நீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

சென்னை மற்றும் கோவை AICCTU தொழிற்சங்க அலுவலகங்களில், பிரிக்கால் PRICOL தொழிலாளர்கள், AICCTU, AIARLA மற்றும் தோழமை அமைப்பின் தலைவர்கள் ஜூன் 19 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மரியாதைக்குரிய அரி பரந்தாமன் அவர்கள் சென்னையில் நேரிலும், கோவையில் (காணொளி மூலமும்)பிரிக்கால் தொழிலாளர்களின் நீதிக்கானப் போராட்டத்தை துவக்கி வைத்தார். “நீதிக்காகப் போராடும் தொழிலாளர்களோடு இருப்பேன்” என ஒருமைப்பாடு தெரிவித்தார். சிறை சென்று திரும்பிய & பழிவாங்கப்பட்ட பிரிக்கால் தொழிலாளர்கள், AICCTU, AIARLA தலைவர்கள் மற்றும் முன்னோடித் தோழர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். உண்ணாவிரதம் இருக்கும் தோழர்களைச் சந்தித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், பல்வேறு தொழிற்சங்க அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏனிந்த போராட்டம்?

வரலாறு காணாத வறட்சியால் கருகிய பயிர்களால், கடன் நெருக்கடிகளால், தஞ்சை டெல்டா மாவட்டங்கள் , பல்வேறு கிராமங்களிலும் செத்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, கடந்த ஏப்ரல் 25ல் தமிழகமே எழுச்சியுடன் அணிதிரண்டு கடை அடைப்பு, வேலை நிறுத்தம் என ஆதரவு வழங்கியது. பாஜக, அ.தி.மு.க தவிர அனைத்து எதிர்கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. அன்றைய வேலநிறுத்தத்தில் கோவை பிரிக்கால் தொழிற்சாலையைச் சார்ந்த 840 தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். அதற்காக தண்டனையாக எட்டு நாள் ஊதியத்தை பிடித்துள்ளது பிரிக்கால் நிர்வாகம்!

பிரிக்கால் நிர்வாகம் பொதுநலனுக்காக செயல்படுவதாக நடிக்கும் நிர்வாகமாகும். கடந்த காலத்தில் தொழிலாளர்களிடம் இருந்து நான்கு நாள் சம்பளம் பிடித்து பெரியநாயக்கன் பாளையம் மின்மயானம் அமைத்தார்கள். பிரிக்கால் காம்பவுண்டு நெடுக குடியிருந்த 120 சலவைத் தொழிலாளர்களிடம் “ஆஸ்பத்திரி அமைக்க இடம் வேண்டும்” எனச் சொல்லி, அவர்களை சாமிசெட்டிப் பாளையத்திற்கு வெளியே அனுப்பிவிட்டு அந்த இடத்தை வளைத்து காம்பவுண்டு அமைத்தார்கள். உடுமலையில் TERA AGRO FARM அமைப்பதாகச் சொல்லி பிரிக்கால் தொழிலாளர்களிடம் Shareகளை வாங்கிக் கொண்டு விவசாயிகள் நிலங்களை குறைந்த விலையில் அபகரித்து, Jain Irrigation நிறுவனத்திற்கு விற்றுவிட்டு Share வாங்கிய தொழிலாளர்கள் வாயில் மண்ணைப் போட்டார்கள்.

பிரிக்கால் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பிரிக்கால் முதலாளிகளில் ஒருவரான திருமதி.வனிதா மோகன் மக்கள் நலனுக்காக, பொது நலனுக்காக செயல்படுவதாக காட்டிக் கொள்பவர் ஆவார். #சிறுதுளி என்ற NGO மூலமாக கோவையின் நீராதாரம் பாதுகாக்க பணியாற்றுபவராக தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்கிறார். (“சிறு துளி” விவசாயிகள் விரோதமாக செயல்படுவதைப் பற்றி பிறகு பார்ப்போம்.)

பிரிக்கால் முதலாளிகளில் ஒருவரான இவரும், இவருடைய குடும்ப உறுப்பினர்களும் தான், தமிழக விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த காரணத்திற்காக, 840 தொழிலாளர்களின் 8 நாள் சம்பளத்தை தண்டனையாக வசூலித்து வயிற்றில் அடித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6000 முதல் ரூ.7000 வரை சம்பளப் பணத்தை பிடித்துக் கொண்டு Sadist போல மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

தமிழகத்தில்  ஈழத் தமிழர் பிரச்சினை முதல் காவிரிப் பிரச்சினை மற்றும் தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகள் வரை மாநில அரசாங்கமே பொது வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளது. பிரிக்கால் நிர்வாகம் எவ்வளவு மோசமான #விவசாயிகள்_விரோத எண்ணம் கொண்டதாக இருந்தால், ஒரு நாள் ஸ்ட்ரைக் செய்த தொழிலாளர்களிடம் எட்டு நாள் சம்பளம் பிடிக்கும்?

