அருண் நெடுஞ்செழியன்

உலகின் பல பகுதிகளில் ஏகாதிபத்திய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் வள வேட்டைகளை நடத்தி வருகின்றன.குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, அங்கோலா நாடுகளிலும் கொலம்பியா, ஈராக் போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் எண்ணெய் வள வேட்டை அதிகமான அளவில் நடந்து வருகின்றன. எண்ணெய் வள சூறையாடலுக்கு உள்ளாகிற நாடுகளில் இந்நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்தன. அதில் முக்கியமான போராட்டம்தான் நைஜீரியா நாட்டில் ஒகோனி இன மக்கள் மேற்கொண்ட வீரமிக்க போராட்டமாகும்.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றுதான் நைஜீரியா. இங்குள்ள நைஜர் ஆற்றுப் படுகையில் சுமார் ஐந்து லட்சம் ஒகோனி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எல்லாம் நன்றாகதான் இருந்தது, அந்த பாகாசுர எண்ணெய் நிறுவனம் இங்கு வரும்வரை. இங்கிலாந்து நாட்டின் சேல் நிறுவனம், நைஜர் ஆற்றுப்படுகையில் எண்ணெய் எடுக்க ராட்ச கரங்களோடு ஒகோனியர்கள் வசிக்கிற பகுதியில் நுழைந்தது. இந்நிறுவனத்திற்கு ஆதரவாக நைஜீரிய நாட்டு அரசோ, இராணுவத்திலேயே, சேல் இராணுவப் படைப்பிரிவை உருவாக்கி இந்நிறுவனத்திற்கு காவல் காத்தது.
இந்நிறுவனந்தில் எண்ணெய் சுரண்டல் நடவடிக்கையால் சுமார் 300 ஹெக்டர் வயல்களும், நன்னீர்க் குளங்களும், பழந்தரும் மரங்களும் அழிந்து போயின. சுமார் ஐயாயிரம் இடங்களில் 18 லட்சம் பீப்பாய் எண்ணெய் கொட்டியதால் புறச்சூழல் மோசமாக பாதிப்படைந்தது. சேல் நிறுவனத்தின் இந்த நாசகர விளைவுகளால் கிளிர்ந்தெழுந்த ஒகோனிய இன மக்கள் தோழர் கென் சரோவிவா தலைமையில் ஒகோன் மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தை உருவாக்கி போராடினர். சேல் நிறுவனத்திற்கு எதிரான இந்த மக்கள் இயக்கத்தின் முதல் பேரணி 1993 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டு போராடினர்.
நிலைமை கட்டுபாட்டை மீறிச் செல்வதை உணர்ந்த நிறுவனம், ராணுவத்திற்கு நேரடியாக நிதியும் ஆயுதமும் வழங்கிப் போராட்டத்தை ஒடுக்கக் கோரியது. பன்னாட்டு நிறுவனத்தின் கைக்கூலி அரசோ, உடனடியாக இயக்கத்தின் தலைவர் கென் சரோவிவா உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பத்து பெயரை கைது செய்தது. பின்னர் போலிக் குற்றச்சாட்டு சுமத்தி, பத்து தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கி அவர்களை சிரைச் சேதம் செய்து கொன்றது.

அரசின் இந்த கொடூர செயலால் அதிர்வும் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்த மக்கள் அலை அலையாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்மூடித்த தனமாக நைஜீரிய ராணுவம் சுட்டுக் கொன்றது. 1993 ஆம் ஆண்டின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் ஆயிரம் ஒகோனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் கிராமங்களும் வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். அடுத்த சில ஆண்டுகளில், போராடிய இரண்டாயிரம் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நைஜர் ஆற்றுப்படுகையில் ஒகோனியர்களை வேட்டையடியாடுவதை போல தற்போது காவிரிப்படுகையில் எண்ணெய் எடுப்பிற்காக தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்… கதிராமங்கல ஒடுக்குமறை அதன் ஒரு பகுதிதான்….
சர்வதேச, உள்ளூர் முதலாளித்துவ நலன் சார்பில், காட்டுமிராண்டித்தனமான வகையில் மேற்கொள்ளப்பட்டுவருகிற இவ்வழிவு பாணியிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர்களுக்கு எடுபிடியாக வேலை செய்கிற இவ்வரசின் கொள்கைகளையும் முற்றாக புறக்கணிப்போம்.
ஆளும்வர்க்க நலன்களுக்காக அடித்தள மக்களின் நலனை இயற்கை வளத்தை பறிக்கிற சக்திகளுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னகர்த்துவோம்.