அருண் நெடுஞ்செழியன்

சிலி தொட்டு தற்போது கிரேக்கம் ,வெனிசுலா வரையிலும் முதலாளித்துவ பாராளுமன்ற வழியில் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிற சோசலிஸ்டுகள், உள்நாட்டு பொருளாதார நெருக்கடி அல்லது ஏகாதிபத்திய நாடுகளின் சதி என ஏதோ ஒருவகையில் தங்களது அதிகாரத்தை தக்க வைக்க இயலாமல் அதிகாரத்தை இழக்கின்றனர் அல்லது சமரசம் செய்துகொள்கின்றனர்.
கிரேக்கத்தில் ஆட்சிக்கு வந்த சோசலிச சிரிசா கட்சி, முதலாளித்துவ மிரட்டலுக்கு இறுதியில் அடி பணிந்ததை நாம் சென்ற ஆண்டுகளில் பார்த்தோம். முதலாளித்துவ ஜனநாயக எல்லைகளுக்குள்ளாக, உழைக்கும் மக்களுக்கான ஜனநாயக கோரிக்கையை முன்னெடுத்து செல்ல இயலும் என்ற வர்க்க சமரசவாதம் ஒருகட்டத்தில் முதலாளித்துவ எதிர்புரட்சிகர சக்திகளை எதிர்கொள்ள இயலாமல் கரைய வேண்டும் அல்லது முதலாளித்துவ கட்சியாகவே மாற வேண்டும்.
கிரேக்கத்தின் சிப்ராஸ் அரசு இரண்டில் ஒரு பாதையில் சென்று கொண்டுள்ளது என்பதை விளக்கத் தேவையில்லை.
தற்போது வெனிசுலா அரசின் எதிர்காலம் எதை நோக்கி செல்லப்போகிறது எனத் இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.
வெனிசுலாவின் முதலாளித்துவ சக்திகளை முன்னரே சாவேஸ் ஒடுக்கியிருந்தால் வெனிசுலா இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது என லண்டன் மாநகர முன்னாள் மேயரும் இங்கிலாந்து தொழிலாளர் கட்சியை சேர்ந்தவருமான லிவின்ஸ்டன் ஆதங்கப்படுகிறார்.
முதலாளித்துவ எதிர்ப்புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கு,மேலாதிக்கம் செய்வதற்கு வெனிசுலா அரசு, பாட்டாளி வர்க்க சர்வதிகார அரசல்ல என லிவின்க்டன் உணரவில்லை.
ஐக்கிய சோசலிச கட்சியின் தலைமையில் பாராளுமன்ற ஜனநாயக தேர்தல் முறைப்படி 1999 ஆம் ஆண்டில் வெனிசுலாவின் அதிபராகிற ஹுகோ சாவேஸ், நாட்டின் எண்ணெய் வள உபரி வருவாயை மக்கள் நலத் திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.
உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம் என அனைத்தும் மலிவாக கொண்டு சேர்க்கிறார். நாட்டின் பொருளாதார திட்டமிடல் எண்ணெய் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளதால், சாவேசின் இறுதி காலத்தில் நெருக்கடி தொடங்குகிறது. சாவேஸ் மரணத்தை அடுத்து ஆட்சிக்கு வருகிற மதுராவிற்கு நெருக்கடி முற்றுகிறது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையின் வீழ்ச்சி, மதுராவிற்கு எதிராக திரும்புகிறது. மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு நிதி இல்லை. மருந்து உணவு கிடைக்காமல் நெருக்கடி உண்டாகிறது.
பாராளுமன்ற தேசிய சபையில் பாதி பெரும்பான்மை பெற்றுள்ள முதலாளிய ஆதரவு அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகள், பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி மதுரா ஆட்சியை தூக்கி எரிய முயற்சிக்கின்றன.
மதுராவோ, தேசிய சபையின் அதிகாரத்தை பறிக்கிற வகையில் நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.
இந்த தேர்தலை அமெரிக்கா உள்ளிட்ட ஏகதிபத்திய நாடுகள் ஏற்கவில்லை. கியூபா, பொலிவியா மற்றும் நிகரகுவா போன்ற நாடுகளை மட்டுமே மதுராவிற்கு ஆதரவளித்துள்ளது. வெனிசுலா தலைநகரில் போராட்டங்கள் ஓயவில்லை.
எதிர்க்கட்சிகளின் வன்முறை ஆட்டம் அதிகரித்து வருகின்றன.
வெனிசுலாவில் நிறுவப்பட்ட அரசானது, சோசலிச பொருளாதார கொள்கைக்கு ஆதரவளிக்கிற அரசே தவிர, பாட்டாளிகள் விவசாயிகளின் சர்வாதிகார அரசல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக வடிவத்திலான வர்க்க சமரச ஆட்சியில் எதிர்கட்சிகளை உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக ஒடுக்குவது சாத்தியமற்றது. உழைக்கும் மக்கள் திரளின் ஆதரவின்றி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிற மதுராவின் முடிவு அவருக்கு எதிராக திரும்பவே செய்யும்.
ஆக, மக்கள் திரளிடம் அந்நியப்படாமல், அதேசமயத்தில் எதிர்கட்சிகளை ஒடுக்குற வழி முறைகள் ஏதும் இப்போதைக்கு மதுராவிடம் இல்லை என்பதே எதார்த்தம்!
வெனிசூலாவின் பொலிவாரியப் புரட்சியின் எதிர்காலம் மங்கலாகத்தான் உள்ளது!