பீட்டர் துரைராஜ்

திராவிட இயக்க ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பராசக்தி திரைப்படம் குறித்த ஆய்விற்காக புகழ்பெற்றவர். எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வையும் , அரசியலையும் ஆய்வு செய்து The Image Trap : M.G.Ramachandran in Film and Politics ( 2015 ) என்ற நூலை எழுதியுள்ளார். அதனை “பிம்பச்சிறை- எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் ,அரசியலிலும் என்ற பெயரில் அழகாக மொழிபெயர்த்துள்ளார் பூ.கோ.சரவணன். நூலாசிரியரின் மறைவுக்குப் பின் இந்த நூல் வெளிவந்துள்ளது ( 2016).
இந்த நூலில் எம்ஜிஆர் 1933 முதல் நடித்த படங்களின் பட்டியல்(133) ,புகைப்படங்கள் , வாழ்க்கைச் சுருக்கம் ஆகியவை பின்னிணைப்புகளாக உள்ளன. எம்ஜிஆர் குறித்த தனது முடிவுகளை உளவியல் , சமூகவியல் நோக்கில் தருக்க நியாயங்களோடு விளக்கி உள்ளார் நூலாசிரியர். பல விபரங்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவைதான்; புதிய செய்தி ஏதும் இல்லையெனவும் ஒரு சிலர் நினைக்கக் கூடும். ஆனால் இதனை படித்து முடிக்கையில் ஒவ்வொருவரும் புதிய வெளிச்சத்தைப் பெறுவர்.
காங்கிரசு காலத்தில் வேகமாக மின்சாரமயமாக்கப்பட்டன. இதனால் திரையரங்குகள், திரைப்படங்கள் ஆகியவை பெருமளவு ஊரக மக்களுக்கும் சென்று சேருவது சாத்தியமானது. அப்படி அமைக்கப்பட்ட திரையரங்கின் இருக்கையானது ஒருவரின் சாதி அடிப்படையில் இல்லாமல் ஒருவரின் வாங்கும் திறனின் அடிப்படையில் இருப்பிட வரிசை தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பார்வையாளர்களுக்கான எம்ஜிஆர் மூன்று முறை பிறந்தவராக மக்கள் முன் நிறுத்தப்பட்டார். பயமின்மை, ஆண்மை, இளமை ஆகிய பிம்பங்களை சிதையாமல் பார்த்துக் கொண்டார். அப்பா இல்லாத குடும்பத்தின் மூத்த பிள்ளையாக இருந்தார்; கற்பு, குடும்பம் பற்றிய பொதுவான கருத்துக்களை போற்றுபவனாக இருந்தார். பெண்களுக்கு விடுதலை தரப்படும் தருணங்கள் ஆணாதிக்க கட்டமைப்புக்குள்ளேயே அடங்கின.
1953 ல் திமுகவில் சேர்ந்து , சட்ட மேலவை உறுப்பினராக , சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் 1987 ல் இறந்த போது இறுதி ஊர்வலத்திற்கு இருபது லட்சம் பேர் திரண்டனர். சோகம் தாங்காமல் 31 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த அளவுக்கு மக்களின் பேரன்பை பெற்ற எம்ஜிஆர் எந்த உறுத்தலும் இல்லாமல் காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆதரவாக நின்றார்; அதிமுகவின் தனித்துவமான குண்டர் சட்டம் இவரது ஆட்சியில்தான் கொண்டுவரப் பட்டது. பால்வாடி, மதிய உணவுத்திட்டத்திற்கு பின்பும் கூட பொருளாதார கட்டமைப்பில், வறுமை ஒழிப்பில் எந்த மாற்றத்தையும் அவரால் கொண்டு வரமுடியவில்லை. திரைப்படத்தையும், அவரது அரசியல் வாழ்வையும் விளக்கும் இந்நூல் எம்ஜிஆரால் உண்மையான சிக்கல்களைக் காட்டி அதற்கு கனவுலகத் தீர்வுகளைத்தான் வழங்க முடிந்தது என்கிறார் .
மக்களோடு பணிபுரியும் யாராக இருந்தாலும் – ஊடகவியலாளர் , பொது வாழ்வில் உள்ளோர், சமூகச் சிந்தனையாளர் என அனைவரும் படிக்கலாம். ஒவ்வொருக்கும் இதில் செய்தியுண்டு.
பிம்பச்சிறை
எம்.எஸ். பாண்டியன்
தமிழில்: பூ. கோ. சரவணன்.
பிரக்ஞை வெளியீடு/ 248 பக்கம் / ரூ. 275.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.