ஸ்டாலின் ராஜாங்கம்

இன்றைக்கிருந்து 110 ஆண்டுகளுக்கு முன் சரியாக 19.06.1907 ஆம் நாளில் பண்டிதர் அயோத்திதாசரால் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது. இன்றைக்கு போல் கிடையாது. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும் நடத்துவதும் இயக்கம் நடத்துவதற்கு ஒப்பானதாகும். எந்த ஒரு சமூக நடவடிக்கையின் தொடக்கமாகவும் பிரதான பணியாகவும் இதழ் நடத்துவதாகவே இருந்தன. அயோத்திதாசர் தமிழன் ஏடு மூலம் இயக்கமாக செயல்பட்டார். 19-ம் நூற்றாண்டின் இறுதி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று நவீனத்தின் இன்றியமையாத காலக்கட்டத்தில் இவ்விதழ் வெளியானது. பாரம்பரிய மதிப்பீடுகளை கொண்டாழுகிய நம் சமூகத்தில் காலனியத்தின் வழி அறிமுகமான புதிய விசயங்களை ஒட்டி நடந்த விவாதங்கள் புரிதல்கள் நிலை பெறல்கள் இதழ்கள் வழியாகவே நடந்தன. எனவே தான் அக்கால இதழ்கள் சமூக வரலாற்று ஆவணங்களாக இருக்கின்றன. தமிழன் ஏடு அத்தகையவற்றுள் முதன்மையானது.
இன்றைக்கு நமக்கு வாசிக்கக் கிடைத்திருக்கும் அயோத்திதாசரின் எழுத்துகள் யாவும் இந்த இதழிலிருந்தே எடுக்கப்பட்டன. இதழொன்றில் எழுதப்பட்ட எழுத்து வாழும் காலத்திலும் இடையிலும் கவனிக்கப்படாமல் போனாலும் முற்றிலும் வேறொரு காலத்தில் வேறொரு அரசியல் சூழலில் கண்டெடுக்கப்பட்டு தாக்கம் செலுத்த முடியும் என்பதற்கு அயோத்திதாசரின் எழுத்துகளே சான்றுகளாகியுள்ளன. தமிழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அயோத்திதாசரின் சிந்தனைத் தொகுதிகள் அழுத்தமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. தமிழில் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழைய இதழ்கள் தொகுப்புகளுக்கும் சிந்தனைத் தொகுப்புகளுக்கும் அயோத்திதாசர் பற்றிய தொகுப்பு முயற்சியே தூண்டுகோலாய் இருந்தன.
1907 ஜுன் 19ல் ஆரம்பிக்கப்பட்ட இதழ் வாரத்தில் புதன்கிழமை தோறும் தவறாமல் வெளியானது 26.08.1908 ஆம் நாள் இதழிலிருந்து பெயரிலிருந்த ஒரு பைசா நீக்கப்பட்டு தமிழன் என்ற பெயரிலேயே இதழ் வெளியானது. 1914 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் பண்டிதர் பரிநிர்வாணம் / மரணம் அடையும் நாள் வரையிலும் இடைவெளியின்றி வெளியானது. பின்னர் அவர் மகனாலும் அதற்கு பின்னர் ஜி.அப்பாதுரையாலும் இதழ் வெளியிடப்பட்டது.
இதழ் பண்டிதரின் முழுமையான ஆசிரியத்துவத்தில் வெளியானது. சமகால அரசியல் பற்றிய அவரது தலையீட்டு ரீதியான கட்டுரைகள் விளக்கங்கள் பதிவுகள் வெளியாகி வந்ததோடு பெளத்த நோக்கில் மூன்று நெடுந்தொடர்கள் வெளியாயின. புத்தர து ஆதி வேதம் இந்திரர் தேச சரித்திரம் ஆகிய இரண்டும் அவற்றுள் அடங்கும்.அச்சு வரலாற்றின் இன்றியமையாத காலக்கட்டத்தில் ஏட்டுப் பிரதிகளின் அச்சுப் பிரதிகள் இதழில் வெளியிடப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தன. ஒளவை பாடல்கள் திரிக்குறள் ஆகியவற்றிற்கு பண்டிதரால் உறை எழுதப்பட்டன.(குறளுக்கு அவர் எழுதி வந்த உரை அவர் மரணத்தால் தத அதிகாரத்தோடு நின்று போயின ) இதழில் அயோத்திதாசர் மட்டுமல்லாது தேர்ந்த புலமை குழாத்தினர் எழுதி வந்தனர். ம.மாசிலாமணி திசி நாராயணசாமிப் பிள்ளை ஜி.அப்பாதுரை ஏபி பெரியசாமிப் புலவர் இ.ந.அய்யாக்கண்ணு புலவர் ஆகியோர் தனிக் கட்டுரைகளாகவும் தொடர்களாகவும் இந்து மத விமர்சனம் பிராமணர் எதிர்ப்பு தமிழிலக்கியம் பௌத்தம் சார்ந்து எழுதி வந்தனர். அவையெல்லாம் தொகுக்கப்பட்டால் நவீன பெளத்த மறுமலர்ச்சியின் உள்ளூர் அணுகுமுறை மேலும் துலக்கமடையும்.
அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட பௌத்த சங்கக் கிளைகளை ஒருங்கிணைப்பதற்கான ஏடாகவே தமிழன் ஏடு தொடங்கப்பட்டது. அதன்படி பெளத்த சங்கத்தார் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அரசியல் மற்றும் பண்பாடு பற்றி அடைய வேண்டிய விளக்கங்கள் சார்ந்தே அவர் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அதுவே இந்த அளவிற்கு பண்பாடு மற்றும் அரசியல் ஆழம் கொண்டதாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விசயம்.இதழில் பெளத்த சங்கக் கிளைகளின் செயற்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வந்தன. கோவில் பள்ளி நூலகம் ஆகியவற்றிற்கான இடம் கட்டிடம் வெளியீடுகள் சொற்பொழிவுகள் சமய நடைமுறைகள் நிதி வளர்ச்சி என்று அவை அமைந்தன. அயோத்திதாசரின் எழுத்துகளை மட்டும் படிக்கும் போது ஏற்படும் புரிதல் ஒரு பக்கமிருக்க தமிழன் ஏட்டை படிக்கும் போது உருவாகும் புரிதல் இன்னும் விரிவடைகிறது.
ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர்; மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அயோத்திதாசர்- வாழும் பவுத்தம், ஆணவக் கொலைகளின் காலம் ஆகியவை சமீபத்தில் வெளியான இவருடைய நூல்கள்.
தமிழ் தேசியவாதிகளிலும்(பரதேச தமிழியர்கள்), தமிழீழத் தேசியர்களிலும், தமிழ்நாட்டுத் தேசியர்களிலும் ஒருபிரிவினர் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தை வெறுக்கின்றனர். அதை தீண்டத்தகாத ஒரு சமூக நிகழ்வாககக் கருதுகின்றனர். தீண்டாமைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராளிகளை தமிழ்த் தேசியத்தை துண்டாடும் போக்கிலிகள் அல்லது அதிகார ஒத்தோடிகளென திட்டித்தீர்கின்றனர். தலித்தியர்களுடன் ஒரு கருத்துப்போராட்டத்தை நடத்துவதற்க்கும்ப் பதிலாக தமிழினத்தின் துரோகிகளென முத்திரைகுத்திவருகின்றனர்.
தமிழனென்ற மொழிவழிக்குழும அரசியல் உணர்வை உயர்த்திப் பிடிப்பதற்குப் பதிலாக திராவிடரெனும் குருதியின குழும அரசியலை உயர்த்துப் பிடித்துவரும் காலத்தில் தமிழரெனும் உணர்வை முன்னிறுத்தியவர் ஒரு தலித்தியர் என்பதை மூடிமறைத்து வருகினனர்.
இதற்கான காரணம் என்னவாக இருக்கலாமென்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தலித்தியத் தமிழன், தமிழனின் உலகப்பார்வை அல்லது வாழ்க்கைக் கண்ணோட்டம் பௌத்தமாக இருந்தது என நம்பினார். அதை நிரூபிக்கவும், சைவ, வைணவ மதங்களால் தோற்கடிக்கப்பட்ட, பிராமணியத்தால் திரிக்கப்பட்ட பௌத்த நெறியை மீழ நிலைநாட்டவும் முற்பட்டார். இதனால், அயோத்திதாஸரை பௌத்த தமிழ்த் தேசியர் என அடையாளப்படுத்தலாம்.
அவ்விதமானால், தலித்தியத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் தமிழ்த் தேசியர்கள எவ்விதம் அடையாழப்படுத்துவது? அவர்களை சைவ ஆகமத் தமிழ்த் தேசியர்களென அடையாளப்படுத்தலாமா? இதில் எந்தத் தப்புமில்லையென நம்புகிறேன். ஏனெனில், கடைச்சங்க காலத்திலிருந்து சைவ வேளாளர், பௌத்தத்திற்கும், சமணத்திற்கும் எதிரான ஒரு கடுமையான போராட்டத்தைக் கொண்டுநடத்தினார்கள். பிராமணியத்தின் உதவியையும் இதற்காகப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த சைவ ஆகமத் -வேளாளத் தமிழ்த் தேசியர்கள் தமிழரின் பொற்காலம் பற்றிப்பேசுவது பௌத்த சமண நெறிகளின் அழிவுக்குப்பின்பான காலத்தையெயாகும். தமிழ் நாட்டில் இவ்விரு நெறிகளும் மிருந்தன என்பதை இவர்கள் என்றுமே பெருமையுடன் கூறிக்கொள்வதேயில்லை. திருக்குறள் உட்பட கீழக்கணக்கு நூல்களில் பெரும்பான்மையானவை இவ்விரு மதஞானிகளின் நூல்களே என்ற உண்மையை இவ்ர்கள் ஏற்றுக்கொள்வதேயில்லை. அவ் ஞானிகளின் மதவெறித்தன்மையின்மையை தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திவருகிறார்கள்.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்துவரும் இந்த சைவ-வேளாள உணர்வுதான் இவர்களின் உலகக்கண்ணோட்டமாக உள்ளது. இதனால்தான் தலித்தியர்களைக் கண்டு வெறுப்படைகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், தமது மூதாதயர் செய்ததுபோல்(நாயன்மார்கள்) தலித்தியர்களை களுவேற்றவும் தயங்கமாட்டார்கள்.
தலித்தியர்கள், தமிழ் மக்களை பௌத்த தமிழ்த் தேசியர்களாக வளர்த்தெடுக்கவேண்டும். பண்டிதரை அதற்கான முன்னோடியாகக் கொள்ளவேண்டும்.
LikeLike