“மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும்” – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர்.
மநுஸ்மிருதியில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத்தான் பாரதீய ஜனதா கட்சி பின்பற்றி வருகிறது. சில இடங்களில் தீவிரமாகவும்; சில நேரங்களில் யார் அறியாமலும். ஜனாதிபதி வேட்பாளார் தேர்விலும் மநுவின் கொள்கைகளின்படியே தொண்டூழியம் செய்வதற்கு ஒரு தலித்தை முன்னிறுத்தி இருக்கிறது என்பதைத்தவிர இதில் ஆச்சர்யப்படவோ சிலாகிக்கவோ எதுவுமில்லை. குஜராத் கலவரத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக தலித்துகளையும், ஆதிவாசிகளையுமே கலவரத்தில் ஈடுபடுத்திய வரலாறு அவர்களுக்குண்டு என்பது நாடறிந்த ஒன்று.
தமிழ்நாட்டை தொடர்புபடுத்திக்கூற வேண்டுமென்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
கிராமப்புற கோயில்களுக்குள் நுழைய தலித்துகள் அடியும் மிதியும் வாங்கிக்கொண்டிருக்கையில், அதுபற்றி வாயே திறக்காத சங்ப்பரிவாரங்கள், நகர்ப்புறங்களில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விநாயகர் சிலைகளை “காவிக் கொடிகள்” சூழ நிறுவுகிறார்கள். சிவனோ, அம்பாளோ சேரிகளின் வழியாக செல்வதற்கு இன்றைக்கும் தடை இருக்கும் நிலையில், நகர்ப்புற சேரிகளில் விநாயகரை திணித்து உட்கார வைக்கிறார்கள்.
சதுர்த்தியை உருவாக்கிய பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு புழக்கடையிலோ அல்லது கிணற்றிலோ மஞ்சளில் புள்ளையார் பிடித்து கரைத்து கொண்டிருக்கையில், பத்தடி, இருபதடி, முப்பதடி உயர விநாயகர் சிலைகளை வேனில் ஏற்றிக்கொண்டு இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழியாக ஆக்ரோஷத்துடன் போய்க்கொண்டிருக்கிறார்கள் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள்.
தலித்துகளும் சிறுபான்மையினமும் இந்து மதத்தினால் ஒடுக்கப்படும் சூழலில், அவர்கள் இருவரையும் எதிர் எதிராக நிற்க வைப்பதில் பாரதீய ஜனதாவும், அதைப் பின்னணியில் இருந்து இயக்கும் சங்ப்பரிவாரங்களும் வெற்றி பெறுகின்றன என்பதே இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது.
மட்டுமல்லாமல், தலித்துகளையே இரு பிரிவுகளாக பிரித்து எதிரெதிராக நிற்க வைக்கும் வேலையையும் காவிக்கூடாரங்கள் செவ்வனே செய்துவருகின்றன. எடுத்துக்காட்டாக முகநூலில் புழங்கும், “ஆண்டசாதி” தலித்துகள் சிலரின் பக்கங்களுக்கு சென்றால் அங்கு அம்பேத்கரை இழிவுபடுத்தியும், அவருக்கு நிகராக அல்லது உயர்வாக அயோத்திதாசரை வழிபட்டும் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கலாம். அயோத்திதாசர் மூலமாக அம்பேத்கரை இழிவுபடுத்த சங்கப்பரிவாரங்கள் செய்யும் முயற்சிகளின் நீட்சியே இவையெல்லாம்.
ஏன் அயோத்திதாசர் என்றால், “தலித்துகளின் அடையாளங்களை இந்து மதம் திருடிக்கொண்டது” என்று குற்றம்சாட்டினாலும் இந்து மதத்தின் கூறுகளை தொடர்ந்து ஆதரிக்கும் ஒருவராகவே அயோத்திதாசர் இருந்திருக்கிறார். ஆனால் அம்பேத்கரோ தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தை கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார். அதனால்தான் “இந்துவாக சாகமாட்டேன்” என்று பவுத்ததிற்கு மாறினார் அவர். அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு கொள்கைகளைப் பற்றிய எந்தவொரு கேள்விக்கும் இதுவரை “இந்துத்துவ அம்பேத்கர்” எழுதிய காவி தலித்துகளாலும் பதில் சொல்ல இயலவில்லை. அதனால்தான் அம்பேத்கரின் கருத்துக்கள் ஆழமாக வேரூன்றி நிற்கும் தமிழகத்தில் அவரை இழிவுபடுத்த அயோத்திதாசரை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் காவிகள். இதற்கு சில தலித்துகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
“வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்… இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்…சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க வேண்டும்… பெண்களுக்கு உரிமைகள் எதற்கு…” என்றெல்லாம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வளையை நெரிக்கும் பாரதீய ஜனதா சார்பில் ஒரு தலித், இந்திய நாட்டின் ஜனாதிபதியாக பரிந்துரைக்கப்படுகிறார் என்றால் அதில் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. மாறாக ஒடுக்கப்படும் சமூகம் தாம் மேலும் அவமதிப்பதற்காக உணர்வதற்கே காரணங்கள் நிறைய உண்டு. மாட்டுக்கறி உண்டார்கள் என்பதற்காக, செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக, எந்த மத அடிப்படைவாதத்தின் மூர்க்கத்தால் தலித்துகள் அடித்தே கொல்லப்படுகிறார்களோ அந்த வன்முறையை புனிதப்படுத்தும் ஒரு அமைப்பின் மூலம் அலங்காரப் பதவி ஒன்றுக்கு ஒரு தலித் அறிவிக்கப்படுவதாலாயே அதற்கு நியாயம் வந்துவிடாது.