முன்கூட்டியே அறிவிப்பு /Notice தராமல் வேலை நிறுத்தம் செய்தால் தான் ID Act படி சட்டவிரோதமாகும். அச் சட்டத்தின் படி சம்பளம் பிடிக்கப்படலாம்!

ஆனால், பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்தியது சட்டப் பூர்வமான ஸ்ட்ரைக் ஆகும்.
தொழிற் தகராறு சட்டத்தின் (ID Act)படி, உரிய காலத்தில் நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்வதற்கும், ஈடு செய்து வேறொரு நாளில் வேலை செய்வதற்கு ஒப்புதல் அளித்தும், முன்கூட்டியே தகவல் அளித்து நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் ஆகும்.

ஆனாலும், 8 நாள் சம்பளத்தை பிரிக்கால் நிர்வாகம் பிடித்தது ஏன்? வேறு எதுவும் நோக்கம் இருக்கிறதா ? ஆம் இருக்கிறது!

தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி, அசுர வளர்ச்சியுடன் எழுந்துள்ள
பிரிக்கால் சாம்ராஜ்யம் !

கோவையில் 18 பேருடன் 1975 ல் கம்பெனி துவக்கி, 1978 ல் பிரிமீயர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் & கண்ட்ரோல் என்ற பெயரில் ஆண்டிற்கு 4 இலட்சம் மீட்டர் டேஷ் போர்டுகள் உற்பத்தியில் துவங்கி, 2016 ல் சுமார் 35 இலட்சம் போர்டுகள் உற்பத்தியை எட்டியுள்ளது பிரிக்கால் நிர்வாகம். இரு சக்கர வாகனங்கள் முதல் கார், பஸ், ட்ரக்குகளுக்குத் தேவையான எலக்ட்ரானிக் மீட்டர்கள், சென்சார்கள், வால்வுகள் என ஆட்டோ இண்ஸ்ட்ரூமென்ட்ஸ் உற்பத்தியில் 53% கட்டுப்படுத்துகிறது. PRICOL கம்பெனியானது டாடா,  மாருதி, ஹோண்டா, டொயாட்டா கிர்லாஸ்கர், டாஃபே என பல்வேறு ஆட்டோ மேஜர்களுக்கு கண்ட்ரோல் மீட்டர்கள் வழங்கும் முக்கியமான ஆட்டோ ஆன்சிலரியாகும்.

கோவை பிரிக்கால் கம்பெனி தொழிலாளர்கள் சம்பாதித்துக் கொடுத்த கொழுத்த பணம் /இலாபம் மூலமாகத்தான், பல மாநிலங்களில், வெளிநாடுகளில் பிரிக்கால் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிரிக்கால் முதலாளிகள் Pricol Technologies, Pricol Software, Pricol Travels, Pricol Cargo, Pricol Properties, Pricol Academy, English Tools எனப் பல்வேறு துணை நிறுவனங்களையும் உருவாக்கி மாபெரும் பிரிக்கால் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துள்ளதுள்ளனர்.

சுமார் 1350 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 500 Staff எனப்படுகிற நிர்வாக ஊழியர்கள், 800 Apprentice எனப்படுகிற இரண்டாண்டு பயிற்சியாளர்கள் ஆகியோர் கோவை பிரிக்கால் கம்பெனிக்கு உழைத்துக் கொடுக்கும் பட்டாளம் ஆகும். தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் இரத்தம், வியர்வையை உறிஞ்சி தனது சாம்ராஜ்யத்தை இன்னமும் பெரிதாகக் கட்டமைக்க பேராசை கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தனது விருப்பப்படி ஏராளமான உற்பத்தியை Production கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறது. தொழிலாளர்களை தனது விரல் அசைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறது.

பிரிக்கால் நிதிநிலை அறிக்கை பல்வேறு தகவல்களை சொல்கிறது :-

2015-2016 ல் விற்பனை 20% உயர்ந்துள்ளது.

2016 ல் மொத்த விற்பனை ரூ.1237.66 கோடியாகும். அதை ரூ.3000 கோடியாக உயர்த்த இலக்கு தீர்மானித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு சம்பளமாக ரூ.158.50 கோடி செலவிடப்பட்டது. இது 2015 யைக் காட்டிலும் 2.10 % குறைந்துள்ளது. (இதிலும் தொழிலாளர்களுக்கு என்று செலவு செய்த சம்பளம் எவ்வளவு என பகுத்துப் பார்க்க வேண்டும்.)Admin நிர்வாக செலவோ 31 % கூடியுள்ளது; ரூ.46.29 கோடி செலவிடப்பட்டது. இதுவும் என்னவகையான செலவுகள் எனப் பகுத்துப் பார்க்க வேண்டும்.

