“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், வாசகராக எழுத்தாளர் தமிழ்மகனின் எழுத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். இருவருக்குமிடையேயான உரையாடலை, ஒருங்கிணைத்து தொகுத்திருக்கிறது த டைம்ஸ் தமிழ்.

எழுத்தாளர் தமிழ்மகனுடன் தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ்..

“தமிழ்மகன் என்பது உங்களுடைய புனைப்பெயரா? இயற்பெயரா?”

“என்னுடைய இயற்பெயர் வெங்கடேசன். நான் மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 83-ஆம் வருடம் என்னுடைய கவிதைத் தொகுப்பு வந்தது. அப்போது வெங்கடேசன் என்ற பெயரை ஒரு கவிஞனுக்குரிய பெயராக நினைக்கவில்லை. கவிஞர் மு. மேத்தா என்னுடைய பேராசிரியர். கவிதைத் தொகுப்புக்கு அவர்தான் முன்னுரை அளித்தார்.  வேறொரு கவித்துவமான பெயரை ஐய்யாவிடம் கேட்டேன். அப்போது அவர் தமிழ்மகன் என வைத்தார். கவிதைத் தொகுப்பில் ‘தமிழ்மகன்’ என வந்தது முதல் கல்லுரிக்குள்ளும் என்னை தமிழ்மகன் என்றே அழைக்க ஆரம்பித்தனர். பிறகு, போலீஸ் செய்தி, மின்மினி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றும்போதும் தமிழ்மகன் என்ற பெயரிலேயே எழுதினேன். வண்ணத்திரை, குங்குமம், தினமணி, விகடன் என நான் பணியாற்றிய அத்தனை இடங்களிலும் என்னை தமிழ்மகன் என்றே அறிவார்கள். வெங்கடேசன் என்பதுதான் என்னுடைய இயற்பெயர் என்பது பலருக்குத் தெரியாது. அது குடும்பத்துக்குள் மட்டுமே தெரிந்த பெயராகிவிட்டது”.

“பத்திரிகையாளர் பணியை விரும்பி தேர்ந்தெடுத்தீர்களா? இரண்டுமே எழுதுவது என்கிற தொடர்பில் பத்திரிகையாளர் ஆனீர்களா?”

“முழு நேர எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஒரு கவிதைத் தொகுதி வந்தது. அந்த நேரத்திலேயே மணியன் ஆசிரியராக இருந்த ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் நாவல் போட்டி நடத்தினார்கள். டிவிஎஸ் நிறுவனமும் ‘இதயம் பேசுகிறது’ இதழும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தினார்கள். நான் அப்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். தேர்வு நேரம் அது. தேர்வு எழுதுவதைவிட, நாவல் எழுதுவதுதான் எனக்குப் பெரிதாகப் பட்டது. நான் தேர்வுக்குப் போகவேயில்லை. தேர்வும் நாவலை சமர்பிக்கும் தேதியும் ஒரே நேரத்தில் வந்தன. நான் நாவல் எழுதத்தான் கவனம் செலுத்தினேன். அந்தப்போட்டியில் முதல் பரிசும் வாங்கினேன். அப்போது எனக்கு டிவிஎஸ் 50 கொடுத்தார்கள். அது எனக்கு நம்பிக்கை அளித்தது. எழுதியே நாம் வாழ முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் உண்டாக்கியது. ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. டிவிஎஸ் 50 கொடுத்தார்களே தவிர, அப்போதைய பெட்ரோல் விலை ஆறு ரூபாயோ ஐந்து நூபாயோ, அதை வாங்கவே எனக்குச் சிரமமாக இருந்தது. தினமணி கதிரில் ஒன்றிரண்டு கதைகள் வரும். ஒரு சில சிறுபத்திரிகைகளில் காசு தரமாட்டார்கள். கவிதைகள், கதைகள், கட்டுரைகள் பத்திரிகைகளில் வரும். படைப்புகளைப் போய் பத்திரிகைகளில் கொடுத்துவிட்டு வருவேன். அங்கே வேலை கேட்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை.

இந்த நேரத்தில் எனக்குத் திருமணமாகி, குழந்தையும் பிறந்திருந்தது. அதற்குப் பிறகும் நான் எழுத்தாளானாகத்தான் இருப்பேன் என வீம்பு பிடிக்கமுடியவில்லை. ஒரு தோல்விதான், முழு நேர எழுத்தாளனாக இருக்க விரும்பி பத்திரிகை பணிக்குப் போவது! அதுகூட நான் கேட்கவில்லை. பெரியார் திடலில் ஏதோ கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தபோது, என்னுடைய நண்பர் கவிதாபாரதி ‘என்ன தமிழ் பண்றீங்க’ எனக் கேட்டார். பத்திரிகைகளில்தான் ஏதாவது வேலை தேட வேண்டும் என்று சொன்னேன். அவரைப் பார்க்கும் அப்படியொரு யோசனை எனக்கும் இல்லை. அவர் கேட்டதால் சொன்னேன். சொன்ன உடனே ‘அப்போ நாளைக்கு வாங்க’ என சொன்னார். கவிதா பாரதி தான் பணியாற்றி போலீஸ் செய்தி இதழிலிலிருந்து விலகும் முடிவில் இருந்திருக்கிறார். அந்த இடத்துக்கு என்னை பணியமர்த்த வரச்சொல்லியிருக்கிறார். அப்போது ஆரம்பித்ததுதான் பத்திரிகையாளர் வாழ்வு. 82ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். தினகரனில் கவிதை வரும் தினமணி கதிரில் ஏதாவது ஒரு படைப்பு வரும். குங்குமம், முத்தாரம் என எழுதிக்கொண்டிருந்தாலும், 1989-ஆம் ஆண்டிலிருந்துதான் முழுநேர பத்திரிகையாளராக மாறினேன்.”

“82-ஆம் ஆண்டிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது அறியப்பட்ட எழுத்தாளராக இருக்கிறீர்கள். இதுவே போதும் என நினைக்கிறீர்களா?”

“இருபது வயதிலிருந்தே எழுதிக்கொண்டிருந்தாலும் கூட உண்மையான பக்குவம் வர இந்த வயது தேவைப்படுகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அரை நூற்றாண்டு வயது என்பது ஒரு பெரிய பக்குவத்தையும் சமுதாயத்தைப் பற்றிய ஒரு பார்வையை ஏற்படுத்துவதற்கு தேவையாகத்தான் இருக்கிறது. இருபது வயதில் உடனே புரட்சி ஏற்பட்டுவிடவேண்டும் என நினைக்கிற, ஒரு நக்சல்பாரியா மாறிவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கும். இன்றைக்கே ஏன் புரட்சி வரவில்லை; இன்றைக்கே மாற்றம் வரவில்லை என்கிற எண்ணம்தான் இருந்திருக்கும். அந்த வயதில் இருந்த வேகம் முழுமையானதாக இல்லை. அப்படி ஒரே நாளில் புரட்சி வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதுகூட அப்போது தெரியாது.

