அ. மார்க்ஸ்

இன்று காலை குடந்தையில் ‘வாக்கிங்’ போய்விட்டு ஒரு கடையில் சுடச்சுடக் கிடைத்த ஒரு வடையை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கே ‘தினத் தந்தி’ யை விரித்தபடி கடுமையாக விவாதம் நடந்து கொண்டிருந்தது.
ஒருவர் சொன்னார்: “ஒவ்வொருத்தன் வீட்டிலேயும் குறைந்த பட்சம் ரெண்டு மோட்டர் சைகிள் நிக்கிது. ஒனக்கு அதுவும் வேணும், பெட்ரோல் எடுக்கவும் கூடாதுன்னா அப்புறம் எப்பிடி..”
எல்லோரும் சிரித்தார்கள். அந்தக் கருத்துக்குப் பொதுவான ஆதரவு இருந்தது. நான்கு நாட்களுக்கு முன் எங்களிடம் பேசிய ONGC அதிகாரியும் முத்தாய்ப்பாக அதைத்தான் சொன்னார். “எல்லார் வீட்லயும் பைக் இருக்கு. கிராமத்துல கூட இப்ப ஏ.சி போட்டுக்குறாங்க. அப்புறம் டிராக்டர், ஃபேன்… எல்லாம் வேணும். பெட்ரோல் மட்டும் எடுக்கக் கூடாதுன்னா என்னா சார்..”
இந்த வாதத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. போராடும் மக்களின் ஆவேசம், வெளியிலிருந்து வீசும் ஊடக வெளிச்சம், நடைப் பயணங்கள், ஆர்பாட்டங்கள்… இவற்றை மட்டும் வைத்துப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக நாம் கணக்கிட்டுவிடக் கூடாது.
கூடம்குளத்தில் அப்படித்தான் நாம் ஏமார்ந்து போனோம். இங்கெல்லாம் இருப்பதெல்லாம் ரொம்பவும் localised ஆதரவுதான், activists கள் ஆதரவுதான். common sense லிருந்து உருவாகும் கேள்விகள்தான் இன்று டீக்கடையில் என் காதில் பட்டவை…
“கரன்ட் இல்லைன்னா கொதித்து எழுறீங்க. அப்புறம் மின்சாரம் எப்படி உற்பத்தி பண்ணுனாலும் அதில் நொட்டை சொன்னா?”
பொதுப்புத்தி எழுப்பும் இந்தக் கேள்விக்கு நாம் என்ன பதில் வைத்துள்ளோம்?
யோசித்துக் கொண்டிருந்தேன்…
கடைசியாக காந்திதான் துணைக்கு வந்தார்.
மகாத்மா காந்தியின் எழுத்துக்கள் 90 வால்யூம்களுக்கு மேல் தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒன்றிரண்டுதான் புத்தகங்களாகத் திட்டமிட்டு எழுதியவை. 1909 ல் அவர் எழுதிய Hind Swaraj எனும் சிறிய நூல் மிக முக்கியமான ஒன்று. லண்டனிலிருந்து அவர் தென் ஆப்ரிகா திரும்பிக் கொண்டிருந்தபோது கப்பலில் வைத்து அவர் எழுதியது. ஒரு பத்திரிகை ஆசிரியனிடம் ஒரு வாசகன் கேள்விகள் கேட்க, அவர் பதில் சொல்ல.. எனும் வடிவத்தில் எழுதப்பட்டது. காந்தி அடிகள் ஒரு பத்திரிகை ஆசிரியரும் அல்லவா.
அது மட்டுமல்ல அந்த நூலின் இன்னொரு முக்கிய அம்சம், அது லண்டன் இந்தியா ஹவுசில் அவர் சாவர்க்கருடன் விவாதத்தில் ஈடுபட்டு, (ஒரு வேளை அன்று அங்கிருந்த உணர்ச்சிப் பெருக்கில் அவரது வாதம் எடுபடாமல் போன நிலையில்) திரும்பும்போது எழுதப்பட்டது அது.
இந்திய சுயராஜ்யம் என்பது எப்படி அமைய வேண்டும் என்பதை காந்தி அதில் விவாதப்படுத்துகிறார்.
“ஸ்வராஜ்” – என்பதை “சுய ஆளுகை” என மொழியாக்கலாம். அதாவது மேலோட்டமாக இதைப் பொருள் கொண்டால் பிரிட்டிஷ்காரர்களுக்குப் பின் நாமே நம்மை ஆண்டுகொள்வது.
“நாமே நம்மை ஆண்டுகொள்வது ” என்றால்….. ?
வெள்ளையர்களை விரட்டி விட்டு அதே அரசு எந்திரத்தில் நாம் ஏறி அமர்ந்து கொண்டு, அதே அணுகல்முறைகளைக் கைகொள்வதா?
அப்படித்தான் அனைவரும் நினைத்தார்கள். நினைத்தோம். நினைத்துக் கொண்டும் இருக்கிறோம்.
காந்தி அங்குதான் வேறுபடுகிறார். நம்மை பிரமிக்க வைக்கிறார்.
“சுய ஆளுகை” – என்றால் சுயமாக நாமே அரசு எந்திரத்தைக் கையாள்வது மட்டுமல்ல. அப்படிக் கையாண்டால் எந்த வித்தியாசமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அந்நியர்களை விரட்டிவிட்டாலும் அந்நியர்களுக்கு அடிமையாக இருப்பது ஒழியப் போவதில்லை என்றார் அவர்.
அதாவது சுய ஆளுகை என்பது நீ சுயமாக ஆட்சி செய்வது மட்டுமல்ல. அது நீ உன் சுயத்தை ஆள்வதும் கூட என்றார் காந்தி.
ஆம் சுய ஆளுகை என்பதற்கு மிகவும் philosophical ஆன ஒரு விளக்கத்தை அவர் தந்தார். மேலோட்டமான எளிமைக்குள் ஆயிரம் பொருள்கள் நிறைந்த நூல் அது.
உன் சுயத்தை.. தேவைகளை,, உன் ஆசைகளை.. நீ கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால் நீ என்றென்றும் பிரச்சினைகளிலிருந்து தப்பப் போவதில்லை. அரசியல் ரீதியாக நீ imperialism த்திலிருந்து விடுபடப் போவதுமில்லை. உலக முதலாளிய ஒழுங்கமைப்பிலிருந்து விலகுவது என்கிற முயற்சியில் மாஓவின் சீனம், லெனினின் ரஷ்யா… எல்லாம் இன்று சறுக்கி வீழ்ந்ததன் மையப் புள்ளி இங்குதான் இருக்கிறது.
தேவைகளைக் கட்டுப்படுத்துதல் என்பது உலக வாழ்வின்பங்களைத் துறப்பதல்ல. மாறாக அதைச் சரியாகத் துய்ப்பதுதான்…
வாழ்க நீ எம்மான்…
எழுத்தாளர் அ. மார்க்ஸ் தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு இது.