ப. ஜெயசீலன்
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சாதி பெயர் குறித்தான விவாதத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் திரு. கரு. பழனியப்பன் இறுதி சிறப்புரை ஆற்றுகையில் சொன்ன கருத்துக்கள் ஒரு சாதியற்ற சமத்துவ சமூகத்திற்கான ஆதரவு கருத்து என்னும் ரீதியில் முக நூலில் பலராலும் பகிரப்பட்டது..அதில் தலித்திய தளத்தில் இயங்குபவர்களும் அடக்கம்…உண்மையில் அவர் சொன்னது மிக ஆபாசமான அயோக்கியத்தனமான தற்குறி கருத்து. அவர் சொன்னதின் சாராம்சம் ” சாதி இந்துக்கள் தங்கள் சாதிகளின் வரலாற்று பெருமிதம் குறித்தான உவகையில் தங்கள் பெயருக்கு பின் தங்கள் சாதி பெயரை இட்டுக்கொள்வது சரியில்லை…ஏனென்றால் தலித்துகள் தங்களின் சாதி குறித்து அவமானமும் சிறுமையுற்றும் இருக்கிறார்கள்…அவர்கள் முன் சாதி இந்துக்கள் தங்கள் சாதி பெயரை சூட்டி மகிழ்வது சோற்றுக்கு வழி இல்லாதவன் முன் விருந்துண்ணும் அநாகரீகம் போன்றது” என்பதே. இவரின் கருத்தை நிதானித்து கவனித்தால் இதை விட கேவலமாக தலித்துகளை கேவலப்படுத்த முடியாது என்பது புரியும்.
வரலாற்றுரீதியாக சாதி இந்துக்கள் மங்கோலியர்கள், ஸ்பார்ட்டன்கள், சாமுராய்கள், வைகிங்ஸ் போன்று உலகை நடுங்க வைத்த வீரர்களா? கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டின் போன்று உலக அறிவியலின் திசை வழி போக்கை மாற்றி அமைத்த மேதாவிகளா? அல்லது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அரச குடும்பங்களை போல உலகில் பாதியை ஆண்டவர்களா? அந்தளவு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இவர்களால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் வாங்க முடிந்ததா/முடியுமா? வருடா வருடம் நோபல் பரிசுகளை சாதி இந்துக்கள் வாங்கி சலித்து விட்டார்களா?. இப்படி எதுவுமே வாய்க்கப்படாத “லோக்கல் தாதாக்கள்” என்னும் அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் சாதி இந்துக்கள் தங்களை குறித்து பெருமிதம் கொள்வதற்கான காரணம் என்று ஒன்று உண்மையிலேயே உள்ளதா? அப்படி ஒன்று இருந்தாலும் அது உண்மையில் வரலாற்றுரீதியாக அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள கூடியதா? இப்படி எதுவுமே இல்லாத சாதி இந்துக்களுக்கு தங்களின் சாதி பெயரை பின்னிட்டு கொள்வது பெருமிதம் என்று ஏன் தோன்றுகிறது? இந்த தர்க்கம் தவிர்க்கும் பிறழ்ந்த மனநிலை அவர்களுக்கு தோன்றும் காரணம் என்ன?. பதில் பார்ப்பனிய தத்துவம்.
பார்ப்பனிய வர்ணாஸ்ரம தத்துவம் என்பது அடிப்படையிலேயே அறிவியலுக்கு எல்லாவகையிலும் புறம்பானது என்பதும் ஜனநாயக விரோதமானது என்பதும் மனித நாகரீகத்திற்கு எதிரானது என்பதும் கிஞ்சிற்று அறிவுள்ளோரும் ஏற்று கொள்ளும் உண்மை. அதன் அடிப்படையில் அமைந்த சாதிய கட்டமைப்பில் நம்பிக்கை உள்ளவன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் முறையில், ஒரு முறைதான் சாதி பெயரை சூடி கொள்வது. இப்படி சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும் இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும் ஆகிறான். இப்படிபட்ட சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.
மனுதர்மம் தலித்துகளுக்கு எதிராக சாதி இந்துக்களை எப்படி செயல்பட வைக்கிறதோ அதேபோல ஹிட்லர் வடித்தெடுத்த நாசி தத்துவம் யூதர்களுக்கு எதிரான ஜெர்மானியர்களின் எல்லா வன்முறைகளையும் வன்மங்களையும் ஊக்கப்படுத்தியது, நியாப்படுத்தியது. உலகிலேயே ஜெர்மானிய இனம்தான் உயர்வானது என்று சொல்லும் Aryan supremacy theoryயை நம்ப வைத்தது. லட்ச கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். லட்சக்கணக்கான யூதர்கள் அகதிகள் ஆக்கப்பட்டார்கள். நாஜிகள் உச்சத்தில் இருந்தபொழுது கிட்டத்தட்ட ஒவ்வொரு ஜெர்மானிய வீட்டிலும் ஹிட்லரின் படம் இருந்தது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஜெர்மனியே நாஜிக்களாக மாறிப்போனது. நாஜிக்களின் ஜெர்மனி உலகை கிட்டத்தட்ட அதன் முன் மண்டியிட வைத்தது.

