எண்ணூர் ஆற்றை வரைபடத்திலிருந்து தூக்கிய சுற்றுச்சூழல் துறை

சென்னை   சுற்றுச்சூழல் மற்றும் வன துறையிலும், மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல நிறுவனத்திலும் முறைகேடுகளும் சாத்தியமான மோசடிகளையும் அம்பலப்படுத்தும் வழியில் எண்ணூர் ஆற்று பகுதியின் இரு வெவ்வேறு, முற்றிலுமாக முரண்பட்டுள்ள, CRZ வரைபடங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் என கூறி இரண்டு தனி RTI பதில்களின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜேசு ரத்தினம் அவர்களின் RTI க்கு பதிலாக 2009ல் சுற்றுச்சூழல் துறையால் வழங்கப்பட்ட வரைபடத்தில் – இது 1996ல் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் – எண்ணுர் ஆற்றின் 6469 ஏக்கரா CRZ 1 ன் கீழ் மேம்பாடு அனுமதியில்லா மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர்நிலையாகவும் (Tidal waterbody) காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017ல் RTI க்கு பதிலாக – அதாவது எண்ணூர் ஈரநிலங்களை ஆக்கிரமிப்பதை பற்றி சர்ச்சை ஏற்பட்ட பின் – அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட வரைபடத்தில் எண்னூரில் ஆறே இல்லாததுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வரைபடங்களுமே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டதால், சுற்றுச்சூழல் துறையால் கொடுக்கப்பட்ட இரு தகவல்களில் ஒன்று பொய்யானது. “தகவல் அறியும் சட்டத்தின் படி தவறான தகவல் அளிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்”, என்று கூறினார் ஜேசு ரத்தினம். 2009ல் பெறப்பட்ட வரைபடம் 16 கி.மீ நீளம் உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்த வரைபடம் கடற்கரை மேலாண்மை திட்டத்துடன் ஒத்துப்போகிறது. 2017ல் பெறப்பட்ட வரைபடமோ 13 கி.மீ நீளத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. வரைபடத்தில் ஆறே இல்லாது போலும் தோற்றமளிக்கிறது.

மாநில கடற்கரை மேம்பாட்டு குழுமம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயல்பாட்டை கண்காணிக்க ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் பத்திரிக்கை மாநாட்டில் இவ்வாவணங்களை வெளியிட்ட எண்ணூர் மீனவர்கள், Coastal Action Network (CAN) மற்றும் கடற்கரை வள மையம்.

எண்ணூர் ஆறு, திருவொற்றியூர், ஆர். கே. நகர், மாதவரம் மற்றும் பொன்னேரி பகுதிகளை வெள்ள அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது. “எண்ணூர் ஆறு ரியல் எஸ்டேட்டாக மாறினால் வட சென்னை ஒரு நீர் கல்லறையாக மாறிவிடும். அடையாறில் ஏற்பட்ட வெள்ளத்தை சென்னை நகரால் கையாள முடியவில்லை. அடையாறு என்பது ஒரு சிறிய ஆறு தான். அடுத்து வரும் மழையில் பன்மடங்கு வலிமை வாய்ந்த கொசஸ்தலையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால், மேலும் எண்ணூர் ஆற்றை இழந்து விட்டோமானால், சென்னை மாநகரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது”, என்று எச்சரித்தார், ஆர். எல். ஸ்ரீநிவாசன், எண்ணூர் அனைத்து கிராம மீனவ கூட்டமைப்பின் உறுப்பினர். கன மழையின்போது கொசஸ்தலையாறு நொடிக்கு 125,000 கன அடி நீரை வெளியேற்றுகிறது. இது அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் ஒருங்கிணைந்த நீர் வெளியேற்றும் ஆற்றலை விட அதிகம்.

கிடைத்து இருக்கும் ஆவணங்களின் படி, எண்ணூர் ஆற்றை மறைக்க முற்படும் வரைபடமே பொய்யானது என்று சொல்ல முடிகிறது. 2017ன் RTI பதிலில் 1997ல் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் ஒரு கடிதமும் அடங்கியுள்ளது. இக்கடிதத்தில், எண்னூரில் ஒரு பெட்ரோகெமிக்கல் பூங்காவை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசால் கோரப்பட்ட சில மாற்றங்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

குறிப்பாக, அமைச்சகம், 1996ல் இந்திய அரசின் தலைமை நீர்நிலை வரைபடமாளரால் (Chief hydrographer) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் படி எண்ணூர் உப்பங்கழியின் (backwater) எல்லைகளை மாற்றி அமைக்க, தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்தது. ஆனால், உப்பளங்களை CRZ அறிவிப்பாணையின் மேற்பார்வையிலிருந்து அகற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை அமைச்சகம் நிராகரித்துள்ளது. CRZ வரைபடத்தின் எல்லைகளை மாற்றி அமைக்க எந்தவொரு கோரிக்கை பற்றியோ, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவோ கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

“1996 வரைபடத்தை – எண்ணூர் ஆற்றை CRZ 1 ஆக அறிவிக்கும் வரைபடம் – நாங்கள் நம்புகிறோம். அதுவே சரியானது, ஏன் என்றால் அதுவே சட்டத்திற்கும், யதார்த்தத்திற்கும் ஒத்துப்போவதாக உள்ளது”, என்று கூறினார், கா. சரவணன், கடற்கரை வள மையம். “தலைமை நீர்நிலை வரைபடமாளர் ஒரு விஞ்ஞான துறை – இவ்வளவு பெரிய நீர்நிலையை புறக்கணிக்க சாத்தியமில்லை”, என்றும் அவர் கூறினார்.

இது குறித்து விசாரணை நடத்த, தமிழ்நாடு தகவல் கமிஷனுக்கு இரு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பேரிடரை தவிர்க்க, இந்நிறுவனங்கள், தலைமை செயலாளரையும், மாநில பேரிடர் ஆணையத்தையும் (State Disaster Management Authority) அணுகியுள்ளன.

சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன் வெளியிட்ட ஊடக அறிக்கை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.