நிசப்தம் அறக்கட்டளை சார்பாக 15 அரசு பள்ளிகளின் நூலகங்களும் புத்தகங்கள் வழங்கும் விழா, மாலை (சனிக்கிழமை, ஜூலை 8) 5 மணிக்கு நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து நிசப்தம் அறக்கட்டளையின் நிறுவனர் எழுத்தாளர் வா. மணிகண்டன்,”திரு.உதயச்சந்திரனிடம் ‘நிகழ்வில் தங்களுடன் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாமா?’ என்று வினவியதற்கு சரி என்று சொல்லியிருக்கிறார். மாலை ஏழரை மணிக்கு நூலத்தை மூடிவிடுவார்கள் என்பதால் அதற்குள்ளாக நிகழ்வை முடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பதினைந்து பள்ளிகளையும் பற்றிய சிறு அறிமுகத்தைச் சொல்லி அவர்களிடம் புத்தகங்களை வழங்க பதினைந்து முதல் இருபது நிமிடங்கள். பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பேசி முடித்த பிறகு கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம். பள்ளி கல்வித்துறை சார்ந்த கேள்விகளை அவரிடம் பார்வையாளர்கள் கேட்கலாம். கலந்துரையாடலுக்காக முப்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்களை ஒதுக்கினால் சரியாக இருக்கும்.
திருவாரூர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பத்து நிமிடங்கள். தாங்கள் எப்படி வாசிக்கிறோம் என்று காட்டவிருக்கிறார்கள். தெரு நூலகம் என்ற பெயரில் அட்டகாசப்படுத்திக் கொண்டிருக்கிற பள்ளி இது. புத்தகங்கள் கைவசம் இல்லாமலே கலக்குகிறவர்கள். அவர்களை மேடையேற்றி ரசிக்கலாம்.
அடுத்த பத்து நிமிடங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றிப் பேசுவதற்காக எடுத்துக் கொள்கிறேன். அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்பதைவிடவும் பள்ளிகளிடமிருந்து என்னவிதமான ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறோம் என்று பேச வேண்டும். நூலகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிற சில பள்ளிகளைச் சுட்டிக்காட்டி அவர்கள் எவ்வாறு அமுல்படுத்தியிருக்கிறார்கள் என்று பிற பள்ளிகளிடம் விளக்க வேண்டும். மற்றபடி, இன்றைய கல்வித்துறை பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்துவதற்கான ஒரு திறந்தவெளி மேடையாக இருந்தால் சிறப்பு எனத் தோன்றுகிறது.
நிகழ்ச்சி 7.30க்கு சரியாக முடிந்துவிடும்.
பதினைந்து பள்ளிகளில் நூலகம் அமைப்பது என்பது ஒரு கனவுத் திட்டம். அமைப்பதோடு நில்லாமல் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்வதும் அவசியமாக இருக்கிறது. இத்திட்டத்திற்கு கை கொடுத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பதினைந்து பள்ளிகளிலிருந்தும் ஒன்றிரண்டு ஆசிரியர்களாவது நிகழ்வுக்கு வருகிறார்கள். அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருப்பூர், சேலம், மதுரை, ஈரோடு, சிவகங்கை என்று தமிழகம் முழுவதிலுமிருந்து பரவலான பள்ளிகளைச் சேர்ந்த பள்ளிகள்.”என தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெறவிருக்கிறது.