கமல்ஹாசனுக்கு அரசியல் புதிதல்ல!

உண்மைத் தமிழன்

சமயம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணன் கமல்ஹாசன் அரசியல்வாதிகளை திட்டாமல் இருந்ததில்லை.

“அவருக்கு இவர் பரவாயில்லை.. இவருக்கு அவர் பரவாயில்லை என்பது போலத்தான் இன்றைய தமிழக அரசியல் இருக்கிறது…” என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் கமல்ஹாசன்.

ஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஆட்சிக் காலத்தில் ரஜினிக்கும் முன்பாகவே அதிமுக ஆட்சியைக் கண்டித்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான்.

அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் கருத்துரிமை தடுக்கப்படுவதாகச் சொல்லி கமல்ஹாசன், கனிமொழி, ஹிந்து என்.ராம் போன்றோர் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.

இந்த அமைப்பின் விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றதுபோது தென் சென்னை அதிமுக மகளிர் அணியினர் திடீரென மேடையேறி மேடையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களை இறங்கச் சொல்லி கமல்ஹாசனும், கனிமொழியும் அவர்களிடம் பேசியபோது சுப்ரமணியம்சாமிக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் கிடைத்த நாரசார வசவுகள்தான் பதிலாக கிடைத்தன.

பதினைந்து நிமிடங்கள் கழித்து மிக மெதுவாக போலீஸார் மேடையேறி போராட்டம் நடத்திய அதிமுக மகளிரணியினரை கஷ்டப்பட்டு கீழே இறக்கி அழைத்துச் சென்றனர்.

அப்போதெல்லாம் இந்த அதிமுக அமைச்சர்கள் யாரும் ஆட்சிப் பொறுப்பில் இல்லை..! எலும்பு வல்லுநர் ஹெச்.ராஜா என்ன செய்து கொண்டிருந்தார் என்று அவரைத்தான் கேட்க வேண்டும்..!!!

‘விஸ்வரூபம்’ சமயத்தில் போராட்டம் நடத்தியவர்களின் பின்னணியில் ஆளும் அதிமுகவின் ஆதரவு இருப்பதை உணர்ந்துதான் “நான் நாட்டைவிட்டே போகிறேன்” என்றார் அழுத்தமாக கமல்ஹாசன்.

இந்த நேரத்தில் கமல்ஹாசன் நடன இயக்குநராக இருந்தபோதே ஜெயலலிதாவுக்கும், அவருக்கும் மோதல் என்றெல்லாம் சீப்பாக கிசுகிசுக்கள் எழுந்ததையொட்டித்தான் ஆத்தா ஜெயலலிதா பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளித்தார்.

“அப்படியொரு விஷயமே நடக்கவில்லை…” என்றவர், தான் ஒரு சினிமா நடிகையாக இருந்துதான் அரசியலுக்கு வந்து முதலமைச்சரானோம் என்பதையே மறந்து போய் “ஒவ்வொரு தியேட்டருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடு்க்க முடியாது…” என்றார்.

கருணாநிதியையே ஆள் வைத்து தூக்கிய ஆத்தா, கமல்ஹாசனுக்காக பேட்டியளித்து பிரச்சினையைத் தீர்க்க முன் வந்தது கமல்ஹாசனுக்காக அல்ல.. முஸ்லீம் மக்களிடையே பெயர் வாங்குவதற்காக.. அவர் ஏற்படுத்திக் கொடுத்த திட்டம் “முஸ்லீம்கள் ஆட்சேபித்த பகுதிகளை நீக்குங்கள்…” என்று சொல்லி அவர்களின் ஓட்டுக்களை வாங்கத்தான்..!

இதனால்தான் அண்ணன் கமல்ஹாசன் மீண்டும் ஒரு பிரஸ்மீட்டில் “தமிழ்நாட்டில் மதவாதம் என்ற பெயரில் கலையை சிரச்சேதம் செய்கிறார்கள்…” என்றார்..!

சென்னையை வெள்ளம் சூழ்ந்த சமயத்தில் “நான் அளித்த வரியெல்லாம் எங்கே போனது..? தமிழ்நாட்டில் மட்டும் சாலைகள் ஏன் ஒரே மழையில் வாயைப் பொளக்கின்றன…” என்று ஆழமான ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார்.

இதற்காக தனது அமைச்சரவையில் முதல் அடிமையாய் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் ஒரு பெரிய நீண்ட அறிக்கையை அளித்தார் ஆத்தா ஜெயலலிதா.

