டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

சின்னப்பன். எம்.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவன்.

ஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த ஒரு மாற்று பதிலும் இல்லாமல் போனதும், அந்த இரவை அத்தனை முக்கியமாக்கியது. அந்த கேள்விக்கான இடமே இருக்கக்கூடாது என்றுதான் முடிவு செய்துகொண்டேன். கிட்டத்தட்ட செலுத்தப்பட்டவன் போல்தான் அந்த ஒரு வருடம் இருந்தேன். என் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே கொஞ்சம் விலகிவிட்டேன். அப்பா ஆசிரியர் என்பதால் அவருடைய நண்பர்கள் அனைவரும் என்மீது அக்கறை கொண்டார்கள். தனி ஒருவனாக அவர்கள் வீட்டு மொட்டை மாடிகளில் அமர்ந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தேர்வு எழுதிக்கொண்டிருப்பேன். முந்தைய நாள் இரவே மொட்டை மாடியில் கேள்வித்தாளை வைத்துவிடுவார்கள். விடை தாளையும் அதே கல்லிற்கு கீழே வைத்துவிட்டு சத்தம்போடாமல் வந்துவிடுவேன். மாலையில் தாள்கள் திருத்தப்பட்டிருக்கும். குறைகள் அனைத்தையும் விளக்கி சொல்லித்தருவார்கள். ஒவ்வொருவரின் வீடும் எங்கள் விட்டிலிருந்து குறைந்தது 5 கி.மீ தூரம் இருக்கும்.

அப்போதெல்லாம் அந்த அலைச்சலில் தலையில் வியர்ப்பதால் அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்பதால், சலூனில் தலையின் பக்கவாட்டில் வெட்ட பயன்படும் மெஷினை கொண்டே முழு தலையையும் மழித்துக்கொண்டு ஒரு வருடம் முழுக்கவே மொட்டை தலையுடனே திரிந்தேன். வேண்டுமென்றே என்னிடம் இல்லாத இறுக்கத்தை சேர்த்துக்கொண்டேன். சிரிக்கக்கூடமாட்டேன். டிவி இருக்கும் இடத்தைக்கூட பார்க்கமாட்டேன். அம்மாவிற்கு என்னை இப்படி பார்ப்பதில் உவப்பில்லை, சீட் கிடைக்கவில்லையெனில் இம்ப்ரூவ்மெண்ட் செய்துக்கொள்ளலாம் என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும் அப்படி நொறுங்கிப்போய்விட்டேன். இத்தனை உடல் வருத்தங்களையும் மீறி எனக்கு சீட் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மை அத்தனை கசப்பாக இருந்தது. அப்பா, கணக்கு பாடத்திலும் அக்கறை காட்டு என்று சொல்வது, சூசகமாக என்ஜினியரிங் படிக்கவும் உன்னை தயார்ப்படுத்திக்கொள் என்று சொல்வதாக எனக்கு தோன்றும். கணக்கு பாடம் படிப்பதே ஒரு விதத்தில் என் தோல்விக்கு என்னை தயார் செய்துக்கொள்ளும் விஷயமாகவே எனக்கு தெரிந்தது. என்ஜினியரிங் அல்லது இம்ப்ரூவ்மெண்ட் இரண்டில் எது என்று கொஞ்சம் இரண்டாம் முடிவைப் பற்றி யோசித்துவைத்துக்கொள் என்று அப்பாவின் நண்பர்கள் சிலரும் சொல்லிவைத்தார்கள்.

மதிப்பெண் பட்டியல் வந்ததும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கவே தேவையில்லை என்பது எனக்கு அன்றைய தேதியில் அத்தனை சந்தோஷமாக இருந்தது. மெய்வருத்த கூலி கிடைத்தது. அந்த ஒரு வருட மோனத்தவத்திலிருந்து என் இயல்பிற்கு நான் திரும்பவே எனக்கு சில மாதங்கள் ஆனது.

சீட் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்திருப்பேன் என்று இப்போதும்
யோசிக்கமுடியவில்லை. என் அத்தனை கஷ்டங்களுக்கும் சீட் கிடைப்பது மட்டுமே ஒரே முடிவாக இருக்கமுடியும். அதையும் மீறி சீட் கிடைக்கவில்லை என்றால் அது என்னுடைய குறை/இயலாமை. அதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓரிரு மாதங்களில் என்னைத் தேற்றி கொண்டுப்போய் அண்ணா யுனிவர்சிட்டியிலோ, அந்தியூர்/ராசிபுரத்திலோ சேர்த்துவிட்டிருப்பார்கள். நாளடைவில் அதற்கு பழகியிருப்பேன். இயலாமை எப்போதும் நம்மை நம் தகுதிக்கேற்ப பழக்கப்படுத்திவிடும். பிரச்சனையில்லை.

ஆனால், நான் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்ணுடன் தயாராய் இருந்து, என் அத்தனை கனவும் மெய்யாகப்போகிறது என்று நம்பிக்கொண்டிருக்கும்போது, நீ படித்த எதுவுமே தேவையில்லை, நாங்கள் வேறொரு தேர்வு வைப்போம் அதுதான் உன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று யாரேனும் சொன்னால் எப்படியிருக்கும்? என்னிடம் கொடுக்கப்பட்ட பாடத்தில், என்னிடம் எதிர்ப்பார்க்கப்பட்டதை, என் அத்தனை உடல் உழைப்பையும் கொடுத்து, என் மனதை ஒருநிலை படுத்தி, போராடி நான் முழு தகுதியாளனாய் வென்று நிற்கும்போது, நீ ஜெயிக்கவில்லை, உனக்கு இதற்கான தகுதி இல்லை முத்திரை குத்தியிருந்தால்… அனுபவங்கள் பலவற்றைக் கடந்து வந்த இன்றைய நிலையிலிருந்தே சொல்கிறேன்…
நிச்சயம் தூக்கில் தொங்கியிருப்பேன்.

ஏனெனில் அது என் இயலாமையினால் வந்த தோல்வியல்ல. என் வலிமையை ஈவு இரக்கமின்றி சிதைத்து சின்னாபின்னமாக்கும் மோசடி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.