சுப. உதயகுமாரன்

“உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு” என்கிற தலைப்பில் நண்பர் ஜெயமோகன் அவர்கள் ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறார் அவரது வலைத்தளத்தில். எனது கருத்துக்களை “அசட்டுத்தனம், முதிராநாஸிஸம், வெறுப்புக்கூச்சல்கள்” என்று பலவாறாகச் சாடுகிறார்.
நண்பரின் நிலைப்பாடுகளை, கருத்துக்களை நான் ஓரளவு அறிந்தவன் என்கிற வகையில் இந்தக் கட்டுரை ஆச்சரியமளிக்கவில்லை. நண்பர் ஜெயமோகனின் தலைப்பு தவறானது. நான் பிரமணீயத்தைத்தான் அல்லது பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறேன். எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் நான் நிந்திக்கவில்லை.
எதிர்ப்பரசியல் பேசுவதையே அவர் விரும்பவில்லை என்பதும், எதிர்ப்பரசியல் வெறுப்பரசியலாகத்தான் இருக்க முடியும் என்று அவர் தீர்க்கமாக நம்புவதும் சீரணிக்க சற்று சிரமமாகவே இருக்கின்றன.
ஆரம்பத்தில் குடும்பத்திடமிருந்து கிடைத்த வெறுப்பரசியல் மீது கட்டமைக்கப்பட்ட பிற ஞானங்கள் தகர்ந்து போவதையும், அடித்தளம் மட்டுமே எஞ்சுவதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது பார்ப்பனீய ஆதிக்க வெறி பிடித்தவர்களுக்கும் பொருந்துமா என்பதை அவர் சொல்லவில்லை. வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்பது போல, பார்ப்பனர்களின் அடித்தளங்கள் அப்பழுக்கற்றவை என்கிறாரோ?
எந்தவிதமான அறிவியல் அடிப்படையுமின்றி, அவர்களே எழுதிவைத்துக்கொண்ட வேதங்களின், புராணங்களின், இதிகாசங்களின் அடிப்படையில் தங்களை உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள், புனிதமானவர்கள், மற்றவர் எல்லாம் எங்களுக்குச் சேவை செய்யப் பிறந்த சூத்திரர்கள் என்று நிறுவி வைத்திருந்ததை நண்பர் ஜெயமோகன் ஒரு பிரச்சினையாகவேப் பார்க்கவில்லை.
மாறாக, “சாதிய அமைப்பின் கடந்தகாலக் கொடுமைகளுக்கான” (கவனிக்கவும், “கடந்தகால”) “பொறுப்பை பிராமணர் மேல் சுமத்திவிட்டு” நாமெல்லாம் கழன்றுகொள்கிறோம் என்று குறைபடுகிறார். இதைத்தான் victim-blaming (இரையைக் குறை சொல்வது) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.
உதயகுமாராகிய நான் என்னுடைய “குலத்தின், குடியின் சென்றகாலப் பிழைகளுக்கு” பொறுப்பேற்க வேண்டுமாம். பிழைகள் நடந்தன, உண்மைதான். அவை எப்படி நடந்தன, எந்த அடிப்படையில் நடந்தன? பரந்துபட்ட பார்ப்பனீய வேதங்களை, வேற்றுப்படுத்துதலை கேள்விக்குள்ளாக்காமல் பல்வேறு சாதிகள் தமக்கு கீழிருப்பவரை கொடுமை செய்ததை எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும்?
“எதிர்மறைமனநிலைகள் கொண்ட அரசியல்நோக்கு இதேபோல எளிய வெறுப்புகளை நோக்கியே கொண்டுசெல்லும்” என்று கட்டுரையை முடிக்கிறார். அப்படியானால் எதிர்மறை மனநிலைகளே இருக்கக் கூடாதா, என்ன? அண்மையில் ஒரு பத்திரிகையாளர், “பிரதமரைத் திட்டாதீர்” என்று அறிவுரைத்தது போலவே நண்பர் ஜெயமோகனும் பேசுகிறாரே? இதுதான் முதிர்ந்த பாசிசமோ?
(பி.கு.: எனது கட்டுரையில் ஒன்றிரண்டு தகவல் பிழைகள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அச்சுக்குச் செல்லும் நேரத்தில் அவசரமாக எழுதி அனுப்பும்போது நடந்த தவறு அது. திருத்திக் கொள்கிறேன்.)
(வேண்டுகோள்: நண்பர் ஜெயமோகனும் நானும் நல்ல நண்பர்கள். இங்கே பின்னூட்டம் இடுகிறவர்கள் தயவுசெய்து கண்ணியமான மொழியை பயன்படுத்தவும்! நன்றி!)
எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியுள்ள “உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு” என்ற கட்டுரைக்கு பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன், தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு இது.