ஜி.எஸ்.டி. அவசியம் தெரிந்துகொள்ள நான்கு விஷயங்கள்!

சதீஷ்குமார்

சதீஷ் குமார்

உண்மையில் இந்த ஜி.எஸ்.டி என்ன தான் தரப்போகிறது நமக்கு என்றால் எனக்கு சட்டென நினைவுக்கு வருவது நாலே நாலு விஷயங்கள் தான்.

அதை பற்றி சொல்வதற்கு முன், முதலில் ஏற்கனவே பலமுறை இணையதளங்களில் நான் சொல்லி இருப்பதை போல, நான் ஜி.எஸ்.டி என்கிற வரி சீர்திருத்தத்துக்கோ எல்லோரது வருவாய் கணக்கில் காட்டப்படவேண்டும் என்பதற்கோ எதிரானவன் அல்ல. மாறாக இந்த வரி சீர்திருத்தத்தின் தாத்பரியம் புரியாமல் அரைகுறையாக விதிகளை வரையறை செய்து, சரியான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் அமல்படுத்தும் விதத்தை தான் எதிர்க்கிறேன்.

இனி அந்த நாலு விஷயம். கொஞ்சம் விரிவாகவே…

விஷயம் 1. சிறு குறு வணிகங்கள் பாதிக்கப்படும்… ஏன் பலரும் தொழிலைவிட்டே கூட போய்விட வேண்டி இருக்கும்.

CGST விதி 9(3) & 9(4) ஆகியவை சொல்வது என்னவென்றால், நீங்கள் ஏதாவது ஒரு பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் (Unregistered Vendor) இருந்து பொருளை வாங்கினாலோ சேவைகளை பெற்று கொண்டாலோ அவர்களுக்கு பதிலாக நீங்கள் வரி கட்ட வேண்டும். (Reverse Charge Mechanism – RCM)

இதன் பலன்?

இப்போது நாம் சிறு குறு வணிகர்களிடம் (MSME Vendors) இருந்து பெற்று கொள்ளும் பொருட்கள் சேவைகளுக்கு வரி (Service Tax) இல்லை. இனி அதற்கும் வரி உண்டு. ஆனால் பொருட்களை விற்போருக்கு 75 லட்சம் ரூபாய் வரை ஆண்டு மொத்த வருவாய் (Annual Turn Over) இருந்தால் அவர்கள் முழு வரி செலுத்தும் கட்டாயம் இல்லை. அதேபோல சேவைகளை செய்வோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை ஆண்டு மொத்த வருவாய் இருந்தால் அவர்களுக்கும் முழு வரி செலுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை தான் ஆண்டு மொத்த வருவாய் ஈட்டுகிறார்கள் எனில் அவர்கள் பதிவு செய்யவே தேவை இல்லை என்று அரசே அறிவித்து இருக்கிறது.

அவர்கள் பதிவு செய்ய விதி விலக்கு இருப்பதாலேயே அவர்களை வரி எய்ப்பாளர்கள் என சொல்ல முடியாது. அவர்கள் நேர்மையான வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தான். ஆனால் மொத்த வருவாய் மிக குறைவாக இருப்பதால் வரி கட்டமைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அதே நேரம் அவர்களிடம் இருந்து நீங்கள் பொருளோ சேவையோ பெற்றால் அவர்களுக்கு பதிலாக நீங்கள் வரி செலுத்தவேண்டும். அப்படி செலுத்திய வரியை நீங்கள் சில தருணங்களில் திரும்ப பெற்று கொள்ளவும் (ITC Adjustments) முடியும். ஆனால் அதற்காக நீங்கள் பராமரித்து வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என சில உள்ளன.

பதிவு பெறாத வணிகர்கள் கொள்முதல் செய்யும் பொது செலுத்திய வரியை (Tax paid on Purchases) கழித்துக்கொள்ளும் வசதி (ITC Credit) இல்லாததால் அவர்களிடம் மட்டும் பொருட்களின் விலை கூடுதலாக இருக்கும். அதானாலும் கூட நீங்கள் அவர்களை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

எதற்கு வம்பு என பதிவு செய்த வணிகர்களிடம் மட்டுமே இனி வாங்க தொடங்குவீர்கள் இல்லையா? அது தானே எளிமை? அவர்கள் பில் போட்டு அதில் வரியும் போட்டு கொடுத்து விடுவார்கள். நீங்கள் பணம் செலுத்தினால் போதும். அந்த பில்லில் உள்ள வரி உங்களுக்கு வரிக்கழிவாக திரும்ப கிடைத்து விடும்.

