பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியாதவறா?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

கமல்ஹாசனின் பாண்டேயுடனான நேர்காணல் மிகவும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது. அதில் இருந்த நேரடித்தன்மைக்காகவே கமலைப் பாராட்டியாகவேண்டும். ஏனெனில் அவரது ட்விட்களையும் செய்யுள் போன்ற சிலவற்றையும் படித்துவிட்டு மண்டைக்காயந்தவர்களில் நானும் ஒருவன். சில பதில்கள் அட்டகாசமானவை. ஜெயலலிதா ஒன்றும் கலைஞரோ எம்ஜியாரோ கிடையாது என்ற பதிலும், ராஜ்கமல் என்பது ஒரு குட்டி நிறுவனம்; ஒரு பணக்காரன் நினைத்தால் அதை ஊதித் தள்ளிவிட முடியும்; எனது உயரமும் தகுதியும் எனக்குத் தெரியும்; எதையும் பெரிதுபடுத்திக் காட்டுவது எனது தொழில், ஆனால் அதையே எனது வாழ்க்கைக்குப் பொருத்திப் பார்க்கமுடியாது போன்ற பதில்களும் மக்களின் மனதில் எளிதாக நுழையக்கூடியவை. அந்த வகையில் இந்த நேர்காணலைத் தயாரித்தவர்கள் திறமையானவர்கள். கமலின் உயரமும் அகலமும் தெரிந்து கேட்டிருக்கிறார்கள். வெட்டுதல் ஒட்டுதல் போன்றவற்றிலும் நாகரீகமாக உழைத்திருக்கிறார்கள். அதனால்தான் அது கலகலப்பான பேட்டியாக வெளிவந்திருக்கிறது.

இங்குதான் நமக்கு வரவேண்டிய அடிப்படையான சில கேள்விகள் இருக்கின்றன. அந்த கேள்விகளைக் கூட கேட்காமல் கடந்துவிடலாம். ஆனால், இந்த கலகலப்பான பேட்டியை ஏதோ கலக பேட்டியைப் போல அரசியல் ரீதியாக சிலாகித்துப் பேசுவதைக் கேட்கையில்தான் சரி நாமும் இரண்டொரு கேள்விகளை அது குறித்து கேட்டுவைக்கலாமே என்று தோன்றுகிறது. அவை என்ன? மிக முக்கியமாக, இந்த முழு பேட்டியையும் பார்த்த வரையில் மோடி, பிஜேபி, demonetization, beef ban இப்படி எந்த வார்த்தையும் இல்லை. வேறு ஏதேனும் தொடர்ச்சியான காணொளிகள் இருந்து அதை நான் பார்க்காமல் தவறவிட்டிருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டலாம். மோடி குறித்து ஏன் ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்கிற கேள்வி முக்கியமானது. ஏன் கேட்கவேண்டும் என கேட்கலாம். இருக்கிறது. கமலின் இந்த பேட்டிக்கான அடிப்படைக்கும் மோடி குறித்து தவிர்க்கப்பட்ட கேள்விக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. எப்படி?

கமலுக்கு ஊழல் மிகுந்த இன்றைய தமிழக அரசை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதில் இருந்துதான் அவரது அதிருப்தி தொடங்குகிறது. அதை எதிர்த்து குரல் கொடுக்கிறார். இதற்கு முன்பு ஜெயலலிதாவின் சர்வாதிகார, அகங்காரப் போக்கின் மூலம் தேவையற்ற முறையில் அவரது இருப்பு தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட நினைவுகளும் சேர்ந்துகொள்ள இந்த அரசுக்கு எதிராக அதன் ஊழல்களுக்கு எதிராக அவர் தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்கிறார். அவரது எதிர்பார்ப்பு என்ன? எந்த வகையிலும் இந்த அரசு நீடிப்பதற்குத் தகுதியற்றது அது வெளியேறவேண்டும் என்பதுதான். அவருக்கு மாத்திரம் அல்ல; அவர் பேட்டியில் குறிப்பிடுவது போல ஊடகங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமும் அதுதான். ஆனால், இத்தனை எதிர்ப்பையும் அதிருப்திகளையும் மீறி இந்த அரசு எவ்வாறு செயல்படமுடிகிறது? எவ்வாறு தனது ஊழல்களை தொய்வின்றித் தொடரமுடிகிறது? என்கிற கேள்வி அவர்முன் வைக்கப்படவில்லை. அப்படி வைக்கப்பட்டால், அவர் சொல்லும் அதே ஊடகங்களுக்கும் அதே மக்களுக்கும் நன்கு தெரிந்த பதில்தான், “இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவது மோடியின் மத்திய அரசு” என்பதே. இப்படி ஒரு கேள்வியைக் கேட்காமல் பாண்டே ஏன் கடக்கிறார்? அப்படி ஒரு கேள்வி ஏன் தம்மிடம் கேட்கப்படவில்லை என்று கமல் ஏன் கவலைப்படவில்லை?

