திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கோழைத்தனமான இழிசெயலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான கருணா போன்ற ஒப்பனையோடு உள்ள ஒருவரிடம் இன்னொருவர் பேட்டி காண்பது போன்ற அந்தக் காணொளிப் பதிவு கருணாவின் பெயரையும், குடும்பத்தினரையும, அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஓவியர் வெண்புறா சரவணனையும் நேரடியாகக் குறிப்பிட்டு, பாலியல் வக்கிரத்தோடும் அவமதிக்கிறது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகிறவர்களின் இப்படிப்பட்ட செயல்கள் அவர்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்தவர்கள் என்பதைத்hன் எடுத்துக்காட்டுகின்றன. தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு மாறாக, இத்தகைய அற்பத்தனமான முயற்சிகளில் இறங்குகிறார்கள் என்றால், போராட்டம் நியாயமானது என்பதும் தெளிவாகிறது. இத்தகைய தாக்குதல்களால் முற்போக்கு இயக்கத்தினர் ஒருபோதும் அஞ்சிப் பின்வாங்கிவிட மாட்டார்கள்,” என்று கூறியுள்ளனர்.
“அதேவேளையில் இது ஒரு கோழைத்தனமான செயல் மட்டுமல்ல, அநீதிகளை அம்பலப்படுத்தி மக்களுக்காகப் போராட்டக் களம் காண்கிற மற்றவர்களையும் அச்சுறுத்தி ஒதுங்க வைக்க முயல்கிற சூழ்ச்சியுமாகும். அந்தக் காணொளிக் காட்சியைத் தயாரித்தவர்கள், ஆதரிப்பவர்கள் யார் யார் என அதற்கான இணைப்புகளிலேயே இருக்கிறது. ஆகவே, அடித்தட்டு மக்களுக்கான கலைஞருமான கருணாவை இவ்வாறு சிறுமைப்படுத்த முயன்றவர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.