பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்: திமுக பாமக பரஸ்பர குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைப்பது தொடர்பாக திமுக, பாமக கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.

திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டது தற்போது முதலமைச்சராக இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குதிரை பேர அதிமுக அரசு. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ் அவர்களும், அவரது பிள்ளை டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் தி.மு.க.வின் மீது பாய்ந்து பிராண்டுவதையே கலையாக கடைப்பிடித்து வருகிறார்கள். ஆறு வருடங்களாக ஆட்சியிலிருக்கும் அதிமுகவை, இருவரையுமே கைது செய்து சிறையில் அடைத்த அதிமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, சமூக நீதியை பாட்டாளி மக்களுக்கு வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிப்பதில் ஆர்வம் காட்டி, அதிமுகவின் செய்தி தொடர்பாளர்களாகவே மாறி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது. ஆளும் அதிமுக அரசின் மீது தி.மு.க. குற்றம் சாட்டினால், அதற்கு பதில் எங்கிருந்து வருகிறது என்றால் தைலாபுரம் தோட்டத்திலிருந்தோ அல்லது அவரது தனயன் அன்புமணி ராமதாஸ் அவர்களிடமிருந்தோதான் பதில் வருகிறது. இவர்களுக்கும் அதிமுகவிற்கும் அப்படியென்ன ரகசிய உறவு என்ற கேள்வி பாட்டாளி சொந்தங்களுக்கே ஏற்பட்டு, இப்போது பா.ம.க.வில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தன் கட்சியிலிருந்து சாரை சாரையாக வெளியேறுபவர்களை தக்க வைத்துக் கொள்ள எங்கள் தலைவர் கலைஞர், தளபதி ஆகியோரையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விமர்சித்தால்தான் முடியும் என்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் நினைக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் முதலமைச்சரோ, அதிமுக அமைச்சர்களோ குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் முன்பு தி.மு.க.வை விமர்சித்து, ஆளும் ஊழல் அதிமுக மீது மக்கள் கோபித்துக் கொண்டு விடக்கூடாது என்பதில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்திற்கான ஆயத்தப் பணிகள் 2007-2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதாக டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். அப்போது எங்களுடன் கூட்டணியில் இருந்தது டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய பாட்டாளி மக்கள் கட்சியா அல்லது வேறு கட்சியா? அப்போதே தலைவர் கலைஞர் அவர்களிடம் எடுத்துக் கூறி தடுத்து இருக்கலாமே?. ஆனால் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொன்னதில் உண்மை ஏதும் இல்லை. பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலக் கொள்கை என்பது டாக்டர் அன்புமணி ராமதாஸ் 35 வயதில் தலைவர் கலைஞரின் பரிந்துரையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தாரே அப்போதே இந்த கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2009 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன் அமைச்சரவை சகாவாக அன்றைக்கு இருந்த பெட்ரோ கெமிக்கல் துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வானிடம் கூறி தடுத்து நிறுத்தியிருக்க வேண்டியதுதானே? அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் உருவாக்கும் கொள்கையை எதிர்க்காமல் அமைதி காத்து விட்டு, இன்றைக்கு மக்களை சந்திக்கிறேன் என்று பயணம் நடத்துவது ஏன்? ஆனால் தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு முதலீடுகள் கிடைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் கொள்கைப்படி இந்த திட்டம் பற்றி ஆய்வு செய்வதற்குத்தான் முயற்சிகள் எடுத்தாரே தவிர, மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் அவர் ஆட்சியிலிருக்கும் வரை அந்த பகுதியை “பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக” அறிவிக்காமல் இருந்தார். அதற்கான அரசு ஆணைகள் எதையும் வெளியிடாமல் இருந்தார். தி.மு.க. கூட்டணியில் இருந்த டாக்டர் ராமதாஸ் அவர்கள் இதையெல்லாம் வசதியாக மறந்து விட்டு, ஊழல் அதிமுக செய்த தவறுக்கு முட்டுக்கொடுப்பதற்காக இப்படி தி.மு.க. மீது புழுதி வாரித்தூற்றும் செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.

