிறது,

மாணவரின் பொருளாதார சூழல் (வசதியான மாணவர்கள் சுலபமாக படிப்பதற்கான வாய்ப்புக்களை தேடிப்பெற இயலும்)

வீட்டுச் சூழல் (பெற்றோரில் ஒருவர் இல்லாவிட்டால் மாணவரின் சுமை கூடும், )

பிறப்பு வரிசை (முதல் குழந்தைகள் கடைசி குழந்தைகளைவிட இயல்பாகவே படிப்பில் பிரகாசிப்பதாக தரவுகள் சொல்கின்றன)

மேல்நிலை வகுப்புக்களில் மாணவர்கள் ஏதேனும் பெரிய உடலியல் மற்றும் மனநல பிரச்சினையை சந்தித்து மீண்டிருக்கிறார்களா?

அதோடு 9,10, 11,12 ஆம் வகுப்புக்களில் அவர்கள் எடுத்த மதிப்பெண்.

இவை அனைத்தையும் பரிசீலித்தே மாணவரின் இறுதியான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படவேண்டும்.

கூடுதலாக ஒரு வகுப்பில் பாலின சமநிலை மற்றும் வெவ்வேறு இன மக்களின் இருப்பு ஆகியவற்றையும் பராமரிக்கும்படியாகவே மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் (அதாவது வெறும் ஆண்கள் மட்டுமே இருக்கும்படியாகவோ அல்லது வெள்ளையின மக்கள் மட்டுமே இருக்கும்படியாகவே ”தகுதி” நிர்ணயிக்கப்படக்கூடாது, அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் தகுதியை சற்று சமரசம் செய்துகொண்டு சமநிலை கொண்ட வகுப்புக்கே முன்னுரிமை தர வேண்டும்)

இப்படியும் சில பல்கலைக் கழகங்கள் மாணவர்களை தெரிவு செய்கின்றன. ஆனால் அதனை செயல்படுத்த பெரிய அளவில் ஆள்பலமும், எல்லா துறை பணிகளுக்கும் ஓரளவு சமவிகித ஊதியம் மற்றும் ஓரளவு நேர்மையான கல்வித்துறையும் தேவை. அதற்கு வக்கில்லை என்பதால்தான் நாம் மதிப்பெண்ணை ஒரு  தகுதியாக வைத்திருக்கிறோம். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, டோக்கனை வீசியெறிந்து பொறுக்கச்சொல்வது, குலுக்கல் முறை ஆகியவற்றைவிட மதிப்பெண் சற்றே மேம்பட்ட வழிமுறை அவ்வளவே.

அப்படியானால் நீட் எனும் இன்னொரு தேர்வினால் என்ன கெட்டுவிடும்?

12 ஆம் வகுப்புத் தேர்வு மற்றும் நீட் தேர்வு ஆகியவை அடிப்படையில் வேறானவை. சிந்தனையில் இருந்து சொற்களை எடுத்து அதனை வாக்கியமாக்குவது ஒரு திறமை என்றால் மின்னல் வேகத்தில் சிந்தித்து ஒத்திருக்கும் பதிலில் சரியானதை தெரிவு செய்வது இன்னொரு திறமை. தமிழக மாணவர்கள் பதிலை எழுதுவதில்தான் 12 வருடங்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஏனைய உயர் படிப்புக்களுக்கு அப்படி படித்து வாங்கும் மதிப்பெண்தான் அடிப்படை. அது மாணவர்களுக்கு ஓரளவு பழக்கமாகியிருக்கிறது. இதில் புதிதாக நீட் எனும் தேர்வு நுழையும்போது அது மாணவர்களுக்கு ஒரு கறாரான விதியை நிர்ணயிக்கிறது. நீட் மதிப்பெண்னா அல்லது +2 மதிப்பெண்னா என்பதை முதலிலேயே நிர்ணயித்து அவர்கள் தமது படிப்பை துவங்க வேண்டியிருக்கிறது.

