உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி

குட்டிரேவதி

குட்டி ரேவதி

அனிதாவின் உயிர்ப்பலி நாம் எளிதாகக் கடந்துவிடக்கூடியதாக இல்லை. நண்பர்கள், ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் அலைமோதுகிறார்கள். இயலாமையின் எல்லையில் எல்லோரும் பரிதவிக்கிறோம். இதற்கிடையில் சிலர், இதற்கெல்லாம் போய் தற்கொலைசெய்துகொள்ளலாமா, இன்னும் போராடியிருக்கவேண்டாமா என்றெல்லாம் அறிவுரை வழங்குகிறார்கள்.

நீட்’டுக்கு எதிராகப் பேசுபவர்களும், அனிதாவிற்கு ஆதரவாகப் பேசுபவர்களுமே கூட, அரைகுறை புரிதலுடன், உணர்ச்சிவயப்பட்டுப் பேசுகிறமே அன்றி இதைத் தொடரும் வழியறியோம். அனிதா போன்றோரின் பின்னணியிலிருந்து வரும் ஒரு பெண் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியும் நீதி கிடைக்காத நிலையில் தான் இந்த முடிவிற்குத் தள்ளப்படுகிறார்.

எட்டாக்கனியாக இருந்த கல்வியை எட்டிப்பிடித்த முதல் தலைமுறை பெண். உதவிக்கு குடும்ப பலமோ, பொருளாதார பலமோ இல்லாத நிலையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனையையும், போராட்டத்தையும் நிகழ்த்திக்காட்டியவர். இன்றைய இளைய தலைமுறையினர் அனுபவிக்கும் மனஅழுத்தம் என்பது, நவீன மனநல மருத்துவர்களாலேயே கையாளமுடியாதது, புரிந்துகொள்ள இயலாத சிக்கல்கள் நிறைந்தது.

அதிலும், சமூகத்தின் யதார்த்தம் அறிந்த ஒரு சிலரும் ஒற்றையாய் இச்சமூகத்தில் நின்று தனக்காகவும், தன்னைச்சார்ந்தவர்க்காகவும் போராடும்போது, இந்தச் சமூகம் தன் ஆதரவைத் தருவதில்லை. தோழர் வளர்மதியை நினைவில் கொள்வோம். அதிலும் அண்ணல் அம்பேத்கரையும் பெரியாரையும் தன்னளவில் உணர்ந்துவிட்டவர் தாம் உணரும் மனஅழுத்தத்தை இயக்கமாக அன்றி தனியாய் எளிதில் கடந்துவிட முடியாது. இரண்டாயிரம் வருடச்சுமையும் மூளையின் பின்புறம் அழுத்துதல் போன்றது தான், அது. ஆழம் செல்லச் செல்ல, மூச்சடைக்கும் மனநிலைக்குத் தான் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற தீவிர நிலையில் போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்குத் தேவைப்படுவது எல்லாம் 24 x 7 மணி நேரமும், தார்மீக ஆதரவு தரக்கூடிய நபர்கள் உடன் இருப்பது தான். இத்தகைய கொடுந்துயர் நேரங்களில் யாரும் உடன் இல்லாமல் கையாளும் பலம் இன்றி, மூச்சு முட்டிப்போய்த் தான் இந்த நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இது போன்று பலரை நாம் இதற்கு முன்னும் இழந்திருக்கிறோம்.

எல்லா வகையிலும் நாம் தான் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும். பிரச்சனைகளின் விபரீதம் அறியாமல், நீட்டிக்கிறோம். எதற்காக எல்லோரும் இணைந்து போராடவேண்டுமோ அதற்கு மெளனம் காக்கிறோம். ஒற்றுமையின்றி சிதறிக்கிடக்கிறோம். அனிதாவை இழப்பது என்பது ஓர் உயிரை இழந்ததாக மட்டுமே அர்த்தம் ஆகாது. ஒரு தலைமுறையின் முன்னகர்வை, பின்னுக்கு இழுப்பதாகும்.

என்னென்னவோ காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவரா டாக்டர், இவர் தலித், ரிசர்வேஷன், துணிவின்மை, வேறு படிப்பில்லையா என்ற வார்த்தைகள் பிழைப்பை நாடிப்போவோர் உமிழும் எச்சில் என்று தான் சொல்லவேண்டும். அவர் மருத்துவராவது, என்பது அவர் கண்ட கனவு மட்டுமே அல்ல, நண்பர்களே. அது, நம் எல்லோருக்குமான கனவும் தான். நினைத்துப்பாருங்கள், அவர் எவ்வளவு காலங்களுக்கான முன்னுதாரணமாக இருந்திருப்பார். நிலாவைக் காட்டி சோறு ஊட்டுதல் போல!

சமூகச்சிக்கல்களின் ஆழமும், சமூக அமைப்புகளின் அடிமைத்தனமும் ஒடுக்குமுறையும் நம் மீது ஏவப்படும் வன்முறைகளையும் உணர்ந்த வீர்யமான சமூகமாய் நாம் இல்லை என்பதைத் தான் இந்த உயிரிழப்பு நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பவர்களாய், கமெண்ட் அடிப்பவர்களாய், மற்றவர் துயர் ரசிப்பவர்களாய் நீண்ட காலமாய் இருக்கிறோம். நம் செயல்பாடுகள் எல்லாம் சிறுத்துப்போய் இன்று வெறுமனே ஆற்றாமையில் அரற்றுபவர்களாய் இருக்கிறோம்.

நாம் எல்லாவற்றையும் மீள்பரிசோதனை செய்யவேண்டிய காலகட்டம் இது. ஊடகங்கள் தொடர்ந்து திசைதிருப்புகிறார்கள். கருத்தியலை, நம் சிந்தனையை நசுக்குகிறார்கள். சமூகத்தை வழிநடத்தும், எதிரிகளை எல்லைகளுக்கு அப்பால் நிறுத்தும் தலைமை இன்மையைக் காரணம் காட்டி எல்லா சதிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. நம் வரலாற்றையும், கடந்த கால போராட்டங்களையும், நாம் செய்த பிழைகளையும், நம் மீது தொடர்ந்து இழைக்கப்படும் துரோகங்களையும் ஒருசேர நினைவில் கொண்டு நாம் இயங்கவேண்டிய காலம் இது.

குட்டிரேவதி, எழுத்தாளர், செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.