சரி இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என தெரிகிறதா?

நாளாவட்டத்தில் சிறு குறு வணிகர்களின் வியாபாரம் தேய்ந்து தேய்ந்து ஒரு நிலையில் வணிகத்தை இழுத்து மூட வைத்து விடும்.

இப்படியான நிலையில் இருப்பவர்கள் யார் என பார்த்தால், சிறு ஹார்டுவர் கடைகள், மெக்கானிக்குகள், பிளம்பர்கள், லேத் வர்ஷாப்புகள்,  பிரிண்டிங் பிரஸ் வைத்திருப்போர், சின்ன சின்ன ஸ்டேஷனரி கடைகள் என பல ரகம்.

இப்போது நமக்கு தெரிந்தவர்கள், அல்லது மிக கஷ்டப்படுபவர்கள் என்பதற்காக நாம் அவர்களிடம் பொருட்களை வாங்கி அந்த வகையில் அவர்களுக்கு ஒரு உதவியாக இருக்க முடிகிறது. ஆனால் இனி ஜி.எஸ்.டியில் அப்படி இருந்தால் நமது தொழில் பாதிக்கப்படும் என்பதால் வலியோடு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டி இருக்கிறது. இப்படி எல்லோரும் புறக்கணித்தால்???

இப்படியான வணிகர்கள் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 27 கோடி பேர்.

விஷயம் 2 – விலைவாசி உயர்வு

சரக்கு சேவை வரி என எந்த நேரத்தில் மொழிபெயர்த்தார்களோ தெரியவில்லை, சரக்குகள் கையாளும் போக்குவரத்து வணிகங்களுக்கான வரியை (Tax on Freight) கூடுதலாக்கி விட்டிருக்கிறார்கள். லாரி வாடகை ஏறினால் அதன் மூலமாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையும் கூடிவிடும் என்பது நிதர்சனம்.

தற்பொழுது லாரி வாடகைக்கு 4.5% வரி (15% tax on 30% Freight value) என்றிருப்பது இனி 5% வரியாக (5% tax on 100% Freight value) உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சுங்க சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவற்றுடன் இந்த வரியும் சேர்ந்து கொண்டால் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் பொருட்களின் சேரிட வரி கூடத்தானே செய்யும்?

மற்றுமொரு சுமையாக சேவை வரி இப்போதிருக்கும் 15% என்பதில் இருந்து ஜி.எஸ்.டியில் 18% என உயர்வதால் இதர சேவைகளும், கட்டணங்களும் தானாகவே 3% விலை உயர்வை நேரடியாக ஏற்கவேண்டி இருக்கும்.

ஆக மொத்தத்தில் லாரி மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான விலை கூடுவதால், உணவுபொருட்கள் முதல் தொழிற்சாலை உதிரிபாகம் வரை எல்லா பொருட்களும் இப்போதிருக்கும் விலையிலிருந்து குறைந்தது 4.2% உயர்வு அடைய சாத்தியம் இருக்கிறது.

இதன் பிற்சேர்க்கை பலாபலனை எல்லாம் பொருட்களின் இறுதி உபயோகிப்பாளர் (End User) தான் தன் தலையில் சுமக்க வேண்டி இருக்கும் என்பதால் விலைவாசி உயர்வையும் அதன் தொடர்பான நிதிப்பற்றாக்குறையையும் ஒரு வருடத்துக்காவது சகித்து தான் ஆகவேண்டும்.

விஷயம் 3 – வேலையின்மை

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் அதற்காக நாம் செலுத்தும் வரியை வரிக்கழிவாக கழித்துக்கொள்ள முடியாது.

