ஜி. கார்ல்மார்க்ஸ்

இப்போது என்ன நடக்கிறதோ அதேதான் நடந்திருக்கும். இந்த நீட் போன்ற தரப்படுத்துதல்கள் எல்லாம் நாம் அனுமதித்திருக்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கம். மன்மோகன் சிங்கைப் பற்றி நமக்குத் தெரியும். தனது எஜமானர்கள் காலால் இட்டதை தலையால் செய்யும் மாண்புடையவர் அவர். ஆனால் பிராந்தியக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியில் இருக்கிறபோது, இவ்வளவு மூர்க்கமாக இதை செயல்படுத்தியிருக்க முடியாது.
பல மக்கள் விரோத நடவடிக்கைகள் சென்ற காங்கிரஸ் அரசால் முன்னெடுக்க முடியாமல் போனதற்கு அரசியல் ரீதியாக அவர்கள் எண்ணிக்கை பலத்தில் குறைவாக இருந்தார்கள் என்பதே காரணம். இதன் பொருள் அவர்களுடன் கூட்டணியில் இருந்த பிராந்தியக் கட்சிகள் நேர்மையானவர்கள் என்பதல்ல. அவர்கள் உள்ளூர் மக்களின் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கவேண்டிய அழுத்தமே சில விஷயங்களை எதிர்க்கவேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது.
ஆனால் இப்பொழுதோ மிருகபலத்துடன் ஒரு வலதுசாரி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. மேலும், மன்மோகன் சிங்குகளின் காலம் முடிந்துவிட்டது என்று கருதியே மோடி ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த மூன்றாண்டுகளில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை அவர். உணர்வுகளைத் தூண்டும் அரசியலை திசை திருப்பும் அரசியலாகப் பயன்படுத்தமுடியுமே தவிர நீண்ட காலத்துக்கு அதைப் பயன்படுத்தமுடியாது.
மேலும் மக்கள் மிகத் தீவிரமாக அதிருப்தியடைந்துகொண்டே வருகிறார்கள். செய்யமுடியாத விஷயங்களைச் சொல்லி ஆட்சிக்கு வரும் எல்லாரும் எதிர்கொள்ளும் அபத்தத்தை இப்போது மோடியும் எதிர்கொள்கிறார். வரும் காலம் இதைவிட ஆபத்தானதாகவே இருக்கும்.
பிஜேபியை எதிர்த்து காங்கிரஸ் ஏன் எந்த போராட்டங்களையும் முன்னெடுப்பதில்லை?
நீட், ஆதார், GST, ரேஷன் கடைகள் குறைப்பு என்று எந்த விஷயமாக இருந்தாலும் அவையனைத்தும் காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்களே. காங்கிரஸ் அரசின் கொள்கையைத்தான் பிஜேபி அரசாங்கம் தீவிரமாகக் கடை பிடிக்கிறது. பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த காரணத்தால் மக்களிடம் பொய் சொல்லவேண்டிய, பசப்ப வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இருந்தது.
பிஜேபியின் இரத்தத்தில் இருக்கிற வலது சாரித் திமிர் அத்தகைய நெளிவு சுளிவுகளைக் கையாள அவர்களை அனுமதிக்க மறுக்கிறது. அதனால் மிகவும் திமிராகப் பேசுகிறார்கள். ஆக, காங்கிரஸ் பெருச்சாளிகள் மோடியின் பிம்பம் உடைவதற்காகக் காத்திருக்கிறார்கள்.
மேலும் இந்திய அதிகார வர்க்கம் காங்கிரசின் தோளோடு தோளாக வளர்ந்த ஊழல் அமைப்பு. மோடியைப் போன்ற சர்வாதிகாரிகள் இந்த அதிகார அமைப்பின் மூலமாகவே தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். மக்களிடம் தோன்றியிருக்கிற அதிருப்தியைக் களைவது அத்தனை எளிதல்ல என்று காங்கிரசுக்கும் தெரியும். மேலும் மேலும் மக்கள் பதட்டத்தை நோக்கி நகர்வது தங்களது அரசியல் வெற்றியை சாத்தியப்படுத்தும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட கொடநாட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் வெளியே வந்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவின் அணுகுமுறை.
