கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…

ஜி. கார்ல் மார்க்ஸ்

இந்த விவேகம் திரைப்படம் தொடர்பான செய்திகளையும் விவாதங்களையும் சமூக ஊடகங்களில் கவனிக்கையில் ஒன்று மட்டும் தெரிகிறது. நமக்கு சினிமா என்பது மதம். நடிகர்கள் கடவுள்கள். நமக்குப் பிடித்த கதை நாயகர்களை யாராவது விமர்சித்துவிட்டால் நாம் மிக ஆழமாகக் காயமடைகிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்த விரும்புகிறோம். குறைந்த பட்சம் நாம் இயங்கும் சைபர் வெளியிலாவது  ரத்தம் தெறிக்கவைத்தால்தான் நமக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அளவில் குறைந்தது என்றாலும் ஒருவித “தணிக்கை மனநிலையை” நோக்கி எல்லாரையும் தள்ளியிருப்பதில் அஜித் ரசிகர்கள் இந்த விவகாரத்தில் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

தீவிர மசாலா சினிமாக்கள் தமிழுக்குப் புதிததல்ல. இங்கு எடுக்கப்பட்ட மாற்று சினிமாக்களை ஒப்பிட கருத்தியல் ரீதியாகக் கூட சீர் மிகுந்த வணிக சினிமாக்கள் வெளிவந்திருக்கிறது என்பது வரலாறு. சினிமா தியேட்டர்களில் அடித்துக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வது, சினிமா மோகத்தில் குடும்பத்தைக் கவனிக்காமல் விடுவது, என் தலைவன் உசத்தியா உன் தலைவன் உசத்தியா என்று போட்டி போட்டுக்கொண்டு அது சண்டையில் முடிந்து சார்ந்தோர் சந்தியில் நிற்பது என இதன் உப விளைவுகள் நமது அன்றாட வாழ்வில் நாம் கண்டதும் கேட்டதும்தான்.

விஞ்ஞான வளர்ச்சி என்பது மற்ற விஷயங்களில் எப்படியே, திரையரங்குகள், டிக்கெட் கவுண்டர்கள் போன்ற கொலைக்களங்களில் இருந்து மக்களை விடுவித்ததற்காக டிவிக்கும், சிடிகளுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.   சினிமா     உருவாக்கம், சினிமா அரங்கங்கள், திருட்டு விசிடி, ப்ரோமோ, வியாபாரம், விநியோகம், டாரண்ட் போன்றவற்றில் பாரதூரமான மாற்றங்கள் அந்தத் துறையில் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனை குறைகள் இருந்தாலும், அங்கு நிகழ்ந்திருக்கிற மாற்றங்கள் என்பது ஓரளவுக்கு ஜனநாயகப் பூர்வமானவை. அடிப்படை மனித விழுமியங்களுக்கு நெருக்கமானவை. அதற்கு பயனளிக்கக்கூடியவை.

மாறாக நம் சூழலில் சினிமாவில் நிகழ்ந்த எந்த முன்னேற்றங்களும் மாற்றங்களும் ஒரு விஷயத்தில் எந்த மாற்றத்தையும் விளைவிக்காமல் தோற்றுப்போனது என்றால் அது தீவிர ரசிகர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிற வேறெந்த அடையாளமும் அற்ற சினிமா பொறுக்கிகளிடம்தான். பெரும்பாலும் சினிமா சினிமா என்று அலையும் உதிரிகளை ஒன்றுக்கும் உதவாத சமூக விரோதிகளைப் போல காணும் சமூகப் பண்பு நம்மிடம் உண்டு. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் அத்தகைய ரசிகர்களை நீங்கள் காணமுடியும்.

வந்த அன்றே அந்தப் படத்தைப் பார்த்துவிடுவது, மீண்டும் மீண்டும் பார்ப்பது, ரசிகர் மன்றங்கள் அமைத்துக்கொண்டு கொடி கட்டுவது, ஊர்வலம் செல்வது, நடை உடைகளில் தனது பிரத்யேக நடிகனின் பாவனைகளை வெளிப்படுத்துவது, போட்டி நாயகனின் குணங்களை கிண்டல் செய்யும் உடல்மொழியை வெளிப்படுத்தி அந்த நாயகனை விரும்பும் மற்ற ரசிகர்களை  சீண்டுவது, பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்படும் தரப்பினரை மேலும் மேலும் ஒடுக்கும் ஆண்மையப் பார்வையை ஆண்மையின் கம்பீரமாக வரித்துக்கொள்வது என்பதாக இதன் குணங்கள் தம்மை வெளிப்படுத்திக்கொண்டன. இது அப்படியே இன்றைய நவீன உலகத்திலும் இருக்கிறது. அதன் வடிவம்தான் வேறு. மேலும் இதற்கு ஒரு சமூக அந்தஸ்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் இந்த விஷயத்தில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி. பொறுக்கித்தனத்தில் ஒரு தீவிர எம்ஜியார் ரசிகனும் அஜீத் ரசிகனும் ஒன்றுதான். போட்டிருக்கும் சட்டையின் கலர் வேறு, செய்யும் வேலை அடைந்திருக்கும் கல்வித்தகுதி வேறு என்பதைத் தவிர வேறு மாற்றமில்லை.

