ஆயுத எழுத்து: புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ‘அவன்’களின் கதை!

சம்சுதீன் ஹீரா

சம்சுதீன் ஹீரா

எல்லாச் சிறுவர்களைப்போலவே ‘அவனும்’ சிங்கள இராணுவத்திற்கெதிரான இயக்கங்களின் சாகசங்களை பிரமிப்போடு கேட்டு வளர்கிறான். முந்தைய நாளில் ஏதோ ஒரு இயக்கத்தின் கண்ணிவெடித் தாக்குதலில் தகர்க்கப்பட்ட சிங்கள இராணுவ வாகனம் குறித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தன. இதுபோன்ற செய்திகளை உண்மையும் கற்பனையும் கலந்து விவரிக்கும் சிறந்த கதை சொல்லியான தனது நண்பனுக்காக காத்திருக்கிறான். பள்ளிச் சீருடையோடு எதிரே நண்பன் வருவதைப் பார்க்கிறான். திடீரென்று அந்தப்பகுதிக்குள் நுழைந்த இராணுவம் கண்மன் தெரியாமல் அனைவரையும் சுட்டுத் தள்ளிவிட்டு சென்று மறைகிறது.. உயிர் பிழைத்த சிலர் காயம் பட்டவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அப்பகுதியெங்கும் நிலவும் மரண ஓலத்தின் நடுவே அவனது நண்பனின் பிணமும் அமைதியாகக் கிடக்கிறது.. இப்படியாக இயக்கத்துக்குச் செல்லும் முடிவை எடுக்கிறான் ‘அவன்’..

‘அவன்’ என்பவன் ஒற்றை மனிதனல்ல. இது ஒற்றை நபரின் கதையுமல்ல. புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் ஒரு கன்னியாக பணியாற்றிய பலரின் அனுபவங்களை ‘அவன்’ மூலமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.

‘அரசியலாக’ இதில் எதுவும் பேசப்படவில்லை என்றாலும் புலிகளின் வெளித்தொடர்புகள், அதன் பணிகள் குறித்த ஒரு பரந்துபட்ட அவசரப் பார்வையை இந்த நூல் கொடுத்திருக்கிறது.. இந்திய இராணுவம் நிகழ்த்திய கொடுமைகளை நேரடி சாட்சியங்களாய் விவரிக்கிறது இந்நூல்.

இயக்க ஆதரவாளரின் (நிதி ஆதரவாளர்கள்) சொந்தப் பிரச்சனைக்காக கொலைகள் செய்வது, உப்புசப்பில்லாத காரணங்களுக்காக பிற இயக்க நபர்களைக் கொன்றது, மற்ற இயக்கங்களை அழித்தொழித்தது, இஸ்லாமியர்களைக் கூண்டோடு வெளியேற்றியது போன்ற புலிகளின் பாசிச நடவடிக்கைகளை மேலோட்டமாகச் தொட்டுச்சென்றாலும் வாசகர்களுக்கு சரியான கண்ணோட்டத்தை வழங்கியிருக்கிறது.

புதிதாகத் திருமணமான ஒரு தளபதியின் காவலுக்கு அழைக்கப்படுகிறான் அவன். ‘அந்த தளபதிக்கு விளக்குப் பிடிக்க நான் இயக்கத்துக்கு வரவில்லை’ என்று மறுக்கிறான். இப்படி அவன் பேசியதை தளபதியின் புது மனைவி கேட்டு விடுகிறாள். அடுத்தநாளே அவனைக் கொலை செய்ய தளபதியிடமிருந்து கட்டளை வருகிறது. இதுபோன்ற தனிநபர் விரோதங்களுக்கும் கோபங்களுக்கும் கொலைகள் விழுந்துகொண்டே இருக்கின்றன.

5 வயதில் புலிகள் அமைப்புக்கு வருகிற இஸ்லாமிய சிறுவனை இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் வளர்த்தெடுக்கிறார். படிக்க வைக்கிறார். சில ஆண்டுகளில் புலிகள் இஸ்லாமிய வெறுப்பு நிலைப்பாடு எடுக்கின்றனர். இன்னொரு நிர்வாகி அந்த இஸ்லாமிய சிறுவனின் கையாலேயே குழியைத் தோண்டச்செய்து, அவனைச் சுட்டுக்கொன்று அதே குழிக்குள் தள்ளி மூடிவிடுகிறார். 11 வயதில் அவன் கொல்லப்பட அவன் இஸ்லாமியன் என்ற ஒரு காரணமே போதுமானதாக இருக்கிறது.

இயக்கத்துக்கான ஆயுதங்கள் மருந்துகள் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து கடத்திவரும் பணி ‘அவனுக்கு’. அவனது பல சாகசங்களை கதையின் போக்கில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஆசிரியர். அந்தப் பணியைச் செய்கிற அவனுக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது. நட்சத்திர விடுதிகளில் தங்குகிறான். எப்போதும் குடிப்பது, விபச்சார அழகிகளுடன் சல்லாபிப்பது என ‘ராஜவாழ்க்கை’ வாழ்ந்துவரும் ‘அவன்’, புலிகளின் தோல்விக்குப் பிறகு எச்சில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது..

