
கே. ஏ. பத்மஜா
Kumari 21F | Telugu | Palnati Surya Pratap | 2015
‘காதல் என்பது என் எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி செய்யும் ஓர் எதிர்பாலினத்திற்கான வேட்டை’ என்ற ரீதியில் சர்வ சாதாரணமாய் பழகிப் பார்த்துப் பிடித்தால் தொடரலாம் என்று நவீனமயம் ஆகிக்கொண்டு வருகிறது. இன்னும் சில பெண்களும், ஆண்களும் எதிர்பாலினரிடம் பழகுவதை பார்க்கும்போது நமக்கே ஒரு குழப்பம் வந்துவிடும், அவர்கள் காதலர்களா? நண்பர்களா? என்று. அந்த அளவிற்கு எல்லையற்ற நெருக்கம் அவர்களுக்குள் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் ‘சும்மா பழகுறோம்; எங்களுக்குள் எந்த கமிட்மென்ட்டும் கிடையாது’ என்று பெருமிதம் கொள்வர்.
ஆனால், தன்னுடை பெண் தோழிகள் எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும்போது அதிகக் கொண்டாட்டம் கொள்ளும் பெரும்பாலான ஆண்கள், தனக்கு என்று வரும் மனைவி மட்டும் வேறு ஆணை நிமிர்ந்து கூட பார்த்திராத ஏகபத்தினியாய் இருக்க வேண்டும் என்று விரும்புவர். ஒரு பெண் தானாய் முன்வந்து தன்னுடைய காதலை ஓர் ஆணிடம் சொன்னால், அவளை துச்சமாக மதிப்பதால் பெண்கள் காதலை மட்டுமல்ல; காமத்தையும் வெளிப்படுத்த தயங்குகின்றனர். காதலையும் காமத்தையும் ஆணிற்கு முன்பு ஒரு பெண் வெளிப்படுத்திவிட்டால் அவள் விவாததிற்கு ஆளாகிறாள். இப்படியாக, ஆண் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்களால் ‘குமாரி’யை காதலிக்க முடியுமா?
‘குமாரி 21 F’ பல்நாடி சூர்யா பிரதாப் இயக்கத்தில் ராஜ் தருண், ஹெபாஹ் படேல் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம். நடுத்தரக் குடும்பத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பிரித்து வாழும் செவிலிய தாயின் மகன் சித்து. சமையல் கலை படிப்பு முடித்து வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோலோடு வாழும் சித்துவை கண்டதும் காதல் வயப்படும் குமாரி (ஹெபாஹ் படேல்) ஒரு சினிமா ஆர்ட்டிஸ்ட் – மாடல். குமாரியின் காதலை சித்து ஏற்கத் தடையாய் இருந்தது எது? அதனால் வரும் குழப்பங்களும், தெளிவுமே மீதிக் கதை.
நாயகியின் அறிமுக காட்சியே தன்னை பாலியல் தொழிலாளி என நினைத்து பேரம் பேசியவனை விரட்டித் துறத்துவதுதான். நாயகி அவனை அடிக்க துரத்தியதற்கு காரணம், அவன் கேட்ட விலைதான் எனத் தெரிய வரும்போது நாயகனுடன் சேர்த்து நமக்கும் ‘இவ என்ன மாதிரி பொண்ணுடா?!’ என்ற குழப்பம் எழும். சித்துவின் நண்பர்கள் போடும் பந்தயத்தில் சித்துவை ஜெயிக்கவைக்க உதவும் குமாரி கொஞ்சம் துணிகரத்தின் உச்சம் என்று நம்மை எச்சில் விழுங்கவைக்கும். பந்தயதில் ஜெயித்த பணத்தை வைத்து மது அருந்த பாருக்கு சித்துவை அழைத்துச்செல்லும் குமாரியின் செயல்கள் எல்லாம் சித்துவை கொஞ்சம் தயக்கத்தில் ஆழ்த்தும். அந்த இரவில் அவர்கள் தங்கள் முதல் முத்தத்தை பரிமாறிக்கொள்வர். சித்து தனக்கும் குமாரிக்கும் காதல் மலர்ந்திருப்பதை தனது நண்பர்களிடம் சொல்வான். நண்பர்களோ குமாரி போன்ற அதிவேக பெண்கள், சினிமாவில் இருக்கும் மாடர்ன் பெண்கள் எல்லாம் காதல் செய்ய மாட்டார்கள். அதுவும் குமாரி போன்ற பெண்ணிற்கு எல்லாம் நீ முதல் காதலாய் இருக்க வாய்ப்பே இல்லை என்று நக்கல் செய்யும் போதுதான் இன்னும் குமாரியிடம் காதலை சொல்லாததிற்கு குமாரி மேல் தனக்கும் மனதின் ஒரு ஓரத்தில் அதே சந்தேகம் இருப்பதை உணர்வான்.
குமாரியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும்போது ‘உனக்கு என்னை காதலிக்கும் பக்குவம் கிடையாது’ என அவன் காதலை நிராகரிப்பாள் குமாரி. பொறாமையின் உச்சம் கொள்ளும் சித்து, அவள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தொடங்குவான். அவள் பிற ஆண்களுடன் பழகுவதை சந்தேகப்பட ஆரம்பிப்பான். தான் சித்துவை காதலிப்பதாகவும், ஆனால் சித்துவிற்கு தன்னை காதலிக்கும் பக்குவம் இல்லை என்றும் குமாரி தொடர்ந்து பலமுறை பதில் சொல்வாள். ஒருவரை காதலிக்கத் தொடங்கிய பின்பு அவர்கள் மற்றவருடன் காட்டும் நெருக்கம் எப்படி வேதனை தரும் என்று குமாரிக்கு உணர்த்த முடிவுசெய்து வேறு பெண்ணுடன் நெருக்கமாய் பழகுவான் சித்து. இதைக் கண்டு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத குமாரி மீது இன்னும் அதிக எரிச்சல் அடைவான். ஒரு கட்டத்தில் குமாரியை வெறும் பாலியல் தொழிலாளி என்று என்று சந்தேகப்பட்டு அவளை பலவந்தப்படுத்த முயலும் சித்துவை அடித்து விரட்டுவாள். சித்துவை மறுநாள் தன்னுடைய வீட்டிற்கு வரச் சொல்லிய குமாரி, அவனுக்காக ஒரு கடிதம் எழுதியிருப்பாள். அதன் மூலம் தன் மீது குமாரிக்கு இருந்தது உன்னதமான ஓர் உண்மைக் காதல்தான் என்றும், ஒரு பெண்ணை கடந்த காலம் வைத்துமதிப்பிடுவது தவறு என்றும் சித்து உணர்வான்.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், ‘திருமணதிற்கு முன்பு இருந்த காதலை தனது துணையிடம் சொல்வது சரியா? தவறா?’ என்ற விவாத நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அதில், நேர்மையாய் இருக்கிறோம் என்று பலர் தங்கள் கடந்த கால வாழக்கையை அப்படியே ஒப்பிப்பது பற்றி அறிந்தேன். உண்மையில் நேர்மையை ஏற்றுக்கொள்ள ஒரு மனப்பக்குவம் அவசியம். அது இல்லாதவர்களிடம் நேர்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தினால், அது நாம் அவர்களை யாருக்கும் தெரியாமல் மவுனமாய் கொலை செய்வதற்குச் சமம் என்று அன்று பேசிய பல தம்பதிகளிடம் இருந்து புரிந்துகொண்டேன்.
ஒருவரின் கடந்த கால வாழ்க்கையை வைத்து இன்று அவர்களை எடைபோட்டுக் கொண்டே இருந்தால் நிம்மதி என்பதை துளியும் அனுபவிக்க முடியாது. நம்பிக்கை என்பது பிறர் நமக்கு தருவது அல்ல; அது நமக்கு நாமே வளர்த்துக்கொள்ள வேண்டியது. குட்டை பாவாடை போட்டு வெளிப்படையாய் பேசும் பெண்கள் எல்லாம் கட்டிலுக்கு மட்டும் அழைக்க வேண்டியவர்கள் அல்ல; அவர்களுக்கும் உண்மை காதல், ஒழுக்க நெறி, உணர்வு என்று எல்லாம் உண்டு என்று வெளிப்படையாய் வெளிப்படுத்திய குமாரியைக் காதலிக்க இன்றும் பல இளைஞர்கள் குழம்பத்தான் செய்கின்றனர்.
(தொடரும்)