ப. ஜெயபாலன்
வசந்த பாலன் தனது பேச்சில் தலித்துகளின் எழுச்சி பற்றியும் அதற்கான முறைமைகள் பற்றியும் சில பார்வைகளை முன்வைத்தார். அவர் நல்ல நோக்கத்தில் தான் அந்த பார்வைகளை முன்வைத்தார் என்று நான் நம்ப முயற்சி செய்தாலும் அதிலுள்ள போதாமைகளையும் சுட்டி காட்ட விரும்புகிறேன். ரோஹித் வெமுலாவையும், முத்து கிருஷ்ணனையும் குறிப்பிட்ட வசந்த பாலன் இவர்களை தலித்துகளுக்கான போராட்ட எழுச்சியின் அடையாளமாக பார்ப்பதாகவும் ஆனால் எந்த தலித் அமைப்புகளை அவர்கள் நம்பினார்களோ அந்த அமைப்புகள் கைவிட்டதின் விளைவுதான் அவர்களது மரணங்கள் என்றும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் தீர்க்கமான கண்களோடு சொன்னவர் “நண்பர்களே(தலித்துகளை நோக்கி) நீங்கள் எந்த தலித் சங்கங்களை நம்புகிறீர்களோ அவர்கள் உங்களை கைவிட்டுவிடுவார்கள்” அதற்கான உதாரணங்கள் தான் அந்த இரண்டு மரணங்கள் என்றார் !!!!!!!.
ரோஹித் வெமுலாவவின் முத்துகிருஷ்ணனின் மரணம் என்பது இந்திய பல்கலைக்களங்களில் பார்ப்பனிய/சாதி ஹிந்து வெறியர்கள் தலித்துகளுக்கு எதிராக, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக நிகழ்த்திய/நிகழ்த்தி கொண்டிருக்கும் எத்தனையோ கோடி அநீதிகளில் ஒன்று என்பதும், அது சாதி வெறிகொண்ட ஹிந்து சமூகம் கல்வி கற்று மேலேழுந்து வரும் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்திய/நிகழ்த்தும் வேட்டையில் நடந்த இரண்டு கொடூரமான பச்சை படுகொலை என்பதும் மனசாட்சியுள்ள, அந்த சம்பவங்களை ஒற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திகள் கட்டுரைகள் ஆகியவற்றை படித்த எவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை. ஒரு சாதி இந்துவின் மனது தெரிந்தோ தெரியாமலோ எப்பொழுதும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட குதர்க்கமான மனநிலையிலேயே சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டுயிருக்கிறது. ஏனென்றால் தர்க்கத்தை பயன்படுத்துபவன் சாதியை நம்புபனாகயிருக்க முடியாது. தருமபுரி சம்பவத்தின் போதும், கோகுல் ராஜ் கொலையின் போதும் தலித்துகள் ஏன் தேவை இல்லாமல் சாதி ஹிந்து பெண்களை காதலிக்கிறார்கள்!!!!!!! என்றும், சேஷசமுத்திரம் தேர் பிரச்சனையின் போது தலித்துகள் ஏன் தேவையில்லாமல் சாதி ஹிந்துக்களின் தெருவில் தேரிழுக்க வருகிறார்கள்!!!!!!! என்றும் தற்குறி சாதி ஹிந்துக்களின் மனது குதர்க்கமாகவே ஜனநாயக விரோதமாக யோசிப்பதை அந்த சம்பவங்களின் போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய சாதி வெறியர்களின் பேச்சினூடாக கவனித்தோம். அவர்கள் யோசிப்பதை போலவே தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் “கற்பி,ஒன்று சேர், புரட்சி செய்” என்று சொன்ன அம்பேத்கரின் பேச்சை நம்பி தலித் அமைப்புகளோடு/அமைப்புகளாய் ஒன்று சேர்ந்தால் தக்காளி ரோஹித், முத்துகிருஷ்ணன் கதிதான் உங்களுக்கு பார்த்துக்கோங்க என்கின்ற தொனியில் பேசியதை கேட்டு உண்மையில் எனக்கு அயர்ச்சி தான் ஏற்பட்டது.

