சமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

இன்றைய தமிழ் இந்து நடுப்பக்கத்தில் “ஒரு மனிதன் குடியரசு ஆகும் காலம்” என்ற தலைப்பில் “குடியரசு” குறித்த அபார தத்துவ விளக்கத்தை திரு சமஸ் முன்வைத்துள்ளார். இந்த விளக்கமானது பாகற்காய் கசப்பையும் மீறியதாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் முழுவதுமாக உண்ணவேண்டியதாகிவிட்டது!

முதலாவதாக குடியரசு குறித்த சமசின் வாதத்தை “கொச்சை குடியரசுவாதம்” என நாம் அழைப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. திரு. சமசின் கட்டுரையின் சாரமானது, நடப்பில் உள்ள இந்திய ஜனநாயகக் குடியரசு, காந்தியின் கொள்கைக்கு எதிரானது, மையப்படுத்தப்பட்ட ஆட்சி அமைப்பிற்கு ஆதரவானது, தேர்தல் அரசியல், பெரும்பான்மை காரணம் கூறி இந்த குடியரசு நியாயப்படுத்தப்படுகிறது. இதுதான் சாரம்..

இங்கு நாம் திரு சமசிற்கு சுட்டிக் காட்ட விரும்புவதெல்லாம் இதுதான்: ஜனநாயகக் குடியரசு என்பது இரு வகைப்பட்டது, ஒன்று முதலாளித்துவ ஜனநாயகம், இரண்டாவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் புரட்சிகர ஜனநாயகம்.

முன்னது முதலாளித்துவ நலனை பிரதிநிதிப்படுத்துவது. பின்னது விவசாயிகள், தொழிலாளர்கள் நலனை பிரதிநிதிப் படுத்துவது. இதற்கு இடைப்பட்ட நிலையிலோ வர்க்க சமரசமுடைய எந்த “ஜனநாயகக் குடியரசும்” இல்லை என்பதே!

முதலாளித்துவ ஜனநாயகம் அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம் என பெயரளவில் காட்டிக் கொண்டாலும் பெரும் லஞ்சம், ஊழல், வங்கிகள், பங்குச் சந்தைகள் வழியே நாட்டின் உற்பத்தி-மறு உற்பத்தி மற்றும் விநியோகத்தை முதலாளித்துவ சக்திகள் கட்டுப்படுத்தும். லாபத்தை சுரண்டிக் கொழுக்கும். உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டும்.

இந்நிலையில், இந்தியாவில் நடப்பில் உள்ள ஜனநாயகமானது, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சி மாதிரியை முன் உதாரணமாக கொண்டு, அதையே சுவிகரித்து கொண்டது என திரு சமஸ் கூறுகிறார். இதன் வழியே இந்தியாவில் நடப்பில் உள்ளது இங்கிலாந்து நாட்டின் முதலாளித்துவ ஜனநாயக மாதிரியே என அவரை அறியாமையாலேயே நாம் மேற்குறிப்பிட்ட இரு வகைப்பட்ட ஜனநாயகத்தில் ஒரு பக்கம் வந்து சேர்ந்துவிடுகிறார்.

சிக்கல் என்ன வென்றால், இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்து, சட்டப் பூர்வத்தின் வழியே ஜனநாயகத்தை காப்பதாக ஏமாற்றுவதை ஒழித்து, பாட்டாளிகள், விவசாயிகள் தலைமையில் அதிகாரத்தை குவிக்கிற புரட்சிகர ஜனநாயக குடியரசை நிறுவ வேண்டும் என்ற அடுத்த கட்ட முடிவுக்கு அவரால் வர இயலவில்லை. ஏனெனில் காந்தியின் கொள்கையே முதலாளித்துவ ஜனநாயக குடியரசு என அவரால் துளியும் விளங்கிக் கொள்ள இயலவில்லை. அல்லது விளங்கியும் விளங்காது போல நடிக்கிறார்!அது அவ்வாறு இல்லாது போனால் பிர்லாவிற்கு காந்தியிடம் என்ன வேலை என அவரையே அவர் கேட்டுக் கொண்டாக வேண்டும்!