அப்படிப்பட்ட ஜெர்மனியில் இப்பொழுது ஹிட்லர் என்னும் பெயர் கெட்டவார்த்தை ஆகிப்போனது. நாஜி ஜெர்மனி நிகழ்த்திய வன்முறையை மனித விரோதப் போக்கை எல்லோரும் ஒரு கொடுங்கனவாக நினைத்து கடந்து போக முயற்சிக்கிறார்கள். ஏதோ ஒரு ஐரோப்பியா நாட்டில் விளையாட்டுக்காக ஒரு கால்பந்து வீரர் கோல் அடித்து விட்டு நாஜி சலுயூட் அடித்தார் என்பதற்காக அவரது விளையாட்டு லைசென்ஸ் பறிக்கப்படுகிறது. ஜெர்மனியில் பிறக்கும் எந்த குழந்தைக்கும் ஹிட்லர் என்று பெயர் வைக்க எந்த ஜெர்மானியரும் துணிவதில்லை. ஏனென்றால் மனித குலத்திற்கே எதிரான கெட்டப்பெயராக அந்த பெயரும் அந்த பெயர் சார்ந்த அடையாளங்களும் மாறிப் போய் விட்டது. இதற்கு எல்லாம் காரணம் நாம் ஹிட்லர் என்று பெயர் சூடினால், ஹிட்லர் வீரம் பற்றி பேசினால், உலகை நடுங்க வைத்த ஹிட்லரின் தேசமிது என்று பிதற்றினால் நம்மால் விரட்டி விரட்டி வேட்டையாடப் பட்ட யூதர்கள் தங்களை குறித்து அவமானம் கொள்வார்கள். ஏனென்றால் நம்மை போல் பெருமையாக அவர்களுடைய அடையாளத்தை அறிவித்துக்கொள்ளமுடியாது. இந்நிலையில் அவர்கள் முன் நாம் ஹிட்லர் என்று பெயரிட்டு கொள்வது யூதர்களை பார்க்கவைத்து விருந்துண்ணுவதை போல் இருக்கும் என்ற காரணத்தினால் அல்ல. மாறாக ஹிட்லர் குறித்து ஜெர்மானியர்களுக்கு இருக்கும் அவமானத்தாலும் குற்றஉணர்ச்சியினாலுமே தான். ஹிட்லரின் பெயர் தங்கள் மேல் விழுவதின் மூலம் எங்கே ஹிட்லரின் மனிதவிரோத கொடுஞ்செயல்களின் சாயல் தங்கள் மேல் விழுந்துவிடுமோ அன்று அஞ்சி நடுங்கி கூசிப்போகிறார்கள்.
இந்நிலையில் ஆயிரமாண்டு காலமாய் தலித்துகளின் உழைப்பை சுரண்டி தின்றவன், தலித் பெண்களை வன் புணர்ந்தவன், தலித் குடியிருப்புகளை கொளுத்தியவன், தலித்துகளின் கலை கலாச்சாரத்தை திருடிக்கொண்டவன்/அழித்தவன், பெரும்பான்மை எண்ணிக்கை தரும் தைரியத்தில் தலித்துகளின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவன், தலித்துகளின் நியாமான வாய்ப்புகளை பறித்தவன் என்று ஒவ்வொரு சாதி இந்துக்களின் சாதிக்கும் பின்னேயும் ஒரு அயோக்கியத்தனம் இருக்கிறது. அதனால் தங்களின் சாதியை மிக பெரிய அவமானமாகவும், சாதியை பயின்ற தங்களது மூதாதையர்களின் மடமைத்தனத்தை குறித்தும் அயோக்கியத்தனத்தை குறித்தும் அவர்கள் கூனி கூசி குறுகி சாதி பெயரை சூடும் இழி செயலிலிருந்து அவர்கள் விலக வேண்டும் என்று சொல்வதும் எதிர்பார்ப்பதும்தான் நியாமாக தர்க்காமாக இருக்க முடியும். ஆனால் உலகில் யாராலுமே சிந்திக்கமுடியதா அயோக்கியத்தனமான சுத்தமான சாதி இந்துவால் மட்டுமே சிந்திக்க முடிகிற கோணத்தை திரு கரு பழனியப்பன் வந்தடைகிறார். அது என்ன கோணம் என்றால் “தலித்துகள் பாவம் நாம பார்த்து எதாவது அவங்களுக்கு செஞ்சாதான் உண்டு” என்கின்ற கோணம். அதாவது சாதி இந்துக்கள் திருட்டு பசங்க சில்லறை பசங்க அயோக்கியபசங்க என்பதை மறைத்து தலித்துகள் வாழ்க்கையே சாதி இந்துக்களின் கருணையில்தான் இருக்கிறது என்கின்ற பிம்பத்தை கட்டமைப்பது. அதனைவிட நுட்பமாக தலித்துகளின் மீட்சி என்பது சாதிஇந்துகளின் கருணையை பொறுத்தது என்று தலித்துகளுக்கே நிறுவுவது.