+2 தேர்வை வரையறையாக வைப்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிகள் +1 பாடங்களை புறக்கணிக்கின்றன போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்மையே. ஆனால் ஒரு பிரச்சினைக்கான தீர்வு பிர்ச்சினையைவிட மோசமானதாக இருக்கக்கூடாது.  நீட் மாணவர்களை இரண்டு பிரிவாக பிளக்கிறது. மருத்துவமா அல்லது வேறா என ஒற்றை முடிவை நோக்கி அவர்களை அழுத்துகிறது. ஒரே வாய்ப்பை தெரிவு செய்யும்போது அதில் ரிஸ்க் அதிகமாகிறது ஆகவே அவர்கள் அதில் பெரும் முதலீடு செய்யும்படிக்கு மறைமுகமாக தூண்டபடுவார்கள். பெரும் பணக்கார குழந்தைகள் அப்படியான ஒரு ஒற்றை இலக்கை நோக்கி நகர்வது சுலபம். அதற்காக முதலீடு செய்வதும் அல்லது மீண்டும் மீண்டும் முயற்சிப்பதும் சுலபம். வடமாநிலங்களில் 6 ஆம் வகுப்பு முதலே ஐ.ஐ.டி போன்ற தேர்வுகளுக்கு வசதியான மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். சைத்தன்யா போன்ற பள்ளிகள் இங்கேயும் அதனை செய்கின்றன. ஆனால் இப்படியான ஒற்றை இலக்கை நோக்கி சாமானிய மாணவர்களை விரட்டினால் அது கடுமையான மன அழுத்தத்துக்கு இட்டுச்செல்லும். காரணம் அவர்கள் ஒருவேளை தோல்வியுற்றால் என்ன வழி என்பதற்கு பதில் இல்லை.

மாநில அரசின் வடிகட்டும் முறை மாணவர்களின் ஒரு கையை கேட்கிறது என்பதற்காக மத்திய அரசு எனக்கும் ஒரு கையை கையை வெட்டிக் கொடு என கேட்பது நியாயமாகாது.

அப்படியானால் இது ஒரு நடைமுறை சிரமம், அதனை ஏன் தமிழகத்தின் மீதான பெரும் தாக்குதல் போல ஏன் சித்தரிக்க வேண்டும்?

காரணம் இது மத்திய அரசின் தாக்குதலில் ஒரு அங்கம் என்பதை நம்ப எல்லா முகாந்திரமும் இருக்கிறது. மருத்துவம், கல்வி என எல்லா சேவைகளையும் தனியார் வசம் ஒப்படைப்பதில் அரசு பெரும் முனைப்பு காட்டுகிறது. அதன் அங்கமாக அரசு அரசுக் கல்வியை ஒழிக்கும் நேரடி நடவடிக்கைகளை மோடி துவங்கிவிட்டார். 3 லட்சம் அரசுப்பள்ளிகளை மூடும் திட்டம், சிறப்பாக செயல்படாத பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் பரிந்துரை, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை குறைப்பது என அரசுக் கல்விக்கு சமாதி எழுப்பும் செங்கற்கல்களை விரைவாக அடுக்குகிறது மோடி அரசு. ஆகவே நீட் தேர்வையும் அதன் அங்கமாகவே நாம் பார்த்தாக வேண்டும்.

அந்த அடிப்படையில் பார்க்கையில் நாம் நீட்டை இன்னும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முன்னாலும்கூட கிராமப்புற மாணவர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் பெரிய அளவில் மருத்துவ சீட் பெறவில்லையே?

உண்மைதான், ஆனால் அதுவே நீட்டை ஏற்றுக்கொள்வதற்கான நியாயமாகிவிடாது. இப்போதைய சூழல் அடுத்த வட்டத்தில் இருக்கும் நடுத்தர வர்க மக்களையும் மருத்துவப் படிப்பு எனும் வாய்ப்பில் இருந்து வெளியேற்றுகிறது. உயர்கல்வியின் பரப்பு சுருங்கி இன்னும் தீவிரமாக பெரும் வசதியான மக்களிடம் மையம் கொள்கிறது. வட மாநிலங்களில் தேர்வுகளில் எத்தனை மோசமான திருட்டுத்தனங்கள் செய்யப்படுகின்றன என்பது தொடர்ந்து அம்பலமாகி வந்திருக்கிறது. டெல்லி எய்ம்ஸில் உயர் மருத்துவக் கல்வி படித்த சரவணன் கொல்லப்பட்டது சீட் போட்டியில்தான்.  இப்படி உயர்கல்வி வய்ப்புக்காக வடமாநிலங்களில் நடக்கும் குற்றங்கள் நம் கற்பனைக்கு எட்டாதவை. நீட்டின் வருகை இப்படிப்பட்ட பல கூடுதல் பிரச்சினைகளை தமிழகத்துக்கும் கொண்டு வரும். இப்போதிருக்கும் +2 மதிப்பெண் முறையை தமிழகமே மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகளை போராடியாவது நம்மால் பெற முடியும். நீட்டை ஏற்றுக்கொள்வது அந்த வாய்ப்புக்களை எல்லாம் எட்டாக்கனியாக்கிவிடும்.