கைது செய்து சிறையில் அடைத்த அதிமுகவிற்கு சேதாரம் ஆகிவிடக்கூடாது. ஆனால் பாட்டாளி சொந்தங்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்து, அவர்களை டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும், அரசு பதவிகளிலும் அமர வைத்து அழகு பார்த்த சமூக நீதிக்காவலர் தலைவர் கலைஞர் அவர்களையும், அவர் வழி நடக்கும் செயல் தலைவர் தளபதி அவர்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகவும், அனைத்து அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் தொய்வின்றி போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த முயலும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் செயல் “ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும்” செயல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் குதிரை பேர அரசு அறிவித்துள்ள பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை தளபதி அவர்களும் சரி, திராவிட முன்னேற்றக் கழகமும் சரி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதை தளபதி அவர்கள் திரும்பத் திரும்ப உறுதி செய்திருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை பதவியே போனாலும் பரவாயில்லை என்று எதிர்த்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக்கழகம். மத்திய அமைச்சராக இருக்கும் போது மக்களை சந்திக்காமல், அமைச்சர் பதவி போனதும் மக்களிடம் “புல்லட்” பயணம் போகும் அரசியலை எந்தக் காலத்திலும் தளபதி அவர்கள் செய்வதில்லை. ஆகவே பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை தி.மு.க. எதிர்க்கிறது என்பதில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த அறிக்கை தெளிவுபடுத்தும் என்ற நோக்கிலேயே இந்த செய்திகளை கோர்த்து வெளியிடுகிறேனே தவிர வேறு ஒன்றும் அல்ல. ஆகவே டாக்டர் ராமதாஸ் அவர்களும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் தி.மு.க.மீது “வெகுண்டு” எழுவதையும் கைவிட்டு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருப்பதையும் நிறுத்தி விட்டு, ஆக்கபூர்வமான அரசியல் பணிகளில் ஈடுபடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து தி.மு.க. ஒருபோதும் தப்ப முடியாது என குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய்க்கிணறுகளை வெட்டுவதற்கான ஆய்வு நடத்த மட்டுமே திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான நிலக்குத்தகை உரிமத்தை வழங்கியது அதிமுக அரசு தான் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கதிராமங்கலம் மக்களுக்கு செய்த துரோகத்தை மூடி மறக்கும் இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.

கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருவதால் அங்கு சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கதிராமங்கத்தில் மீத்தேன் எடுக்கவும் ஓஎன்ஜிசி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அங்குள்ள மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இரு முறை அப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்தது திமுக அரசு தான் என்று வெளிப்படையாக குற்றஞ்சாற்றினேன். அது உண்மை என்பதில் உறுதியாக உள்ளேன்.

இந்த நிலையில் கதிராமங்கலம் போராட்டம் தொடங்கி 3 மாதங்களுக்குப் பிறகு அந்த ஊருக்குச் நேற்று சென்று மக்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், திமுக மீதான புகாருக்கு விளக்கமளித்துள்ளார். ‘‘இந்த கதிராமங்கலம் பிரச்னைக்கு அதிமுக மட்டுமல்ல திமுகவும் காரணம் என்று ஒரு தவறான பிரசாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நான் தெரிவிக்க விரும்புவது, திமுக ஆட்சியின்போது மத்திய அரசு இங்கு ஆய்வு செய்தது. மக்களுடைய கருத்துகளை கேட்டு, விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிக்கான ஆய்வில் ஈடுபடும் நிலைதான் திமுக ஆட்சியில் இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குத்தகை உரிமையை வழங்கியிருக்கிறது என்றால், கதிராமங்கலம் பகுதி மக்களுக்கு யார் துரோகம் செய்தார்கள் என்பதை நான் இதைவிட எப்படி எடுத்துச் சொல்லமுடியும்?’’ என்று வினா எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி, திமுக கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்ட அதிமுக இந்தத் திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தியது ஏன்? என்ற அறிவார்ந்த வினாவையும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