ஆக, ஒரு முதலாளித்துவ குடியரசு அமைவதற்குபோராடிய காந்தி(சொல்லப்போனால் ஒரு முதலாளித்துவ குடியரசில் “வர்க்க சமரசத்தை”நம்பிய) அதன் அமைப்பின் உறுப்புகள் சுதந்திரமாக இருக்கும் (குறிப்பாக கிராம சபைகள்) என கூறுவதை விட ஒரு கொச்சை வாதம் இருக்க இயலுமா?

முதலாளித்துவ குடியரசின் ஒரு கற்பனை சமூகத்தை கனவு கண்ட காந்தியின் கொள்கையை வரித்துக் கொண்ட திரு சமசம் இந்த குழப்பத்தை மேலும் வளப்படுத்துவதில் வியப்பொன்றுமில்லை.

திரு சமஸ் அவர்கள்அவரை்அறியாமலேயே நடப்பில் உள்ள ஜனநாயகத்தை முதலாளித்துவ ஜனநாயகம் என்கிறார், அதேபோல அவரை அறியாமலேயே காந்தியவாதம் என அதே முதலாளித்துவ ஜனநாயகத்தை வேறு சட்டை போட்டு அலங்கரித்து ஆதரிக்கிறார்!

முதலாளித்துவ பொருளாதார நான் சார்ந்த குடியரசில் அனைத்து ஆட்சி உறுப்புகளும் நிர்வாக உறுப்புகளும் முதலாளித்துவ நலன் சார்ந்தே இயங்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இதில் நேரு, படேல், அம்பேத்கருக்கு மாற்றாக காந்தி முன் வாய்த்த குடியரசு அல்லது ஆட்சி நிர்வாக முறையும் திரு சமஸ் சற்று விரிவாக விளக்கினால் அது குடியரசின் பரிணாம வளர்ச்சியில் ஒரு பாய்ச்சலைக் கூட ஏற்படுத்தலாம்!

ஒரு முதலாளித்துவ குடியரசின் கீழ் பல லட்சம் கோடி சம்பாதிக்கிற, சொத்து சேர்க்கிற முதலாளியும், தினக்கூலிக்கு தன் உழைப்பை விற்கிற ஏழையும் “ஒரு அரசியல் சாசன சட்டத்தின்”கீழ் ஒன்றிணைப்பது அல்லது ஒன்றுகலப்பது என்பது அடிப்படையிலேயே முரணாகத் தெரியவில்லையா சமஸ்?

அறுபது வருடத்திற்கும் மேலாக சொத்து சேர்க்கிற வர்க்கத்திற்கு சார்பாக இயங்கிக் கொண்டிருக்கிற இந்த குடியரசானது, மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருவதிற்கு இந்த முரண்பாடுதான் அடிப்படைக் காரணமாக உள்ளது என்பது ஏன் உங்களுக்கெல்லாம் உரைப்பதில்லை?