எம்ஜியார் காலத்து அரசியலுக்கும், இன்றைய சமகால அரசியலுக்கும் இருக்கும் பிரத்யேக வேறுபாடு என்பது நமக்கு முன்னால் மிகுந்து நிற்கிற ஊடகங்கள் மற்றும் அரசியலைத் தெரிந்துகொள்ள நமக்கு இருக்கிற வாய்ப்பு என்பதில் இருக்கிறது. மேலும், ஒரு தவறான அரசியல் முடிவு சிவில் சமூகத்தால் எடுக்கப்படுகிறபோது, அந்த மையின் ஈரம் காய்வதற்கு முன்னாலேயே அதன் விளைவுகள் அப்பட்டமாகதெரியத் தொடங்குகிற வேகம் வேறு. இவையெல்லாம் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களுக்கு வாய்க்காதவை. இதை அப்படியே ரசிகர்களுக்குப் பொருத்திப் பார்த்தால், அதன் எல்லைகள் கற்பனைக்கு எட்டாதவை என்பது புரியும்.

இன்று வலைத்தளங்களில் கிடைக்காத ஒன்று என்பதே கிடையாது. ஓரளவு வசதியுள்ள கிராமங்கள் முதல் இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்கள் வரை இணைய வசதி இல்லை என்பதே இல்லை என்று ஆகியிருக்கிறது. ஒரு சினிமா ரசிகனின் முன்னால் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு என்று பார்த்தால், அவனது வாழ்க்கை மொத்தத்தையும் பணயம் வைத்தால் கூட துய்க்க முடியாத அளவுக்கு மலையைப் போல குவித்துவைக்கப்பட்டிருக்கும் உச்சமான கலைகள். வித விதமான ரசனையைத் தூண்டுகிற படங்கள், மேதைமையை வெளிப்படுத்துகிற படங்கள்  என அப்படி ஒரு வாய்ப்பு அவனது முன்னால் கொட்டிக்கிடக்கிறது.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் எம்ஜியாரின் சிவாஜியின் படத்திற்காக தவம் கிடந்த ஒரு ரசிகனும் இருபது வருடத்துக்கு முன்னால் ரஜினியின் கமல்ஹாசனின் படத்திற்காகக் காத்திருந்த ஒரு ரசிகனும் இன்று அஜித்திற்காக விஜய்க்காக காத்திருக்கிற ரசிகனும் ஒன்றா என்ற கேள்வி இருக்கிறது? இதை நாம் திறந்த மனதுடன் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். வயதில் குறைவென்றாலும் மற்ற எந்த கலையையும் விட சினிமா எனும் கலை மனிதப் பரப்பிற்குள் ஊடுருவிய வேகம் என்பது கற்பனைக்கு எட்டாதது. மேலும் அதே வேகத்தில் அது மற்றைய கலைகளைத் தின்றுசெரித்தது. அவற்றை இல்லாமல் ஆக்கியது. நம் இந்தியச் சூழலில் மற்ற எல்லா கலைகளையும் விளிம்பிற்குத் தள்ளியதில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு.

இதன் வசீகரத்திற்கு முக்கியக் காரணம் அதனால் நாம் அடைகிற துய்ப்பின்பம். எந்த உழைப்பும் இல்லாமல் காண்பதன் வாயிலாகவே எல்லா நுகர்ச்சியையும் அனுபவிக்க அது தரும் வாய்ப்பு. மேலும் மிக முக்கியமாக எளிய விஷயங்களைக் கூட பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கிக் காட்ட முடிந்த அதன் வீச்சு. இறுதியாக, அற்பத்தனங்களையும் கூட கலையாக மாற்றி பார்ப்பவனின் முன்னால் பரிமாற முடிகிற அதன் ஜிகினா மினுமினுப்பு. (இப்படி நான் சொல்வதை சினிமா எனும் கலையை மாற்றுக் குறைந்தாக சொல்வதாக புரிந்துகொண்டுவிடக் கூடாது. மற்ற கலைவடிவங்களை விட இங்கு அசலுக்கும் போலிக்குமான கோடு ரொம்பவும் அரூபமானது என்பதே நான் சொல்ல வருவது).

