(ரொமீலா தாப்பர் தன் கருத்துக்களை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஆவார். The Wire இணைய இதழுக்கு பிரபல பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜனுக்கு விரிவான பேட்டியளித்திருக்கிறார். அது ‘The media today is not communicating reality, Buy propagate ideology ‘ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. அந்த பேட்டியின் சுருக்கப்பட்ட மொழி பெயர்ப்பு இது)
சித்தார்த் வரதராஜன் : நீதிமன்றம் , மத்திய வங்கி , பாராளுமன்றம் , ஊடகம் என கிட்டத்தட்ட அனைத்தையுமே அரசு ஆக்கிரமிப்பு செய்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரொமீலா தாப்பர் : இங்கு நடப்பது குறித்து உங்களைப் போலவே நானும் கவலைப்படுகிறேன். நம்நாட்டில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் இத்தகைய நிகழ்வுகள் இப்போது நடந்து வருகின்றன. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இத்தகைய நிகழ்வுதான். நாம் எப்போதும் மதிக்கிற விமர்சன மனோபாவத்தை இழந்துவருகிறோம் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. எல்லாரும் நினைப்பது போல விமர்சன மனோபாவம் மத்திய தர குடும்பத்துக்கு மட்டும் உரியதா என்ன ? எதிர்க்குரல் (dissent) குறைந்து வருகிறது .
ஜனநாயகம் என்பது அடிப்படையான நிறுவனங்கள்தான். இதில் மக்களை நாம் எப்படி அதிக அளவில் பங்கெடுக்க வைக்கப் போகிறோம். எல்லாரும் நினைப்பது போல வாக்கு அளிப்பதோடு ஒரு குடிமகனின் வேலை முடிந்து விடவில்லை. அந்த வாக்கிற்கு எப்படி மேலும் முக்கியத்துவம் அளிக்கப்போகிறோம். மூன்றிலொரு பங்கு வாக்கு வாங்கினாலே பெரும்பான்மை கிடைத்துவிடுகிறது.
அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல ; அது நன்கு கல்வி பெற்ற சமுதாயமுமாகும்.கல்வியில் என்ன குறைபாடு ஏற்பட்டது ? நீங்கள் குழந்தைகளுக்கு தகவல்களைச் சொல்லுகிறீர்கள் அதையே குழந்தை திருப்பிச் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ? ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட கேள்விகளை கொடுத்து அதற்கேற்ப முடிவு செய்யப்பட்ட பதில்களையே பெறுகிறீர்கள். கல்வி என்பது குழந்தைகளை விமர்சனபூர்வமாக சிந்திக்க வைக்க வேண்டும்; கேள்வி கேட்க வைக்க வேண்டும். நாம் அப்படி செய்வதில்லை.
கேள்வி: அரசைக் கேள்வி கேட்பது தேச விரோதமானது என்று சொல்லப்படுவது பற்றி?
ரொமீலா : இது ஒரு முட்டாள்தனமான வாதமாகும் . கேள்வி கேட்க மக்களுக்கு பயிற்சி அளிப்பதே ஒட்டுமொத்தமான கல்வியின் நோக்கமாகும். கேள்வி கேட்கக்கூடிய மக்களை நாம் உருவாக்கவில்லை என்றால் அவர்களை நாம் ஜனநாயகத்தில் பங்கேற்க வைக்கமுடியாது.அறிவார்ந்த விவாதங்கள் நடைபெறாது. அமெரிக்காவில் நல்ல பள்ளிகள் உள்ளன. ஆனால் அவை என்ன கற்பிக்கின்றன ? விமர்சனபூர்வமான சிந்தனையை அவை உருவாக்குகின்றனவா ? இதுகுறித்து பொதுமக்களும் , கல்வியாளர்களும் , அறிவுஅஜீவிகளும் சிந்திக்க வேண்டும். பொதுமக்களின் உரிமைகளையும் , கடப்பாடுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அறிவுஅஜீவிகளுக்கு உள்ளது. இது அடிப்படையானது.
கேள்வி : கல்வி நிலையங்கள் குறி வைத்து தாக்கப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா தற்கொலை ,பூனா திரைப்பட கல்லூரி போராட்டம் போன்றவை குறித்து?