உண்மையில் அந்த இரண்டு உன்னதமான phd மாணவர்களின் மரணத்தில் இந்திய சாதி வெறி சமூகத்திற்கு பங்குயில்லையா? சாதி ஹிந்துக்களுக்கு பங்கில்லையா? சாதியை கற்பிக்கும் ஹிந்து மதத்திற்கு பங்குயில்லையா? இன்னமும் தலித்துகளும்/சிறுபான்மையினரும் அரசியல் அதிகாரத்தில் பங்குபெற முடியாமல் தடுக்க படுகிறார்களே அது காரணமில்லையா? இந்த தகவல் தொடர்ப்பு/செய்தி யுகத்தில் ரோஹித்தின் அறம் சார்ந்த போராட்டத்தை மொத்த தேசத்தோடு சேர்ந்து நீங்களும் நானும் மௌனமாக வேடிக்கை பார்த்தோமே நமக்கு அந்த மரணத்தில் பங்குயில்லையா? இது எதுவுமே இல்லாமல் ரோஹித்தும் முத்துகிருஷ்ணனும் இந்தியாவின் மனசாட்சியின் மீது காரி உமிழும் படியான கடைசி வார்த்தைகளை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் தலித் அமைப்புகளை நம்பி ஏமார்ந்து போனதால் தானா? தலித்துகளின் அறம் சார்ந்த போராட்டங்களை காத்து நிற்க வேண்டியது/முன்னெடுக்க வேண்டியது அறம் சார்ந்த எல்லோரின் கடமையா அல்லது அது தலித்துகளின்/தலித் அமைப்புகளின் மட்டுமேயான கடமையா?
இப்படி தலித்துகளுக்கெதிராக அநீதி இழைக்கப்படும்போதெல்லாம் தலித்துகளையே குற்றவாளியாக/காரணியாக பார்க்கும் சாதி ஹிந்துக்கள் எந்த கூச்சமமுமின்றி தலித்துகள் எப்படி போராட வேண்டும் என்ன மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தலித்துகளுக்கே பாடம் எடுக்க துணிகிறார்கள். மொத்த இந்தியாவையும் தலித்துகள் தீயிட்டு கொளுத்தினாலும் அது தவறென்று வாதாடா, குற்றம் சுமத்த எந்த சாதி ஹிந்துக்கும் எந்த தகுதியுமில்லை/தார்மீக உரிமையுமில்லை. ஏனென்றல் இந்திய சாதிய ஹிந்து சமூகம் உலக வரலாற்றில் எந்த தேசத்திலும் நிகழாத அத்தனை கோடி அநீதிகளை/வன்முறைகளை/சுரண்டல்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தலித்துகளின் மீது எந்த மனசாட்சியுமின்றி நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் தலித்துகளின் போராட்ட வழிமுறைமைகள் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானிக்க சாதி ஹிந்துக்களுக்கு எந்த தகுதியும் இல்லை. எந்த மாதிரியான போராட்ட முறைகளை தலித்துகள் முன்னெடுத்தாலும் அதில் உள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நியாயத்தை உள்வாங்கி கொண்டால் அதுவே போதுமானது. ஏன் என்றால் தலித்துகளுக்கான தீர்வை சாதி ஹிந்துக்களிடம் எதிர்பார்ப்பது மாட்டிறைச்சி குழம்பில் மீன் முள்ளை தேடுவதை போன்ற முட்டாள்தனம். சாதி ஹிந்துவால் அவர்களே ஆசைப்பட்டாலும் தலித்துகளுக்கு தீர்வை சொல்ல முடியாது. உதாரணம் திரு வசந்த பாலன் அவர்கள் தலித்துகள் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு எழுச்சி கொள்ளவேண்டும் என்றும் இழிவான வேலைகளை தங்கள் குழந்தைகளுக்கு கடத்தாமலிருக்க வேண்டும் என்றும், குலத்தொழிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்றும் அறிவுரை சொன்னதோடு ஏன் ட்ரைனேஜ்குள் இறங்குகிறார்கள், ஏன் விஷவாயு தாக்கி சாகவேண்டும் அதை தலித்துகள் செய்யக்கூடாது என்கின்ற ரீதியில் அவர் அறிவுரைகளையும் அருளினார்.