அப்போது நிறைய குழுக்கள் இருந்தன, ஆங்காங்கே கூட்டங்கள் நடக்கும். மவுண்ட் ரோடு எல் எல் ஏ பில்டிங் போவோம். அங்கிருந்து பெரியார் திடலுக்குப் போவோம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்வோம். தொடர்புகள் இருந்தது; நிறைய தெரிந்துகொள்ளவும் முடிந்தது. அந்த ஆர்வம் குவிந்து, இதுதான் நாம் செய்ய வேண்டியது என எந்தவித தெளிவையும் ஏற்படுத்தவில்லை. பிறகு, புரட்சி ஒரு இரவில் ஏற்படாது, இது கனிய காலம் பிடிக்கும், இங்கே என்னென்ன கட்டுமானங்கள் இருக்கின்றன; சாதிய கட்டுமானங்கள் என்ன? வர்க்க கட்டுமானங்கள் என்ன? வர்ணாசிரமம் என்றால் என்ன? மதச் சிக்கல்கள் என்ன? என்பதை தெரிந்துகொள்ள காலங்கள் தேவைப்பட்டன.

இப்போது எழுத்தினால் என்ன சாதிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. உண்மையான, நேர்மையான மனிதாக என்னுடைய வாசகருக்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அதன் மூலமாக ஒரு சலனம் ஏற்பட வேண்டும். அதைப்பற்றி அவன் குடும்பத்தாரிடமோ, நண்பர்களிடமோ விவாதிக்க வேண்டும். இந்த அனுபவங்களெல்லாம் பெருக வேண்டும். நல்லெண்ணம் பெருக வேண்டும் என்பதே இப்போது எனக்குள்ள எதிர்பார்ப்பு.

என்னுடைய முதல் கவிதை தொகுப்பு ‘பூமிக்குப் புரிய வைப்போம்’ என்பது, அப்படியொரு புரட்சி சிந்தனை. ’கவிதை மென்மையான பூகம்பம்; அது படிக்கும்போதே வெடிக்கும்’ என்றொரு கவிதை ஆரம்பிக்கும். இதுபோன்று எழுதுவதெல்லாம் போலியாக இருக்கிறது. ‘ஆறறிவு மரங்கள்’ என்ற இரண்டாவது கவிதை தொகுப்பு மக்கள் எல்லாம் மூடத்தனத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திய கவிதைகள். இதையெல்லாமே அவசரப்பட்டு எழுதிவிட்டோமே என்று கட்டத்தில் அப்படி எழுதுவதையே விட்டுவிட்டேன். எங்கும் அந்தக் கவிதைகள் குறித்து சொல்வதுகூட இல்லை.  ‘ஏன் தமிழ் நீங்கள் கவிஞர் தானே, ஏன் கவிதை எழுதுவதில்லையா?’ என்று ஜெயமோகன்கூட ஒரு முறை கேட்டார். 80களில் எழுதிய கவிதைகளை படித்திருப்பார் போல. ஆனால் நான் கவிதைகள் எழுதுவதை 85க்குப் பிறகு நிறுத்திவிட்டேன்.

அதன்பிறகு, ஒரு பொறுப்பான எழுத்தின் மேல் கவனம் வந்தது. பக்குவப்பட்ட எழுத்துக்கு இந்த வயது தேவைப்படுகிறது. இனிதான் ஆரோக்கியமான, ஒரு நல்ல நாவலை எழுதப்போகிறேன் என நினைக்கிறேன்.”.

1916ல் தென்னிந்திய நல உரிமை சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, ஜஸ்டிஸ் பார்டியாகி, திக.வாகி, திமுக.வாகி, அதிமுக.வாகி போய்க்கொண்டே இருக்கிறது. நூறு வருடமாக இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் ஒரு இடத்தில்கூட அது பதிவாகவில்லை.

“உங்களுடைய பின்புலம் பற்றி…”

“அப்பா பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே சென்னைவாசியாகிவிட்டார். மின்சார வாரியத்தில் சென்னையிலேயே பணியும் கிடைத்தது. திருமணமாகி அவர் இங்கே நிரந்தரமாக தங்கிவிட்டார். அப்பா-அம்மாவுடைய சொந்த ஊர் என்று பார்த்தால், அது திருவள்ளூர் மாவட்டம்தான். அங்கே நிலம் இருந்தது. விழாக்களுக்கும் விடுமுறைகளிலும் சென்று வரும் ஊராக அது இருந்தது. மற்றபடி சென்னைதான் என்னுடைய ஊர். நாங்கள் ஓட்டேரி என்ற பகுதியில் வசித்தோம். தி. நகர் ராமகிருஷ்ணா பள்ளியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்தேன். மாநிலக்கல்லூரியில் பி.எஸ்ஸி பிஸிக்ஸ் படித்தேன்.

எனக்கு அறிவியல் ஆர்வமும் இருந்தது, தமிழின் மேலும் ஆர்வம் இருந்தது. அப்போது என்னுடைய தமிழ் பேராசிரியர்களாக இருந்தவர்கள், மிக முக்கியமானவர்கள். கவிஞர் மு. மேத்தா ‘சோழ நிலா’ எழுதி பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தார். எங்கு பார்த்தாலும் ஆனந்தவிகடன் பரிசு பெற்ற நாவல் என்கிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அவர்தான் எங்களுடைய பேராசிரியர் என்றால் எப்படி இருக்கும்? பொன். செல்வகணபதி என்னுடைய பேராசிரியர். தமிழறிஞர் இலக்குவனார் மகன் மறைமலை ஐயா என்னுடைய பேராசிரியர். டாக்டர். இளவரசு ஐயா என்னுடைய பேராசிரியர். இப்படி அங்கே ஒரு அருமையான தமிழ் சூழல் இருந்தது.

இந்தப் பக்கம் அறிவியல் மாணவன், இயற்பியல் கருவிகளை வைத்துக்கொண்டு அளவீடுகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். சர். சி. வி. ராமன், சந்திரசேகர் என மாநில கல்லூரியில் பணியாற்றிய இரண்டு பேராசிரியர்கள் நோபல் விருது பெற்றவர்கள். அவர்களும் இயற்பியல் துறையைச் சேர்ந்தவர்கள். அந்தப் பக்கம் தமிழ் சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும். அவ்வை நடராசன் வந்து பேசுவார். திடீரென்று விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து போனார் என்பார்கள். தமிழறிஞர்களுடன் அப்போது அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. மாநிலக் கல்லூரிக்கு வந்து போயிருக்கிறார். இப்படி அறிவியல் பெருமையும் தமிழ் உணர்வுவாக நான் வளர்ந்தேன். இன்றைக்கும் நான் ஒரு அறிவியல் புனைகதைகள் எழுதுவதற்கும் தமிழில் இலக்கியங்கள் படைப்பதற்கு மாநிலக் கல்லூரியின் பின்புலம் காரணம்.