ஆஸ்திரேலியாவில் காலனி ஆதிக்கத்தின் போது வெள்ளையர்கள் ஆஸ்திரேலியா பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்க 1998 முதற்கொண்டு மே 26ஐ national sorry day என்று கடைபிடிக்கிறார்கள். 2008ல் பிரதமராக இருந்த கெவின் ரட் மே 26ஆம் நாளில் முதல் முறையாக ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் சார்பாக ஆஸ்திரேலியா பூர்வகுடிகளிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கேட்போர் எவரும் அழுது விடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மன்னிப்பு கோரும் கடிதத்தை வாசித்தார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் நிகழ்த்திய வன்முறைக்கு ஆஸ்திரேலியா சமூகத்தை மன்னிப்பு கோரத்தூண்டிய குற்றவுணர்ச்சி ஏன் சாதி இந்துக்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் துளியும் ஏற்படுவது இல்லை? ஒருவனால் அடிமைப்படுத்தப்பட்டவன் வெட்கப்படவேண்டியவன் இல்லை மாறாக அடிமைப்படுத்துபவனே ஒரு காட்டுமிராண்டியாக தன்னையே உணர்ந்து நாகரீக சமூகத்தில் வெட்கம் கொள்கிறான் என்று சாதி இந்துக்களுக்கு எப்பொழுது புரியும்? எவனையும் ஏய்க்காத, எவன் உழைப்பையும் சுரண்டி தின்று கொழுக்காத, எவன் குடியையும் கெடுக்காத தலித்துகளின் மூத்திரத்தை குடிக்கக்கூட சாதியை பயிலும் கடைபிடிக்கும் சாதி இந்துக்களுக்கு தகுதி இல்லாத போது தலித்துகளாக அறிவித்து கொள்ள தலித்துகளுக்கு தயக்கம் இல்லை ஆனால் அவர்கள் சாதியற்ற ஒரு சமூகத்தை அண்ணலின் வழியில் கனவு காண்கிறார்கள் என்று திரு கரு பழனிய்யப்பனிடம் யார் சொல்வது?
ஒரு நாகரீகமான சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டால் அந்த அநீதியை இழைத்தவனிடம் நாம் முதலில் எதிர்பார்ப்பது guilt குற்றவுணர்ச்சி. அடுத்தது குற்றம் குறித்தான வேதனை remorse. இந்த நிலையில் இருந்துதான் நாம் apology, reconciliation போன்ற நிலைக்கு நகர முடியும். பழனியப்பன் அவர்களின் கருத்து நமக்கு உணர்த்தியது நம் சமூகம் இன்னும் சாதி குறித்து குற்ற உணர்ச்சியே கொள்ளவில்லை என்பதுதான். இந்நிலையில் நம் சமூகம் remorse என்னும் நிலையை அடைய இன்னும் பல ஆயிரம் மைல்கள் நடக்க வேண்டியிருக்கும் என்று எனக்கு தோன்ற வைத்தார் திரு. வசந்தபாலன். Fandry என்னும் ஒரு முக்கியமான சமகால தலித்திய திரைப்படம் சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதை கேட்கும் துர்பாக்கியம் நேற்றிரவு நிகழ்ந்தது.
தொடரும்.
ஜெயசீலன்.
முதலில் “நான்” குற்றவுணர்வு கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அதே வேளையில் சாதியை எதிர்க்கின்ற சாதிய இந்துக்கள் அணைவரும்
இந்த சூழலுக்கு “பாதிப்புக்கு உள் ஆனவர்கள்”.
ஆதிக்க சாதியாளர்களையும், சாதிய இந்துக்களையும் நாம் அடையாளம் காணவேண்டும்.
LikeLike
Enna koduma saravanan.. oruthar nallathu pesunalum epdi ellamtwist panranuga. Ivanuga ellam journalists aam? Indha thaan Kali kaalamngrangalo
LikeLike