நான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா

charu-nivethitha-1-e1496647006527.jpg
சாருநிவேதிதா

சாருநிவேதிதா

கருணாநிதி குறித்து எதுவுமே எழுதக் கூடாது என்று இருந்தேன். என் நெருங்கிய நண்பர்களைப் புண்படுத்தக் கூடாது என்ற ஒரே காரணம்தான். ஆனால் கார்ல் மார்க்ஸின் கருணாநிதி துதி என் கை விலங்கை உடைத்து விட்டது. தமிழக அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு:

  1. 1920-இலிருந்து மெட்ராஸ் மாகாணத்தின் முதல்மந்திரியாக இருந்தவர்கள் சுப்பராயலு ரெட்டியார், பனகல் ராஜா, பி. சுப்பராயன், முனுசாமி நாயுடு, பி.டி. ராஜன், ராஜாஜி, ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா முதலியோர். இவர்களில் பி.டி. ராஜன், ராஜாஜி பற்றி நூற்றுக் கணக்கான பக்கங்கள் எழுதலாம். இவர்கள் அனைவருமே அப்பழுக்கற்ற, ஊழலின் கரை படியாத தலைவர்கள். இவர்களின் கொள்கைகளில், எடுத்த முடிவுகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் இவர்கள் காலத்தில் ஊழல் என்ற வார்த்தையே இல்லாமல் இருந்தது. இவர்களுக்குப் பிறகு வந்தவர்களில் காமராஜரும் அண்ணாதுரையும் மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் அனைவருமே அரசியல்வாதி என்ற வார்த்தைக்குக் கொடுத்த அர்த்தம் வேறாக இருந்தது. இவர்களுக்குப் பிறகு வந்த கருணாநிதி தான் அரசியல்வாதி என்ற வார்த்தைக்கு வேறு விதமான அர்த்தம் கொடுத்தவர். இன்று காமராஜரின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? அண்ணாதுரையின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களுடைய சொத்துக் கணக்கு என்ன? அவர்களெல்லாம் வெறும் நடுத்தர வர்க்கத்து மனிதர்கள். கக்கனின் வாரிசுக்கு ஒரு வேளை சோறு இல்லை. ஆனால் கருணாநிதிதான் முதல்முதலாக ஆசியாவின் பெரிய பணக்காரர்களைக் கொண்ட குடும்பத்துக்குச் சொந்தக்காரராக இருந்தார். அந்த வகையில் அரசியல் தன் அறத்தை இழக்கக் காரணமாக இருந்தார். மகாத்மா காந்தியிலிருந்து ராகுல் காந்திக்கு இறங்கிய அரசியல் அறத்தின் தென்னக வடிவம் கருணாநிதி.

  2. சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி அகிம்சை என்ற போராட்ட வடிவத்தைக் கொடுத்தார். உலக அரசியலுக்கு ஒரு இந்திய ஞானி கொடுத்த கொடை அது. அந்தப் போராட்டத்துக்காகத் தன் உயிரையே கொடுத்தார் மகாத்மா. உண்ணாவிரதம், அதிகாரத்துக்கு முன்னே தலை வணங்காதிருத்தல், தர்ணா போன்றவை அந்த அகிம்சைப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் அர்த்தத்தையே மாற்றி நீர்த்துப் போகச் செய்த முதல் அரசியல்வாதி கருணாநிதி. ஓடாத ரயிலின் முன்னே தலையை வைத்துப் படுத்து இந்தி எதிர்ப்புக்காகப் போராடினார் கருணாநிதி. ஆனால் இந்திய சுதந்திரத்துக்காக ஆயிரக் கணக்கான மக்கள் பிரிட்டிஷ் போலீசாரின் தடியடிகளைத் தங்கள் தலையில் வாங்கினார்கள்; ரத்தம் சிந்தினார்கள். அப்படியும் அச்சம் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அந்தத் தடியடிக்கு மனிதக் கூட்டம் போய்க் கொண்டே இருந்தது. பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தும் நம்முடைய சமூகத்தின் நோய்க்கூறான பழக்கவழக்கங்களை எதிர்த்தும் பலமுறை மகாத்மா சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். பல நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த எலும்பும் தோலுமான பைத்தியக்காரக் கிழவனைப் பார்த்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே நடுங்கியது. ஆனால் இலங்கையில் தமிழ் இனத்தின் மீது ராஜபக்ஷே என்ற இனவெறியன் தன் ராணுவத்தை ஏவிப் படுகொலை செய்து கொண்டிருந்த போது காலை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை உண்ணாவிரதம் இருந்து மகாத்மாவின் உண்ணாவிரதப் போராட்டங்களையே அசிங்கப்படுத்தியவர் நம் கருணாநிதி.

நேற்று ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கியவர் கருணாநிதி என்று போட்டிருந்தது. உண்மைதான். ஆனால் அதே சமயத்தில் தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி ஆக்ஸ்ஃபோர்ட் ஸ்கூல், கேம்ப்ரிட்ஜ் ஸ்கூல் என்ற குடிசைப் பள்ளிகள் தோன்றி தமிழ்நாடு பூராவும் இங்கிலிபீஸ் பள்ளிகள் புற்றீசல் போல் பல்கிப் பெருகக் காரணமாக இருந்தவர் யார்? 40 ஆண்டுக் காலமாக தமிழே தெரியாமல் ஒரு இளம் சமுதாயம் உருவாகி இருக்கிறதே, அதற்குக் காரணம் யார்?

  1. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, திமுகவின் அடிமட்டத் தொண்டனின் நிலை என்ன? எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் அவர்களின் தொண்டர்கள் தங்களின் உயிருக்கு உயிரானவர்களாகக் கருதினார்கள். அப்படிப்பட்ட தொண்டர்கள் திமுகவில் உண்டா? கருணாநிதியின் பேச்சுத் திறமையைப் பாராட்டுவார்கள். கடும் உழைப்பைக் கண்டு அசந்து போவார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களின் கருத்து என்ன? தீப்பொறி ஆறுமுகத்தின் கதி என்ன ஆனது? திமுக என்ற மாபெரும் கட்சியின் ரத்தமும் சதையும் தீப்பொறி ஆறுமுகம் போன்ற ஆயிரக் கணக்கான பேச்சாளர்கள்தான். ஆனால் அவர் தன் மகனுக்கு ஒரு வேலை வேண்டும் என்று தலைவரிடம் போய்க் கேட்டால், என்னய்யா, நான் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சா வைத்திருக்கிறேன் என்று கேட்டவர் நம் கருணாநிதி. தீப்பொறி அதிமுகவில் போய்ச் சேர்ந்தார். அப்போது என் நெஞ்சம் வலித்தது. எங்கள் குடும்பமே திமுக தான். என் நண்பர்கள் அத்தனை பேரும் திமுக தான். நான் இங்கே உண்மையை மட்டுமே பேசுகிறேன். நான் பேசுவது என் நண்பர்களின் மனசாட்சிக்கு உண்மை எனத் தெரியும்.

எல்லாவற்றையும் மறந்து விடலாம். தன் மகன் ஸ்டாலினுக்குக் கருணாநிதி இழைத்த அநீதியை என்னால் மறக்கவே முடியாது. ஓ.பன்னீர்செல்வமெல்லாம் மூன்று முறை நான்கு முறை முதலமைச்சர் ஆகி விட்டார். யாருக்குமே தெரியாத எடப்பாடி முதலமைச்சராக இருக்கிறார். நம் தேவகௌடா பிரதமர் ஆன மாதிரி. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக திமுகவுக்காக ஒரு அடிமட்டத் தொண்டனைப் போல் உழைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் 64 வயதாகியும் இன்னும் முதல்வராக முடியவில்லை. சென்ற தேர்தலில் அதற்கு வாய்ப்பு இருந்தது. ஸ்டாலின் தான் முதல்வர் என்று அறிவித்திருந்தால் இப்போது நடக்கும் அல்லோலகல்லோலங்களை நாம் பார்த்திருக்க வேண்டிய அவலம் நடந்திராது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும். பிடித்திருந்தால் உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் சமாதியை மெரினா கடற்கரையில் நாம் காண வேண்டிய அவலம் நேர்ந்திராது.

ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று அறிவிக்காதது மட்டும் அல்ல; என் உயிர் உள்ளவரை நான் தமிழக மக்களுக்குப் பாடுபடுவேன் என்று வேறு சொன்னார். என்ன அர்த்தம்? நான் இருக்கும் வரை நான் தான் முதல்வர், நீ கம்னு கெட மகனே என்றுதானே? இந்த அறிவிப்புக்கே மக்கள் அரண்டு விட்டார்கள்.

மேலும், ஒரு அரசியல் தலைவர் என்றால் எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பவராக இருக்க வேண்டும். இந்துக்களைத் திருடர் என்று சொல்ல ஒரு தலைவரின் மனம் கூச வேண்டாமா? மேலும், அவரிடமிருந்த பிராமண எதிர்ப்பும் மிகக் கசப்பான ஒரு விஷயமாகும். பெரியாரிஸ்ட் அப்படி இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பணியாற்ற வேண்டிய ஒரு முதல்வர் அப்படி இருக்கக் கூடாது.

கருணாநிதியிடம் எனக்குப் பிடித்த விஷயங்களும் இருக்கின்றன. விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்பார். விமர்சிப்பவர்களை குண்டாந்தடியால் அடிக்க மாட்டார். அந்த ஒரு பண்பு தான் இத்தனை காலம் அவரை செயல்பட வைத்தது. இன்னொன்று, அவரது கடுமையான உழைப்பு. இப்போதைய சோம்பேறிகளின் உலகத்தில் கருணாநிதி மாதிரி ஒரு தலைவர் நம்புவதற்கே அரிதானவர்.

இது கருணாநிதி பற்றிய முழுமையான கட்டுரை அல்ல; என் மதிப்புக்கு உரிய கார்ல் மார்க்ஸ்செண்ட்டி செண்ட்டியாக எழுதியிருந்த ஒரு குறிப்பைப் படித்து எழுதிய ஒரு சிறிய எதிர்வினையே.

திமுக தலைவர் மு. கருணாநிதி

கருணாநிதி-2

கார்ல் மார்க்ஸ் பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாம். இப்போது மீண்டும் பேச வைத்து விட்டார். ”அதிகாரக் குவிப்பை நோக்கியும், ஒற்றை மத மேலாதிக்கத்தைமுன்னிறுத்தியும் மைய அரசியல் நகரும் நிலையில், அதை எதிர்கொள்ள முடியாமல் இங்கு இருக்கும் ஆளும் தரப்பு கிட்டத்தட்ட படுத்தேவிட்ட சூழலில், இந்த வைரவிழா கூடுகையின் அரசியல் முக்கியத்துவத்தை கவனப்படுத்துவதும் எனது நோக்கமாக இருந்தது” என்று பதில் எழுதுகிறார். ஒரு ஆபத்தை எதிர்கொள்வதற்காக இன்னொரு ஆபத்தை வரவேற்கலாமா? ஊழல் காங்கிரஸ் வேண்டாம் என்று மோடியை ஆதரித்தது எத்தனை தவறு என்று இப்போது இந்தியர் அனைவரும் வருந்துகிறார்களே? அப்படி, ஒற்றை மத மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக இத்தாலி மாஃபியா கும்பலை ஆதரிக்கப் போகிறோமா? அப்படித்தானே தமிழகத்தில் திமுகவை எதிர்க்கப் போய் மன்னார்குடி மாஃபியாவில் விழுந்தோம்? மாற்றி மாற்றி நம் கதி இதுதானா?

சரி, கார்ல் மார்க்ஸ் நான் கருணாநிதியின் கடைசி இருபது ஆண்டுகள் பற்றியே கவனப்படுத்தியிருப்பதாக எழுதியிருக்கிறார், அவருடைய பதிலில். ஆகா, ஆகா. கருணாநிதியின் முதல் இருபது ஆண்டுகள் பற்றி எழுதினால் என் கணினியே வெடித்து விடும் கார்ல். அப்போது நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள். நானே கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். 1973 ஜூலை 18-ஆம் தேதி அன்று கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி. சிந்தன் மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதல் தான் போலீஸ் துறை மக்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடப் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்தவர் மு. கருணாநிதி. அது அவரது இரண்டாவது முதல்வர் பதவி. அண்ணாதுரையின் மரணத்துக்குப் பிறகு நெடுஞ்செழியன் தாற்காலிக முதல்வராக இருந்து பின்னர் மு.க. பதவிக்கு வந்தார். வி.பி. சிந்தன் உயிர் பிழைத்ததே பெரும் அதிர்ஷ்டம் என்று கருதப்பட்டது அன்று. சிம்சன் தொழிலாளர் யூனியனின் துணைத் தலவராக இருந்த வி.பி. சிந்தன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தார். இப்போது என்றால் ஒரு கவுன்சிலர் கூட மூன்று நான்கு கார்களில் அடியாட்கள் சூழ பயணம் செய்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர் சிந்தன் சென்னை டவுன் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தார். திடீரென்று இருபது ஆளும் கட்சித் தொண்டர்கள் பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்தினார்கள். அவர்கள் கையிலிருந்த இரும்புத் தடி, சைக்கிள் செயின் (அப்போதுதான் ராட்டை என்ற போராட்ட ஆயுதம் சமாதிக் குழியில் புதைக்கப்பட்டு சைக்கிள் செயின் போராட்ட ஆயுதமாக தமிழக அரசியலில் இடம் பிடித்தது) அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களைப் பார்த்த பயணிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடிக்க, சிந்தன் மேற்கண்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டார். இரும்புக் கம்பி மார்பில் பாய்ந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தார். சாதாரணமாக அல்ல; மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. யூனியன் தேர்தலில் குசேலரும் சிந்தனும் வெற்றி அடைந்ததைத் தன்னுடைய தனிப்பட்ட தோல்வி என்று முதல்வர் கருணாநிதி கருதியே அந்தத் தாக்குதலுக்குக் காரணம். இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கருணாநிதி திண்டுக்கல்லில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்: ”கம்யூனிஸ்டுகளைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவதுதான் நம் திமுகவின் முதல் பணி.” இப்போது மோடியைப் பார்த்து இந்தியர்கள் எப்படி மிரள்கிறார்களோ அவ்வாறே தமிழ் மக்கள் கருணாநிதியைக் கண்டு மிரண்டார்கள். அரசியலில் ரவுடிகளின் ஆதிக்கம் அண்ணாதுரை காலம் வரை இல்லாமல் இருந்தது. கருணாநிதியே அதைத் துவக்கி வைத்தவர். அதன் முதல் நிகழ்ச்சியையே மேலே விவரித்திருக்கிறேன்.

