#தரமணி: ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம்; ஆனால் ஒரு கட்டுரைபோல் இருக்க வாய்ப்புண்டா?

ராஜசுந்தரராஜன்

ஆண்ட்ரியா உடம்பில் எந்த உறுப்பு அழகு? கால், இல்லையா? கால் என்றால் தொடை மேல்முழங்கால் முழங்கால்மொழி அதன் பின்புறக்குழி கண்டைக்கால் கணைக்கால் குதிங்கால் பாதம் பாதவிரல்கள் என எல்லாம் சேர்ந்துதான். மேலிருந்து கீழாக நனவுகிறேன், ஆகவே இது அழகுநயத்தல்; ஆராதனை இல்லை.

இயக்குநர் ராம், இந்த நடிகையில் அழகு அதுதான் என்று அடிக்கோடு இடுவதாகவே அறிமுகக்காட்சியை வைக்கிறார்.

அழகுதான் அது, ஆனால் அதனிலும் அழகு அவள் மூக்கு. இயக்குநர் சுந்தர்.சி. (அழகினை அழகாகவே வெளித்தரக்கூடிய இயக்குநர்களில் தலையாயவர்) அவர்கூட இப்படிக் காணத்தந்ததில்லை இவள் மூக்கை. (‘அர்’ விகுதி சேர்த்து மரியாதை தருவதே அரசியற்சரிவழி, ஆனால் அன்பு மேலிடுகையில் ஒருமையே சரிமொழி.)

சிறைவிழிவுகளே (side views) இதற்குக் காரணம். அந்தக் கட்டங்களில் உங்களைக் காதலித்தேன், ராம்! (ஆனால் ஆண்ட்ரியாவுக்கு கணவனாக வருகிறவனின் அர்த்தத்தில் இல்லை, ஆம்). இருளுக்குள் அவள் விளக்கோடு படியிறங்குகிற அந்தக் காட்சி, ஹைய்யோ! அந்த மூக்கின் அடிச்சரிவுக் கோணம்! (15 பாகை இருக்க வேண்டும் என்பது அகிலஉலக நிர்ணயம்) என்ன ஒரு துல்லியம்!

படம் தொடங்கியதிலிருந்து இயக்குநர் ராம், குரல்மேவலில், லொடலொடா என்று பேசிக்கொண்டே இருந்தார். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள ஆண்ட்ரியாவின் மூக்குக்காட்சிகளை ரசித்தேன் என்பதே சத்தியம்.

விடிந்து, முதற்காட்சி எங்கள் ஊர் அரங்கில்தான் போலும். இயக்குநரின் உதவியாளர்கள் எல்லாரும் வந்துவிட்டாற்போலத் தெரிந்தது. (கதாநாயகனும் வந்திருந்தார். கைகொடுத்து வாழ்த்தினேன்).

இடைவேளையில் ஒருவன் இன்னொருவனிடம், “சூப்பரா இருக்குன்னு ஸார்ட்ட சொல்லுங்க!” என்றான். “கூடவே, உங்க ஸார் ஏன் இப்படிப் பேசிப்பேசி அறுக்குறாருன்னும் கேளுங்க!” என்று சொல்ல வாய்வந்தது, அடக்கிக்கொண்டேன். அது நல்லதாய்ப் போயிற்று. அந்த ‘லொடலொடா’க்களுக்கு முடிவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் பாருங்கள், அடடா! அம்முற்றும் பேசிய பேச்சுகள் இருண்ம-நகைச்சுவை! அவற்றில் உச்சம், நாயகன் தான் களவாடிய பணத்தைத் திருப்பித் தருகிற இடம்பொழுதில் வருகிற அக் குரல்மேவல்!

என்னா குணவார்ப்புகள் ஒன்றொன்றும்! தீர எழுதியெடுத்தால் மட்டுமே இதை யெல்லாம் சாதிக்க முடியும். ஆண்ட்ரியா, வாய்ப்பே இல்லை, ஒரு பர்ணபாஸ்! நாயகன், ஆனால் புதுமுகம்; விட்டுத்தரவில்லை. ஸ்ருதி டி.வி. கேமராவில் அவர், எல்லாப்புகழும் இயக்குநர்க்கே என்றார். ஆனால் அதிர்ஷ்டசாலி. இப்படி ஒரு கேரக்டர் கிடைக்க வேண்டுமே?