பச்சையப்பன் கல்லூரியில் படித்த என் தந்தை டாக்டர் மு. வ.வின் மாணவர். அ.ச. ஞானசம்பந்தன், அன்பழகன் என முக்கியமான தமிழ் பேராசிரியர்கள் எல்லாம் அப்பாவுக்கு பேராசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அப்பாவும் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். நிறைய தமிழ்க் கவிதைகள் எழுதியிருக்கிறார். முடிக்கப்படாத இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். நிறைவேறாத அப்பாவின் கனவுகளின் ஒரு பகுதியாகத்தான் நான் எழுதுவதைப் பார்க்கிறேன். அவருடைய தொடர்ச்சியாக என்னை எப்போதும் நினைப்பேன். அப்பாவின் ஆசையை நிறைவேற்றுகிற பொறுப்பைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என நினைத்துக்கொள்வேன். நாம் ஒரு சமூகப் பொறுப்பை உணர்கிறோம். மு. வ.வின் காலக்கட்டம் வேறு, நாம் எழுதிக்கொண்டிருக்கும் காலக்கட்டம் வேறு என்றபோதிலும் நான் எழுதுவதை அப்பாவின் கனவினுடைய நீட்சியாகத்தான் நினைக்கிறேன்.

என்னுடைய கிராமம் ஜெகன்னாதபுரம். என்னுடைய அம்மாவிடைய ஊர். அப்பாவுடைய அப்பா-அம்மா இறந்துவிட்டார். அதனால் அம்மாவினுடைய ஊரில்தான் பெரும்பாலும் நான் இருப்பேன். என்னுடைய ‘வெட்டுப்புலி’ நாவலின் மையம் அதுதான். அங்கே இருந்துதான் நாவல் கிளைக்கும். திருவள்ளுவர் மாவட்டம் முழுக்க வேறோடும். கிட்டத்தட்ட சென்னை வரை வேறொடுகிற நாவலாக அதை படைத்தேன். அந்த ஊரின் மீது எனக்கிருந்த ஈடுபாடும் அந்த மக்களும் என்னை எழுதத் தூண்டிய காரணங்கள்.

என்னுடைய மனைவி பெயர் திலகவதி. இரண்டு குழந்தைகள் எங்களுக்கு. மகன் பெயர் மார்க்சிம். மார்க்சிம் கார்கி என்ற எழுத்தாளரின் நினைவாக அந்தப் பெயரைச் சூட்டினோம். மகள் அஞ்சலி. இருவருமே மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டார்கள். மகன் விஜய் டிவியின் ‘நியா நானா’ நிகழ்ச்சியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

“ ‘வெட்டுப்புலி’ சினிமாவை உள்ளடக்கி, வரலாற்றை உள்ளடக்கி, சென்னை-செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டங்களை பதிவு செய்த முதல் நாவல். திராவிட இயக்க வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது. இதை திட்டமிட்டு செய்தீர்களா?”

“நான் படித்த பல நாவல்களில் திராவிட இயக்கம் இருந்ததாக எங்கேயும் ஒரு பதிவுகூட இல்லை. நாவல்களில் அப்படி பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்கலாம். அப்படி அவசியம் இல்லைதான். ஆனால் கல்கி ‘அலையோசை’ நாவல் எழுதுகிறார். சி.சு. செல்லப்பா ‘சுதந்திர தாகம்’ என எழுதுகிறார். எழுதுவதற்கான விஷயமாக அதை நினைத்து எழுதுகிறார்கள் இல்லையா? தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலில் கதாநாயகன் பாபு, கும்பகோணத்தில் அமர்ந்திருப்பார், அப்போது அங்கே ஒரு பூங்காவில் காந்தி பாட்டு ஒலித்துக்கொண்டிருந்து, அதைப் பற்றி கதாநாயகன் சிந்திப்பதாக எழுதுகிறார். வரலாற்று ரீதியான பதிவு இது. இந்த இயக்கம் 1916ல் தென்னிந்திய நல உரிமை சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, ஜஸ்டிஸ் பார்டியாகி, திக.வாகி, திமுக.வாகி, அதிமுக.வாகி போய்க்கொண்டே இருக்கிறது. நூறு வருடமாக இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் ஒரு இடத்தில்கூட அது பதிவாகவில்லை. ‘வெட்டுப்புலி’ நாவல் எழுதுவதற்கு எனக்குத் தூண்டுதலாக இருந்தது இதுதான்.

திராவிட இயக்க வரலாற்றை வலிந்து சொல்லவேண்டும். ஒரு திக குடும்பத்தையே மையக் கதாபாத்திரமாக எடுத்துக்கொண்டால் நமக்கு வசதியாக இருக்கும் என நினைத்தேன். அந்தக் குடும்பத்தில் எப்படி பேசுவார்கள், அவர்களுடைய சிந்தனை எப்படி இருக்கும். பெரியாரை, அண்ணாவை அவர்கள் எப்படி கொண்டாடுவார்கள்? கலைஞர் வசனத்தில் ‘மனோகரா’ படம் வருவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? என ஒவ்வொன்றையும் அதைத்தொட்டே சொல்ல நினைத்தேன்.

இன்னொன்று…எப்படி தீண்டாமை மனிதர்களிடம் இருக்கிறதோ, அதுபோல மாவட்டங்களிலும் இருக்கிறது என நினைக்கிறேன். திருவள்ளூர் என்றொரு மாவட்டம் இருப்பதே பலருக்குத் தெரியாது. மதுரை என்று சொன்ன உடனே, வைகை, மீனாட்சி அம்மன் கோயில் என்பார்கள். நெல்லை என்றால் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில், அங்கு 15 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். கோவைக்கு, திருச்சிக்கு பெருமைகளை பட்டியலிடுவார்கள். தஞ்சாவூர் என்றால் ஒரு பெரிய எழுத்தாளர்களின் பட்டியலே வரும். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறதா என்றே பலரும் கேட்பார்கள்.

இந்தத் திருவள்ளூர் மாவட்டம்தான் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம். முன்னோடி தொல்லியல் அறிஞர் ராப்ர்ட் ப்ரூஸ் ஃபுட், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகைகளில் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் அங்கே வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டுபிடிக்கிறார். பேலியோ லித்திக் காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்களை குவியல் குவியலாக கண்டெடுக்கிறார் அவர். இவையெல்லாம் முதுமனிதன் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என்கிறார் ஃபுட்.

ஆப்பிரிக்காவில் முதல் மனிதனின் எலும்பு கூடு என இரண்டு லட்சம் வருடங்களுக்கு முந்தைய எலுக்குகூடு கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இங்கே எலும்பு கூடுகள் கிடைக்கவில்லை. ஆயுதங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இமயமலைக்கு வயது 20 லட்சம் வருடங்கள் என சொல்கிறார்கள். கோண்டுவானாவிலிருந்து துண்டாகி, ஆசியாவின் ஒரு பகுதியில் மோதி இமயமலை உருவாகிறது. ஆனால் குடியம் பகுதியில் இருக்கும் குன்றின் வயது பல கோடி வருடங்கள். கோண்டுவானாவிலிருந்து துண்டாகிவந்த மலை இது. இங்கே ஆதிமனிதன் வாழ்ந்த 16 மலைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இரண்டே இரண்டு மலைகளில்தான் ஆய்வு நடந்திருக்கிறது. 1850ல் ஃபுட் அங்கே ஆய்வு செய்தார். இன்னும்கூட அவருடைய முழுமையான ஆய்வறிக்கை நம்முடைய தொல்லியல் துறையால் வெளியிடப்படவில்லை. அங்கே கிடைத்த கருவிகளை எடுத்து வைத்திருக்கிறார்களே தவிர, மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தப்படவில்லை. தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சாந்தி பப்பு என்பவர் 16 லட்சம் வருடங்களுக்கு முன்பு முதுமனிதர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறார். ஹீமோ எரக்டஸ் மக்கள் இங்கே வாழ்ந்திருக்கலாம் என்கிறார் அவர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கீழடியில் அகழ்வாய்வு நடக்கிறது. அதை சொல்லும்போது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய என்றுதான் சொல்வார்கள். எல்லாவற்றையும் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறாகவே நினைத்துக்கொள்வார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார்கள் என்றால் அந்த சமூகம் எத்தனை முன்னிறியதாக இருந்திருக்க வேண்டும்?

