உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க போலீஸாரால் கோவையில் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யும்படி மூன்று முறை மனு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவருடைய கைது சம்பவம் நடந்திருக்கிறது. நீதிபதி கர்ணனின் கைதை கண்டித்து, சமூக ஊடகங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
எழுத்தாளர் மாலதி மைத்ரி, “தலித்துகளைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்வதும் ஊழல் மலிந்தது நீதித்துறை என்ற தலித் நீதிபதியைக் கைது செய்வதும்தான் உச்ச நீதி இந்நாட்டில். #StandForJusticeKarnan” என்கிறார்.
பதிப்பாளர் கருப்பு நீலகண்டன், அரசியலமைப்பு படி பாரளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் மட்டுமே செய்து நீக்க முடியும் என்கிற நீதிபதி கர்ணனின் பதவியின் கண்ணியத்துக்கு ஒரு சிறிய அளவு மரியாதையும் தராமல் விரட்டி விரட்டி கைதுசெய்கிறது பார்ப்பன பண்ணையார்களால் ததும்பி வழியும் உச்சநீதிமன்றம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
தலித் அரசியல் செயல்பாட்டாளர் தி. ஸ்டாலின், “கழுத்தறுத்த யுவராஜன்கள் கூட அவனுங்களா கிடைச்சாதான் கைது. ஆனால் நீதிபதி கர்ணனோ விரட்டி விரட்டி கைது! #சட்டம் சாதியின் கரங்களில்!” என்கிறார்.
செயல்பாட்டாளர் ரமேஷ் பெரியார், “IPC 1986 section 84 (இந்திய தண்டனைச்சட்டம் 1986, செக்சன் 84) படி மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தண்டிக்கவோ,கைது செய்யவோ கூடாதென்கிறது..
உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணன் அவர்களை மனநல பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது..அந்த உத்தரவு நிலுவையிலிருக்கும் போதே…நீதிபதி கர்ணன் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றத்திற்கு 6மாத சிறை தண்டனை மற்றும் கைது செய்வதென்பதெல்லாம் இந்திய தண்டனைச்சட்டம் 1986, செக்சன் 84ன்படி சட்ட விரோதமில்லையா…? உச்சநீதிமன்றமே சட்டத்திற்கு புறம்பாக நடக்கலாமா…?” என கேட்கிறார்.
எழுத்தாளரும், அரசியல் செயல்பாட்டாளருமான கௌதம சன்னா,
“நீதித் துறையின் வீழ்ச்சி.. கர்ணன் கைது.
முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல்களை அப்பட்டமாக குழி தோண்டி புதைத்துவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு எனும் ஆயுதத்தால் கர்ணன் தண்டிக்கப்பட்டுள்ளார். மேல்முறையீட்டு மன்றமே இதை செய்துள்ளதின் மூலம் தனி நபருக்கு கிடைக்க வேண்டிய சட்ட நிவாரணங்களையும் சவக்குழிக்கு அனுப்பியுள்ளது உச்ச நீதி மன்றம். இது ஐநா வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்பது கூடுதல் அம்சம்.
நாடாளுமன்றம் தீர்க்க வேண்டிய பிரச்சனையை நீதிமன்ற அவைக்குள் தீர்க்கும் புது நடைமுறையை உருவாக்கி அரசமைப்பு சட்டத்தை கேலிக்குரியதாக்கியுள்ளனர் உச்ச நீதி மன்ற நீதிபதிகள். ஜனநாயகத்தின் ஒரு தூண் சரிந்துள்ளது. காப்பாற்ற வேண்டிய மற்ற தூண்களும் தூங்கிக் கொண்டுள்ளன. நான்காவது தூணான ஊடகம் ஜால்றா அடித்துக் கொண்டிருக்கிறது.
எனினும் கீழமை நீதிமன்றங்களானாலும், உயர்நீதிமன்றங்களானாலும் இதுவரை பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் தலித்துகளே. சாதி வெறி தலைவிரித்தாடும் நாட்டில், நீதித்துறையானது ஊழலும், சாதி வெறியும் மலிந்த துறை என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
தமிழர்களும், சமூக நீதிக் காவலர்களும் வாய் முடி பேசா மடந்தைகளாக இருங்கள். அதுதானே நீங்கள் எப்போதும் செய்வது.
சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டது” என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
வரதராஜ் கிருஷ்ணசாமி, “நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாள் தான் விஜய் மல்லையா வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
மல்லையா மீதும்அதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் ஒன்றில் தான் அந்த தீர்ப்பு. மல்லையா ஒரு மூறை கூட ஆஜராக வில்லை. கர்ணன் ஒரு முறை ஆஜரானார்.
இன்னொன்றும் இருக்கிறது.
ஆந்திர/ தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி நாகர்ஜூனா ரெட்டி மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. (உதவியாளர் ஒருவரை உயிரோடு கொளுத்திய வழக்கு உட்பட) சமீபத்தில் அவர் மீது impeachment தீர்மானம் ( impeachment – procedure to remove judge by passing the impeachment motion in the parliament) கொண்டு வர எம்.பிக்கள் முடிவு செய்தனர். ஆனால் முடியவில்லை. அந்த நாகர்ஜூனா ரெட்டி மீது ஒரு நடவடிக்கை கூட இந்த உச்ச நீதிமன்றம் எடுக்க வில்லை.
கர்ணன் என்னை impeach செய்யுங்கள் நான் பாராளுமன்றத்தை சந்திக்க தயராக இருக்கிறேன்என்றார். ஆனால் அது நடக்க வில்லை மாறாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தான் இந்திய நீதித்துறை.
இங்கு பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி, பஞ்சமர்களுக்கு ஒரு நீதி..
இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கர் இன்று இருந்திருப்பாரே ஆனால் இந்திய நீதித்துறையை பார்த்து காரி துப்புவார்” என்கிறார்.
எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா. முருகவேள், “அதுசரி. உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு கர்ணன் பிறப்பித்த வாரண்ட் என்ன ஆனது? என்ன பிரச்சினை இருந்தாலும் அது கல்கத்தா உயர்நீதி மன்றம் பிறப்பித்த பிடியாணைதானே? ஒருவேளை அதை உச்சநீதி மன்றம் தடை கிடை செய்து விட்டதா?
அப்புறம் மனநலம் சரியில்லை என்று பரிசோதனைக்குப் போகும் படி உத்திரவிடப்பட்ட ஒருவரை எப்படி கைது செய்து . . . ஒரே குழப்பம்.
இந்தியன் லூனசி சட்டம் . . . நீதிமன்ற அவமதிப்பு ” என்கிறார்.