இன்னும் சொல்லப்பட ஏராளம் இருக்கிறது. அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய முக்கியமான படைப்பு இது…

ஒரு ஹாலிவுட் திரைப்படத்தைப் போல, கதைக்களத்தினுள் நம்மை விறுவிறுவென்று இழுத்துச்செல்லும் இந்நூலை வாசிக்கும் வாய்ப்பைக் கொடுத்த தோழர் Mohammed Sirajudeen அவர்களுக்கு நன்றிகளும் அன்பும்…

#ஆயுத_எழுத்து..
திலீபன் பதிப்பகம்,
#சாத்திரி..

சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர். கோவை கலவரத்தை பின்னணியாகக் கொண்ட ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவலின் ஆசிரியர்.

2 thoughts on “ஆயுத எழுத்து: புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ‘அவன்’களின் கதை!

 1. இந்நூலைப் படிப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே நூல் பற்றி எந்த விமரசனமும் என்னால் செய்யமுடியாது. ஆதனால், நூலைப்பற்றிய இவ் விமர்சனத்தை மட்டும் கணக்கில் கொண்டு எனது கருத்தை முன்வைக்கின்றேன். நூலில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சில சம்பவங்களின் உண்மைத்தன்மை பற்றி நானும் அறிவேன். ஆனால், அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மையானவையா என்பது பற்றி எனக்குத் தெரியாது.
  அன்றில் இருந்து இன்றுவரை தன்னை சுய விமர்சனம் செய்துகொள்ளாத ஒரு நிரந்தர தலைமறைவு இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இயக்கத்தின் தலைவர்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. நிரந்தர தலைமறைவு இயக்கம் என்று சொல்வது, தமிழீழ அரசு செயற்பட்ட காலத்தையும் உள்ளடக்கியதாகும். அக் காலத்தில் தனது ஆட்சிக்குட்பட்ட பூகோளப்பரப்பில் முழுமையான தலைமறைவுத் தன்மை அவசியமில்லை. ஒரு தனிநபர் இராணுவ எதேச்சதிகார அரசுக்குமாத்திரமே இது அவசியப்படும். எமது பிராந்தியத்தில்(தெற்காசியா) தனிநபர் இராணுவ எதேச்சதிகார அரசுக்கு பெயர்போன பாக்கிஸ்தானில் கூட இவ்விதமான ஒரு தலைமறைவுச் செயற்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
  அகவே சம்பவங்களைப்பற்றிய விலாவாரியான விளக்கம் தேவைப்படாது.

  இவ் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ள இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை தனிநபர் எதேச்சாதிகாரம் தொடர்பான ஒரு பிரச்சனையல்ல. அது இவ் இயக்கத்தின் தேசிய ஜனநாயக் கொட்பாடு தொடர்பான பிரச்சனையாகும். இந்திய இராணுவ உதவியுடன் அமைக்கப்பட்ட அனைத்து இயக்கங்களும் இஸ்லாமியர் எதிர்ப்பு இயக்கங்களே. இந்திய மத்தியரசின் கோட்பாட்டை இவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இவ்வியக்கங்கள் முரணற்ற தேசிய ஜனநாயக இயக்கங்களல்ல. ஒரு புறத்தில் சிங்கள-பௌத்த பேரகங்கார வாதிகளின் தேசிய இன அடக்குமுறைக்கெதிராகப் போராடினார்கள் இன்னொருபுறத்தில் தமிழீழத்தில் உள்ள சிற்பான்மைஇனங்களை அடக்குபவர்களாகவோ அல்லது அவர்களின் தேசிய ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.

  இவர்கள் ( நேரடியாகவோ மறைமுகமாகவொ இந்தியாவால் வளர்க்கப்பட்டவர்கள் ) அனைவரும் சிங்கள-பௌத்த பேரகங்காரவாதத்திற்கு எதிரான உறுதிமிக்க போராளிகளாக இருந்தார்கள். இதுதான் இவர்களிடம் காணப்பட்ட முற்போக்கு அம்சமாகும். அந்த முற்போக்கு அம்சத்தில் ஆதிக ஆளுமைத் திறன் மிக்கதாக இருந்தது விடுதலைப் புகிகள் இயக்கமேயாகும்.

  அடுத்தபக்கத்தில் இவ் இயக்கங்கள் அனைத்துமே தம்மால் நிறுவப்படும் தேசம் பற்றிய வளர்தடைத் தன்மைமிக்க கொள்கையைக் கொண்டவர்களாகவே இருந்தனர். அதிலும் விடுதலை புலிகளின் வளர்தடைத்தன்மை முற்றிலும் பிற்போக்கானதாகவும் அதிக வீச்சுக் கொண்டதாகவும் இருந்தது.

  இதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்பின் முரணான போக்காகும். எதிரியை அழிப்பதிலும் ஆளுமைத் திறன் மிக்கவர்களாகவும், அவ் அழிவின் ஊடாகத் தோன்றப்போகும் ஆக்கத்தின் முற்போக்குத் தன்மையைச் சிதைப்பதிலும் ஆளுமைத்திறன் மிக்கவர்களாக இருந்தனர். ஆகவே விடுதலைப் புலிகளின் வரலாற்று வகிபாகத்தை மதிப்பீடு செய்யும்போது இவ் இரு எதிர் எதிர் குணாம்சத்தையும் , இவ் இரட்டைத்தன்மையையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஆயுத எழுத்து எனும் நூலில் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இவ்விமர்சனம் விடுதலைப் புலி இயக்கத்துக்கு கருஞ்சாயம் பூச முற்படுவதாகவே தெரிகிறது. அது சரியல்ல.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.