ரொமீலா : அவர்கள் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தை தாக்கவில்லை. நன்கு திட்டமிட்டு ‘ சுயேச்சையாக சிந்தனை ‘ செய்யும் நிறுவனங்களைத்தான் தாக்குகிறார்கள்.புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. இத்தகைய நிறுவனங்களின் தன்னாட்சியைப் பாதுகாப்பது அவசியமாகும். அரசாங்கமே அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவது என்பது நல்ல ஜனநாயகம் இல்லை. பாடப்புத்தகங்களை நிபுணர்கள்தான் வடிவமைக்க வேண்டும். அந்த பணி அரசிடமிருந்து விலகி சுயேச்சையாக செயல்பட வேண்டும். இந்த வேலையை அதிகாரிகளோ , அரசியல்வாதிகளோ செய்யக் கூடாது. அரசு மாறினாலும் பாடப்புத்தகங்கள் மாற வேண்டியது இல்லை.
நேரு பல்கலைக்கழகத்தில் மற்ற பல்கலைக்கழக பாடதிட்டத்தையோ , அல்லது வேறு பாடத்திட்டத்தையோ நாங்கள் பின்பற்றவில்லை.நன்கு விவாதித்து எங்களுக்கான பாடத்திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம்.அது நன்றாகத் தான் இருந்தது.
கேள்வி : வெகுஜன ஊடகங்கள் குறித்து ?
ரொமீலா: நான் தொலைக்காட்சி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்.தொலைக்காட்சிகள் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவை மக்களை தவறாக வழி நடத்துகின்றன.சிலசமயம் எத்தகைய கேள்விகளையும் அவை எழுப்புவதில்லை.மத்திய இந்தியாவில் உள்ள மக்களைப் பார்த்து அவர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்று பார்ப்பதில்லை. அவர்கள் ஏன் நக்சல்பாரிகளை ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்று கேட்பதில்லை. தில்லியில் உள்ள ஒருசிலரை மட்டுமே பார்த்து அவர்களிடமே எல்லா பிரச்சினை குறித்தும் கருத்து கேட்கிறார்கள். மக்களை மகிழ்விப்பது மட்டுமே ஊடகங்களின் வேலையல்ல. முக்கியமான விவாதங்களை நடத்த வேண்டும். விவாத மட்டத்தை உயர்த்த வேண்டும்.’ இவ்வாறு செய்வதால் மக்கள் பார்க்க மாட்டார்கள் ‘ என்று சொல்லுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பிரச்சினை என்று வருகிறபோது அதனோடு சம்மந்தப்பட்டவர்களை ஊடகங்கள் சென்று அடைவதில்லை.
கேள்வி: கேள்விகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற இப்போதைய சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ரொமீலா: இது உண்மையில் அவர்களின் பாதுகாப்பின்மையிலிருந்தே வருகிறது. இல்லையென்றால் வாருங்கள் எதிரான கருத்தாக இருந்தாலும் பேசுவோம் என கூறுவார்கள். இது அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு என்றே நினைக்கிறேன்.
கேள்வி : தேசியவாதம் குறித்து ?
ரொமீலா : தேசியவாதம் என்றால் நாம் வேத காலத்திற்கோ , குப்தர்களின் காலத்திற்கோ , முகலாயர்களின் காலத்திற்கோ போகப்போவதில்லை. அரசர் காலத்து பிரஜை (subject) என்ற நிலையிலிருந்து பல படிகளை கடந்து குடிமக்கள் ( citizen) என்ற நிலைக்கு வந்துள்ளோம். இந்த தேசியத்தில் குடிமக்கள் என்ற புது அடையாளம் கிடைக்கிறது. இதனால் அனைவரும் சமமாகின்றனர் ;சமூக நீதியில் சமமான உரிமைகள் கிடைக்கின்றன; சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடைக்கிறது; இது எல்லா மக்களையும் ஒன்று சேர்க்கிறது; இயற்கை வளத்தில் சம உரிமை கிடைக்கிறது. மனித உரிமை என்பது குடிமக்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. எனவே ஜனநாயக அமைப்பில் மதத்தினாலோ , மொழியினாலோ, ஜாதியினாலோ ஒரு குறிப்பிட்ட பிரிவு முன்னிலைப்படுத்தப்படுவது சரியல்ல. ஊடகங்கள் இத்தகைய விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். ஒரு பகுதி மக்கள் பலவீனமானவர்ரகளாக இருக்கும் போது அனைவரும் சமம் என்று பேச முடியாது. இதற்கான குரலை மத அமைப்புகள் எழுப்புவது சரியானதாக இருக்காது. மதச்சார்பற்ற நிறுவனங்கள்தான் இதற்கு முக்கிய பங்காற்ற முடியும்.
சுருக்கமான மொழிபெயர்ப்பு : பீட்டர்.