
கே. ஏ. பத்மஜா
சமீபத்தில் வெளியான ‘தரமணி’ இந்த 21-ம் நூற்றாண்டின் ஆண், பெண் உறவையும், உளவியல் சிக்கலையும் விவாதத்துக்குரிய வகையில் பதிவு செய்துள்ளதாக பேசப்படும் இந்தத் தருணத்தில், நான் கொஞ்சம் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த ‘மறுபடியும்’ படத்தை திரும்பிப் பார்க்க வாஞ்சிக்கிறேன்.
‘மறுபடியும்’ 1993-ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, ரோகினி, அரவிந்த் சாமி நடித்து வெளிவந்த திரைப்படம். முரளிகிருஷ்ணா (நிழல்கள் ரவி) ஒரு திரைப்பட இயக்குனர். துளசி (ரேவதி) தன் வீட்டை எதிர்த்து முரளிகிருஷ்ணாவை காதல் திருமணம் புரிந்து ஐந்து வருடங்களாக சந்தோஷமான திருமண வாழ்க்கையை நடத்துவார். திருமணத்திற்குப் பிறகு கணவன்தான் உலகம் என்று வாழும் ஒரு மென்மையான மனைவி. பட இயக்கத்தின்போது கவிதா (ரோகிணி) உடன் ஏற்படும் உறவு ஒரு கட்டத்தில் துளசியை விவாகரத்து செய்துவிட்டு கவிதாவை திருமணம் செய்ய முடிவு செய்வார். துளசியின் உரிமைப் போராட்டமும், மனரீதியான போராட்டமும், தெளிவையும் நேர்த்தியாய் கோர்த்த படம் ‘மறுபடியும்’.
தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவுத் தொடர்பு வைத்து இருக்கிறான் என்று தெரிந்ததும் உடைந்துபோகிறாள் துளசி. அவன் முகத்தைக் கூட பார்க்க விரும்பாத நிலையில், முரளிக்கு குடிபோதையில் கண்ணாடித் துண்டு காலில் குத்தும்போது அவனுக்கு மருத்துவ உதவி செய்யும் துளசி, அவன் தொடுதலைக் கூட அனுமதிக்க மாட்டாள். அந்தப் பெண்ணை விட்டு வரும்படி கெஞ்சி பார்ப்பாள். தன்னுடைய கணவனை தன்னிடம் திருப்பி தந்துவிடும் படி கவிதாவிடம் கெஞ்சுவாள். துணித்து குரல் உயர்த்தி சண்டை போடுவாள். தன் கணவன் தனக்காய் வாங்கிக்கொடுத்த வீடு கூட கவிதாவின் பணத்தில்தான் என்று தெரிந்ததும், அதை தூக்கி எறித்துவிட்டு சுயமரியாதையுடன் வாழப் புறப்படுவாள். தன் எஞ்சிய காலத்துக்கு விடை தெரியாமல் தவிக்கும் துளசி, வாழ்க்கையின் புது அர்த்தத்தையும், வாழ்வதற்கான புதுக் காரணத்தை தேடிக் கண்டுகொள்வாள்.
இந்தப் படத்தில் துளசியின் நிலைமைக்கு ஒரு முதுகெலும்பு இல்லாத சபல எண்ணம் கொண்ட கணவன் மட்டும்தான் காரணம் என்றாலும், துளசியை இந்தச் சமூகம் எப்படி கையாண்டது என்பதுதான் நமக்கான பாடம்.
துளசியின் உயிர்த் தோழி: சிறு வயது முதல் துளசியின் எல்லா சுக, துக்கத்திலும் பங்குகொண்டு ஆலோசனை சொல்லி துணை நிற்பவள் துளசியின் கைவிடபட்ட நிலையிலும் அதே உறுதுணையைக் கொடுப்பாள்.
ஹாஸ்டல் வார்டன்: வீட்டை விட்டு வெளியேறி நிர்கதியாய் நிற்கும் துளசிக்கு தங்குவதற்கு இடம் தேவைப்படும்போது அவளுக்கு போதுமான அவகாசம் கொடுத்து அங்கு தங்கவைத்து தேவையான முதல் பாதுகாப்பைக் கொடுப்பாள்.