மொத்த செலவு ரூ.1019.26 கோடியாகும். (இதில் பிரிக்கால் துணை நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளுக்காகக் கொடுக்கப்படும் Payments யை சரிபார்க்க வேண்டும்.) எனினும், இலாபம் Operating Profit ரூ.114.47 கோடியாகும். இது 2015 யை ஒப்பிடும்போது 337 % உயர்ந்துள்ளது.

2016 நிதிநிலை அறிக்கை ஒரு உண்மையை சுட்டிக் காட்டுகிறது. Employee costயை / தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பது நோக்கமாகும். பத்தாண்டு கால AICCTU சங்கத்தின் காரணமாக ஏற்கெனவே தொழிலாளர்களின் சம்பளம் 300 % வரையில் உயர்ந்துள்ளது.

இதற்காக தொழிலாளர்கள் கொடுத்த விலை என்னவென்றால்…
பொய் வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை, 6 பேருக்கு பலமாத சிறைவாசம்,
83 சங்க முன்னணித் தொழிலாளர்கள் வேலை நீக்கம், தொழிலாளர்கள் வீடுகளில் துயர மரணங்கள்,வேலை இழப்பால் கடன் தொல்லைகள், வாழ்க்கை தரம் சரிதல்…
இன்னும் பல.

உழைப்புச் சுரண்டல் போரை நடத்தும் பிரிக்கால் முதலாளிகள்!

“கூலி குறைய இலாபம் உயரும் ” என்கிறது மார்க்சீயம்.

@ கட்டற்ற உற்பத்தி!
@ உற்பத்தியில் ஏகபோகம்!
@ உற்பத்தி திறனை பெரிதும் உயர்த்துவது!

இதுவே நிர்வாகத்தின் தாரக மந்திரம்!

தற்போதுள்ள உழைப்புச் சக்தி மூலமாகவே உற்பத்தி திறனைக் கூட்டுவது(அதிகமான Production எடுப்பது) வேண்டும்.

அதற்காக, 1)நிர்வாகத்திற்கு விசுவாசமான தொழிலாளர்களிடம் சக்கையாகப் பிழிந்து Production யை அதிகப்படுத்துவது வேண்டும்.

2)புதிது புதிதாக பயிற்சியாளர்களாக எடுக்கப்படும் Apprentice களை இரண்டாண்டு காலம் பிழிந்தெடுத்து வெளியேத் தள்ளிவிடுவது வேண்டும்.

3)பிரிக்கால் உற்பத்தியின் முதுகெலும்பான KMPTOS சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள சுமார் 1000 தொழிலாளர்களை மிரட்டி வைப்பது, வயிற்றில் அடிப்பது ஆகும்.

இதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழக அரசே தலையிடுக!

தொழிற் தகராறு சட்டம் ID Act 1947 ஆனது, சட்ட விரோத வேலை நிறுத்தத்தின் போது, அதாவது முன்கூட்டியே நோட்டீஸ் தரப்படாத ஸ்ட்ரைக்கிற்கு #எட்டு நாள் வரை தண்டனையாக சம்பளம் பிடிக்கலாம் என்கிறது. பிடித்துதான் ஆக வேண்டும் என்றும் சொல்லவில்லை.

ஏப்ரல் 25 ல் நடைபெற்றது, சட்டபூர்வமான வேலைநிறுத்தம் ஆகும்.முன்கூட்டியே நோட்டீஸ் தரப்பட்டு விட்டது.

எனவே தான் சொல்கிறோம்.

தமிழக அரசாங்கம் உடனே தலையிட வேண்டும்.

1)தொ.த.சட்டம் 1947 பிரிவு 10(1)ன் கீழ் சம்பளம் பிடித்த விவகாரத்தை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.

2)தொ.த.சட்டம் பிரிவு 10 B யின் படி, தொழில் அமைதி கருதி, தமிழக அரசாங்கம் பிரிக்கால் நிர்வாகம் பிடித்தம் செய்த தொகையை முன்பணமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

பிரிக்கால் உட்பட, பல வழக்குகளில் இந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வர்க்கப் போராட்டத்தின் கதாநாயகர்கள் பாட்டாளி வர்க்கம்!

கோவை பிரிக்கால் துவங்கி ஹரியானா மாருதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போர்–

கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்குமான போர்!

தொழிலாளி வர்கத்துக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான போர்!

இந்தப் போர் பிரிக்கால் தொழிலாளர்களிடமிருந்து தொடங்கப்படவும் இல்லை; (அவர்களுக்கு முன்பேத் துவங்கிவிட்டது.)அவர்களோடு முடிந்துப் போவதும் இல்லை.

அவர்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மூலதனத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை இந்தப் போர் தொடரும். அதில் பிரிக்கால் தொழிலாளர்களோடு பல்வேறு ஆலைத் தொழிலாளர்களும் அணிவகுப்பார்கள்.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.