சினிமா

தரமணி: ஆல்தியாவும் ஆல்தியா நிமித்தமும்!

பல்வேறு கலைகளின் கூட்டு அம்சம்தான் 'சினிமா'. இந்த வடிவத்துக்கு என தனியாக எந்த இலக்கணமும் இல்லை என்பதுதான் சினிமாவின் தனித்துவம். இதுதான் மாஸ் மீடியமாக சினிமாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிருப்பதாக நம்புகிறேன்.

கீட்சவன்

கீட்சவன்

இயங்கள் குறித்த புரிதலும் தெளிவும் முழுமையாக இல்லை. எவ்வித பாகுபாடுமின்றி மனிதர்களை மனிதர்களாக அணுகுவதற்கு முயன்றுகொண்டு தோற்றுத் தோற்று எழுந்திட முற்படுவது ஒன்று மட்டுமே இசங்கள் மீது ஈடுபாடுகொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. இதனால்தான் என்னவோ #தரமணி-யை ஒரு சினிமா பார்வையாளனாக அனுபவித்து ரசிக்க முடிந்தது.

ஆம், புறக்காரணிகளால் பாதிப்புக்குள்ளாகி இயல்பாக இருக்க முயற்சிப்பதையே அதீதம் போல் பார்க்கப்படுவது பற்றி கவலைப்படாத தன்போக்கில் வாழும் ஆல்தியாவும் பிரபுவும்தான் ப்ரொட்டாகனிஸ்டுகள்.

கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்து, அவரை அரவணைப்புடன் விலகும் அணுகுமுறையிலேயே ஆல்தியாவின் பக்குவம் பிடிபடுகிறது. சில மணிநேரம் பழகிய அன்னிய இளைஞனை எடைபோட்டு, அவன் ஆபத்தில்லாதவன் என்பதை உணர்ந்து உறவைத் தொடங்க முற்படும் இடத்திலும் அவளது பக்குவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கலாசாரம், பண்பாடு என்ற பெயரில் நம் சமூகம் உருவாக்கிக் கைவிட்ட பிரபு, புறம் சார்ந்த கமிட்மென்ட்ஸ் ஏதுமில்லாததால் விரக்தியில் வெட்டியாக வாழ்கிறான். எனக்கும் தனிப் பொறுப்பு சார்ந்த நிர்பந்தங்கள் இல்லாமல் போயிருந்தால், அவனைப் போல் சுற்றித் திரிந்திருப்பேன் எனக் கணிக்கிறேன்.

இணையருக்கான தேடல் தாண்டி, தன் குழந்தைக்கு தகப்பனாகவும் இருப்பதற்கான சாத்தியங்களைக் கண்டுகொண்ட பிறகே பிரபு மீதான காதலை உறுதிபடுத்துகிறாள் ஆல்தியா. அந்த டால்பின் காட்சியின் பின்னணியும், அதைக் காட்டும்போது மிதக்கும் வரிகளும் திரைக் கவிதை.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற படங்களின் தேவையைக் கிடாசி எறிந்ததில் ஐ.டி. துறைக்குப் பெரும் பங்கு உண்டு. நடுத்தர மக்களின் பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதில் பெறும் பங்கு வகித்த இந்தத் துறை தந்த சாதகங்களின் ஒன்றுதான் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் ஆல்தியாக்கள் எண்ணிக்கை மிகுதி ஆவதும். அத்தகைய ஆல்தியாக்களிடம் நெருங்கும்போது சந்திக்கும் தேவையற்ற அதிர்ச்சிகளை மனரீதியில் அணுக முடியாமல் தவிக்கும் நம் சமூகம் உற்பத்தி செய்த ஆண்களில் பலரது பிரதிநிதிதான் பிரபு. இவர்களுக்கு இடையிலான உறவின் நெருக்கமும், உளவியல் சிக்கல்களும் சேர்ந்து எழுப்பும் விளைவுகளும் இருதரப்பு புரிதல்கள் நோக்கியப் பயணம் என்கிற ரீதியில்தான்#taramani-யைப் பார்க்கிறேன்.

ஆல்தியாவை சக மனிதராகவே பார்க்கிறேன். அவள் எதிர்கொள்ளும் சூழல்களை நான் சந்திக்க நேர்ந்தால் என்னென்ன செய்வேனோ அதைதான் அவள் செய்கிறாள். புகைப்பது, மது அருந்துவது எல்லாமே இதில் அடக்கம். ‘அவெய்லபிளிட்டி’ என்பது இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது. அவள் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கைச் சூழல், நினைத்ததைச் செய்யும் வாய்ப்பைக் கொடுக்கிறது. அவளும் அதைப் பயன்படுத்துகிறாள். அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாத புறக்காரணங்களால்தான் பெரும்பாலான பெண்கள் மாற்று வழிகளை நாடுவதில்லை என்பதாக நம்புகிறேன்.