Republic of India பிறந்து 67 ஆண்டுகளுக்கு பிறகும், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், manual scavenging சட்டரீதியாக தடைசெய்யப்பிட்ட பின்னும் ஏன் ஒரு மனிதன் சாக்கடைக்குள் இறங்கி விஷவாயு தாக்கி இறக்கிறான்? இதற்க்கு யார் காரணம்? இதற்கு யார் பொறுப்பு? எப்படி அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினராகவே இருக்கிறார்கள்? எதனால் அவர்கள் தலைமுறை தலைமுறையாக அதே வேலையில் இருக்கிறார்கள்? அவர்கள் சமூகத்தில் அதே நிலையிலிருக்க காரணமாய் இருக்கும் காரணிகள்/தத்துவங்கள் என்ன? யார் அவர்களை அந்த தொழிலிருந்து மீளாமலிருக்க நிர்பந்திக்கிறார்கள்? எது அவர்களை அவ்வாறு நிர்பந்திக்க தூண்டுகிறது? இதனால் அவர்கள் அடையும் பயன் என்ன? இந்த அநீதியில நானும் எனது குடும்பமும் யார் பக்கம் நிற்கிறோம்? என்றெல்லாம் ஒரு சாதி ஹிந்துவின் மனது யோசித்து நிகழும் அநீதியில தனக்குள்ள தனது குடும்பத்திற்குள்ள தனது சாதிக்குள்ள பங்கை நினைத்து வெட்கம் கொள்ளாது…அவமானம் கொள்ளாது…குற்றவுணர்ச்சி கொள்ளாது….தனது அடையாளத்திற்கு எதிராகவும், தனது சாதி நம்பிக்கைக்கெதிராகவும் சீற்றம் கொள்ளாது…தனது சாதியினரிடம் போய் அவர்களை செழுமை படுத்தாது, அவர்களிடம் கலகம் செய்யாது, அவர்கள் ஏன் அயோக்கியர்கள் என்றும் திருடர்கள் என்றும் முட்டாள்கள் என்றும் ஜனநாயக விரோதமானவர்கள் என்றும் பாடம்மெடுக்காது….ஆனால் தைரியமாக தலித்துகளிடம் வந்து “ஐயோ நீங்க பாவம்” என்று சொல்லும்…நீங்கள் ஏன் அதுபோன்ற தொழில்களை செய்கறீர்கள் என்று செல்லமாய் கோபித்து கொள்ளும். இதைத்தான் வசந்தபாலனும் செய்தார்.
Malcolm x திரைப்படத்தில் ஒரு காட்சி. இது உண்மையாக நடந்தது. malcolm ஒரு பல்கலைகழகத்தில் உரையாற்ற சென்று கொண்டிருக்கிறார். ஒரு நன்கு படித்த, மால்கம் கருத்துக்களின் நியாயத்தை முழுவதுமாய் ஏற்று கொண்ட வெள்ளையின பெண் ஓடி வந்து மால்கமிடம் உங்கள் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கேட்டும் படித்துமிருக்கிறேன். உங்களுடன் நான் உடன்படுகிறேன். உங்கள் போராட்டத்திற்கு நான் எதாவது செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் நான் என்ன செய்வது என்ற கேள்விக்கு மால்கம் ஒற்றை வார்த்தையில் அளித்த பதில் “nothing”.
அதுபோல சாதி ஹிந்துக்கள் உண்மையிலேயே தலித்துகளின் போராட்டத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு தலித்துகளிடம் சொல்ல/செய்ய எதுவுமில்லை. nothing. ஆனால் அவர்கள் அவர்களுக்குள் செய்ய சுயபரிசோதனை/சுய விமர்சனம் தொடங்கி கோடி உள்ளது.
“கபாலி” வெளியான சமயத்தில் நானும், எனது தம்பியும், எனது மாமாவும் literally இரண்டு நாட்கள் ஓயாமல் கபாலி சிறந்த/தேவையான தலித்திய திரைப்படமா அல்லது Fandry சிறந்த/தேவையான தலித்திய படமா என்று விவாதித்து கொண்டிருந்தோம். நானும் எனது தம்பியும் கபாலிதான் சமகால தலித்திய பார்வையையும்/அரசியலையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட படம் என்றும் எனது மாமா Fandry தான் நிஜமான/உண்மையான தலித்திய வாழ்வை ஆவணப்படுத்திய படம் என்னும் அளவிலும் விவாதித்தோம்/முரண்பட்டோம்/வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.
