ஞானக்கூத்தன் தமது ஆக்கங்களை (கடிதங்கள், நேர்காணல்கள், சிற்றிதழ்கள் உள்பட) யார், எப்போது, எப்படி வெளியிட வேண்டும் என்று அவரே முடிவு செய்தார். அவர் இறந்த பின்பு இந்த உரிமை அவருடைய குடும்பத்தினருடையது. இது தார்மீக உரிமை. எங்களிடம் அனுமதி பெறாமல் அவருடைய ஆக்கங்கள் எவற்றையும் வெளியிடக் கூடாது. ஆள்தான் இல்லையே, இவர் எழுதினது எதையாவது போடுவோம் என்று மிக இயல்பாகச் செய்கிறார்கள். எங்கள் வீட்டுக்குள் வந்து அவருடைய பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற செயல் இது.
இதைச் செய்வது அவருடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்தவர்கள் என்பதுதான் எங்களைப் புண்படுத்தும் விஷயம். அவரது படைப்புகளின் பிரதிகள் கைவசம் இருப்பதாலேயே அவற்றைப் பிரசுரிக்கும் உரிமை வந்துவிடாது. நீண்டகாலப் பழக்கமும் டீக்கடையில் ஒன்றாக போண்டா சாப்பிட்ட அனுபவங்களும் அந்த உரிமையைத் தந்துவிடாது. கடற்கரையில் நடந்த நீண்ட உரையாடல்களும் போதாது. ஞானக்கூத்தனின் எந்தப் படைப்பையாவது புத்தகமாக்க விரும்புகிறீர்களா? அவரது குடும்பத்திடம் அனுமதி கேளுங்கள். இன்னொன்று, சமீபத்தில் மறைந்த வேறு எந்த எழுத்தாளரிடமாவது இந்த வேலையைச் செய்துபாருங்கள்.
ஞானக்கூத்தனின் ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிடுவது நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டாலும் அது தார்மீக முறையில் செய்யப்பட வேண்டும். அது ஞானக்கூத்தனுக்குச் செய்யும் மரியாதை. அவரது படைப்புகளை வெளியிட அனுமதி அளிப்பது பற்றி முடிவுசெய்ய அவரது குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர் படைப்புகள் ஒன்றும் நாட்டுடமை ஆக்கப்படவில்லை. அவருடைய படைப்புகளைத் தொகுப்பது உள்ளிட்ட திட்டங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இவற்றைச் செயல்படுத்துவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.
இந்த இடுகையை எழுத வேண்டியிருப்பது கொடுமை. நீண்டகாலம் யோசித்து ஆஃப்லைன் எதிர்வினைகளைப் பற்றிக் கவலைப்பட்டாலும் கோபம் மிக வலுவான உணர்ச்சி.
குறிப்பு: முன்பே வெளியான அவருடைய கவிதைகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதோ வலைப்பதிவுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொள்வதோ ஒருபோதும் பிரச்சினை இல்லை. இது வாசகர்களும் சக படைப்பாளிகளும் விரும்பிச் செய்யும், எப்போதும் இருந்துவரும் நடைமுறைதான். அவர் இறந்தபோது பலரும் அவரது பல கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்போதும் பகிர்வு தொடர்கிறது. இது பிரச்சினையே இல்லை. ஸ்மைலிக்குக் காப்புரிமை பதிவுசெய்ய முடியாது.
எழுத்தாளர் ஞானக்கூத்தன் குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கை.