அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் வாய்ந்த மாணவி அனிதா நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வுக்கான வினாதாள்கள் அனிதா படித்த மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை; மாறாக மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் தயாரிக்கப் பட்டதால் அனிதாவை போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நீட் தேர்வின் மூலம் மதிப்பிழக்க செய்துவிட்டனர். இதனால் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் ஊசலாட்ட நிலையில் இருந்ததால் மாணவர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வளர்த்துவிட்டது. ஒருபுறம் நீட்தேர்வுக்கு எதிரான சட்டங்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டு இன்னொருபுறம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பாக அரசாணையையும் பிறப்பித்தது. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்டத்தை மீண்டும் இயற்றியது. இதன் மூலம் அனிதா உள்ளிட்ட மாணவர்களிடையே தமிழக அரசு மறுபடியும் ஒரு நம்பிக்கையை விதைத்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அச்சட்டத்தை தள்ளுபடி செய்ய வாதாடினார் . அதன்படி அச்சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய அரசும் மாநில அரசும் நடத்திய நாடகம் இன்றைக்கு அனிதாவை பலியிட்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இந்த உயிர்பலிக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மாணவச் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும், நீட் தேர்வை வலிந்து திணித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், மத்திய அரசுக்கு பணிந்தும் இணங்கியும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசின் போக்கினையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

நீட் தேர்வை தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் என்றில்லாமல் அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டுமென குரலெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவச் சமூகம் வெகுண்டெழுந்து அறவழியில் போராட முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கவேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நடவடிக்கைகளில் ஒருபோதும் முயற்சித்தல் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்”என தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.