குகைகளில் வாழ்ந்த மனிதர்கள், சமுதாயமாக வாழத்தொடங்கி, குடியிருப்புகள் கட்டி, கழிவுநீர் கால்வாய் அமைத்து, தெருக்கள் அமைத்து, குழந்தைகள் விளையாட பொம்மைகள் செய்து கொடுத்த சமூகமாக வளர்த்திருக்கிறது. பல ஆயிரம் வருடங்களாக மெல்ல, மெல்ல வளர்ந்த சமூகமாக அது இருந்திருக்கிறது என்பதை இவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்றால் இரண்டு லட்சம் வருடம் என நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழடியில் ஒரு ஏக்கரில்தான் அகழாய்வு செய்திருக்கிறார்கள். அங்கே 130 ஏக்கர் அளவுக்கு நகரம் புதைந்து கிடக்கிறது என்கிறார்கள். கீழடிக்கு முன்பு ஆதிச்சநல்லூர் கிடைத்தது. 15-20 ஏக்கரில் மனிதர்களை புதைத்த இடத்தை மட்டுமே அகழாய்வு செய்தார்கள். அப்படியென்றால் அவர்கள் வாழ்ந்த குடியிருப்பும் அருகில் தான் இருந்திருக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிறது ஆதிச்சநல்லூர். இடுகாடு இருந்த இடத்திலேயே குடியிருப்புப் பகுதியும் இருந்திருக்க வேண்டும். அது தெரிந்த உடனே அகழாய்வுப் பணிகளை நிறுத்திவிட்டார்கள்.
தொடர்ந்து அகழாய்வுகள் நடத்தப்படுவதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை கிடைத்துவிடும் என நினைக்கிறார்களோ என்னவோ? சிந்துசமவெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 1920களிலிருந்து ஆய்வுகள் வேகமாக நடந்துவந்தன. எப்போது சிந்துசமவெளி நாகரிகம், திராவிட நாகரிகம், அங்கே கிடைத்த எழுத்துகள் தமிழ் தொடர்புடைய எழுத்துகளாக இருக்கின்றன என சொன்னார்களோ அப்போதே அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. தொல்லியல் துறையில் நடக்கிற சதி போலத்தான் இது தெரிகிறது. பூம்புகார் மூழ்கிவிட்டது. அங்கே பெரிய நகரமே மூழ்கியுள்ளதற்கான அடையாளங்கள் உள்ளன என தெரிந்தும் அதை மேற்கொண்டு ஆராயவில்லை. இவையெல்லாம் ஆரியர்களின் நாகரிகமாக இருக்கும் என சொன்னால் ஒருவேளை ஆராயப்படலாம். திராவிட நாகரிகம் என சொன்னால் உடனே முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஆய்வு மனப்பான்மை உள்ள சமூகத்துக்கு இது நல்லதல்ல.

நான் சொல்லவந்துது இதுதான்… குடியம் குகைகள், இந்தியாவிலேயே பழமையானவை. அது திருவள்ளூர் மாவட்டத்தில்தான் இருக்கிறது என்பதையே! அதேபோல கொசஸ்தலை ஆற்றின் கரைகளில்தான் அதிராம்பாக்கம் இருக்கிறது. அதிராம்பாக்கத்திலும் நிறைய கற்கருவிகள் கிடைத்தன. இந்த ஆற்றின் கரையில் இருக்கும் ஜெகன்னாதபுரம் கிராமத்தில்தான் ‘வெட்டுப்புலி’நாவல் ஆரம்பிக்கும்.”

“தினமணி பத்திரிகையில் அப்போது உங்களுக்கு ஆசியராக இருந்த இராம. சம்பந்தன் குறித்து பல நேரங்களில் பேசியிருக்கிறீர்கள். அந்தளவுக்கு தனிப்பட்ட முறையில் தாக்கத்தை ஏற்படுத்தினாரா?”

“ஒரு பத்திரிகையாளராக அவர் மிகவும் முக்கியமானவர் என நினைக்கிறேன். ஃபயர் பேண்ட் என்பார்களே அப்படியான ஆசிரியர் அவர். சின்ன சின்ன பத்திரிகையில் பணியாற்றினாலும்கூட, அங்கே நண்பர்கள் போன்ற பணிச்சூழல்தான் இருந்தது. தினமணிக்கு வந்த பிறகுதான், அவர் செயல்பாடுகளைப் பார்த்தேன். அவர் எத்தனை நேர்த்தியாக ஆசிரியர் பணியை செய்கிறார், ஒரு சிறு பிழை கண்டுவிட்டால்கூட எப்படி துடிக்கிறார் என்பதைப் பார்த்தேன். அதுமில்லாமல் அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நாள் ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆசிரியரைப் பார்க்க அலுவலகம் வந்தார், அவர் பெயர் வேண்டாம். ஆசிரியருக்கு ஒரு பரிசு கொடுத்தார். ஆசிரியரை சந்திக்க வருகிறவர்கள். பழங்கள், இனிப்புகள் என வாங்கிக்கொண்டு வருவார்கள். ஆசிரியர் மேசையில் இருக்கும் அவற்றை ஆசிரியர் குழுவில் உள்ள எல்லோரும் எடுத்து உண்போம். அப்படித்தான் அரசியல் தலைவர் கொடுத்த பரிசை நானும் என் நண்பரும்தான் பிரித்தோம். அந்த பரிசுப் பெட்டியில் அழகான தங்க செயின் ஒன்று இருந்தது. அதை ஆசிரியரிடம் சொன்னோம். அதைப் பற்றி மேற்கொண்டு என்ன வென்றுகூட ஆசிரியர் கேட்கவில்லை. உடனே வாயில் காவலரை போனில் அழைத்து, வெளியேறிக்கொண்டிருக்கும் அரசியல்வாதியை மேல வரச்சொன்னார். அந்த செயினை கைவிரலில் பிடித்து சுற்றிக்கொண்டே அறைக்கு வந்த அரசியல்வாதியிடம்,‘என்னை கேவலப்படுத்த இங்கே வந்தீர்களா?’ எனக் கேட்டார். அவரோ, ‘இல்லை இது அன்புப் பரிசு’ என்றார். ‘அன்பு என்றால் மறைத்துதான் தருவீர்களா?’ என அவரிடம் விட்டேறிந்தார் ஆசிரியர். இந்த சம்பவம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

நேர்மையானவர், சின்சியரானவர், பத்திரிகையை நேசித்தவர். அவர் இறக்கும் நேரத்தில்கூட அவர் தலைக்கு அருகே, தினமணி பத்திரிகை இருந்தது. கேன்சர் வந்து இறந்துபோனார். தினமணியை அந்தளவுக்கு நேசித்தார் அவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.”