கௌரி சங்கர்: நல்ல நண்பனாய் அறிமுகம் ஆகும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) துளசியின் மனப்போராட்டங்களை புரிந்துகொண்டு சந்தர்ப்பத்தை உபயோகிக்க காத்திராமல், அவள் தன் வாழ்க்கைகான புது அர்த்தத்தைத் தேட உறுதுணையாய் இருப்பான்.
கௌரியின் பாட்டி: ஒரே ஒரு வசனம்தான். துளசியின் முழு கதையையும் கேட்டுவிட்டு “நீ உங்க வீட்டுக்கு போய் இருக்கணும் அல்லது உன் கணவன் வீட்டில் வாழ்ந்து இருக்கணும்” என்பார். பாட்டியின் பார்வையில் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு குடும்பம் மட்டுமே.
கவிதாவின் தாய்: தன் மகள் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்ததும் கௌரியை “நீ துளசியிடம் திரும்பி போய்விடு. கவிதா உடன் உன் வாழக்கை சந்தோஷமாய் அமையாது” என்று புரிய வைத்து அனுப்புவாள்.
கவிதா: தன் காதல் உண்மை என்றாலும் தான் காதலிப்பது இன்னோரு பெண்ணின் கணவன் என்ற குற்ற உணர்வு ஏற்படத் தொடங்கியதும் மன நிம்மதியற்ற நிலைமைக்கு ஆளாகிறாள். எந்த விதத்திலும் வேறு பெண்ணின் கணவனை தான் சொந்தம்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்து முரளியை விட்டு விலகுகிறாள். அது ஒருவிதத்தில் துளசியிடம் அவள் கணவனை திரும்பக் கொடுப்பதுதான் நியாயம் என்ற முடிவு.
வீட்டு வேலைக்கார பெண்: சமூகத்தின் எல்லா தட்டிலும் ஒரு குடிகார கணவன், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்கும் ஆண்கள் என்று இருக்கத்தான் செய்கின்றனர் என்பதன் பிரதிபலிப்பு வேலைக்காரப் பெண். குழந்தை என்று வந்தபின் இப்படிப்பட்ட கணவனை குழந்தைக்கு அப்பாகவேனும் இருந்துவிட்டு போகட்டும் என்று சகித்துக்கொண்டு வாழ்வதும், அதற்கும் அவர்கள் தகுதி இல்லை என்ற நிலையில் அவர்களை வெட்டி எறியவும் துணித்து விடத்தான் செய்கின்றனர்.
முரளியின் உதவியாளர்: முரளியின் தவறான உறவைப் பற்றி தெரிந்தவர், அவரது உதவியாளர். முதலாளி மீது அதிக விசுவாசமும், துளசி மீது மரியாதையும் கொண்டு, இவ்விரண்டுக்கும் நடுவில் போராடுவார். ஒவ்வொரு முறையும் முரளியின் தவறைச் சுட்டிக்காட்ட தவறவில்லை. ஒரு நண்பன் என்ற அளவிற்கு அந்தக் குடும்பம் மறுபடியும் ஒன்று சேர வேண்டும் என்று அதிகம் விரும்புவார்.
திரைப்படத் தயாரிப்பாளர் : திரையில் கூட பெண்களை ஆபாசமாக மட்டுமே பார்க்க விரும்பும் ஆண் மிருகங்கள். இவர்கள் பசிக்கு தேவை எப்போதும் பெண் என்ற மாமிசம்.
துளசியிடம் திருந்தி வரும் முரளி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்பான். அப்போது, “ஒரு பெண்ணாய் நான் இப்படி ஒரு ஆணிடம் போய்விட்டு திரும்பி வந்தால் நீ என்னை ஏற்று கொள்வாயா?” என்று கேட்பாள் துளசி. முரளி மௌனமாய் ‘இல்லை’ என்று தலையை அசைப்பான்.
வேலைக்காரப் பெண்ணின் மகளை எடுத்து வளர்க்க முடிவு செய்யும் துளசி, கௌரியை தான் ஏன் கல்யாணம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து இருப்பதை தெளிவாய் விளக்குவாள். தன் வாழக்கையில் அடித்த புயல் திருமண உறவை பொய்த்துப் போகச் செய்தாலும் வாழ்வதற்கான ஒரு காரணமாய் அந்தக் குழந்தை கிடைத்து இருப்பதாகவும், வாழ்க்கையில் தனக்கு துளிர்விட்டு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகம் அனுபவிப்பதாகவும், அது தன்னை புது மனுஷியை மாற்றுவதாகவும் கூறுவாள்.
பெண்சுதந்திரம், பெண்ணியம் என்றெல்லாம் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கைக்கான முடிவை தானே தேடிக்கொள்ள வேண்டிய சூழலில், அவள் செயல்களை ‘ஒரு பெண் இப்படிச் செய்யலாமா கூடாதா?’ என்று விவாதிக்காமல் இருந்தால் போதும். அவள் செயல்களுக்கு ‘ஒரு பெண் இப்படி செய்யக் கூடாது’ என்று புத்தி சொல்லாமல் இருந்தால் போதும். அதுவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் சம உரிமைக்கு சமம்.
திருமணம் என்ற ஒரு சடங்கு உலகில் தோன்றிய நாள் முதல் கணவன் இறந்ததற்குப் பிந்தைய தனித்த வாழ்வும், விவாகரத்தும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. கணவன், மனைவி என்ற திருமண பந்தத்தைத் தாண்டி ஒரு துணையை தேடும்போது அது நீடித்த நிம்மதியையும், முழு திருப்தியையும் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஒரு பெண் இந்தத் திருமண பந்தத்தில் இருந்து ஏதோ ஒரு சூழல் தனித்து விடப்படும்போது அவளுக்கு மனரீதியான போராட்டம் மட்டும் அல்லாமல், அவள் சமூக ரீதியாகவும் போராட தயாராக வேண்டியதாகிறது.
பெண் என்பவளை உடல் ரிதியாக மட்டுமல்லாம் மன ரீதியாக புரிந்துகொள்ள ஒரு ஆணிற்கு அவன் குடும்பம் கற்றுத்தர வேண்டும். காலம் காலமாய் நமது குடும்பங்கள் இதைச் செய்ய தவறியதால் வரும் சமூகச் சிக்கல்கள் ஏராளம். தமிழ் சினிமாவும் அத்தி பூத்தாற்போல் இந்தப் புரிதலை நமக்குள் புகுத்த வரும்போது அவர்களை ஒதுக்கிவிடுகிறோம். சமீபத்தில் இந்தப் போராட்டத்தை தன்னுடைய பாணியில் சொல்ல துணிந்த ‘தரமணி’ இயக்குனர் ராமை வாழ்த்தித் தட்டிக் கொடுக்கவேண்டும். மாறாக, ஒரு கூட்டம் அவரை தலையில் தூக்கி கொண்டாடுவதும், இன்னொரு கூட்டம் அவரை தலையில் கொட்டுவதுமாக விமர்சித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், இப்படி வரும் திரைப்படங்களில் திரையில் நாம் யார் என்று நம்முடைய குணங்களை கதாபாத்திரத்தோடு பொருத்திப் பார்த்துகொள்ளும்போது ‘மறுபடியும்’ நமக்குள் ஒரு புது மனிதன் பிறப்பது உறுதி.
துளசியின் முடிவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் நம்மை அவர்கள் இடத்தில் பொருத்தி பார்த்தால் போதும் “துளசி” போன்ற நிழலழகி மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள நிஜ அழகிகளையும் புரிந்துகொள்ள முடியும்..
தொடரும்…
வெகுநாட்களுக்கு முன்பு பார்த்தபடம். நன்றாக நினைவில் இருக்கிறது,பார்க்கத் தவறிய பல கண்ணிகளை இந்த விமர்சனம் சுட்டிக் காட்டுகிறது.
LikeLike