விஜி பழனிச்சாமி
ஆழ்வார்ப்பேட்டை வட்டார நூலகத்தில் ஞாயிறன்று வாசகர் வட்டம் சார்பில் ‘வாசிப்பும் நானும்’ நிகழ்வு நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் சார்பில் அமுதன் ஒருங்கிணைத்து ஆரம்பித்து வைத்தார். பரிசல் புத்தக நிலையம் செந்தில்நாதன் தலைமை ஏற்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியதோடு, ஒவ்வொருவர் பேசி முடித்ததும் அதையொட்டி தனது கருத்தையும் பகிர்ந்துகொண்டார். பரிசல் செந்தில்நாதன் ஒரு தேர்ந்த பாடகர் என்பதும் அவர் பாடிய ‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்’ பாடல் மூலம் நேற்று தெரிந்தது!
முதலில் பேசிய கிருபா முனுசாமி தனது சமீபத்திய ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் கண்ட காட்சி ஒன்றைச் சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது அந்த சம்பவம். இரண்டரை வயது குழந்தை விளையாடிக்கொண்டிருக்க, அவனது தந்தை ஒரு கதையை வாசித்துக் கொண்டிருக்கிறார். விளையாடியபடியே கதை கேட்கிறது குழந்தை. அவ்வப்போது அக்குழந்தை கவனம் சிதறினாலும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறார் தந்தை.
‘அந்தக் குழந்தை எப்படி ஒரு புத்தக ஆர்வலனாக, வாசிப்பாளனாக வருவான்!’ என்று மகிழ்ந்ததாகக் கூறினார். மேலும் தனக்கு கட்டுரை வாசிப்புதான் ப்ரியம் என்றும், இன்னும் புதினங்கள் பக்கம் போகவில்லை என்றும் பகிர்ந்தார்.
தன் குட்டி மகள் யாழினியுடன் வந்திருந்தார் மேரி மார்ட்டினா. பெரியார், மாக்ஸிம் கார்க்கி என்று பரந்துபட்ட வாசிப்பனுபவம் கொண்டவராக இருந்தார் இவர். சிறு வயது முதலே இவரது எல்லா கேள்விகளுக்கும் புத்தகங்கள் விடைகொடுத்ததாகச் சொல்லி அவற்றை இவர் விளக்கிய விதம் அருமையாக இருந்தது. அதைவிட அழகாக, அவரது குழந்தை கொஞ்சம் அடம்பிடித்தபோது குழந்தையை இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தது கொள்ளை அழகு. அன்பு மேரி!
அதன்பின் பேசிய அதிஷா, புத்தக வாசிப்பை சிகரெட் பழக்கத்தோடு ஒப்பிட்டு பேசினார். ஆரம்பத்தில் பழக்கமாக இருக்கும். பிறகு போதையாகும். ஒருநாள் யாரோ ‘நல்லா உள்ள நுரையீரல் வரை இழு’ என்று சொல்லும்போது வேறு அனுபவம் தரும். விடமுடியாது என்றெல்லாம் சொல்லியவர் ‘ஆனால் சிகரெட் ஒட்டுமொத்த கெடுதலைத் தரும். ஆனால் புத்தகங்கள் ஒருபோதும் அப்படி அல்ல. அவை உங்களை மேம்படுத்தும்’ என்றார்.
அடுத்ததாகப் பேசியவர் செல்வி. தன் பல்லாண்டு வாசிப்பனுபவத்தை மிக அழகாக தன் உரையில் வெளிப்படுத்தினார். சிறுகதை, நாவல், கட்டுரைகள் என்று எல்லா வகையான வாசிப்பும் தனக்கு வந்தது தம் குடும்பச்சூழல்தான் என்றார். தந்தை ஒரு நல்ல வாசிப்பாளராக இருந்தன் காரணமாக, அவர் வழியில் தானும் பல புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து குறித்துப் பகிர்ந்தார்.
அதன் பிறகு, தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டார் பரிசல் கிருஷ்ணா. புத்தகங்கள் மீதான தன் ‘போதை’யைப் பற்றி பேச ஆரம்பித்து தன் வாசிப்புத் தொடங்கியதும் குடும்பத்திலிருந்துதான் என்றார். சிறுவயதில் இருந்தே சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள் என்று பல்வேறுபட்ட வகை எழுத்துகள் தனக்குப் பிடிக்கும் என்றார். சுஜாதாதான் தன் ஆதர்சம் என்றவர் புதிதாகப் படிக்க ஆரம்பிப்பவர்கள் எஸ். ராமகிருஷ்ணனின் ‘கதாவிலாசம்’ நூலைப் படித்தால் 50 எழுத்தாளர்களை அந்த நூல் அறிமுகப்படுத்தும் என்று பரிந்துரைத்தார்.
இறுதியாகப் பேசிய தீனதயாளன் புத்தக வாசிப்பு Addiction அல்ல Passion என்றார்.
அதன்பின் அமர்ந்திருந்த வாசகர்களும் அவர்களின் வாசிப்பு குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
சரி, உங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது? புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன?
விஜி பழனிச்சாமி, ஊடகவியலாளர்.