பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கிய அமைப்பான ‘விடுதலை கலை இலக்கியப் பேரவை’ விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளை ‘திருமா 55’ என்ற பெயரில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சி சிதம்பரம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் சமூக செயல்பட்டாளருமான கௌசல்யா கலந்துகொண்டு பேசினார். தன்னுடைய உரையை அவர், தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்…அது இங்கே…

“நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமில்லாதது; சுமக்கமுடியாத கனம் பொருந்தியது.

திருமாவளவன் என்கிற ஒரு அரசியல் ஆளுமை குறித்து சிறியவளான நான் பேசுவதற்கு இனிமேல்தான் என்னை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், நான் இந்த நிகழ்விற்கு வந்தமைக்குக் காரணம் நான் உங்களில் ஒருத்தி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தி என்பதைப் பறைசாற்றுவதற்குத்தான்.

என் குடும்பம், என் பெற்றோர் முத்துராமலிங்கத் தேவரின் வம்சம் எனச் சொல்லிக் கொள்பவர்கள். அவர் குறித்து பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அந்த உருவம் சாதிவெறியைத் தூக்கிப் பிடிக்கிறவர்களின் அடையாளமாகவும், குறியீடாகவும் நடைமுறையில் திகழ்கிறது என்பதை நான் தினம்தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்குமாறாக தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் சாதிஒழிப்பின் குறியீடாகவும், அடையாளமாகவும் திகழ்கிறார்கள்.

இவர்களை உயர்த்திப்பிடிப்பதின் மூலம் நான் இந்த உலகத்திற்குச் சொல்லவிரும்புவது சாதிவெறி ஆதிக்கம் நிறைந்த ஒரு கூட்டத்திலிருந்து என்னைப் பெயர்த்தெடுத்து, சுயமான சாதிஒழிப்புப் போராளியாக, இந்த மண்ணில் வேர்விட்டு நிலைத்து நிற்பேன் என்பதை இந்தத் தமிழ்ச்சமூகத்திற்கு அறியப்படுத்துகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முழக்கம் “சாதி ஒழிப்பே, மக்கள் விடுதலை” என்பதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு கட்சியாக (அ) இயக்கமாக நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பவில்லை.

சங்கரின் நினைவைக் கொண்டு தோழர் கௌசல்யா என்ற ஒரே ஒரு அடையாளத்தோடு கௌரவக் கொலைகளுக்கு எதிராகவும், சாதி ஒழிப்பிற்காகவும், பெண் விடுதலைக்காகவும், வாழ்நாள் முழுவதும் என்னளவில் பங்களிக்கவே விரும்புகிறேன். அதே நேரத்தில் “சாதி ஒழிப்பே, மக்கள் விடுதலை” என்ற முழக்கத்தோடு என்னை முழுவதுமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். இந்த அடிப்படையிலிருந்து சொல்கிறேன் ‘நான் உங்களில் ஒருத்தி’.

சாதியின் பெயரால் என் சங்கரை இழந்து நானும் உயிர்தப்பி உங்கள் முன் நிற்கிறேன். இப்படி நான் நிற்பதற்கான தகுதி, அப்படி ஒரு நிகழ்வு என் வாழ்வில் நடந்துவிட்டது என்பதால் மட்டும் கிடைத்ததல்ல. அதுமட்டுமே என்னை இப்படியொரு மேடையில் நிறுத்துவதற்குப் போதுமானதல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள், நானும் அறிவேன். எந்தச்சாதி அன்பே உருவான சங்கரைப் பலியெடுத்ததோ அந்தச் சாதியைப் பலியிடுவதற்கு என் வாழ்நாள் முழுவதும் பங்களிப்பேன் என உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சாதி ஒழிப்பிற்கு உழைப்பவர்கள், போராடுபவர்கள் என்னை ஒரு ஆயுதமாக எடுத்து போர்செய்ய காலம் முழுவதும் ஒப்புக்கொடுத்துவிட்டேன் என்பதன் அடையாளமாகவும், அறிவிப்புச் செய்யவும், இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். இதுதான் நான் இங்கே நிற்பதற்கான தகுதியை வழங்கியிருக்கிறது. இந்த வகையில், இந்த அவையில் ஓங்கி அறிவிக்கிறேன் ‘நான் ஒரு சாதி ஒழிப்புப் போராளி’.

நான் ஒரு அடுப்பங்கரைப் பெண்ணாக, குழந்தை பெற்றுத்தரும் கருவியாக, அலங்காரத்திற்குரிய போகப்பொருளாக வாழ்ந்து கொண்டே சாதி ஒழிப்பிற்காக பங்களிக்க முடியுமா? என்கிற கேள்வியை உங்கள்முன் எழுப்ப விரும்புகிறேன். ஒரு ஆணை மணந்து, அவன் கருத்தை என் கருத்தாக்கி, நான் வேலைக்குப் போனாலும் அவனுக்கும் சமைத்தளித்து, அவன் அனுமதியின்றி எனக்கான எதையும் செய்துகொள்ள இயலாது, ஆனால் அவன் பயணத்திற்குத் தேவையானவற்றை தயார் செய்து கொடுத்து, அவனுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு வாழ்கிற வாழ்வைத்தான் இந்தச் சமூகம் ஒரு பெண்ணிடம் வலியுறுத்துகிறது. இப்படி வாழ்ந்துகொண்டே சாதிக்கு எதிராக பங்களிக்க முடியுமா? என்பது எப்போதும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

முதலில் இப்படியொரு குடும்ப அமைப்பிற்குள் பெண்ணுக்கு மட்டும் கற்பிக்கும் ஒழுக்கத்தில் அவள் தவறாமல் இருப்பது என்றால் அதற்கு என்ன பொருள்?

என் குடும்பத்தில் என் தாய் இப்படித் தான் கணவன் வாழ்வை வாழ்ந்தார். நானும் அப்படித்தான் வாழவேண்டும் என்பதை வாழ்ந்துகாட்டியதன் மூலம் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அதற்கான காரணத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அப்படி வளர்ந்தால்தான் அந்தப் பெண் தன் கருத்தென எதையும் வெளிப்படுத்தமாட்டாள். தன் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுக்கமாட்டாள். இறுதியிலும் இறுதியாக தன் உரிமையை மதிக்கிற தன் சுதந்திரத்தை இயல்பாய் ஏற்கிற தனக்கான காதலை தேர்ந்தெடுக்கமாட்டாள். ஒன்றை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன் : காதலில் மட்டும்தான் ஆதிக்கம் இருக்காது; அடிமைத்தனம் இருக்காது. காதலிக்கிறவனும் ஆண்தான். ஆனால் அவன் காதலிக்கும் அந்தப் பெண்ணின் மீதான பேரன்பு அவளின் உணர்வை, கருத்தை மதிக்கச் செய்யும். அவனுள் அவனை அறியாமல் இருக்கிற ஆணாதிக்கத்தைக் காதல் உதறியெறிய நிச்சயம் பழக்கும்.

பெரியார் சொல்கிறார் : “மலம் அள்ளுபவருக்கு மலத்தின் நாற்றம் பழகிப் போய்விடுவது மாதிரி பெண் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அடிமைத்தளைக்கு பழகிப் போயிருக்கிறாள்.”தன் கருத்தை தன் காதலை தனக்குள்ளேயே வைத்து மருவி, கொன்று வாழும் பெண்ணைக் கொண்டுதான் ஒரு குடும்பம் தங்கள் சாதிக் கெளரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் எல்லோரும் அண்ணன் திருமாவை நேசிக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் சாதி ஒழிப்புப் போராளிகள். உங்கள் மனைவிக்கு அவர் கருத்தைத் தடையின்றி செயல்படுத்தும் பரந்த வெளியை இதுவரை தந்துள்ளீர்களா என்கிற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். உங்கள் மனைவியை விடுங்கள், உங்கள் மகளை அப்படியொரு விடுதலைப் பெண்ணாக வளர்த்தெடுக்கிறீர்களா? அப்படி இருப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு வேளை சிலர் அப்படி இல்லையென்றால் உங்கள் நேசத்துக்குரிய தலைவரின் பிறந்த நாளின் பொருட்டு உங்கள் மகளை சுதந்திர மனுசியாய் வளர்த்தெடுப்பேன் என உறுதியெடுத்துக் கொள்ள பணிவோடு வேண்டுகிறேன்.

சாதி வெறிபிடித்த என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்திற்கும் சாதி ஒழிப்பிற்கு நிற்கும் உங்கள் மகளை நீங்கள் வளர்க்கும் விதத்திற்கும் வேறுபாடு இருக்க வேண்டாமா என உங்களிடம் உரிமையோடு கேட்க விரும்புகிறேன். அப்படி வளர்க்கத் தவறினால் நம்மை அறியாமல் சாதிக்குப் பாதுகாப்பு அரணாக நாம் இருந்துவிடுவோம் என்றே அஞ்சுகிறேன்.

நான் இப்போது இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். கூட்டம் முடிந்து நான் வீடு போய்ச் சேர இரவு 12 மணி ஆகலாம். அப்படி நான் போனால் இந்த சமூகம் என்னை என்ன சொல்லும்? இப்படி நான் சில இடங்களில் பேச வேண்டுமானால் புத்தகங்கள் படிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டும். மணிக்கணக்காக உட்கார்ந்து எழுத்துப் பணி செய்ய வேண்டியிருக்கும். தனிமையில் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கும். வீடுகூட்டி சுத்தமாய் வைத்திருப்பதற்கோ, கணவனின் தேவையைப் பார்த்துப் பார்த்து நிறைவு செய்வதற்கோ, அதிகாலையில் எழுந்து சமைப்பதற்கோ என் இந்த வாழ்நிலை அதுதரும் மனநிலை இடம்தராது என்பத எளிதில் புரிந்து கொள்ளலாம். இவையெல்லாம் பெண் வேலை என்ற கற்பிதத்தை முறியடிக்க முன்வந்து வழிவிட்டால்தானே அவளால் சாதி ஒழிப்பிற்குப் பங்களிக்க முடியும். இதுவே இன்னொரு கோணத்தில் ஒரு ஆண் இதே பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கும் இதே பணிகளை அந்த ஆணிடம் இந்தச் சமூகம் ஏன் வலியுறுத்தமாட்டேன் என்கிறது?

ஆக மொத்தத்தில் பெண்ணை அவள் இயல்பில் உரிமையோடும் விடுதலையோடும் வாழச் செய்வதுதான் சாதி ஒழிப்புச் செயல்வழிக்கான முதல்படி! பெண்ணிற்குக் குழந்தைத் திருமணம் செய்து வைத்தது, பெண்ணை உடன்கட்டை ஏறச்செய்வது, பெண் கணவனை இழந்தால் முடங்கச் செய்வது, பெண்ணின் காதல் உரிமையை அடியோடு மறுப்பது… பெண்ணை மையப்படுத்துகிற இவை எல்லாமே சாதியைக் காப்பாற்றுவதற்காகத்தான். இதில் காதல் கெளரவக் கொலை வரை செல்லக் காரணம் பெண் சாதிவிட்டு மணமுடித்துவிட்டால் அவள் வயிற்றில் கீழ்சாதிக்காரனின் குழந்தையை சுமந்து பெற்று விடுவாள். இதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தன் சாதிக்கான அடுத்தத் தலைமுறை உருவாகாமல் போய் தன் சாதி தழைத்தோங்க முடியாமல் போய்விடும். குழந்தை பெற்றுத் தரும் கருவி கைமாறுவதுதான் பெண்ணைக் கொலை செய்யக் காரணம். எங்காவது ஒரு ஆண் கெளரவக் கொலைக்கு ஆளாகியிருக்கிறானா? அதனால்தான் சொல்கிறேன் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்பதோடு கூடுதலாக பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!

இன்று பெண்கள் விரும்பி உடுத்தும் உடையில் மார்பகங்கள் எடுப்பாய்த் தெரிகிறதே எனப் பார்க்காதீர்கள். அந்த உடை அவளின் உரிமை எனப் பாருங்கள். பிறகு உங்களுக்கு மார்புகள் தெரியாது, அவளின் ஆளுமை மட்டுமே தெரியும். நீண்ட முடிவிட்டு, சடைபின்னி, பூ வைத்திருந்தால் ரசிக்கும் அழகுடன் பெண் திகழ்வாளே எனப் பார்க்காதீர்கள். அழகைப் புறந்தள்ளி தனக்கான ஆற்றலை வளர்த்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிற கம்பீரத்தைப் பாருங்கள்.

பெண்ணுக்கென்று காதலனைத் தாண்டி, கணவனைத் தாண்டி ஆண் நண்பன் ஒருவனோடு அவரவர் காதல் பகிர்கிற, காமம் விவாதிக்கிற, தோள் அணைத்து நடக்கிற, ஒரே படுக்கையில் கால் மேல் கால் போட்டு ஆழ்ந்து உறக்கம் கொள்கிற உறவு இருக்க முடியும் என்பதை முதலில் நம்புங்கள். சமூகத்தின் அழுக்குகளை இந்தத் தூய உறவுக்குள் நுழைக்காதீர்கள். அதை மதித்து இயல்பாக ஏற்கிற சமூகத்தைப் படைக்க முதலில் நாம் முன் வருவோம்.

இப்படியெல்லாம் பார்க்கப் பழகிவிட்டால் அப்படி நிமிர்ந்து வாழும் பெண் ஒழுக்கங் கெட்டவளாய்த் தெரியமாட்டாள். தந்தை பெரியார் வார்க்க விரும்பிய விடுதலைப் பெண்ணாகத் தெரிவாள்.
இப்படி உருவாகிற பெண்ணைக் கொண்டு சாதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது. அதனால்தான் பெண்ணுக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்ற அயோக்கியத்தனத்தைக் கற்பிக்கிறார்கள். சாதியில் எப்போதும் ஆதிக்க நிலையிலும் அதைக் காக்கும் இடத்திலும் இருக்கும் பார்ப்பனச் சமூகத்துப் பெண்களும் அடிமைகளாகவே இருக்கிறார்கள். பெண் எல்லா சமூகத்திலும் அடிமையாகவே இருக்கிறாள். சாதி ஒழிப்பிற்கும் ஒட்டுமொத்தப் பெண் விடுதலைக்கும் ஒரு சேர உழைப்பதுதான் சமூக விடுதலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என நம்புகிறேன்.

ஒரு விடுதலைப் பெண் தன்னை விடுதலை செய்து கொள்வது மட்டுமில்லாமல் சாதிய அமைப்பின் அச்சாணியை உடைத்து எறிவதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையாகவும் மாறுகிறாள்.

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!
பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.