சமகால அரசியல் பொருளியல் பண்பாட்டுச் சூழலை அசைக்கும் நிகழ்வுகள் யாதொன்றுக்கும் தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள் தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்திருக்கின்றனர்.
அவ்வகையில் சமீபத்தில் நிகழ்ந்த அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.மதிப்பெண் தகுதியிருந்தும் லட்சிய தாகம் கொண்ட அனிதாவின் கனவை நீட் எனும் பூதம் சிதைத்திருக்கிறது. இம் மரணம் விரக்தியாலோ, கையறு நிலையிலோ, தோல்வி மனப்பான்மையாலோ நிகழ்ந்தது அன்று. மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளால் நிகழ்ந்தது இம் மரணம்.
அனிதாவின் மரணம் ஒரு தற்கொலையாகக் கருதப்படவேண்டியது அல்ல . அது நமது கல்விக் கொள்கைகளின் மீது எழுதப்பட்ட ஒருவகையான விமர்சனம். ஒரு மாணவி நிகழ்த்திய கல்வி உரிமைக்கான யுத்தம்.
இந்திய அளவில் இந்நிகழ்வு முக்கியத்துவம் மிகுந்ததாக அறிவுஜீவிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அனிதாவின் நினைவை ஏந்திப்பிடிப்பதென்பது எளியோருக்கான கல்வி உரிமையை, சமூகநீதியைப் பாதுகாக்கும் இயக்கமாக அமையும்.
அனிதா என்பவள் இன்று இந்தியப் பெருந்தேசியம்,ஏகாதிபத்தியம்,உலக வர்த்தகக் கழகம் போன்றவை குறித்து உரையாடும் அடையாளமாக மாறியிருக்கிறாள்.அரசு பள்ளிகள் அரசு மருத்துவ மனைகள் இவற்றின் அழிவிற்குப் பின்னாலிருக்கும் அரசியலை நமக்கு அடையாளம் காட்டிச்சென்றிருக்கிறாள்.
அரச பயங்கரவாதத்திற்கு பலியான கண்ணகி நீதி கேட்ட அதே மதுரை மண்ணில் நவீன அரச பயங்கரவாதத்திற்கு களப்பலியாகியிருக்கும் அனிதாவுக்கு நீதி கேட்க தமிழ்ப் படைப்பாளிகள்,கலைஞர்கள் ஒருங்கிணைகிறோம்.
அனிதாவை ஒரு மாணவி என்பதிலிருந்து உயர்த்தி, ஒரு போராளியாக தமிழ்ச் சமூகம் அவதானிக்கிற நிலையில் இந்த மரணத்தை ஓர் அரசியல் உரையாடலாக மாற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரை மற்றும் நாடகக் கலைஞர்கள் எனப் பரந்துபட்ட தளத்திலிருந்து நண்பர்களை திறந்த மனதோடு அழைக்கிறோம்.
மிகக்குறுகிய காலமென்பதாலும், எது ஒன்றுக்கும் ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது என்பதாலும் இங்கு சிலரை ஒருங்கிணைப்பாளர்களாக அடையாளம் கண்டுள்ளோம். மற்றபடி இந்நிகழ்வில் இணையும் ஒவ்வொரு படைப்பாளியின் பங்கும் மகத்தானதே.
வாருங்கள் செப்டம்பர் 10 இல் மதுரையில் இணைவோம்.நீதி கேட்போம்
பி.கு : செப்டம்பர்10 ஞாயிற்றுக் கிழமை பின்மதியம்.4:00 மணிக்குத் துவங்கி முன்னிரவு 9.00 மணி வரை மதுரையில் இந் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இடம், விரைவில் அறிவிக்கப்படும்.
அற்பப் புல்லென நினைத்தாலும் அடி மண்ணில் சல்லி வேர்களாக அவை ஒன்றுடன் ஒன்று காதலாய் கைகோர்த்திருப்பதை அறியா அரியாசனமே!!! மாற்றங்கள் எப்போதும் மக்களுக்கானதே!!! மறவாதே!!!
அனைத்துப்படைப்பாளிகள் கலைஞர்களின் சுதந்திரமான எதிர்க்கலைச் சங்கமத்தில் இணைந்து சமூக நீதியை முன்னெடுப்போம்.
ஒருங்கிணைப்புக்குழு
——-
சுகிர்தராணி
ஸ்ரீரசா
கரிகாலன்
செல்மா பிரியதர்ஷன்
அசதா
யவனிகா