யார் இந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு?

இரா. சிந்தன்

தோழர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு கொடுத்த ஆவணங்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? நீங்கள் எப்போது அழைத்தாலும் அவரிடம், அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் கேட்க முடியும். தமிழக கல்விச் சூழலை மேம்படுத்துவதும் – இருக்கின்ற சமூக நீதியைப் பாதுகாப்பதும் குறித்த கவலை எப்போதும் அவரிடம் நிறைந்திருக்கும்.

தான் தெரிந்துவைத்துள்ள விபரங்களை உடனே சமூகத்துக்குக் கடத்தி, கல்வி குறித்த புரிதலை ஒரு இம்மியாவது முன்நகர்த்திவிட வேண்டும் என்று நினைப்பவர். இதோ நான் பெரிய அறிவாளி என்ற எண்ணம் துளியும் கிடையாது அவருக்கு. ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்களுக்கு தரவுகளை கொடுப்பதை சலிக்காமல் மேற்கொள்வார்.

நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதற்காக – அனிதாவையும், அவரை ஒத்த பிற மாணவர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு கட்சி அலுவலகமாக அலைந்தார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். கையில் ஒருகட்டு நீதிமன்றத் தீர்ப்பு பிரதியை வைத்திருந்தார். எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்பதை கோடிட்டு வைத்திருந்தார்.

ஆளும் கட்சி – எதிர்க்கட்சி, ஊடகங்கள், கல்வியாளர்கள் என எல்லாவிடத்தும் முட்டி மோதினார். பல தலைவர்களுக்தரவுகளைத் தேடிக் கொடுத்தார்.

அனிதா உள்ளிட்ட மாணவர்களை ஒரு சில முறைகள் சந்தித்த எமக்கே – அவரின் மரணம் கேட்டு மனம் பதறுகிறது. அவர் உயிரோடிருக்கும்போதே, அவளின் கனவை, கடும் உழைப்பைப் புரிந்து பதறிய சில மனிதர்களில் ஒருத்தர் தோழர் பிரின்ஸ்.

அவதூறாளர்கள் கோலோச்சும் காலத்தின் அவலக் கோலத்தைப் பாருங்கள் – அனிதா உயிரோடிருக்கும்போதே போராடத் தொடங்கிய, விடாப்பிடியாக சமூக கவனத்தைத் திருப்பிய ஒருவரை – அவதூறு பேசி குறிவைத்து வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.

அவதூறாளர்கள் அழிந்துபடுவார்கள். அந்தத் தோழனின் நெஞ்சம் எத்தனை கலங்கும் என்பதை நினைத்துத்தான் வேதனையாக இருக்கிறது.

அந்த அற்பப் பதர்கள் ஒரே முறை பிரின்ஸ் நடத்திய சமரை, தொலைக்காட்சி விவாதங்களிலேனும் உள்வாங்கியிருந்தால் இப்படிப் பேச நாக்கூசியிருக்கும். யாரும் இப்போதும் அவரின் தொலைக்காட்சி விவாதங்களை, கட்டுரைகளைத் தேடிப் படிக்க முடியும். தோழர் பேசும் கருத்தரங்குகளில் அவரை உள்வாங்க முடியும். ஆனால் அதையெல்லாம் மேற்கொள்ள அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்.

தோழர் பிரின்ஸ் – இந்தப் பதிவை எழுதுவது, நீங்கள் யாரென்பதை பிறர் அறிய வைப்பதற்காக அல்ல. உங்கள் ஒவ்வொரு நகர்வையும் கவனித்து, கற்றுக்கொண்டு, பின் தொடர்ந்து வரும் இத்தனை தோழர்கள் இருக்கிறோம் – வழிகாட்டி முன்செல்லுங்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக.

அனிதா தன் மரணத்தின் சில நாட்கள் முன் வரை, தன்னைப் போன்ற பிறருக்காக பேசியிருந்தார். அந்தப் பிறருக்காக உழைக்க உங்கள் உறுதியான வழிகாட்டுதல் எமக்குத் தேவை.

தோழா, நாங்கள் உங்கள் வாதங்களை உள்வாங்கி வளர்ந்தோம். உங்களை நேசித்துப் பின் தொடர்கிறோம்.

இரா. சிந்தன், இடதுசாரி செயல்பாட்டாளர்.

முகப்புப் படம்: விக்கிப்பீடியா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.