தமிழத்தில் சினிமா அடிமைகள் என்று அறியப்படுகிற பெரும்பான்மை ரசிகர்கள் கலைக்கு அடிமையானவர்கள் அல்ல இந்த ஜிகினாத் தனத்துக்கு அடிமையானவர்கள். அதன் காரணமாக கை நடுங்குகிறவர்கள். சமூக ஊடகங்களில் வெளிப்படும் பெரும்பகுதி ஊளைச் சத்தம் இத்தகைய நோயாளிகளிடம் இருந்துதான் கசிகிறது. கலையமைதி என்பது கூச்சலுக்கு எதிரானது. கூச்சல் மிகுதியாக இருக்கிறது என்றால் கலை தாழ்ந்திருக்கிறது என்று பொருள். ஆனால் இங்கோ, கூச்சல் இல்லாமல் ஒரு ரசிகக் குஞ்சும் உயிர்த்திருப்பதில்லை. மேலும் சினிமா அடிமைகள் உருவாவதில் யாரும் காணாத  புள்ளி ஒன்று உண்டு, அது இத்தகைய அடிமைகளின் உருவாக்கத்தில் மற்றைய கலைகளை அது அழித்ததன் வன்முறைக்கு இருக்கும் பங்கு மற்றும் மேலும் அதன் வழியாக அது சாத்தியப்படுத்திய  அரசியல் சொரணை நீக்கம். இது எங்ஙனம் நிகழ்கிறது என்று பார்ப்போம்.

கலையின் ஆதார அடிப்படை என்பது, “தம்மை நோக்கி வருபவர்களிடம்  அது தமது கலைத்துவம் செயல்பட அனுமதிக்கும்” என்பதே. “கலை போலி” என்பதற்கும் இந்த அளவீடே அடிப்படை. போலியான கலை தம்மிடம் வருபவனை வெளிறச் செய்யும். மிக முக்கியமான உண்மையான கலையை நோக்கிய அவனது தேட்டத்தை இல்லாததாக்கும். அதன் மீதான வெளிச்சத்தை மறைப்பதன் வழியாக அவனை சிறைப்படுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக நிஜக் கலையின் மீதான ஒவ்வாமையைக் கூட்டி அவனை கலைக்கு எதிரானவனாக நிறுத்திவிடும். ஒருவனை கலைக்கு எதிரானவனாக மாற்றுவது என்பது அவனை அவனால் அடைய முடிந்த ஆன்மீக விடுதலைக்கு எதிராக மாற்றி நிறுத்துவதும்தான். அந்த வகையில் போலியான மசாலா திரைப்படங்கள் செய்வது ஒரு தனிமனிதனை சமூக விரோதியாக மாற்றும் செயலே. அந்த வகையில் இங்கு இருக்கிற பெரும்பான்மைக் கதாநாயகர்கள் குற்றவாளிகளே.

அவர்களை விதந்தோதுகிற, அதற்கு எல்லா வகையிலும் முட்டுக்கொடுக்கிற ஆளுமைகளும் தன்னளவில் உதிரிகளே. தன்னை எதற்குள்ளும் பொருத்திக் கொள்ள முடியாத, கலையின் வழித்தடத்தில் நகரத் தேவையான குறைந்த உழைப்பைக் கூட நல்கத் தயாராக இல்லாத சோம்பேறிகளே மசாலாக் குப்பையில் தலையை நுழைத்துக்கொண்டு திளைப்பார்கள். தனது போதையின் அருவருப்பை தானே சகிக்கமுடியாமல் போகிறபோது, அதை ஹீரோயிசம் போல கட்டமைக்கப் முயல்வார்கள். அந்த வெற்றுக் கூச்சலின் கிளுகிளுப்பில் அடையும் உன்மத்தமே, என் தலயைப் போல வருமா என் தளபதியைப் போல வருமா எனும் அற்பத்தனமாக பொதுவெளியில் வழிந்தோடுகிறது. இதற்கு எந்த பொருளும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்.

ஏனெனில் இந்த ஹீரோயிசம் மிகவும் போலியானது என்பது மற்றவர்களை விட கத்துபவர்களுக்குத் தெரியும். சினிமாவில் கதை இல்லை என்பதற்குக் காரணம் இந்த தேசத்தில் கதை இல்லை என்பதல்ல அதை எடுக்க திராணியில்லாத பேடிகள் உங்களது கதாநாயகர்கள் என்பதே. ஒரு கதிராமங்கலத்தை உற்றுப் பார்த்தால் நீங்கள் பல்கேரியாவில் போய் பல்டியடிக்கவேண்டிய அவசியம் இருக்காது. அதைப் படமாக எடுப்பதற்கு உண்மையான கலையின் மீதான வெறித்தனம் வேண்டும். அது ஏன் நம் கதாநாயகர்களுக்கு இல்லை என்று கேள்வியை நோக்கிப் போனால் லாப வெறியை கலையாகப் பரிமாறும் அவர்களின் அபத்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். அப்படிப் புரிந்துகொள்ளும்போதுதான் நீங்கள் கிழிக்க வேண்டியது ப்ளூ சட்டையை அல்ல என்றும் தெரியும்!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ,  ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள்.  360° ( கட்டுரைகள்) தற்போது வெளியாகியுள்ள நூல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.