அன்புசெல்வம்
என்னுடைய பாலி மொழி பேராசிரியர் மதுரையில் இன்று பரிநிப்பாணம் எய்தினார் என்கிற செய்தி மனவருத்தத்தை தருகிறது. மரணத்தை தழுவும் வயதும், உடல்வாகும் கொண்டவர் அல்லர். எனினும் தன்னுடைய பணியைத் தொடர ஒவ்வொருவராக அழைத்து, கைவிடப்பட்ட நிலையில் இறுதிக்காலத்தை முழுமையாக ஆழ்தியானத்தில் நிறுத்திக் கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். பிறப்பால் யாதவராக இருந்தாலும் சாதியைத்துறந்து, இறையியல் கற்று, அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கி,. முதுகலையில் பௌத்தத்தையும், பாலி மொழியையும் நிறைவு செய்து அவுரங்காபாத்தில் விரிவுரையாளராக சில காலம் பணியாற்றினார். வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் விஹார் ஒன்றை நிறுவி தியானப்பயிற்சிகளை நடத்தி வந்தார். பிறகு தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பாலி – பௌத்தம் பாடங்களை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாக நடத்தி வந்தார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணையோடு தமிழில் பாலியை போதித்த முதல் பேராசிரியர் இவர்.
பேராசிரியர் வி. ஃபுஸ்போல், எச். ஓல்டன்பெர்க், டி, டபிள்யூ. ரைஸ்டேவிட் போன்றோர் மேற்கு அய்ரோப்பிய, ஸ்காண்டிநேவிய நாடுகளில் இருந்து பாலி ஆய்வுகள் பலவற்றை இறக்குமதி செய்த போதிலும், இலங்கையிலும், தமிழகத்திலும் இன்று காணப்படும் பாலி பாடநூல்கள் மேற்கத்திய அணுகுமுறைகளை உள்வாங்காமல் சிறிதளவு ஆசிய ஆன்மிகத்தின் வழியில் தனித்து நிற்பதற்கு தனித்த பொருள் கோளியல் முறையைக் கையாண்டவர். ரங்கூன் கல்லூரி பாலி மொழித்துறை பேராசிரியர் சாஸ். துரைசெல், இந்திய-பர்மாவில் கிரேய்ஸ் பாலி பாடநூல்கள், இலங்கையில் எஸ், சுமங்களாவின் எழுத்தேடுகள் மற்றும் புத்ததத்தா, சங்கை ரத்தினஜோதி தேர போன்றோரின் நூல்கள் அனைத்தும் கிழக்கு ஆசிய பவுத்த ஆன்மீகத்தின் வெளிச்சத்தில் நின்று போதிக்கப்பட்டு வருவதை தமிழ்ப்பாலியில் நிறுவியவர்.
இந்த உண்மையை மேற்கத்திய பாலி ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இலங்கை ஆனந்தா கல்லூரி, கொழும்பு பாலி பவுத்தப் பல்கலைக்கழகம் முயற்சிகளில் வெளியான பாலி “பாஷாவதாரணா” தான் தற்போது பாலி மொழிக் கல்வியை தமிழ்ச் சூழலில், பவுத்த்துடன் புரிந்து கொள்ள பேருதவி செய்கிறது என்பதை ஏற்று தமிழில் பாலி மொழிக்கல்வியை உயர் கல்வி வளாகத்தில் பரவலாக்கும் முயற்சியை மேற்கொண்டார். பண்டிதரின் மகட பாஷைக்கும் இவரின் பாலி விளக்க முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் (நான் உட்பட)
பல்கலைக்கழகங்கள் அவரின் ஆக்கப்பூர்வமான பௌத்த – பாலி மொழிக்கல்வியை தமிழ்ச்சூழலுக்கு கொண்டு செல்லவில்லை என்கிற குற்ற உணர்வோடு அவரை நினைவு கூர்வதும், இரங்கல் தெரிவிப்பதும் இயலாமை மட்டுமல்ல ! ஒரு வகையில் சடங்காகிப்போன பிழையறிக்கை ! எனினும், கனத்த இதயத்தோடு அருள்திரு சங்கை போதிபாலாவுக்கு தம்மம் தழுவிய அஞ்சலிகள் !