கிடுக்கிப்பிடி கேள்விகளைப் போல தோற்றம் கொண்டிருந்தாலும் கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அவரது அனுபவ வரம்பிற்குள் கேட்கப்பட்ட கேள்விகளே. அதற்காக கமலின் பதில்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதன் அளவில் அவை மதிப்பு வாய்ந்தவையே. ஆனால், ஒரு நேர்மையான பத்திரிகையாளன் முன்னால் அவர் உட்கார நேர்ந்திருந்தால், இந்த கேள்விகள் அவரிடம் வைக்கப்பட்டிருக்கக்கூடும். அதன் வழியாக இந்த அரசை நிலைக்கச் செய்வதன் மூலம் நிலவும் ஊழலுக்கு பொறுப்பேற்கவேண்டிய அவசியம் மோடிக்கு உண்டு, அந்த வகையில் அவரும் ஊழலின் பங்குதாரரே என்றும் கூட கமல் பதில் சொல்லியிருக்கக்கூடும். அது நிகழவில்லை. அது மட்டுமல்ல, இதே தொனியில் இன்னும் சில கேள்விகள் நீண்டிருந்தால் மோடியின் முகம் மட்டும் அல்ல, கமலின் அரசின் தெளிவின்மையும் கூட அம்பலப்பட்டுக் போயிருக்கும். ஆக, இந்த பேட்டியில் நிகழ்ந்திருப்பது நாகரீகமான ஒரு ஒப்பந்தம். இந்த கோட்டை நானும் தாண்டமாட்டேன்; நீயும் தாண்டக்கூடாது எனும் விளையாட்டு. அந்த வகையில் எல்லா பாவங்களும் கொண்ட நல்ல ஒளிச்சித்திரம். அதைத்தாண்டி இதற்கு அரசியல் ரீதியாக எந்த பெறுமதியும் கிடையாது.

ஊழல் வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பே தராமல், கவர்னரை தாமதப்படுத்தி அதைத் தடுத்து தண்டனை அறிவிக்கப்படும் வரையில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அவரை அதிகாரத்துக்கு வெளியே வைத்தது மத்திய அரசு. (முதல் குற்றவாளிக்காக உகுத்த கண்ணீரைக் கூட மறந்துவிடலாம்) அதே மத்திய அரசு நித்தீஷ்குமாருடன் கொல்லைப்புற பேரத்தில் ஈடுபட்டு ஒரே நாளில் ஆட்சி மாற்றத்தில் ஈடுபடுகிறது. சாதிக்கிறது. ஒரு மாநிலத்தில் கவர்னரை தாமதப்படுத்துவதன் வழியாக அத்துமீறல். இன்னொரு மாநிலத்தில் அவசரமாக அதைச் செய்வதன் வழியாக அத்துமீறல். இவ்வளவு ஏன்? இன்னொரு எளிதான கேள்வி. இங்கு இவ்வளவு ஊழல் நடக்கிறதே, கிரண்பேடி போன்ற ஒரு அரைவேக்காட்டு கவர்னரைக் கொண்டுவந்தாவது அதற்கொரு கடிவாளம் போடுவதற்கு ஏன் மத்திய அரசு முயலவில்லை? கமலின் இதயம் வெடிக்கச் செய்யும் அதே ஊழலை ஏன் மத்திய அரசு அனுமதித்த வண்ணம் இருக்கிறது? பத்து பேரை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் அரசாக இருந்தாலும் பாண்டிச்சேரியில் நடப்பது எட்டி மிதிக்கும் காங்கிரஸ் அரசு. தமிழக அரசு என்னதான் புழுத்த ஊழல் அரசு என்றாலும் நமது இடுப்பில் இருக்கும் எடுபிடி அரசு என்கிற எண்ணம்தானே. இது குறித்து ஒரு கேள்வியாவது கேட்கக்கூடாதா ஆண்டவரிடம்.

இனி தலைவர்கள் தேவையல்ல, நிர்வாகிகள்தான் தேவை என்று முத்துதிற்கும் கமலுக்கு இந்த ஊழலை அனுமதிக்கும் பிஜேபியின் திட்டங்கள் தெரியாமல் இருக்காது. அவர் அவ்வளவு வெகுளி என்றால், அவருக்கு ஒரு சிறிய விளக்கம். “ஊழல்” என்பது மிகவும் மேம்போக்கான ஒரு சொல். தனது சுயநலனுக்காக, தனது சந்ததிக்காக தவறான வழியில் பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் என்று இங்கு பொருள்கொள்ளப்படுகிறது. அல்ல. எதன் பொருட்டும், அங்கீகரிக்கப்பட்ட தார்மீக நெறிகளுக்கு மாறாக விலகி ஒன்றைச் செய்வதே ஊழல்தான். தமது வலதுசாரி சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் விதத்தில் தமிழகத்தில் ஒரு ஊழல் அரசை பராமரித்து காப்பாற்றிவரும் மத்திய ஆளும் அரசின் செயல் ஊழலே. எதன் பொருட்டு மக்கள் வாக்களித்தார்களோ அதற்கு மாறாக கொல்லைப்புற பேரத்தின் வழியாக ஆட்சியை மாற்றுவதும் ஊழலே. ஊழலை பணம் என்பதாக மட்டும் சுருக்கிப்பார்க்கும் தன்மையிலிருந்து வெளியேறுவதே நவீன அரசியலின் அடிப்படை. அரசியலுக்கு வருவதற்கு முதல் தேவை அரசியல் தெரிந்திருக்கவேண்டும் என்பதே. தலைவனுக்கும் நிர்வாகிக்குமான வேறுபாடு அதுதான்!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , 
ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 360° ( கட்டுரைகள்)  வெளியாகவிருக்கும் நூல். 

One thought on “பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியாதவறா?

  1. இன்றைய சூழலில் கமல் அரசியலில் குதித்தால். தமிழக மக்களின் ஓட்டு மழை அவருக்கே. தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர கமலுக்கு மிகப்பெரிய வாய்ப்புண்டு என்பதை மறுக்க முடியாது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.