அறிமுகமான முதல் ஆண்டிலேயே 1000க்கும் மேலான வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகும். கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் என துவங்கிய இந்த சுத்திகரிப்பு இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. கிராமப்புற மாணவர்களையும் அரசுப்பள்ளி மாணவர்களையும் இதுநாள்வரை புறக்கணித்த பாவத்தின் பலனைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம். அதே பாவத்தை மீண்டும் செய்ய விரும்பாமல் மக்கள் வீதிக்கு வருகிறார்கள் அவ்வளவுதான்.

மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காததற்காக தற்கொலை செய்துகொள்வது எப்படி சரியாகும்? அதனை தியாகப் போராட்டம் என வர்ணிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடாதா?

தற்கொலையை வெறுமனே விரக்தியின் வெளிப்பாடாக பார்ப்பதன் விளைவுதான் இந்த சிந்தனை. இந்தியாவின் சமூக பொருளாதார சூழலை புரிந்துகொள்ளாமல் நிகழ்வுகளை பார்த்தால் தீர்மானங்கள் இப்படித்தான் இருக்கும். தற்கொலைக்கான பிரதான காரணமாக விரக்தி இருக்கிறதே தவிர அதுவே ஒரே காரணமாகிவிடாது.

இந்தியாவில் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வாக முன்வைக்கப்படுவது படிப்புதான். வறுமையா? படி சரியாகிவிடும். சாதீய வன்முறையா? படி சரியாகிவிடும். ஒரு தனி மனிதன் மீதான எல்லா ஒடுக்குமுறைக்கும் தீர்வாக நன்றாக படிப்பது எனும் ஒற்றை யோசனையே முன்வைக்கப்படுகிறது. பாமர மக்களும் தமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கொடுப்பதற்கே அதிகம் போராடுகிறார்கள். சிறந்த படிப்பின் உச்சபட்ச எல்லையாக இருப்பது அரசுக் கல்லூரி எம்.பி.பி.எஸ்.

சாதி மற்றும் பொருளாதார படிநிலையில் கடைக்கோடியில் இருக்கும் அனிதா போன்ற ஒரு பெண் கல்வியின் உச்சத்தை தொட்ட பின்னும் அவரது வாய்ப்பை பணமிருக்கும் மாணவர்கள் இலகுவாக தட்டிக்கொண்டு போகையில் அந்த மாணவிக்கு இந்த சமூகத்தில் என்ன நம்பிக்கை மிச்சமிருக்கும்? இதுநாள் வரை உள்ளூர் அறிவுரை சப்ளையர்கள் முதல் உலக அறிவுரை சப்ளையர் அப்துல்கலாம் வரை எல்லோரும் படித்தால் போதும் படித்தால் போதும் என ஓதியவற்றை நம்பி தன் பள்ளி காலத்தை முழுமையாக செலவிட்ட ஒரு மாணவியை நீ மருத்துவம் படிக்க லாயக்கற்றவள் என டிஷ்யூ பேப்பரைப் போல தூக்கியெறிந்தால் அவள் எப்படி அதனை இயல்பாக கடந்துபோவாள் என நம்புகிறீர்கள்? 12 ஆண்டுகால உழைப்புக்கு ஊதியம் கேட்கும்போது உனக்கு தகுதியில்லை வேண்டுமானால் பிச்சை வாங்கிக்கொள் என்றால் சகித்துக்கொள்வீர்களா? ஏன் அக்ரி படிச்சா என்ன என்று அனிதாவைப் பார்த்து கேட்பதும் அப்படியானதுதான்

சில தருணங்களில் தற்கொலை ஒரு கூக்குரல், சமூகத்துக்கு விடுக்கும் செய்தி. எப்போதுதான் எங்களை கண்டுகொள்வீர்கள் எனும் ஆற்றாமை. அவர் வாழ்வதற்கான வாய்ப்புக்களை இந்த சமூகமும் அரசும் தரவில்லை. நீங்கள் காரணத்தை ஆராயாமல் விளைவை ஆராய்ந்தால் அனிதாதான் குற்றவாளியாக தெரிவார்.

பாடத்திட்டத்தை மாற்றினால் கல்வியின் தரம் உயரும் அல்லவா?

தரம் என்பதை யார் தீர்மானிப்பது? தரம் என்பதை அளவிட உலகெங்கும் இருக்கும் விதி, அது பயனாளியின் தேவையையும் விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான். இங்கே பயனாளி தமிழக மக்கள். அவர்களுகான தரத்தை எங்கோ இருக்கும் ஒருவனால் எப்படி தீர்மானிக்க முடியும்?