தற்போது பாஜகவால் அறிவிக்கப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த்தும் அப்படிப்பட்ட அடிப்படைவாதத்தை தூக்கிப்பிடிக்கும் ஒருவர்தான் என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவரைப்பற்றிய செய்திகள் அதைத்தான் சொல்கின்றன.
“சிறுபான்மை மதங்களில் உள்ள பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 15 % இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை கிழித்துப்போட்ட பெருமை, இந்திய மக்களுக்கு ஜனாதிபதியாக வரவிருக்கும் ராம்நாத் கோவிந்த்துக்கு உண்டு”.
மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்டு இந்திய ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த கேஆர்.நாராயணனையும், ராம்நாத் கோவிந்த்தையும் சரிசமமாகப் பார்ப்பது முட்டாள்தனமானது. அம்பேத்கரின் கொள்கைகளை வரித்துக்கொண்டவர் நாராயணன். சாவர்கரின் படத்தைப் பாராளுமன்ற வளாகத்தில் திறந்துவைக்க முடியாது என்று மறுத்தவர் அவர். பின்னாட்களில் அது அப்துல் கலாமால் விமரிசையாகத் திறந்துவைக்கப்பட்டது. நாராயணனால் எப்போதும் பெரியாவாக்கள் முன்னால் மண்டியிட முடியாது. ஆனால் ராம்நாத் கோவிந்த் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை வரித்துக்கொண்டவர். அவர் பெரியாவாக்கள் முன் மண்டியிட்டு அமர்வது மட்டுமல்லாமல், அந்த இடத்தை தண்ணீர் விட்டும் தீட்டு கழித்துவிட்டுப் போக கூடும். ஏனென்றால் ராம்நாத் நம்பும் மநுஸ்மிருதி அவருக்கு அதைத்தான் கடமையாக வலியுறுத்துகிறது.
நீட் தேர்வு, மருத்துவ உயர்கல்வியில் இடஒதுக்கீடு ரத்து, என்று தொடர்ந்து சமூக நீதியின் தலையில் குண்டாந்தடியால் அடித்துக்கொண்டிருக்கும் பாஜகவால், இடஒதுக்கீடை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்யும் சட்டத்தை ஒரு தலித் ஜனாதிபதி மூலமாகவே அமல்படுத்தவும் இயலும். அதற்கான தொண்டூழியராக பணியாற்றத்தான் ராம்நாத் கோவிந்த் தேர்வுசெய்யப்பட்டிருப்பார் என்றே நான் தனிப்பட்டமுறையில் நம்புகிறேன்.
மாட்டுக்கறிக்காக நாடு முழுவதும் தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஹமதாபாதில் இருந்து யூனா வரை மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்றை தலித்துகள் நடத்திக்காட்டினார்கள். அதில் கலந்துகொண்டதற்காக, தலித்துகளின் பிரச்சனைகளை ஓங்கி உரத்த குரலில் சொல்லியதற்காக “ஜிக்னேஷ் மோத்வானி” என்கிற தலித் இளைஞனை தொடர்ந்து கடும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கி கொண்டிருக்கும் பாஜகதான், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டூழிய தலித்தை ஜனாதிபதி ஆக்குகிறது என்பது எத்தனை முரண்பாடாக இருக்கிறது அல்லவா ?
கட்டுரையாளர்; தலித் செயற்பாட்டாளர்.
தலித்தாக இருந்தாலும் ஏற்பதற்கில்லை என தலித் செயற்பாட்டாளர் ஒருவர் சொல்வது மிக முக்கியமான நடவடிக்கையாகும்….சாதி மதத்தை விட கொள்கையே முக்கியம் என்ற பார்வை சாதி அடிப்படையில் ஓட்டுப்போடும் நம் சூழலுக்கு மிக அவசியம்…. அவரை ஏன் ஏற்க முடியாது என்ற விளக்கம் பொருத்தமாக இருக்கிறது.. தலித்துகளின் பிரதிநிதி என்பவர்தலித்துகளால் ஏற்கப்பட்டவராக மட்டுமே இருக்க முடியும்
LikeLike