தலித்திய கலை/இலக்கிய/சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1) தலித்திய வாழ்வின் சிக்கல்களை, கடினங்களை, துயரங்களை கலைவடிவதில் சாதி இந்துக்களின் மனசாட்சியின் (caste Hindus moral conscience) முன் நிறுத்துவது… அப்படி நிறுத்துவதின் மூலம் அவர்களுடைய மனதில் ஒரு மாற்றத்தை / நெகிழ்ச்சியை எதிர்பார்ப்பது.
2) தலித்திய வாழ்வின் சிக்கல்களுக்கும் கடினங்களுக்கும் துயரங்களுக்கும் பின்னணியில் சாதி ஹிந்துக்களின் சாதிவெறியும் திமிரும், மனித மாண்பற்ற அவர்களின் செயல்பாடுகளும் எப்படி இயங்குகின்றன என்பதை மூர்க்கமாக கண்டித்து/தோலுரித்து அதை தலித்துகள் நேரடியாக எப்படி எதிர் கொள்வது என்று தலித்துகளோடு விவாதிப்பது அல்லது எதிர்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்துவது.
ஒரு தலித்திய பார்வையிலான கலையிலக்கிய செயல்பாடு பெரும்பாலும் மேல்சொன்ன இரண்டு வகைமைகளுக்குள் அடங்கிவிடும். மேல் சொன்ன வகைமைகளில் Fandry முதல் வகைமை. எனக்கு இந்த வகைமையில் நம்பிக்கையில்லை. இது மனசாட்சியற்ற சாதி ஹிந்துக்களின் மனதில் எந்த சலனத்தையும்/அதிர்வையும் ஏற்படுத்தாது என்பது எனது வாதம். ஹொலிவுட்டில் இந்த வகையான திரைப்படங்கள் கறுப்பின இயக்குனர்களால் நிறைய கையாள பட்டிருக்கின்றன(The pursuit of happiness, Twelve years of slave) . அதாவது கருப்பின வாழ்வியலை அமெரிக்க சமூகத்தின் மனசாட்சியின் முன் விவாத பொருளாக்குவது. ஆனால் சுவாரசியமாக அவர்களது இறுதி காட்சி பெரும்பாலும் நேர்மறையாகவே இருக்கும். அறுபதுகளில் ஓட்டுரிமைக்கு போராடிய அமெரிக்க கருப்பினத்தவர்கள் இரண்டாயிரத்தின் இறுதியில் கருப்பின ஜனாதிபதியை அடைந்து விட்டார்கள். எனவே அவர்களது சமூகத்தின் மீது அவர்களுக்கிருக்கும் நேர்மறை அணுகுமுறையை புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இந்திய சமூகத்தில் தலித்துகளின் மீது நிகழும் அநீதியும்/வன்முறைம் ஆயிரமாண்டுகளுக்கு மேலானா வரலாறு கொண்டது. இந்த அடக்குமுறைக்கு எதிரான தலித்துகளின் எதிர்ப்பரசியல்/போராட்ட வரலாறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. இதற்கு பிறகும் கூட இந்திய சாதிய சமூகம் எருமைமாட்டின் மீது மழை பெய்ததை போன்று நின்ற இடத்திலேயே அதாவது சமூக சாதிய அடுக்குமுறையில் இன்னுமும் எந்த மாற்றமும் வராமல் நின்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் என்னைப் போன்றவார்கள் இந்திய சாதிய ஹிந்து சமூகத்திற்கு மன்சாட்சியென்றோ/அறமென்றோ ஒன்று உண்மையில் உள்ளது என்பதை நம்பவே தயாராயில்லை.