நிலத்துடன் பிணைக்கப்பட்ட கூலி விவாசாயத் தொழிலாளர்கள், கப்பல் போக்குவரத்து, தபால் தந்தித் தொழிலாளர்கள், இந்திய ராணுவ வீரர்கள் (சுபாஸ் சந்திர போஸ்)என விவசாயிகள், தொழிலாளிகள், படை வீரர்கள் இங்கிலாந்து காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக தீரமுடன் மேற்கொண்ட போராட்டத்தை தலைமையேற்ற இந்திய ஆளும் வர்க்கமானது அரசியல் சாசன ஆட்சி, சட்டத்தின் பெயரிலான ஆட்சி எனக் பெரும் மேற்பரப்பில் பெரும் ஜிகினா வேலைகளை காட்டி விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, படை வீரர்களுக்கு துரோகம் இழைத்தை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? இதற்கு மாற்று என்பதே, கீழிருந்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என ஏன் உங்களுக்கு உரைக்க வில்லை சமஸ்?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வழியே,முதலாளிகளின் தனிச் சலுகைகளை ஒழித்து, நிரந்தர போலீஸ், ராணுவம் போன்ற படைகளை கலைத்து சுதந்திரம் சமத்துவம் சகோதரத்தை கோருகிற, முதலாளிகளின் எதிர் புரட்சியை நசுக்குகிற ஒரு விவசாயி-தொழிலாளர்கள்-படை பிரிவின் புரட்சிகர ஜனநாயகமும் அதன் புரட்சிகர ஆட்சியும்தான் தான் மாற்று என்ற உண்மையை ஏன் உங்கள் மூளை சிந்திப்பதில்லை?

உலகின் அனைத்து குடியரசின் தோற்றத்திற்கும் அடித்தளத்தை அமைத்தது பிரஞ்சுப் புரட்சி. இந்தப் புரட்சியால் விளைந்த குடியரசு குறித்து முதலில் படியுங்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் புரட்சிகர ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா உங்களுக்கு? பாரீஸ் கம்யூனை தெரிந்துகொள்ளுங்கள்…

அறுபதாண்டு கால சுரண்டலை மீண்டும் வேறு பெயரில் தூக்கி திரியாதீர்,உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்க முயலாதீர்!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது

One thought on “சமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்

 1. காந்தியை தலித் அரசியல்வாதிகள் வசைபாடுவதைப்பற்றி நான் சொன்னேன். மதுரை இறையியல் கல்லூரி ஒன்றில் ஒருநாள் தங்கியிருந்த அனுபவத்தை சுந்தர ராமசாமி சொன்னார்…

  >> ‘‘காலம்பற கதவைத்திறக்கிறேன், கொழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் குடுக்கிறாங்க. ஓன்னு கத்தி பாடறதுகள். ‘எங்களை ஹரிஜன்னு சொல்ல நீ யாருடா கேடுகெட்ட நாயேன்னு… ‘கண்ணீர் வந்திடுத்து. அதுகளுக்கு என்ன தெரியும்? என்ன படிச்சிருக்கும்ங்க? ஆராய்ந்து பாக்கிற பக்குவம் இருக்குமா? ஏதோ சாப்பாடு எடம் இருக்குன்னு வந்து படிக்கிற ஏழைகள். மனசில ஆழமா வெறுப்பை உக்கார வைச்சாச்சு. அது மாறவே மாறாது. காந்திமேல மட்டுமில்ல காந்தியை ஐடியலா வைச்சிருக்கிற இந்த தேசம் மேலேயே வெறுப்பு… அதனால யாருக்கு என்ன லாபம்? அன்னியப்பட்டுப்போன ஒரு தனி சமூகம் உருவாகும்ங்கிறத விட்டா என்ன நடக்கும்? யாரு இதையெல்லாம் பிளான் போட்டு செய்றா? புரியலை… காந்தியோட சிரிப்பு கண்ணுல தெரிஞ்சது. மனுஷனோட அற்பத்தனத்தையும் குரூரத்தையும் அவரை மாதிரி அளந்து வச்சிண்டவா யார் இருக்கா?‘‘