“ ‘வெட்டுப்புலி’ நாவலில் திராவிட இயக்கத்துக்காக சாதாரண மக்கள் பலர் உழைத்திருக்கிறார்கள் என்பதை பதிவு செய்துள்ளீர்கள். இதை அங்கீகரிக்கும் வகையில் திமுக ஏதேனும் விருது கொடுத்திருக்கிறதா?”

“திமுக கட்சி ரீதியாக செய்யவில்லை என்றாலும் கட்சியைச் சேர்ந்த பலர் இந்த நாவலைப் படித்துவிட்டு மனப்பூர்வமாக பாராட்டினார்கள். நண்பர் எம். எம். அப்துல்லா போன்றோரை சொல்லலாம். இந்த நாவலை வெளியிட்ட நண்பர் மனுஷ்யபுத்திரன் இப்போது திமுககாரர்தானே. சுப. வீரபாண்டியன் போன்றவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள், திமுக அனுதாபிகள் கொண்டாடிய நாவலாக இதைச் சொல்லலாம்.

இன்னொன்று…’வெட்டுப்புலி’ நாவல் 2008-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது வலைத்தளங்கள் மிகவும் பிரபலம்.  இந்நாவல் வந்தவுடனே கிட்டத்தட்ட 80 பேர் இதைப் பற்றி எழுதினார்கள். அது எப்படி நடந்ததென்றே தெரியவில்லை. ஒரு நல்ல படைப்பு, அதற்கான தாங்கு சக்திகளை அதுவாகவே உருவாக்கிக் கொள்ளும். இப்படி தனிப்பட்ட நபர்கள் இந்த நாவலைக் கொண்டாடினார். அடுத்தடுத்த பதிப்புகளும் வெளிவந்தன. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், வண்ணதாசன், கலாப்ரியா போன்ற எழுத்தாளர்கள் தனிப்பட்ட முறையில் பேசும்போது இது நல்ல படைப்பு எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; கொண்டாடினார்கள். இருந்தாலும் இது அடைந்த தொலைவு என்பது குறைவுதான்.

இது எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை என தோழர் தொ. பரமசிவம் சொன்னார். இது முக்கியமானதொரு ஆவணம் என்றால். திருநெல்வேலியில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அவர்தான் தலைமை தாங்கி பேசினார். அரைமணி நேரத்துக்கும் மேலே அவர் பேசியதன் சாரம்.. திராவிட இயக்கத்தைப் பற்றி தமிழில் வந்த முதல் நாவல் இதுதான். நேர்மையாக அந்த இயக்கத்தை பதிவு செய்திருக்கிறார். வெறுமனே துதி பாடலாக இல்லாமல் ஏகப்பட்ட விமர்சனங்களையும் உள்ளடக்கிய, இந்த இயக்கத்தின் தேவை என்ன? என்ன நோக்கத்துக்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது? எப்படி அது இயங்கிக்கொண்டிருக்கிறது? அது எப்படியாக மாற வேண்டிய தேவை உள்ளது என நாவல் பேசுவதாக தொ. பரமசிவம் பேசினார். நான் மிகவும் மதிக்கும் பண்பாட்டு ஆய்வாளர் அவர். அவருடைய கருத்தை முக்கியமானதாக கருதுகிறேன். பிரபஞ்சன், வெளி ரங்கராஜன் போன்றவர்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கூட கட்சி ரீதியாக கொண்டாடப்படவில்லை.

2014-ஆம் ஆண்டும் திராவிடர் கழகம் தைப்பொங்கல் விழாவின் போது சிறந்த நாவல் என்று சொல்லி, பெரியார் விருது அளித்தார்கள். திமுக ஏன் எதையும் செய்யவில்லை என்ற காரணம் எனக்குத் தெரியாது. திமுகவில் உள்ள எழுத்தாளர் இமையம், இந்நாவல் குறித்தும் என்னைப் பற்றியும் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் திராவிட இயக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர் என எழுதியிருக்கிறார். அதையும் நான் பெருமையாக நினைக்கிறேன்.”

“திராவிட இயக்க செயல்பாடுகளில் ஆர்வம் உள்ள நீங்கள் கோயிலுக்கு செல்வதுண்டா? கடவுள் நம்பிக்கை உண்டா?”

“கோயிலுக்குப் போவேன்; ஆனால் சாமி கும்பிட்டது கிடையாது. தஞ்சை பெரிய கோயிலையோ, கங்கை கொண்ட சோழபுரத்தையோ பார்த்தால் அந்த வரலாறுதான் எனக்கு முதலில் தோன்றும். இந்த சிற்பம் செதுக்க எவ்வளவு காலம் பிடித்திருக்கும்? அரசர்கள் ஏன் இதைக் கட்டினார்கள்? கோயிலைக் கட்டிய உழைப்பாளிகள் யார்? மக்களை சுரண்டி இந்தக் கோயில்கள் கட்டப்பட்டனவா? என பல கோணங்களில் யோசிப்பதுண்டு. அப்பா திமுக அனுதாபி. அவர் முரசொலி மட்டும்தான் படிப்பார். குங்குமம் மட்டும்தான் வாங்குவார்; வேறு இதழ்களை வாங்க மாட்டார். ‘வெட்டுப்புலி’யில் நானும் ஒரு கதாபாத்திரமாக வருவேன். ‘குங்குமம்’ இதழில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, தினமணியில் போய் சேர்ந்துவிடுவேன். அப்பா ரொம்ப கோபப்பட்டார் என எழுதியிருப்பேன். அது உண்மைதான். ஆயிரத்து ஐநூறு சம்பளத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு மாறியிருந்தும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் இதர சலுகைகளை பெற்றபோதும் அப்பாவுக்கு வருத்தம்தான். அதுவரைக்கும் பணியாற்றிய போலீஸ் செய்தி, குங்குமம், வண்ணத்திரை போன்ற பத்திரிகைகளில் எல்லாம் அந்தந்த மாதத்துக்கு ரசிதில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சம்பளம் தருவார்கள். தினமணியில் அரசு ஊழியரைப் போன்ற சலுகைகள் இருந்தன. அந்தப் பெருமையே எனக்குப் பெரிதாக இருந்தது. கோயாங்கா கட்டிடமே பிரமாண்டமாக இருக்கும். பெரிய கேண்டின், வந்து செல்லும் வண்டிகள் என அந்த இடம், நான் இதுவரை பார்த்திராத ஒன்று.