இந்த இடத்தில் தான் கள்ளமௌனம் கடைப்பிடிக்கும் சாதிய சமூகத்தை உலுக்க, பதட்டம் கொள்ள வைக்க and to challenge the established socio, economic casteist beliefs/order கபாலி வருகிறான். கபாலி சாதி ஹிந்துக்கள் எதிர்வினையாற்றியே தீரவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகிறான், தலித்துகளை விழிப்படைய வைக்கிறான், எதிர்த்தாக்குதல் (கலை, இலக்கிய, பண்பாட்டு, அறிவு தளத்தில்) சாத்தியம் என்று தலித்துகளுக்கு செய்துகாண்பிக்கிறான். இதன் மூலம் தலித்துகளின் போராட்ட குணத்தை கூர்மையாக்குகிறான், சாதி ஹிந்துக்களின் போலி பெருமிதங்களை கேலி செய்கிறான். இதுதான் வசந்த பாலன் போன்றான சாதி ஹிந்துக்களுக்கு கபாலியின் மீது எரிச்சலையும் நிராகரிப்பையும் உணர தோன்றுகிறது. Fandry போன்ற முதல் வகையான தலித்திய படைப்புகள் கவித்துமாக நிஜத்திற்கு அருகில் நின்று (அதற்காக கபாலி நிஜமில்லை என்ற அர்த்தமில்லை..அதாவது சாதி ஹிந்துக்கள் தரிசிக்க விரும்பும் நிஜம்) இந்தியாவின் ஆன்மாவோடு/மனசாட்சியோடு ஒரு சன்னமான குரலில் உரையாடலை நிகழ்த்துகிறது. இது ஒரு சாதி ஹிந்துவுக்கு சுகமான அனுபவம். தனது ஒரே சின்ன வயது மகளை கொலை செய்து விட்டார்கள் என்று தெரிந்த உடன் “கண்டாராவோலி வெளியவாடா…அநியாயமா என் பொண்ண கொன்னுட்டீங்களேடே தாயோளி ஒன்ன வெட்டாம விட மாட்டன்டா” என்று முதல் மரியாதையில் சிவாஜியை பார்த்து ஆவேசப்படாமல் “அய்ய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும் சாமீய்” என்று தலித் கதாபாத்திரம் சொல்வதுதான் சாதி ஹிந்துக்களுக்கு இதமான மென்சோகமாக இருக்கிறது. அதாவது ஏற்கனவே சொன்னதை போல் இளையராஜாவின் சோக பாடலை ரசிப்பது போல அவர்களுக்கு இந்த வகையான ஜெயமோகனின் நாயோடிகள் வகையிலான படைப்புகள் பிடித்துத்திருக்கிறது.

இந்நிலையில் Fandry எப்படி என் போன்றவர்களுக்கும் பிடித்த படமாகிறது? எப்படி என்றால் நாகராஜ் மஞ்சுளே கடைசி ஐந்து நிமிடங்களில் Fandryயை முதல் வகைமைகளிலிருந்து இரண்டாவது வகைக்கு நிகழ்த்தும் சாகசத்தை செய்கிறார். எல்லா ஆணுக்குமே தனது பிடித்தமான பெண்ணின் முன் கண்ணியமான/கம்பீரமான ஆணாக வெளிப்படவே ஆசை. ஒரு பெண்ணுடன் பைக்கில் போகும் போது பெயர் தெரியாத யாரோ ஒருவன் ரோட்டில் நம்மை திட்டிவிட்டாலே நமக்கு மிகவும் சங்கடமாக போய்விடுகிறது. திரும்ப இயல்புக்கு திரும்ப வெகு நேரமாகும். இந்நிலையில் இந்திய சாதிய சமூகத்தில் ஒரு தலித் சிறுவன் பதின் வயதில் ஒரு மிகவும் பின்தங்கிய சாதிய இறுக்கங்கள் நிறைந்த கிராமத்தில் தன்னோடு பள்ளியில் படிக்கும் ஒரு சாதி ஹிந்து சிறுமியின் மீது ஈர்ப்பு கொள்கிறான். அந்த சிறுவனுக்கு அவனது எல்லை தெரிகிறது. அதற்குள் நின்று அவன் அந்த சிறுமியின் முன் தனது விருப்பத்திற்கெதிரான, தன் மீது சுமத்தப்பட்டுள்ள சாதி சார்ந்த அடையாளத்தை அவள் முன் கவனமாய் மறைத்து தூர நின்று ரசிக்கிறான். இதனை பின்புலமாக வைத்து மிகவும் கவித்துமான அரசியலோடு (சுவற்றில் பூலே, ஜோதிபாய், அம்பேத்கர் படங்கள் பார்த்து கொண்டிருக்க தலித் சிறுவன் பள்ளியை விட்டு விலகி பன்னி சுமந்து செல்வது) கதையை விவரிக்கிறார். இந்நிலையில் இறுதி காட்சியில் அவன் அந்த சிறுமியின் முன் மிக கவனமாய் கட்டிக்காத்த அவனது கண்ணியம் ஊரில் சுற்றும் ஒரு பன்னியை அவனும் அவனது மொத்த குடும்பமும் பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலையில் பறிக்கப்படுகின்றது. மிகுந்த ஆற்றாமையிலும் அவமானத்திலும் இயலாமையிலும் அவன் தனது மனதிற்கு பிடித்த சிறுமியின் முன் பன்னி பிடிப்பவனாக வெளிப்பட்டு அந்த பன்னியை தூக்கிக்கொண்டு தெருவில் சென்றுகொண்டிருக்கிறான். அப்பொழுது சாதி ஹிந்து இளைஞர்கள் இவனையும் இவனது குடும்பத்தையும் வழிநெடுகிலும் கிண்டல் செய்துகொண்டே வர ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் திடிரென்று ஆவேசமாகி அந்த கும்பலை நோக்கி கல்லெறிய தொடுங்குகிறான். சிதறி ஓடும் அவர்கள் சுதாரித்த பின் மீண்டும் அந்த சிறுவனை நோக்கி ஆவேசமாக வருகிறார்கள். இப்பொழுது அந்த சிறுவன் முன்பைவிட தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தவனாக ஒரு கல்லை எடுத்து திரையை நோக்கி வீச அந்த கல் பார்வையாளரை நோக்கி வருவதாய் காட்டி நாகராஜ் மஞ்சுளே அதை முடித்திருப்பார்.
நாகராஜ் மஞ்சுளே தனது படத்தின் தலைப்பையே “பன்றி” என்று வைத்து விளிப்பது உண்மையில் படத்தில் வரும் பன்றியைத்தானா? உண்மையில் அடித்து வீழ்த்த படவேண்டியது ஊரில் மலத்தில் உழலும் பன்றிகளா அல்லது சாதியை கடைபிடிக்கும்/சாதியை நம்பும் சாதி ஹிந்துக்களா? என்னை பொருத்தவரை தலித்துகளுக்கு எதிராக ஒடுக்குமுறை நிகழும் போதும் அநீதி நிகழும் போதும் மௌனியாய் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கும் சாதி ஹிந்துக்கள்தான் உண்மையில் சாதியென்னும் மலத்தில் உழலும் பன்றிகள். திரைக்கு அப்பால் அமர்ந்து அந்த சிறுவனின் துயரத்தை, சாதிய சமூகம் அவனுக்கு எதிராய் நிகழ்த்தும் வன்முறையை அது வரை மௌனியாய் சலனமற்று பார்த்துக்கொண்டிருந்த சாதி ஹிந்துக்களை நோக்கித்தான் அந்த சிறுவன் கல்லெறிந்தான். அவர்களை நோக்கித்தான் அந்த கல் வந்து கொண்டிருக்கிறது.
பாராட்டுக்கள் :
அந்த நிகழ்ச்சியில் கேள்விபதிலில் வசந்த பாலன் மார்பை கசக்கும் உண்மை பற்றி பேசுகையில் சரியான நேரத்தில் அவரை கேள்விக்குக்குட்படுத்திய பெண்
சின்மயி விவகாரத்தை முன்னிட்டு பேசி சுய விமர்சனத்தின் தேவையை சாதி ஹிந்துக்களுக்கு வலியுறுத்திய கண்ணாடி போட்ட இளைஞர்
அந்த நிகழ்ச்சியில் தலித்துகளின் சார்பை/கோணத்தை நுட்பமாக உள்வாங்கி வெளிப்படுத்திய, அவரது பேச்சினூடாக மிகுந்த நம்பிக்கையை விதைத்த திரு மீரா கதிரவன்
நன்றி:
தோழர் நந்தினி…என்னை போன்ற பலருக்கும் உரையாட புழங்க ஒரு களம் அமைத்ததற்கும், இடமளிப்பதற்கும்
தமிழில் சினிமாவை வெறும் craft and making சார்ந்து மட்டும் பார்க்காமல் தொடர்ந்து கலையினூடான அரசியலை எழுதி வரும் எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் இந்த கட்டுரையை பகிர்ந்ததற்கு
“சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை”
ப. ஜெயசீலன்.