குழந்தைகளைப் பெற்றோர் ஹேண்டில் செய்யும் காலத்தை இழந்துவிட்டோம். இப்போது, குழந்தைகள்தான் பெற்றோரை ஹேண்டில் செய்கிறார்கள். அதைக் கச்சிதமாக குட்டிப் பையன் ஏட்ரியன் காட்டிக் கொடுக்கிறான். பிரபுவைப் போன்ற பின்னணியில் இருந்து வந்து வாழ்க்கையை ஓட்டும் அஞ்சலி கதாபாத்திரமும் குழப்பவாதிகளின் பிரதிபலிப்பு.

பிரபுவின் அறியாமைச் செயல்களால் எரிச்சல் மிகுந்து கொந்தளிக்கிறாள் ஆல்தியா. அவளை அணுக முடியாமலும், பிரிய முடியாமலும் தவிக்கும் பிரபுவுக்கோ இன்னொரு பக்கம் தன் குற்ற உணர்வுகளைப் போக்க வேண்டிய கட்டாயம். இதனால் இருவருக்குமே தடுமாற்றம். ஆல்தியா நிலைதடுமாறி ஏதேதோ செய்ய, இவனோ காமம் சார்ந்த குற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அவனது தடுமாற்றம், திரைக்கதையிலும் எதிரொலிக்கிறது. போன் செக்ஸ் குற்றச் சம்பவ பகுதியே தடுமாறித் தொக்கி நிற்கிறது. அவன் மீளும்போது திரைக்கதையும் மீள்கிறது.

இதனிடையே, பிரபுவுக்கு நெருக்கமான அழகம்பெருமாள் கதாபாத்திரமும், ஆல்தியாவின் அலுவலக பக்கத்து சீட் பெண் கதாபாத்திரமும் இரு வெவ்வேறு குடும்பச் சூழலின் வாழ்வோரின் வெறுமையையும், அதை சரிசெய்துகொள்ள தேர்ந்தெடுக்கும் பாதைகளையும் எடுத்துக் காட்டுகிறது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியின் மனைவி உள்பட சின்னச் சின்ன கதாபாத்திரங்களாக காட்டப்பட்ட பெண்களின் இருட்டான பகுதிகள் எல்லாமே பெண்களைத் தாழ்த்துவதற்காக புனையப்பட்டவர்களாகப் பார்க்கவில்லை. மாறாக, நம் சமூகத்தில் எல்லா நிலைகளிலும் தங்கள் இணையரை உடலளவிலும் மனதளவிலும் இணையராக நடத்தாததன் விளைவாகப் பார்க்கிறேன்.

எனக்கு தரமணியில் இருந்த ஒரே சிக்கல் – வாய்ஸ் ஓவர். இயக்குநர் ராமின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி அவரது வாய்ஸ் ஓவரிலேயே படம் நிறைவடைகிறது. முதன்மை மட்டுமின்றி, உறுதுணைக் கதாபாத்திரங்களின் தன்மைகளை வாய்ஸ் ஓவர் மூலம் அறிமுகப்படுத்தியதை விட, காட்சியின் ஊடாகத் தெளிவுபடக் காட்டியது நேர்த்தி. தான் படம்பிடித்துக் காட்டிய முக்கியக் காட்சிகளுக்குத் தானே வாய்ஸ் ஓவர் மூலம் கோனார் உரை வழங்கியதை என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு படைப்பை அனுபவிக்கும் பார்வையாளனின் சிந்தனையை மழுங்கடிக்கும் அம்சமாகவே இதைப் பார்க்கிறேன். இன்டன்ஸான காட்சி ஒன்றில் டீமானிட்டைசேஷனை பகடி செய்தது, அக்காட்சி மீதான கவனத்தை சீர்குலைத்தது.

ஆனால், நான் திரையரங்கில் படம் பார்க்கும்போது ராமின் வாய்ஸ் ஓவர் விவரிப்புகள், நக்கல்கள், நையாண்டிகள், கலாய்ப்புகள் அனைத்துக்குமே ஆரவாரம் பிய்த்துக்கொண்டு வந்தது. பல தரப்பு பார்வையாளர்களையும் திருப்திபடுத்த மசாலாத்தனங்களை உள்ளே திணிப்பதற்குப் பதிலாக, உருப்படியான உத்தியைக் கையாளலாமே என்ற ராமின் உத்தி வென்றுவிட்டதாகவே கருதுகிறேன்.

பல்வேறு கலைகளின் கூட்டு அம்சம்தான் ‘சினிமா’. இந்த வடிவத்துக்கு என தனியாக எந்த இலக்கணமும் இல்லை என்பதுதான் சினிமாவின் தனித்துவம். இதுதான் மாஸ் மீடியமாக சினிமாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிருப்பதாக நம்புகிறேன். தொழில்நுட்ப அப்டேட்டுகளுடன் உதார் காட்டலாம்; எந்த அப்டேட்டும் இல்லாமல் கூட உன்னதம் படைக்கலாம். வரையறை என்ற ஒன்று இல்லாததுதான் சினிமாவின் வரையறை.