அதில் கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல் கமல்ஹாசன் போத்தீஸ் விளம்பரத்தில் கோடியில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தது பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் எள்ளி நகையாடியிருந்தார் ஆத்தா. ஏதோ இவர் மட்டும் உத்தம பத்தினி போல..!

இப்போது இதே ஓ.பன்னீர்செல்வம்தான் “கமல்ஹாசனுக்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும்…” என்று எடப்பாடிக்கு கிளாஸ் எடுக்கிறார்..!

ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன் தப்பித் தவறிகூட ஓ.பி.எஸ்ஸுக்கு நன்றி சொல்லி தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை..!

வெள்ளத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் தன்னைக் கண்டித்து வெளியிட்ட அந்த அறி்ககைக்கு பின்பு இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையை போலவே “ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கும் பொருட்டு எங்கெங்கு தவறுகள் நடந்ததோ, அங்கிருந்தெல்லாம் ஆட்சி மேலிடத்திற்கு அந்தத் தகவல்களை நாகரீகமான முறையில் அனுப்புங்கள் மக்களே…” என்று கேட்டுக் கொண்டார் கமல்ஹாசன்.

ஸோ.. அண்ணன் கமல்ஹாசன் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டார். நம்முடைய முட்டாள் மந்திரிகளுக்குத்தான் புரியவில்லை..!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு மும்பை கலவரம் நடைபெற்று அதுவும் ஓய்ந்த பின்பு இந்திய அறிவுஜீவிகள் என்கிற பட்டியலில் இடம் பெற்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்தார் கமல்ஹாசன்.

“கலவரம் துவங்கிய உடனேயே ஏன் நீங்கள் மும்பை செல்லவில்லை…” என்று நரசிம்மராவிடம் தைரியமாக கேட்டார் கமல்ஹாசன். “நான் அங்கே போயிருந்தால் கலவரம் நின்றிருக்குமா..?” என்று திருப்பிக் கேட்டார் நரசிம்மராவ். “போயிருந்தால் மாநில அரசுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் ஒரு எச்சரிக்கை, பயவுணர்வு வந்திருக்குமே…?” என்று எதிர் கேள்வி கேட்டார் அண்ணன். நரசிம்மராவ் மெளன சாமியாரானார்..!

தேபோல் இன்றைய பிரதமர் மோடியிடம் அண்ணன் கமல்ஹாசன் எதையும் பேசவி்ல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்..!

தாத்தா கருணாநிதி ஆத்தா ஆட்சியில் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்யப்பட்டபோது “சட்டம் தன் கடமையைச் செய்தது…” என்றார் வைகோ. “தி.மு.க. ஆட்சிக் காலத்தில் என்னையும் ஒரு நாள் இப்படித்தான் விடியற்காலையில் வந்து எழுப்பி கைது செய்தார்கள்…” என்று சப்புக் கட்டு கட்டினார் ராம்தாஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினி வாயே திறக்கவில்லை.

“முத்தமிழ்வித்தகர்”, “தமிழ்ச் சினிமாவின் முன்னோடி”, “எங்களது கலையுலக பிதாமகன்” என்று தாத்தாவை அவருடைய கைதுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ் சினிமா துறையின் அனைத்து சங்கங்களும் இந்த நேரத்தில் கையது, வாயது பொத்தி அமைதி காத்தன.

ஆனால் அன்று மதியமே தன் வீட்டுத் தோட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன்.. “மூன்று முறை முதல்வராக இருந்த ஒரு பெரிய மனிதருக்கு சட்டப்படி அவருக்கு இருக்கும் உரிமையின்படி தனது கருத்தைச் சொல்வதற்கும், பேசுவதற்கும்கூட வாய்ப்பு வழங்கப்படாதது ஜனநாயகத்திற்கு விரோதமானது..” என்று தாத்தாவின் கைதை வெளிப்படையாகவே கண்டித்தார்.

இதுபோல் தி.மு.க. சார்பானவராக கமல்ஹாசன் காட்சியளித்தது சந்தர்ப்பங்களால்தானே ஒழிய.. அரசியலால் அல்ல..!

“எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியென்று பார்த்துதான் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும்…” என்று 2011 தேர்தலின்போது சொன்னார் கமல்ஹாசன்..!

ஆனால் மக்கள்தான் வாங்குவதை வாங்கிக் கொண்டு “எல்லாம் எனக்குத் தெரியும். பொத்திக்கிட்டு போ அங்கிட்டு…” என்று சொல்லி வாக்குகளை விற்றார்கள். பின்பு வசமாக அனுபவித்தார்கள்..! இப்போதும் அனுபவிக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன், சினிமா பத்திரிகையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.