ஸ்டாலினின் இந்த விளக்கம் சிறுபிள்ளைத் தனமானது என்பதை குழந்தைகள் கூட ஒப்புக்கொள்ளும். எந்த நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அதற்கு ஓர் தொடக்கப்புள்ளி ஒன்று உண்டு. அதை வைத்தது யாரோ அவர்கள் தான் அத்திட்டத்தின் காரணகர்த்தா என்பது உலகமறிந்த உண்மை. அந்த வகையில் கதிராமங்கலத்தில் எண்ணெய்க்கிணறுகள் தோண்டுவது குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளித்த திமுக அரசும், எண்ணெய்க் கிணறு தோண்ட குத்தகை உரிமம் வழங்கிய அதிமுக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். மாறாக, ஆய்வு செய்ய அனுமதி அளித்த திமுக அரசுக்கு கதிராமங்கலம் பாவத்தில் பங்கு கிடையாது என்று செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவது,‘‘ அரளி விதையை அரைத்துக் கொடுத்தது மட்டும் தான் நான். வாயில் திணித்தது அவன் தான் என்பதால் கொலைக் குற்றத்தில் எனக்கு பங்கு இல்லை, நான் நிரபராதி’’ என்று கூறுவதைப் போன்று உள்ளது.

கதிராமங்கலத்தில் மட்டுமல்ல, நெடுவாசல், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதுமட்டுமின்றி, தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்ததும் திமுக அரசு தான். இவ்வளவு துரோகங்களையும் செய்து விட்டு, ஒரு பாவமும் செய்யாத அப்பாவி போன்று நடிப்பதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

திமுக கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்ட அதிமுக இத்திட்டத்தைக் கைவிடாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள வினா மிகவும் அபத்தமானது. அதிமுகவும், திமுகவும் எப்போதுமே மற்றவர்களின் நல்ல திட்டங்களை பின்பற்றியதில்லை. அதேநேரத்தில் கேடு விளைவிக்கும் திட்டங்களை அப்படியே பின்பற்றும். அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், ஆற்றுமணல் கொள்ளை ஆகியவற்றை அதன்பின் வந்த திமுக அப்படியே செயல்படுத்தவில்லையா? அதேபோல் தான் திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கதிராமங்கலம் திட்டத்தையும் அதிமுக அரசு அப்படியே பின்பற்றுகிறது. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஆறு வித்தியாசங்களல்ல… அரை வித்தியாசம் கூட இல்லாத நிலையில், திமுகவின் பேரழிவுத் திட்டத்தை அதிமுக செயல்படுத்துவதில் வியப்பு எதற்கு?

திமுகவின் திட்டத்தை அதிமுக செயல்படுத்தியது ஏன்? என்று நண்பர் மு.க.ஸ்டாலின் வினவுகிறார். திமுக ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட கதிராமங்கலம் திட்டம் 2001-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. அதன்பின் 2006&ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக 2011&ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடித்தது. இந்த காலத்தில் மத்திய அரசிலும் திமுக தான் அங்கம் வகித்தது. அதைப் பயன்படுத்தி கதிராமங்கலம் திட்டத்தை திமுக ரத்து செய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது ஏன்? என்பதை செயல் தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

இப்போதும் கூட ஒன்றும் குறைந்து விடவில்லை. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு செயல் தலைவர் ஸ்டாலின் தயாரா?

திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதற்காக மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் ஸ்டாலின், திமுக ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்க மறுப்பது என்ன வகையான நியாயம் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கட்சி திமுக. கதிராமங்கலம், நெடுவாசல், நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படவுள்ள மக்கள் ஆகியோருக்கு செய்த பாவங்களில் இருந்து திமுக ஒருபோதும் விடுபட முடியாது. திமுக செய்த பாவங்களுக்கு மக்கள் விரைவில் தண்டனை அளிப்பர்” என தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.