அதனால் பல நிறுவனங்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய சேமிப்பு கிடங்கை (Central Ware House) நிர்வகித்து அந்த கிடங்கிற்கு தங்களது உற்பத்தி பொருட்களை வரியின்றி அனுப்பி வைத்து (Stock Transfer), அந்தந்த மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இது போன்ற வேர் ஹவுசிங் துறைகளில் மட்டும் சுமார் 2 கோடி பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இனி அப்படியான வேர் ஹவுஸ்கள் தேவைப்படாது.

காரணம் ஜி.எஸ்.டி முறையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கும் பொருட்களுக்கும் கொள்முதல் வரிக்கழிவு (ITC – Input Tax Credit) உள்ளதால் நேரடியாக தொழில் நிறுவனங்களே கடைநிலை உபயோகிப்பாளருக்கு விற்பனை செய்துவிட முடியும்.  இதனால் வேர் ஹவுசிங் துறையில் மட்டும் 1 கோடி வேலை இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையாக கணினி வழி பரிமாற்றங்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி பல வகைகளில் உதவிகரமாக இருந்தாலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கும் பணியாளர் எண்ணிக்கைகளை குறைக்கின்ற காரணியாகவும் அது இனி இருக்கக்கூடும்.

சென்னைக்கு அருகிலுள்ள ஒரு பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் கொள்முதல் & விற்பனை துறையில் (SCM) தற்போது இருக்கும் 46 பணியாளர்களுக்கு பதில் இனி 17 பேர் போதும் என நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அதில் பணியாற்றும் என் நண்பர் மகிழ்ச்சியாக சொன்னபோது, அந்த ஒரு நிறுவனத்திலேயே 29 பேர் வேலை இழக்கிறார்கள் என்றால் இந்தியா முழுதும் எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்கிற மணக்கணக்கில் நான் வருத்தத்தோடு அமிழ்ந்து போனேன்.

விஷயம் 4 – தனி நபர் பொருளாதாரம் சரிவு

ஒரு பக்கம் ஏற்கனவே சொன்னது போல விலைவாசி உயர்வு, சேவை வரி உயர்வு, கட்டண உயர்வு போன்றவை.

மறுபுறம் தொழிற்சாலைகளில் வேலை இழப்பு, ஆட்குறைப்பு ஆகியவை

இன்னொரு புறம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி மிகுந்த சிரமத்துக்கிடையில் சொந்தமாக தொழில் செய்யும் சிறு குறு வணிகர்களின் தொழிலில் இனி ஏற்படப்போகும் நிலையின்மை

இவை எல்லாம் சேர்கையில் தனி நபர் வருமானம் என்பது மிக வேகமாக சரிய தொடங்குவதையும், கடன்கள் கூடுவதையும், கடன்களை அடைக்க வழியின்றி குடும்பங்கள் தவிக்க போவதையும், வங்கிகளின் கட்டண உயர்வால் சிக்குண்டு தவிக்கும் சிறு குறு வணிகர்களையும், பெரும் தொழில் நிறுவனங்களால் கைவிடப்படும் தனி நபர் தொழில் முனைவோர்களையும், பெரு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சும் ஒரு வணிக தளத்தில் நிற்கவும் இயலாமல் இழுத்து மூடப்படும் சுயதொழில்களையும் மனக்கண்ணால் பார்க்கமுடிக்கிறது.

இது தனி நபர் பொருளாதாரம் சார்ந்த சரிவு என மட்டும் கொள்ளாமல், ஒட்டு மொத்த சமூகம் சார்ந்த பெரும் பாதிப்பாக பார்த்தோமானால், வேலை இழந்த மக்கள் தங்கள் வாழ்வாதாராத்துக்காக என்ன என்ன செய்ய போகிறார்கள் என்பதை எல்லாம் நினைத்தால் வருத்தமாகவும் கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது.

நான் மேலே சொன்னவை எனக்கு தோன்றிய அதீத அச்சத்தின் காரணமான ஒரு பெரும் எதிர்பிம்பமாக கூட இருக்கலாம். ஆனால் அவை எதுவும் சாத்தியமற்றவை என ஒதுக்கித்தள்ள முடியாதவை என்பதையும் நீங்கள் மெல்ல மெல்ல ஒப்புக்கொள்வீர்கள்.

சதிஷ்குமார், பொருளாதாரம் சார்ந்து எழுதிவருபவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.