தான் வஞ்சிக்கப்பட்டதாக, அப்படிக்கூட இல்லை, தோற்பிக்கப்பட்டதாக உணருகையில் ஓரொருவரும் தன் கசப்புகளை வன்மங்களை சமூகத்தின் மீது கட்டவிழ்க்கிறோம். அண்ணனாக அப்பாவாக இருக்கிற அந்தப் பொலீஸ் நண்பர் நாயகனை, இல்லை தன்னைத்தானே, நியாயந்தீர்க்கையில் நம் நெஞ்சாங்குலை அறுபட்டுக் கதறுவது உண்மை.

இந்த இயக்குநரின் “தங்க மீன்கள்” உருப்படாத ஒரு தகப்பனை ரொமான்ற்றிசைஸ் பண்ணி, பிள்ளைகளைத் தற்கொலைக்கு தூண்டிய படம். இப்படித்தான் அதுபற்றி எழுதியிருந்தேன். (விருதுகள் வாங்கியது ஒரு தரநிர்ணயம் ஆகாது). அந்தப் படத்தின் பிழைகளுக்கு இந்தப்படம் ஒரு நிவர்த்தி என்று இன்று கண்டேன். பெண்மையைப் பெரிதுபேசுகிற படம். ஆனால் பெண்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே ‘A’ சான்றிதழ் சுமத்தப்பட்ட படம். (பெண்கள் குழந்தைகளை விட்டுவிட்டு வரமாட்டார்கள் இல்லையா?)

பெண்களுக்கு, உண்மையில், செக்ஸ் இல்லை; அன்பே ஆதரவே முக்கியம். ஆண்கள் தன் ஆண்மையை செக்ஸால் உறுதி செய்துகொள்ள முயல்கையில், அவள், “ஆமா, உன்னைய விட அவன் சூப்பர்” என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லி அவனைத் தவிடுபொடியாக்க முடியும். நிகழாத ஒன்றை அந்தப் பொலீஸ் அதிகாரியின் மனைவி நிகழ்ந்ததாகக் குரலெடுக்கிற அந்தக் காட்சி… அடடா!

ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம். சிறுகதைபோல், நாவல்போல் இருக்கலாம். ஆனால் ஒரு கட்டுரைபோல் இருக்க வாய்ப்புண்டா?

அரங்கைவிட்டு வெளியேறிய வாசலில், ஸ்ருதி டி.வி. நண்பர் கபில் என்னை மறித்தார். என் முகம் ‘கேமரா’விலா? வேண்டாமே என்று விலகி ஓடத்தான் வழிபார்த்தேன். ஆனால் ஒரு நல்ல படம். அதுபற்றி ஏதாவது பதியவேண்டாமா? சொன்னேன், “பிரெஞ்சு டைரக்டர் கோதார் (Godard) கட்டுரைத்தனமான படங்களை எடுப்பதில் வல்லவர். அப்படி, இதுவும் பெர்ஃபெக்ட்டாக எடுக்கப்பட்ட ஒரு படம்.

ராஜசுந்தரராஜன், எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய கவிதை நூல் ‘தாய்வீடு’.

4 thoughts on “#தரமணி: ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம்; ஆனால் ஒரு கட்டுரைபோல் இருக்க வாய்ப்புண்டா?

  1. Yamuna Rajendran, உங்கள் விமர்சனத்துக்கு நன்றி! Essay movies என்று ஒருவகை உண்டு கோதார் படைப்புகளில். அருள்கூர்ந்து, அவை என்ன? “தரமணி” எப்படி அந்த வகை இல்லை என்று விமர்சிக்க முயலுங்களேன். அப்புறம், என்னுடைய எழுத்து ‘பிறிதுமொழிதல்’ வகையைச்சேர்ந்தது. ‘கால்’ என்றால் காலில்லை, நடத்தை. மூக்கு என்றால், ‘வாசனை’. ஆனால் இதெல்லாம் அறியத் தேவையில்லாத எளியவர்களுக்கும் புரியும் வகைக்கு பொதுப்படவே எழுதுகிறேன். உங்களைக் கஷ்டப் படுத்தியதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.