அந்த பரவசத்துடன் பணி மாறியதை வந்து அப்பாவிடம் சொன்னபோது, ‘நீ ஏன் அங்கு போனாய்? நீ கலைஞரிடம் வேலைப் பார்ப்பதைவிட அந்த வேலை முக்கியமா?’ எனக் கேட்டார். தினமணியில் நான் பெறவிருந்த தொகையும் பெரிதுதான். குடும்பச் சூழலுக்கு அது உதவியாக இருக்கும்தான். ஆனாலும், பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தும் பத்திரிகையில் மகன் போய்விட்டார் என்கிற வருத்தம் அப்பாவுக்கு இருந்தது. பிறகு, புரிந்துகொண்டார். ஆசிரியர் இராம. சம்பந்தன், உண்மையில் பெரியாரிஸ்ட்; தமிழில் ஆர்வம் உள்ளவர் என்று சொன்னபோது அப்பா ஏற்றுக்கொண்டார்.

அப்பா, பெரியார் பற்றி எனக்குப் பெரிய பிம்பத்தை ஏற்படுத்தியவர். மு.க. அழகிரியின் திருமணத்துக்கு பெரியார் திடலுக்கு அழைத்துச் சென்ற நினைவுகள் பசுமையாக உள்ளன. அந்தத் திருமணத்துக்கு பெரியார்தான் தலைமை தாங்கினார். காமராசர், ஜெகஜீவன்ராம், எம்.ஆர். ராதா என அந்த மேடை முழுக்கவே, இன்று வரலாறாக மாறிவிட்ட மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு என் அப்பாதான் காரணம். அப்போது கலைஞர் மிக எளிமையாக பெரியார் திடலின் நுழைவாயிலில் வருகிறவர்களுக்கு வணக்கம் சொல்லி வரவேற்றார். முதல்வர் அவர், மிக எளிமையாக இருந்தார். அப்பா அப்போதுதான் மின்சார வாரியத்தில் ஒரு சங்கம் தொடங்கி, கலைஞரை தலைமை தாங்க அழைத்திருந்தார். அதை நினைவில் வைத்திருந்த கலைஞர் வாங்க வாங்க என அழைக்கிறார். இதுதான் பையன் என அப்பா என்னைப் பார்த்து சொல்கிறார். அப்போதுநான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பெரிய மனிதர்கள்; நல்ல மனிதர்கள் இருக்கிற இடத்தை அப்பா காண்பித்திருக்கிறார் என்பதுபோல என் மனதில் பதிந்துவிட்டது.

பெரியார் எல்லாவற்றையும் மறுதலிக்கிற மனிதராக இருந்தார் என அப்பா சொன்னார். மனிதர் சக மனிதரை ஏன் சமமாக நடத்தவில்லை என்பதை அவர் முதன்முதலில் வைத்த கேள்வி. மதங்கள், வர்ணாசிரமம், அதற்கு பின்னால் இருக்கும் கடவுள் கற்பிதங்கள் என ஒவ்வொன்றாக ஒதுக்குகிறார். அதேசமயம் தமிழர்கள், திராவிடர்கள் என்பனவற்றையும் கொண்டாட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மொழி, இனம் அடையாளத்தையும் விட்டுவிட வேண்டும், மனிதனாக மட்டும் இருக்க வேண்டும் என்றார். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஆரியர்களை எப்படி வெறுத்து பேசினரோ அதுபோல திராவிடர்கள் ஒருவேளை இன்னொரு மனிதனை தீண்டத்தகாதவராக நினைத்தால் அவரையும் எதிர்க்கும் முதல் ஆளாக இருப்பேன் என்றார் பெரியார்  . அதனால்தான் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. திராவிட வெறியோ, தமிழ் வெறியோ அவருக்கு இருந்ததில்லை. அவர் எல்லோரும் சமமாகவே இருக்க விரும்பிய மனிதர். அதனால்தான் என்னுடைய கதைகளிலும் எழுத்திலும் பெரியார் பார்வையை வைத்து எழுதுகிறேன். ”

திருவள்ளூர் போன்ற பிற்படுத்தப்பட்ட மாவட்டத்திலிருந்து, திராவிட இயக்க சிந்தனையோடு, எந்தவொரு கட்சியும் ஆதரிக்காத தனி எழுத்தாளனாக இருப்பதாலோ என்னவோ பெரிதாக என்னுடைய நாவல்கள் கொண்டாடப்படவில்லை. ஆனால் வாசகர்கள் கொண்டாடினார்கள்.

“கல்லூரி முடித்த காலத்தில் அன்றைக்கு இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், மாணவர்களை முன்னிலைப்படுத்தி ‘மானுட பண்ணை’ நாவலை எழுதியிருந்தீர்கள். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வரலாற்று நாவல் என்கிற அடையாளத்துடன் ‘வெட்டுப்புலி’ வந்தது. நடுவில் ஏன் இத்தனை கால இடைவெளி…”

“ ‘மானுட பண்ணை’ வந்த காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது. அன்றைய சினிமாக்கள் ‘நிழல்’,’வறுமையின் நிறம் சிவப்பு’ என இதை மையப்படுத்தி சினிமாக்களும் வந்தன. அவையெல்லாம் இப்போது நகைச்சுவையாகத் தோன்றுகிறது. ஏதோ ஒரு வேலைக்குப் போக வேண்டியதுதானே என்கிற கேள்வி இப்போது வருகிறது. உலகமயமாக்கள் ஏதோ ஒரு விதத்தில் நன்மையளித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சரியான ஊதியம் கிடைக்கிறதா, நிரந்த வேலை கிடைக்கிறதா என்பது வேறு விஷயம். ஆனால் ஏதோ ஒரு வேலையை எல்லோரும் செய்கிறார்கள். யாரும் சும்மா இருப்பதில்லை. அந்த காலத்தில் அப்படியில்லை. தாடியை வளர்த்துக்கொண்டு, குட்டிச்சுவற்றின் மீது அமர்ந்துகொண்டு வேலையில்லா பட்டதாரி என சொல்லிக்கொண்டு, வீட்டில் தண்டச்சோறு என சொல்வார்கள் என்கிற நிலைமையெல்லாம் இப்போது இல்லை.

நான் ‘மானுட பண்ணை’ எழுதிய போது ஏராளமானவர்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள். வீட்டில் அப்பா-அம்மா தினமும் ஏசுவார்கள். இளைஞர்கள் படித்திருப்பார்கள், எங்கே போவது, என்ன வேலை செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ரேசன் கடைக்கு அனுப்புவார்கள். அங்கு போனால் காலையிலிருந்து மாலை வரை வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். மிகத் துயரமான காலகட்டம். பிடி,சிகரெட் பிடித்துக்கொண்டு டீ குடித்துவிட்டு இளைஞர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள். அதை பதிவு செய்வததாக என்னுடைய ‘மானுட பண்ணை’ நாவலும் இருந்தது, ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ என்ற நாவலும் பேசியது. 1989ல் மொத்தத்தில் சுமாரான வாரம் வெளியானது. அசோகமித்திரன் ‘கணையாழி’ஆசிரியராக இருந்தார். பென்ஸ் சாலையில் ஒரு அச்சகம் இருந்தது. அங்கே மை பூசியபடி ஆட்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அங்கே தான் கணையாழி அலுவலகம். அசோகமித்திரனை அங்கே சந்தித்து கதையை கொடுத்துவிட்டு வந்தேன். பிறகு, கணையாழி அது பிரசுரமானது. கணையாழி நடத்தில் குறு நாவல் போட்டியில் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் நாவல்களுடன் இந்த நாவலும் தேர்வாகி பிரசுரமானது. அந்த நாவல் குறித்து அசோகமித்திரனுடன் எப்போது பேசினாலும் நினைவிருப்பதாக சொல்வார்.

‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ நாவல் வித்தியாசமான முயற்சியாக செய்திருந்தேன். ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு தலைப்பு தந்திருப்பேன். ஞாயிற்றுக்கிழமையில் கதை ஆரம்பிக்கும். ஞாயிற்றுக்கிழமையில் தூர்தஷனில் திரைப்படம் போடுவார்கள். காலையிலிருந்தே அன்று மாலை ஒளிபரப்பும் படம் குறித்துதான் பாத்திரம் துலக்கிக் கொண்டும், துணி துவைத்துக்கொண்டும் பெண்கள் பேசிக்கொள்வார்கள். நடுநடுவே வேலைத்தேடும் இளைஞனின் பாடுகளையும் சொல்வேன். திங்கள் கிழமை என்றால் அதற்கான முக்கியத்துவம் என்ன? என ஏழு கிழமைக்கு ஒரு கதையை சொல்லியிருப்பேன். நிறைய பேர் அந்த நாவலை பாராட்டினார்கள். சமீபத்தில் இளைய பெருமாள் என்ற ஆய்வாளர் ‘கணையாழி குறுநாவல்கள்’ என்ற பெயரில் தன்னுடைய ஆய்வை நூலாக்கியிருந்தார். நாமும் கூட நாவல் எழுதியிருந்தோமே என அந்த நூலை புரட்டியபோது, ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ குறித்து பிரமாதமாக எழுதியிருந்தார்.

நண்பர் கவிதா பாரதி சொன்னார் ‘வேலையில்லா பட்டதாரி’ கதை ‘மானுட பண்ணை’ போலவே இருக்கிறதென்று. அந்தக் கதையிலும் நாயகம் சிவில் இன்ஜினியர், கட்டடம் கட்டுவதாக கதை போகும். அதனால் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். ‘மானுட பண்ணை’ முக்கியமான நாவல். நாவலுக்கு பிரபஞ்சன் பிரமாதமான முன்னுரை எழுதியிருந்தார். கலாபூர்வமாகவும் கதாபூர்வமாகவும் எழுதப்பட்ட நாவல் என்று எழுதியிருந்தார். பிற்காலத்தில் இளைஞர்களின் கையேடாக இருக்கும் எனவும் எழுதியிருந்தார். படிக்கும்போது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ என இதயம் பேசுகிறது இதழில் ஒரு தொடர்கதை எழுதினேன். அதன் பிறகுதான் மானுட பண்ணை, பிறகு மொத்தத்தில் சுமாரான வாரம். ஒவ்வொன்றுக்கும் கால இடைவெளி அதிகம். காரணம் பத்திரிகையாளராக இருந்ததுதான்.

திருவள்ளூர் போன்ற பிற்படுத்தப்பட்ட மாவட்டத்திலிருந்து, திராவிட இயக்க சிந்தனையோடு, எந்தவொரு கட்சியும் ஆதரிக்காத தனி எழுத்தாளனாக இருப்பதாலோ என்னவோ பெரிதாக என்னுடைய நாவல்கள் கொண்டாடப்படவில்லை. ஆனால் வாசகர்கள் கொண்டாடினார்கள். கொண்டாடப்படவில்லை என்பது தேசிய அளவில் போகவில்லை, சாகித்ய அகாடமி விருது பெறவில்லை என்பதைத்தான்”.

“அரசுகளின் செயல்பாடுகளை கண்டிக்கும் பொருட்டு எழுத்தாளர்கள் சாகித்ய விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?”

“சாகித்ய விருதுகள் மொழிக்கு தரப்படும் அங்கீகாரம். நம்முடைய கண்டனத்தை சொல்வதற்கு இத்தகைய செயல்பாடுகள் பயன்படலாம். கண்டனத்தை விருதை திரும்பத் தந்துதான் சொல்ல வேண்டும் என்பதில்லை. இங்கே இருக்கிற நிறைய எழுத்தாளர்கள் திரும்பத்தரவில்லை. பிரபஞ்சன், வண்ணதாசன் உள்பட. நாம் அவர்களையெல்லாம் குறை சொல்வதுபோல இருக்கும். கொடுக்க வேண்டும் என்கிற அவசியல் இல்லை. ஆனால் கண்டித்திருக்கலாம். இது இந்திய மொழிகளுக்குத் தரக்கூடிய அங்கீகாரம் திரும்பத்தருவதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. வாங்கிய விருதை தருவதல்ல நோக்கம், அரசை கண்டிப்பதும், அரசுக்கு சுட்டிக்காட்டுவதுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.”

“தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?”

“புதுமைப்பித்தன். அவர் கதைகளில் நையாண்டி வரிக்கு வரி இருக்கும். திராவிட இயக்கத்தைப் பற்றி இலக்கிய பதிவுகள் இல்லையென்று சொன்னேன் இல்லையா..? புதுமைப்பித்தன் சொல்லியிருக்கிறார். “நீ என்ன சுயமரியாதை கட்சிக்காரனா?” என்ற ஒரு வரி அவருடைய கதையில் வரும். புதிய நந்தன் என்ற ஒரு கதையில் காந்தியவாதம் பெரிதா பெரியாரியம் பெரிதா என்பதே கதை. இதை ஒரு கதைக்களமாக எழுத அவரால் மட்டுமே முடியும். அதனாலேயே அவரை எனக்குப் பிடிக்கும். அப்புறம் கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. மௌனி ஆகியோரை படித்து வந்தாலும்கூட எனக்கு அடுத்து தடாலென வந்து இறங்கியது சுஜாதாவின் எழுத்துதான். அவர் தொடாத துறையே இல்லை. அவர் மேலோட்டமாக எழுதினார் என்பதே குறையாக இருந்ததே தவிர, அவர் பரவலாக நிறைய எழுதினார். ஆழம் குறைவு; பரந்து விரிந்த அகலம் அவருடைய எழுத்து. தலைமைச் செயலகம் என மூளையைப் பற்றி எழுதினார். ஏன்? எதற்கு எப்படி? எழுதினார். கற்றதும் பெற்றதும் என புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். ஆறு பெரிய வார இதழ்களிலும் தொடர்கள் எழுதினார். பெரிய சாம்ராஜ்ஜியமே நடத்தினார்”.

“உங்களுடைய எழுத்து பிரபஞ்சனையும் சுஜாதாவையும் நினைபடுத்துவதாக வாசகனாக உணர்கிறேன்”

“உண்மைதான். சொல்லவதை அழகாக, நாகரீகமாக சொல்லக்கூடியவர் பிரபஞ்சன். அவருடைய எழுத்தில் சுஜாதாவின் சின்ன சின்ன கிண்டல்கள் சேர்த்தேன்.

