தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் இப்படி ஒரு சவாலான சூழலை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல.
1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைசாமி என்கிற பார்ப்பன பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற 100% இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். காமராசரும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக இந்திய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டு, இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் பயன்பெறும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமானது!
1979ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தவறான ஆலோசனையின் காரணமாக ஒரு விபரீத முடிவினை எடுத்தார். அதாவது, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை பெறுவதற்கு ரூ.9000 வருமான வரம்பு என்கிற பொருளாதார அளவுகோளை கொண்டுவந்தார். திராவிடர் கழகமும், திமுகவும் அதைக் கண்டித்து தமிழகம் முழுக்க மக்களை திரட்டினார்கள். அதன் விளைவு 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தன் தவறை உணர்ந்த எம்.ஜி.ஆர், தான் கொண்டுவந்த திட்டத்தை பின்வாங்கியதோடு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அளவை 30% இருந்து 50%மாக உயர்த்தினார். அதுதான் இன்றுவரை நீடிக்கிறது!
1993ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு சட்டம் இயற்றி அதை அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணை என்கிற பாதுகாப்பு வலையத்திற்குள் வைத்து, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான சமூகநீதியை காப்பாற்றினார். இதிலும் திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைவர் வீரமணிக்கும் முக்கிய பங்கு உண்டு! பாஜக ஆட்சி செய்கின்ற இராஜஸ்தான் உட்பட, தமிழகம் காட்டிய வழியில் பின்பற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறது.
இவற்றோடு ஒப்பிட்டு பார்த்தால், தற்போதையை நீட் சிக்கல் என்பது அவ்வளவு ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. குறைந்தபட்ச நியாய உணர்வு கொண்ட ஒரு மத்திய அரசு இருந்திருந்தால்கூட, தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச நீதியுணர்வு கொண்ட உச்சநீதிமன்றம் இருந்திருந்தால்கூட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எழுப்பிய மிகச்சரியான கேள்விகளை ஏற்றுக்கொண்டு, தமிழகத்திற்கு நீதி வழங்கியிருக்க வேண்டும்!
தற்போதைய சூழலை பார்க்கும்போது, நீட் சிக்கலின் விபரீதத்தை தமிழக மக்கள் பெரிதும் உணர்ந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கெட்டவாய்ப்பாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடக்குமேயானால், தமிழகம் இப்போது இருப்பதுபோலவே தூங்கிக்கொண்டிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.
நீட் விலங்கை தமிழகம் உடைத்தெரியும்! அதன் பயனை இந்தியா முழுவதும் அனுபவிக்கும்!