இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினத்துக்கு சற்று முன்பு, கோரக்பூரின் அரசு மருத்துவமனை ஒன்றில் 79 குழந்தைகள் உயிரிழந்திருப்பது நமது ஜனநாயகத்தின், அரசியலின் ஆரோக்கியம் சந்திக்கிற நோய் பற்றிய கொடூரமான வெளிப்பாடாக இருக்கிறது.
அந்தக் குழந்தைகள் ஏதோ ஒரு பெருஞ்சோகம் நடந்து அதனால் உயிரிழக்கவில்லை. மத்தியிலும் உத்தரபிரதேசத்திலும் உள்ள அரசாங்கங்களின் தான்தோன்றித்தனத்தால், கொடூரமான அலட்சியத்தால் உயிரிழந்தன.
ஆக்சிஜன் தடைபட்டதால் குழந்தைகள் உயிரிழந்த பிஆர்டி மருத்துவ கல்லூரியில் இருந்து அரை கி.மீ தொலைவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தனக்கு 56 அங்குல மார்பு இருப்பதாகவும் தான் பிரதமரானால் மூளை வீக்க நோயால் குழந்தைகள் உயிரிழப்பதற்கு முடிவு கட்டுவதாகவும் மோடி அறிவித்தார். இப்படி அறிவித்து மூன்று ஆண்டுகள் கழித்து அந்த 56 அங்குல மார்பு, அதன் உள்ளீடற்ற வாக்குறுதிக்காக வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை.
வறியவர்களின் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வது யோகி – பாஜக அரசாங்கத்துக்கு ஒரு பொருட்டே இல்லை, மாறாக, மதரசாக்களில் உள்ள குழந்தைகளை வந்தே மாதரம் சொல்ல நிர்ப்பதில்தான் அதன் ஆற்றல் செலுத்தப்படுகிறது என்பதை, அதன் அரசியல் முன்னுரிமைகள் என்ன என்பதை இந்த உயிரிழப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.
கொலைகார யோகி அரசாங்கத்தின்பால் தங்கள் விசுவாசத்தைக் காட்ட, கொல்லப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களையும் வந்தே மாதரம் சொல்ல நிர்ப்பந்திப்பார்களா? கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த இடத்துக்கு மீண்டும் வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டு காவல்துறையினரால் ஆட்டோவில் ஏற்றி விரட்டப்பட்டுள்ளார்கள்.
யோகி ஆதித்யநாத் தொடர்ந்து அய்ந்து முறை கோரக்பூரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால் வறிய மக்களின் உடல்நலம் காப்பதை விட மதவெறி வெறுப்பையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுவதிலேயே அவர் அக்கறை காட்டியுள்ளார்.
இதுபோன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படும் என்று மிகவும் இரக்கமற்ற விதத்தில் சொல்லி, பாஜக தலைவர் அமித் ஷா இந்த கொலைகள் பெரிய பிரச்சனையில்லை என்று சொல்லப் பார்க்கிறார்.
மிகவும் நேர்மையற்ற, வெட்கம்கெட்ட விதத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இறந்துபோன குழந்தைகளின் உடல்களை, மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்துகிறார். தனியார் மருத்துவமனைகள் நடத்த நிலமும் உள்கட்டுமான வசதிகளும் அரசாங்கங்கள் செய்து தர வேண்டும் என்கிறார். ஆக்சிஜன் உருளைகளும் முக்கியமான மருத்துவ உள்கட்டுமான வசதி என்பதை அவர் மறந்துவிட்டாரா? அவற்றுக்கு அரசாங்கம் ஏன் நிதி அளிக்கவில்லை?
எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், மருத்துவ வசதிகள் வறிய மக்களுக்குச் சென்று சேர விடாமல் பணத்தடையை உருவாக்கி விடுகின்றன; அல்லது வறிய மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பையும் மருத்துவமனையில் செலவழிக்க நிர்ப்பந்தப்படுத்தி, அவர்கள் சிந்தும் ரத்தத்தில் லாபம் சம்பாதிக்கின்றன.
மருத்துவமனைகள் நடத்த அரசாங்கங்களிடம் நிதி இல்லை சொல்வது அப்பட்டமான பொய். கோரக்பூரின் பிஆர்டி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகளுக்கும் மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவம் அளிக்க ஆண்டுக்கு வெறும் ரூ.40 கோடிதான் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை தேசிய மருத்துவ திட்டத்தின் கீழ் ஒதுக்க மருத்துவ கல்லூரியின் முதல்வர் பல முறை வேண்டுகோள் விடுத்தும் அதைக் கூட மத்திய அரசாங்கம் அளிக்கவில்லை.
ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் மோடி அரசாங்கம் ரூ.1.54 லட்சம் கோடி அளவுக்கு அதிபணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி தந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2 ஜி ஊழலில் கொள்ளை போன அளவுக்கான நிதியாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடனை திருப்பிக் கேட்காமலேயே தடையேதுமின்றி அவற்றுக்கு கடன் வழங்கப்படுவதை மட்டும் உறுதி செய்ய முடிகிற மோடி அரசாங்கத்தால், கொள்ளை நோய் பரவுகிற கோரக்பூரின் வறிய மக்களுக்கு இருக்கிற ஒரு மருத்துவமனையில் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பதை தடுக்க தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்படுவதை உறுதி செய்ய மட்டும் எப்படி மறுத்துவிட முடிகிறது?
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கைகளில் குழந்தைகளின் ரத்தம் படிந்துள்ளது. குழந்தைகளின் இந்த கொடூரமான படுகொலைக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.
எம்எல் அப்டேட் தொகுப்பு 20, எண் 34, 2017 ஆகஸ்ட் 15 – 21