அ.முத்துலிங்கத்தின் ஆங்கில கலப்பற்ற நடை, புதிய உலகத்தை நமக்குக் காட்டும் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழர்கள் இல்லாத பாகிஸ்தானில் ஒரு கதை நிகழ்விடத்தை அமைப்பார். செவ்வாய்கிழமையில் ஆரம்பிக்கிற கதை திங்கள் கிழமையில் வந்து முடியும். அதாவது முந்தைய நாளில் வந்து முடியும். உலகத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு விமானத்தில் கதை பயணித்துக்கொண்டிருக்கும். இந்த விஷயங்களே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கதைக்குள் கொண்டு போகும். அதை மிகவும் விரும்புகிறேன்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியலை சொல்ல வேண்டுமென்றால்… புதுமைப்பித்தன். தி.ஜ., சுஜாதா, முத்துலிங்கம் என வைத்துக்கொள்ளலாம். பாதிப்பு என்று பார்த்தீர்கள் என்றால், பிரபஞ்சன் என்னை அதிகமாக பாத்தித்தவர். நான் தினமணியில் பணியாற்றியபோது தினமணி கதிரில் வந்த ‘வானம் வசப்படும்’ தொடர்கதையை ஒவ்வொரு வாரமும் அச்சுக்கு போகும் முன்பே படித்துவிடுவேன். அந்த அளவுக்கு அவர் என்னை பாதித்தவர். நல்ல நண்பரும்கூட.”

“அறிவியல் புனைகதை எழுத ஆரம்பித்தது பற்றி…”

“முன்பே சொன்னதுபோல நான் அறிவியல் மாணவன். அறிவியல் மீது ஆர்வம் கொண்டவன். அறிவியலாளராக இருக்கும் என்னுடைய நண்பரின் உதவியும் எனக்கு அறிவியல் புனைகதைகள் உருவாக்க உதவியாக இருக்கிறது. வரலாற்று நாவலான ‘வெட்டுப்புலி’யையும் அறிவியல் புனைகதையான ‘ஆபரேஷன் நோவா’யையும் இணைத்ததுபோல ஒரு நாவலை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ என்பது அந்நாவலின் பெயர். இந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட திட்டம், பார்க்கலாம்!.”

“சமீபத்தில் வந்தது ‘தாரகை’ ஜெயலலிதாவின் கதை என்று பேசப்பட்டதே?”

“அரசியலுக்கு வருவதற்கு சினிமாவில் நடிப்பதை ஒரு பாதையாக நினைக்கிறார்கள் இல்லையா..? எப்படி ஒரு நடிகை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார் என்பதை இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதாவின் கதை என்று சொல்ல முடியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கும் இந்தக் கதை பொருந்தும்.”

“தமிழ் சினிமாவை அழித்தது திராவிட கட்சிகள்தான் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே. அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?”

“நாதா…சுவாமி என திரைப்பட கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருந்த காலம் அது. ‘சந்திரலேகா’ படத்தில் மன்னனான ரஞ்சன் கேட்பார், ‘அவாளெல்லாம் வந்துட்டாலா?” என்று. ‘மனோகரா’ படத்தைப் பாருங்கள். ‘திருத்திக்கொள்ளுங்கள், அழைத்து வரவில்லை…இழுத்து வந்திருக்கிறீர்கள்’ என்று பேசிக் கேட்டபோது நெருக்கமாக இருந்தது. நாடகத்திலிருந்து சினிமா வந்த காரணத்தினால் வசனங்கள் அதிகமாக இருந்தன. அந்தக் காலக்கட்டதில் வந்த ஆங்கில படங்களில்கூட பெரிய பெரிய வசனங்கள் இருந்தன. திமுகவினர் ஆங்கிலப்படத்தையும் சேர்த்து அழித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ‘ரோமியோ ஜுலியட்’, ‘பென்ஹர்’ படங்களைப் பாருங்கள்,  வசனங்கள் அதிகமாகவே இருக்கும். உலகம் முழுவதுமே இந்த நிலைமைதான்.

‘அவாள்; இவாள்’ என்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் நல்ல தமிழை கொண்டுவந்தது திராவிட இயக்கத்தார்தான். அது மக்களிடமும் எதிரொலித்தது. மக்கள் நல்ல தமிழை பேச ஆரம்பித்தார்கள். மந்திரி என சொல்லிக்கொண்டிருந்ததை, அமைச்சர்கள் என்று சொல்லத்தொடங்கினார்கள். இது திமுக காலத்தில் வந்த வசன புரட்சியாகவே பார்க்கிறேன்.

தோளில் துண்டுபோடும் உரிமைகூட சிலருக்கு ஒரு காலத்தில் இல்லை. அந்த நேரத்தில் பொன்னாடை போர்த்தும் வழக்கத்தை அரசியல் மேடைகளில் அறிமுகப்படுத்தியது திமுகதான். இப்போது நமக்கு அது கேலியாகத் தெரியலாம். ஆனால், உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் அந்த உரிமையைப் பெற்றுதந்தது திமுக.

திராவிட கட்சிகள் இல்லையென்றால் நல்ல தமிழ் பேசவும், தோளில் துண்டு அணியும் உரிமை கிடைக்கவும் இன்னும் காலம் தேவைப்பட்டிருக்கும். இந்த மாற்றத்துக்கு திமுக காரணமாக இருந்தது. உடனடியாக 2 ஜியை வைத்து ஒட்டுமொத்தமாக திமுகவை எடை போட்டுவிட முடியாது. அங்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. முதலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்தது என சொன்னார்கள். இப்போது ரூ. 200 கோடி வரைக்கும் ஊழல் நடந்திருக்கலாம் என சொல்லுகிறார்கள். ஊடகங்கள் எவ்வளவு மிகைப்படுத்தி கூறின? 200 கோடி ஊழல் செய்ததற்காவது ஆதாரங்களை கொடுங்கள் என்றுதான் ஆ. ராசா சொல்கிறார். இந்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மக்களுக்கு நன்மைதான் கிடைத்தது. இப்போது எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், திமுகவின் தவறுகளை மிகைப்படுத்துகிற ஊடகங்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்களை சொல்லுவதில்லை. சாதிப்பெயரை சொல்ல நாம் எவ்வளவு கூச்சப்படுகிறோம்? வெளி மாநிலங்களில் பாருங்கள்… அம்மாநில ஆட்சியாளர்கள்கூட சாதி பெயரை தவிர்ப்பதில்லை. ஆந்தர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்றேதான் அறியப்படுகிறார். ஜோதி பாசுவின் பெயரிலும்கூட சாதிப்பெயர் ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது. நமக்குள்ளுமே சாதி இருந்தாலும்கூட, வெளிப்படையாக சாதியை பொதுவெளியில் சொல்லக்கூச்சப்படுகிறோம் இல்லையா? அதற்கு திராவிட இயக்கங்கள்தான் காரணம்.”

.

One thought on ““திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.