எனவே, ‘இந்தப் படம் சினிமாவே அல்ல; திரைமொழியே இல்லை; இலக்கணமே பின்பற்றப்படவில்லை’ என்றெல்லாம் சொல்வதே அபத்தம் என்று நினைக்கிறேன். மாறாக, ‘இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை; கையாளப்பட்ட திரைமொழியில் உடன்பாடு இல்லை; இந்த சினிமா சொல்லும் கதையும் சேதியும் மோசமானது; கதை சொன்ன விதத்தில் ஒட்ட முடியவில்லை’; ஒட்டுமொத்தமாவே மொக்கையா இருக்கு; ரொம்ப கேவலமான படம்’ என்று எப்படி வேண்டுமானாலும் எதிர்மறையில் சொல்லிக்கொள்ளலாம். அது அவரவர் மனநிலையையும் ரசனையையும் சார்ந்தது.

ஆனால், ‘திரைமொழி, திரை இலக்கணம், லொட்டு லொசுக்கு’ உள்ளிட்ட பதங்களைப் பயன்படுத்தி, மேப்பில் பார்த்திடாத நாட்டைச் சேர்ந்த காது கேட்டிராத மொழிகளின் படங்களை மேற்கோள்காட்டி, வேறுபாடுகளுடன் நம் சினிமாவை கழுவியூற்றுவது எல்லாம் தன் சினிமா ஃபேக் நாலட்ஜை நிறுவ முற்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த வகையில், எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காமல் போன வாய்ஸ் ஓவர் உத்தியைக் குறையாகச் சொல்ல விரும்பவில்லை. படம் முடிந்து வெளியே வந்தபோது, என்னுள் விஷுவல்ஸ் சரியாக பதியாமல், ராமின் வாய்ஸ் ஓவரே டாமினேட் செய்ததால், இன்னொரு முறை மீண்டும் தரமணியைப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அவ்வளவுதான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தை அப்போதைய மக்கள் காண நேரும்போது, சமகாலத்தை இலக்காகக் கொண்ட வாய்ஸ் ஓவர் மேட்டர்கள் அவர்களுக்கு சமூக – அரசியல் வரலாற்றுப் பதிவாக இருக்குமா? அல்லது ஒரு திரைப்படத்தின் காட்சிகளை ஆழமாக ரசிப்பதற்கு இடையூறாக இருக்குமா என்பது தெரியவில்லை.

ஒரு படத்தின் கன்டென்ட்டுக்குள் முற்றிலும் மூழ்கிவிட முடிகிறது என்பதாலேயே தரமணியின் இசை, ஒளிப்பதிவு, ஒலி அமைப்பு என கலைகளும் தொழில்நுட்பங்களும் சார்ந்த அத்தனை அம்சங்களும் சரியான பங்களிப்பை அளித்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

மீண்டும் ஆல்தியா, பிரபு கதாபாத்திரங்களுக்கு வருகிறேன். தனக்கு தனிப்பட்ட முறையில் நேர்ந்த அத்தனை பாதகமான விஷயங்களையும் கோபமாக கொட்டித் தீர்க்கும் இணையராகவே பிரபுவைப் பார்த்தாள். அத்தகைய அணுகுமுறையின் விளைவையும் உணர்ந்தாள். ஆல்தியாவை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு கால அவகாசமும் அனுபவங்களும் பிரபுவுக்குத் தேவைப்பட்டது. இதனால், இறுதி முடிவு என்பது இயல்பு மீறாததுதான் என ஏற்கிறேன்.

பெண்ணியம் என்ற பெயரில் ஆல்தியா கதாபாத்திரம் கோளாறு என கழுவியூற்றுவோரில் சிலரோ மணி சார், கார்த்தி சுப்புராஜ், கவுதம் வாசுதேவ் முதலானோர் வார்த்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்டாடியவர்கள்தான். ஒழுக்க முகாம் பூசப்படாத ஆல்தியாவைக் கண்டு அவர்கள் அதிர்வதில் ஆச்சரியமில்லை. டேஷியங்கள் பலவற்றில் தேர்ந்தவர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வசைபாடுவது, ஆல்தியாவைக் கண்டதால் வந்த தங்கள் இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமோ என்ற ஐயம் எழாமல் இல்லை.

ஆல்தியாவை ஆண்கள் பலரும் கொண்டாடுவதற்கும் ஓர் உளவியல் காரணம் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். நிஜத்தில் ஆல்தியா போன்ற ஒருவரை நெருக்கமாக அணுகுவதற்கு உரிய பக்குவத்தைப் பெறாத காரணத்தால், முதலில் நிழலில் அவளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவாகவும் இருக்கலாம். மனிதர்களை மனிதர்களாக ஏற்கும் பக்குவத்தை ஒரு சமூகம் எட்டுவதற்கு தன் படைப்பு மூலம் உரிய பங்களிப்பைக் கொடுத்துள்ள ராம் உடன் இப்போதைக்கு ஒரு தேநீர் சாப்பிடத் தோணுது.

கீட்சவன் என்னும் புனைபெயரில் திரை கட்டுரைகள் எழுதிவரும் சரா சுப்ரமணியம் ஊடகவியலாளர்.

சுதந்திர ஊடகத்துக்கு ஆதரவளியுங்கள்

த டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.

$1.00

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: