பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…

மலேசிய வீடியோ அது. ஆறு அல்லது ஏழு வயது பெண் குழந்தையை அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்கேலினால் அடி வெளுத்து எடுக்கிறார். பார்த்தவுடன் பதறிப் போகிற அளவுக்கு அப்படி ஒரு அடி.

பொங்கி பீராய்ந்து உடனடியாக அந்த வயதான அம்மாவைத்திட்டி ஸ்டேடஸ் எழுதி என்னுடைய கடமையை ஆற்றினேன். இருந்தும் அந்த வீடியோ கண்ணுக்குள்ளயே நின்றுகொண்டிருந்தது. எதற்காக இவ்வளவு எமோஷன் ? நீ அடி வாங்கினதே இல்லையா ? என்று உடன்பணிபுரிபவர் கேட்டதும்தான் அதில் இருந்து வெளியேவந்தேன்.

எல்கேஜி படித்தபோது ரத்தக்களறியாக  அம்மாவிடம் அடி வாங்கிஇருக்கிறேன். மற்றொரு மாணவியின் அழிரப்பரை தொலைத்ததாக சுமத்தப்பட்ட புகாரின் அடிப்படையில், சாதக்கரண்டியால் அம்மா என்னை அடித்து வெளுத்ததும், அந்தக் கரண்டி கிழித்து என் கைகளில் ரத்தம் வழிந்ததும் சரித்திரம்.

ரத்தம் வழிந்ததே என்றெல்லாம் அம்மா கவலைப்படவில்லை. அடுத்த பெண்ணின் ரப்பரைத் தொலைத்த புகார்தான் அம்மாவை பெரிதும் அவமானத்துக்கு ஆளாக்கி இருந்தது. அந்த அவமானம்தான் என் ரத்தக்காவை விடவும் பெரிதாக இருந்திருக்கிறது. இப்போது அம்மாவைப் புரிந்து கொள்கிறேன் நான்.

ஆனால், இந்த மலேசிய விவகாரத்தில், வயதான பெண்மணி அந்தக் குழந்தையை அடித்ததை “பாசம்,பொறுப்பு, கடமை” என்ற வார்த்தைகளைக் கடந்து நேர்மையுடன் பார்க்க விரும்புகிறேன்.

இருபது வயதில் திருமணம் ஆகின்ற ஒரு இந்திய / வம்சாவளிப் பெண் (ஆணும்) அவளுக்குக் குழந்தை பிறந்து, அது வளர்ந்து, அதற்கு திருமணமாகிற வரையிலான அடுத்த இருபது வருடங்களுக்கு “குழந்தை வளர்ப்பை மட்டுமே” தன் முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறாள்(சில நேரங்களில் றான் also).

அந்தத் திருமணத்திற்கு பின் வளைகாப்பு, பிரசவம், பேரக் குழந்தையை பராமரிப்பது என்று மறுபடியும் அடுத்த செஷன் of “பிள்ளை வளர்ப்பு” தொடங்கி விடுகிறது. . இருபது வயதில் “அம்மா” என்ற பொறுப்பின் கீழ் பிள்ளையை வளர்த்தால், அறுபது வயதில் “பாட்டி” என்ற பொறுப்பின் கீழ் பிள்ளை வளர்க்க வேண்டும்.

பிள்ளையின் திருமணம் – பிள்ளையின் பேறுகாலம்  இந்த இரண்டிற்குமான அந்த சிறு இடைவெளி மட்டுமே அம்மாக்களுக்கான “பிள்ளை வளர்க்கும் பொறுப்பில் இருந்து” வெளியேவரும் காலம் என்று நினைக்கிறேன்.

இந்தியச் சமூகத்தைத்தாண்டி வேறு எந்தச் சமூகத்திலாவது அறுபது வயது மூத்த குடிமக்களுக்கு, தங்களுடைய பேரன்,பேத்தியை வளர்ப்பது மட்டுமே முக்கிய கடமையாக சுமத்தப்பட்டிருக்கிறதா ? அப்படி எதுவுமே இல்லை. Single Mother-/ Single Dad-களாக இருப்பவர்கள் கூட பணிக்குச் சென்றபடியே குழந்தையை பார்த்துக் கொள்கிறார்கள். அல்லது Baby Sitter வைத்துக் கொள்கிறார்கள். அப்படியான வசதி கிட்டாதவர்கள் பணியிடத்திற்குக் குழந்தையை எடுத்துச் செல்லும் அனுமதியை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது ? பணிக்கு செல்லும் / செல்லாத தம்பதிகளும் தங்களுடைய குழந்தையை வயதான பெற்றோர்களின் தலையில் கட்டுவதற்கு பெயர் என்ன ? உணர்வுகளின்பால் நடத்தப்படும் உழைப்புச் சுரண்டல்தானே ?

இவ்வளவு கம்யூனிசமாக பேசாமல், கொஞ்சம் எளிதாக்கினால் ‘நம்ம குழந்தையா இருக்கும்போது ஆரம்பிச்ச சாணி அள்ளுற வேலைய நம்ம பிள்ளை வளருற வரைக்கும் அப்பா அம்மாக்கள் தொடரனும்” என்றே வரும்.

பொறுப்பு, கடமை, பாசம், குடும்பம், என்ற பெயரில் தொடர்ந்து எல்லாருக்காகவும் வாழும் பெற்றோருக்கு, அவர்களுக்கான ஓய்வு நேரம் என்பது எப்போது ? நடக்க முடியாமல் ஈசிசேரில் சாய்ந்த பிறகா ?

அவர்களாக விரும்பித்தான் பேரக் குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்பது நம்முடைய பதிலாக இருக்குமென்றால் ?

அது உண்மைதான். அவர்கள் தங்கள் பேரக் குழந்தைகளிடம் அன்பு காட்ட விரும்புகிறார்கள். குழந்தைகளின் அருகாமையை விரும்புகிறார்கள். அவர்களைக் கொஞ்சத் துடிக்கிறார்கள். எல்லாமே உண்மைதான். ஆனால் இதை 24/7 ஆகச் செய்ய அவர்கள் எப்போதும் தயாரில்லை.

அவர்களுக்கான தேர்வுகள் சில இருக்கின்றன. அது தொலைக்காட்சி நாடகமாக இருக்கலாம். கோவில் குளமாக இருக்கலாம். சமையலறைக்குள் செல்லாமல்  ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடுவதாக இருக்கலாம். வெளியூருக்குச் செல்வதாகவும், அடுத்த ஹனிமூன் கொண்டாடும் திட்டமாகவும் கூட இருக்கலாம்.

இதை எதையும் மதிக்காமல், நம் விருப்பங்களை, நம் தேவைகளை மட்டுமே அவர்களது தலையில் திணிக்கிறோம் இல்லையா ? அப்போதுதான் இந்த மலேசியப்பெண்மணி  குழந்தையை அடித்து வெளுத்தது போன்ற frusteration ஏற்படுகிறது.தொடர் வேலைப்பளு, அழுத்தங்களினால் ஏற்படும் outburst அது. அப்படியாகத்தான் வெளிப்படும்.

தனக்கான வாழ்க்கை என்றான பின், எந்தக் காரணத்தின் பொருட்டினும் பெற்றோர்களை சுரண்டுவது அபத்தம் இல்லையா ? அருவருப்பானதும் கூட இல்லையா ?

இதில் கூட சாதி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. பார்ப்பன குடும்பங்களில் வயது மூத்தவர்களின் வாழ்க்கை நம்முடைய குடும்ப மூத்தவர்களின் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. மகன் மருமகள் / மகள் மருமகன் என்ற நெருக்கடிகள் இல்லாமல் , தங்களுக்குப் பிடித்த வாழ்கையை தனியே வாழ்கிறார்கள். மகன்/மகள் வீட்டிற்கு அமெரிக்கா சென்றாலும் கூட பிள்ளை வளர்ப்பதை பொறுப்பாக எடுத்துக்கொள்வதில்லை. அதே பிற சாதிகளில் பாருங்கள், மகளுக்கோ, மருமகளுக்கோ பிரசவம் பார்ப்பதற்காக மட்டுமே இங்கிருந்து வெளிநாடு செல்வார்கள் பெற்றோர்கள். குறிப்பாக அம்மாக்கள்.

ஆனால், படித்த வேலை பார்த்து ஓய்வுபெற்ற இந்தக்கால அம்மாக்கள் தாருமாறுகள்:) அதாவது இந்தக்கால அம்மாக்கள் ராக்ஸ்.

திருமணமாகி சென்னையில் வசித்த தோழிக்கு குழந்தை பிறந்தபோது, மும்பையில் இருந்த அவளுடைய அம்மா ஒரு Hi-Bye விசிட் அடித்தார். அவ்வளவே. இவளால் தனியாக வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட காலத்தில் அம்மாவை இவள் அழைக்க, அந்தம்மா கறாராக சொல்லிவிட்டார் “எனக்கு வீடிருக்கு. புருஷன் இருக்கார். கல்யாணமாகாத இன்னொரு பிள்ள இருக்கு. ஒன் மாமியார (பையனின் அம்மா 🙂 ) கூப்டுக்க” என்று. மாமியார் இதே டயலாக்கின் வைஸ்வெர்சாவை சொல்லிவிட்டார். புருஷனும் இவளும் ஷிப்ட் போட்டு வேலை பார்த்தார்கள். ( இரவெல்லாம் விழித்து அலுவலகத்தில் புருஷன் தூங்கி விழுந்த புகார் தனி )

“குழந்தை” என்று வாயெடுத்த அடுத்த நொடியில் என் அம்மா உஷாராகி விட்டார். “இங்க பார். உங்க நாலு பேரையும் வளத்து எடுக்கிறதுக்குள்ளயே உயிர் போயிருச்சு. இனி உங்க பிள்ளைய வேற வளக்கனுமா? புள்ள வளர்க்கிறதுதான் என் முழு நேர வேலையா ? என்னால முடியாது. வேணும்னா ஆள் வச்சு பாத்துக்க” என்று.

குழந்தையைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண் இல்லாமல்தான் அம்மாக்களையும், கடைக்குத் தூக்கி போக வேலையாள் இல்லாமல்தான் அப்பாக்களையும் அன்பு என்ற பெயரில் உபயோகப்படுத்திக்கொள்கிறோம் இல்லையா ?

குழந்தையை எப்படி வளர்த்தோமா ? அது ஒரு சாகசக்கதை. “நாமும் வளர்ந்து குழந்தையும் வளர்ந்து” என்பதை “அதீத ஆத்திரம்”நிறைந்த பேரன்போடு சொல்லிக்கொள்கிறேன்.

One thought on “பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…

  1. அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்க்… பெரும்பாலானோர் மொண்ணையாக எமோஷனலாகஎதிர்வினை ஆற்றி இருந்தனர்…. இது போன்ற கட்டுரைகள் நம்பிக்கை அளிக்கின்றன

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.