அதனால் போராடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எங்காவது மத வன்முறை மரணங்கள் நடந்துவிட்டால், எழவு வீட்டில் போய் சம்மணமிட்டு போஸ் கொடுக்கிறார் ராகுல். பொருளாதாரக் கொள்கை மரணங்கள் என்று வருகிறபோது அவர் காக்கிற கள்ள மவுனமே கவனத்திற்கு உரியது. அந்த மவுனத்தில் மறைந்திருக்கிறது காங்கிரசின் அரசியல்.
அப்படியென்றால் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்கிறீர்களா?
இல்லை. நிறைய வேறுபாடு இருக்கிறது. காங்கிரசை ஒப்பிட சித்தாந்த ரீதியாகவே சாதி ரீதியான தரப்படுத்துதல்களில் நம்பிக்கை உடைய கட்சி பிஜேபி. என்னதான் முற்போக்கு முகமூடி போட்டாலும் வர்ண பேதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். “சாதிக்கு ஏற்ற புத்தி, தீனிக்கு ஏத்த லத்தி” என்பதுதான் அவர்களது சித்தாந்தம்.
பிஜேபியின் கருத்தியலை ஆதரிக்கிற இளம் தலைமுறையினர் கூட இந்த சாதி சார்ந்த திறன் குறித்து நம்புவதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். என்னதான் இருந்தாலும் “பார்ப்பானை விட ஒரு பறையன் திறனில் குறைந்தவனாகத் தானே இருக்கமுடியும்” என்று அவர்கள் உள்ளூர நம்புவதில் உறைந்திருக்கிறது வலது சாரி அரசியல். இந்த பண்புகள் காங்கிரசில் கிடையாது. காங்கிரசில் இருக்கிற சாதி ரீதியான மேட்டிமைத்தனத்தைக் கூட அவர்கள் பணம் சம்பாதிக்கவே பயன்படுத்துவார்கள். ஆனால் வலது சாரிகள் ஊழல் பணத்தை விட இந்த தூய்மைவாதம் முக்கியம் என்று கருதுவார்கள்.
இந்த சாதி தூயமைவாதத்துக்கும் தரப்படுத்துதலுக்கும் (screening) நெருக்கமான தொடர்பு உண்டு. அது முதலாளித்துவத்துக்கு உதவக் கூடிய பண்பு. ஒன்றுக்கொன்று இரத்தத் தொடர்புடையவை. இயல்பான பங்காளிகள். நீட் போன்ற விவகாரங்களில் பிஜேபி காண்பிக்கும் பிடிவாதத்தை நீங்கள் அந்த அர்த்தத்திலேய புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் இவ்வளவு நாள் குமைந்துகொண்டிருந்தார்கள். இப்போது அவர்களுக்குக் கிடைத்திருப்பது பெருவாய்ப்பு. அனிதா போன்றவர்களின் உயிரற்ற உடல்களின் மீது நடந்துதான் அதை எட்ட முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த வழியில்தான் அவர்கள் நடப்பார்கள்.
பிஜேபிக்கு எதிராக தமிழகத்தில் ஏன் வலுவான ஒருங்கிணைப்பு நிகழவில்லை? திராவிடக் கட்சிகள் அல்லது அதிலிருந்து பிரிந்து வெளியேறிய கட்சிகள் எதுவுமே இதைப் போன்ற விவகாரங்களில் ஏன் ஒன்றாகவோ தனித்தனியாகவோ போராடவில்லை?
முதலில், போராட்டம் என்பதே மக்கள் விரோதம் என்பது போன்ற மனநிலையைக் கட்டியமைப்பதில் கடந்த இருபது ஆண்டுகளில் முதலாளித்துவம் அடைந்த வெற்றிக்கு இதில் பங்கிருக்கிறது. ஒரு சாலை மறியலில், நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடுவதைப் போன்ற காட்சிகளை முன்வைத்து இத்தகைய சாலை மறியல் போராட்டங்கள் எவ்வளவு மக்கள் விரோதமானவை என்று திரைப்படங்கள் பேசத்தொடங்கியதும் அதை நாம் நம்பத்தொடங்கியதும் இதற்கு உதாரணம்.
இட ஒதுக்கீட்டு எதிராக, பண்பாட்டு ஒற்றுமைக்கு எதிராக இங்கு சினிமா உள்ளிட்ட நிறைய படைப்புகள் களமிறக்கப்பட்டன. சமூக நீதி பேசிய அரசியல்வாதிகளின் ஊழல்கள் பெரிதுபடுத்தப்பட்டு ஒன்று அவர்கள் சமூக விரோதிகள் போல சித்தரிக்கப்பட்டார்கள் அல்லது ஜோக்கர்களைப் போல திரிக்கப்பட்டார்கள். அதற்கு இணையாக, போராட்டங்களின் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் இயல்பாக அதிகார வர்க்க ஊழல் சுவைக்கு அடிமையாகி மக்கள் நல அரசியலில் இருந்து அப்புறப்படத் தொடங்கின. அங்கிருந்து சமரசங்கள் தொடங்கின. அதிருப்தியடைந்த மக்களை தமது போலி அன்புடன் வலது சாரி அமைப்புகள் அரவணைப்பது நடந்தது. மேலும், சாதிகளுக்கு இடையே போட்டிகள் ஊக்குவிக்கப்பட்டன.
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் வன்னியர்களது இடங்கள் தலித்துகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்கிற வாதம் சமூகத்தின் கீழ்மட்டம் வரை பரவியிருக்கிறது. வன்னிய ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்தி சமூகத் தளத்தில் பங்களிக்கத் தொடங்கிய பாமக வெகு வேகமாக ஊழல் மயப்பட்டது. இன்று அது முன்னெடுக்கும் தலித் விரோத அரசியல் அதை வெளிப்படையாக கண்டிக்கத் துப்பற்ற (சில நேரங்களை அந்த மோதலை ஊக்குவிக்கிற…) திமுக அதிமுகவின் அதிகார அரசியல் என இவர்கள் பொது விஷயத்திற்காக ஒருங்கிணையும் புள்ளிகள் குறைந்து போய்விட்டன.
திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு இணையான போட்டியாளர்கள் அரசியல் தளத்தில் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். எப்போதைக்குத் தேவையோ அப்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஆட்களாக தலித் இயக்கங்களை அவர்கள் கட்டுக்குள் வைத்தார்கள். சமூகத் தளத்தில் தலித்திய வன்னிய பிரநிதித்துவத்தை தங்களது கள்ளக் கூட்டணி மூலம் திமுகவும் அதிமுகவும் மட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்தது.
மறுபக்கம் அதிமுகவில் தமது ஆதிக்கத்தை நிலைக்கச் செய்ததன் வழியாக தேவர் சாதிகள் தமது இருப்பை ஆழமாக தமிழக அரசியலில் உறுதி செய்தன. ஜெயலலிதாவின் பார்ப்பனத் தலைமை இந்த ஆதிக்க சாதிகளின் ஒன்றிணைவை கட்சிக்குள் சாத்தியப்படுத்தியிருந்தது. இப்போது அங்கு நடக்கும் கவுண்ட, தேவ நாய்ச்சன்டையின் அடிப்படை அங்கு ஒரு பார்ப்பனத் தலைமை இல்லை என்பதே. பிஜேயின் குறி அத்தகைய ஒரு தலைமையை உருவாக்கி அங்கு நிலை நிறுத்துவதே. இப்படியாக ஒவ்வொரு கட்சியும் தமிழகத்தில் தனித்தனி கணக்குகளுடன் இயங்குவதால் பிஜேபிக்கு எதிரான திரட்சி சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.
அதிமுக என்றில்லை, வாய்ப்பிருந்தால் பிஜேபிக்கு கால் நக்கும் வேலையை – படும் எச்சிலில் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம் – திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் செய்யும் என்பதே இன்றைய எதார்த்தம்!