  >> ‘‘தலித்துக்களோட கக்கூஸை சுத்தம் பண்ணி மலத்தை சுமந்தார் காந்தி. இண்ணைக்கும் நம்ம முற்போக்காளர்களிலயோ திராவிட அரசியல் வாதிகளிலயோ கோட்பாட்டாளார்களிலயோ எவருமே அதை செய்ய மாட்டாங்க. ஒரு தேசத்துக்கு அது எத்தனை பெரிய செய்தி பாருங்க. அவரைச்சுத்தி இருந்தவங்க யாரு? புருஷோத்தம்தாஸ் தாண்டன், பட்டாபி சீதாராமய்யா, சீனிவாச சாஸ்திரி, கெ.சி.பந்த், ராஜேந்திர பிரசாத்…. சாதியில ஊறின மட்டைங்க. எல்லாரையும் அவர் அணைச்சுபோகணும். அவர் தனியா நடக்கிற தத்துவக்கிறுக்கன் இல்லை, பிரம்மாண்டமான இயக்கத்தோட தலைவர். அந்த அமைப்புக்குள்ளயும் அவர் தலித் விடுதலை பத்தின கருத்துக்களை ஏத்துக்க வைச்சார். அவங்க வேற வழியில்லாம அதுக்கு தலையாட்டினாங்க.

  >> யோசிச்சுப்பாருங்க, தேசவிடுதலை கிடைச்சப்ப யார்ட்ட பவர் வந்தது, பெரும்பான்மைங்ககிட்ட. அதான் டெமாக்ரஸி. இந்த பெரும்பான்மை தலித்துக்களை நாய்க்கும் கீழா நடத்தினவங்க. ஆனா அரசியல்சட்டம் தலித்துக்களுக்கு பாதுகாப்பும் சமத்துவமும் மட்டுமல்ல தனிச்சலுகையும் வழங்கினப்ப இங்க ஒரு சின்ன குரல்கூட எழலை. ஏன்? அது அம்பேத்கர் பண்ணின சாதனையா என்ன ? இல்லை. காந்தி காங்கிரஸை முப்பதுவருஷமா தள்ளி உந்தி அங்க கொண்டுவந்து சேத்திருந்தார். முணுமுணுத்திருப்பாங்க, புழுங்கியிருப்பாங்க. ஆனா வேற வழி இல்லை. அப்டிப்பாத்தா இந்த தேசத்தில தலித்துக்களுக்கு மிக அதிகமா பண்ணினவர் அவர்தான். இங்க உள்ள உயர்சாதிகளோட ஆத்மாவைத் தொட்டு சகமனுஷங்களைப்பத்தி யோசிக்கச்சொன்னவர் அவர்தான்.

  >> அம்பேத்கர் அவரை திட்டினதை வைச்சு இண்ணைக்கு இங்க உள்ளவங்க சத்தம் போடறாங்க. அரசியல்வாதின்னாலே அரைவேக்காடுங்கதானே… காந்திக்கு தலித்துக்களை தனிச்சமூகமா ஒதுக்கிறதில உடன்பாடு இல்லை. அதை அம்பேத்கர் ஒரு சதியா பாத்தார். அவர் காந்தியை சந்தேகப்படலை, கட்சிக்குள்ள இருக்கிற முதலைகளை பாத்து காந்தி சமரசம் பண்ணிண்டார்னு அவர் நினைச்சார். ஆனா முஸ்லீம்களுக்கான தனித்தொகுதி எப்டி தேசத்தை பிரிச்சுதுன்னு பாத்தவர் காந்தி. அவர் சொல்றது தப்போ சரியோ அதில ஒரு கேஸ் கண்டிப்பா இருக்கு. பெரும்பான்மை மக்கள்கிட்டேருந்து துண்டிச்சுண்டு தலித்துக்கள் அடையறது ஒண்ணுமில்லை. அவங்க தனிமைப்பட்டு ப்ரூஸ்ட்ரேட் ஆறது மட்டும்தான் நடக்கும்….இன்னைக்கு அவங்களை அரசியல்வாதிங்க வையலாம். நாளைக்கு தலித்துக்களுக்குள்ளயும் ஸ்டேட்ஸ்மான் வரலாம். அப்ப அவங்களுக்கு புரியும் அவரை….

  — ஜெயமோகனின் ‘சு.ரா. நினைவின் நதியில்’ புத்தகத்தில் இருந்து…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.