கல்வியில் தரம் என்பது பல கூறுகளை உள்ளடக்கியது. அரசு, ஆசிரியர்கள், சமூக பொருளாதார நிலையில் குறைந்தபட்ச சமநிலை, அனைவருக்கும் ஒரே தரமுடைய பள்ளிகள் என நீளும் அந்த பட்டியலில் பாடத்திட்டம் கடைசியாகத்தான் வரும். இந்தியாவில் தரமான கல்விக்கான எல்லா அம்சங்களையும் அரசே எட்டி உதைத்து நாசமாக்குகிறது. அந்த எல்லா பாவங்களையும் ஒரு நுழைவுத்தேர்வு கழுவிவிடும் என மக்களில் ஒரு பிரிவினரை நம்ப வைத்திருக்கிறது அரசு. இந்தியா போன்ற நாட்டில் வெறுமனே புத்தகத்தை மாற்றி கல்வியின் தரத்தை மாற்றலாம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இந்த கருத்தை சொல்லும் மனிதர்களிடம் ஒரேயொரு கேள்வியை முன்வையுங்கள். தரமான கல்வி, சமமான போட்டி தேவையென்றால் எல்லா பள்ளிகளையும் அரசே நடத்தி சமமான போட்டியை ஏற்படுத்த வழி செய்யலாமா என கேளுங்கள். அப்போது அவர்களது எதிர்வினையே உங்களுக்கு தரமான கல்வி பற்றிய அவர்கள் அக்கறையை அம்பலப்படுத்தும்.

நீட் வந்துவிட்டது, இனி எப்ப போராடினாலும் அதனை மாற்ற முடியாது. அப்படியானால் இனி அதற்கு தயாராவதுதானே வழி?

மாற்ற முடியாது எனும் வாதம் அனேகமாக சொல்பவரின் விருப்பம் மற்றும் அச்சத்தில் இருந்து வருகிறது. உலகின் பெரிய மாற்றங்கள் எல்லாமே இது நடக்க வாய்ப்பில்லை என பலராலும் நம்பப்பட்டவைதான். அசைக்க முடியாத சக்திகளை எல்லாம் போராட்டங்கள் அசைத்திருக்கின்றன. வருங்கால வைப்புநிதியை எடுப்பதற்கு மோடி விதித்த கட்டுப்பாடுகளை பெங்களூர் ஆடைத்தொழிலாளர்கள் ஒருநாள் முற்றுகையில் தகர்த்தார்கள். இங்கே கேள்வி நீங்கள் போராடத்தயாரா என்பதும் அதன் நியாயமும்தான். அது வெற்றி பெறும் எனும் கியாரண்டி கார்டை கொடுத்தெல்லாம் யாராலும் யாரையும் போராட்டத்துக்கு அழைக்க முடியாது.

உன் மனைவியையும் மகளையும் எனக்கு கூட்டிக்கொடு என நட்டின் அதிகாரம் மிக்கவர் கேட்டால் அனேகம் பேர் சாவுதான் முடிவென்றாலும் அதற்கெதிராக போராடுவார்கள். சில சமயங்களில் தர்க்க ரீதியான சாத்தியம் போராட்டத்தை தீர்மானிக்கக்கூடாது அது உங்கள் உணர்வை அழுத்தமாக எதிரிக்கு சொல்ல வேண்டும்.

இனி மக்கள் என்னதான் செய்வது?

நீட் தேர்வு என்பது மக்களை சூழ்ந்திருக்கும் ஏராளமான மரண முற்றுகைகளில் ஒன்று. கல்வி, மருத்துவம் என எல்லா சேவைகளையும் முற்றாக தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. பொதுவிநியோகத்தை சிதைத்து அழிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது. பாமர மக்களை அழித்தொழிக்கும்  தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கம் நீட். அதனை எதிர்ப்பது இந்த தொடர் அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான எதிர்வினை. இது குறைந்தபட்சம் உங்களை கொல்லும் செயல்பாடுகளை தள்ளிப்போடும். இதனை மவுனமாக ஏற்றுக்கொள்வது நீங்கள் அரசுக்கு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அழிக்க கொடுக்கும் லைசென்ஸ். அதற்கு தயாரென்றால் அமைதியாக இருங்கள். இல்லையென்றால் சிந்தியுங்கள், பேசுங்கள் வீதிக்கு வாருங்கள்.

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவருடையவலைப்பூ இங்கே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.