1972-இல் நடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சம்பவம் உலகச் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. இதையெல்லாம் நான் ஒரு நாவலுக்கான குறிப்புகளாக சேகரித்து வைத்திருந்தேன். கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஜெயலலிதாவை மாரியாத்தா, கன்னி மேரி என்றெல்லாம் வர்ணித்துப் படம் போட்டு நூறு அடி உயர கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டதை நாம் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தோமே, அதற்கெல்லாம் குருநாதர் யார் தெரியுமா? நம் கருணாநிதிதான். அப்போதெல்லாம் அவர் பூம்புகார்ச் சோழன் என்றும், கரிகால்வளவன் என்றும்தான் கொண்டாடப்படுவார். மலர்க் கிரீடம் எல்லாம் வைக்கப்பட்டது. அதன் ஒரு அங்கம்தான் டாக்டர் பட்டம். அதை எதிர்த்தது
Students Federation of India. அதில் ஒரு மாணவன் ஒரு கழுதையைப் பிடித்து அதன் மீது டாக்டர் என்று எழுதி விட்டான். மாணவர்கள் என்றால் அப்படித்தானே இருப்பார்கள்? போலீஸ் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவன் இறந்து விட்டான். அவன் உடலைத் தூக்கிக் குளத்தில் போட்டு விட்டது பூதம். பூதம் எது என்பது உங்கள் யூகத்துக்கு. உதயகுமாரின் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். உதயகுமாரைப் பார்த்தார்கள். இது எங்கள் மகனே இல்லை என்று கதறி அழுதார்கள். மகன் இல்லை என்றால் எதற்கு ஐயா கதறி அழ வேண்டும்? மகன் என்று சொன்னால் தொலைத்து விடுவோம் என்று சொன்னது பூதம். இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது இந்திய மாணவர் சங்கம். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் இன்றைய மனித உரிமை ஆர்வலரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே. சந்துரு.

மற்றொரு பொன்னெழுத்து சம்பவம் திருச்சி கிளைவ் ஹாஸ்டலில் நடந்தது. புகழ் பெற்ற செயிண்ட் ஜோசஃப் கல்லூரியின் ஹாஸ்டல் அது. மேற்கண்ட சம்பவங்கள் நடந்த அதே எழுபதுகளின் முற்பகுதிதான். ஹாஸ்டலில் இருந்த மாணவர்களைத் தடிகளால் அடித்து நொறுக்கியது போலீஸ். மிகப் பயங்கரமான காட்டுமிராண்டித் தாக்குதல் அது. பிரின்ஸிபாலும் வார்டனும் இதை விசாரணை கமிஷன் முன்னே சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் கருணாநிதியின் முதல் பதவிக் காலகட்டத்தின் போது. அப்போது நான் திருச்சியில் பெரியார் கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். கடுமையான திமுக ஆதரவாளரான என் தந்தை என்னுடைய தீவிர திமுக எதிர்ப்பைக் கண்டு மிகவும் மனம் புழுங்கியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

நண்பர்களே, இதெல்லாம் ஒரு நாவலுக்கான குறிப்புகள். இப்போது எழுதி விட்டேன். மேலும் மேலும் கிளறாதீர்கள். ஊழல், அரசியலில் ரவுடிகளின் ஆதிக்கம், முகஸ்துதி, கட் அவுட் கலாச்சாரம் போன்றவற்றையெல்லாம் தமிழக அரசியலில் அறிமுகப்படுத்திய பெருமை கருணாநிதியையே சாரும்.

ஜி. கார்ல் மார்க்ஸ்

கருணாநிதி – 3

சரி, இவ்வளவு எழுதி விட்டு மிச்சத்தையும் எழுதாமல் விட்டால் கார்ல் மார்க்ஸ் கோவித்துக் கொள்வார். ஆனால் இது கருணாநிதி பற்றி அல்ல. என் நைனா, சின்ன நைனா பற்றியது. தமிழகத்தில் தஞ்சம் புகுந்த எல்லாத் தெலுங்குக் குடும்பங்களையும் போல இவர்களும் தீவிர திமுக. தீவிர தமிழ்ப் பற்று. சமீபத்தில் மதம் மாறியவர்கள்தான் தீவிரமான மதச் சார்பு கொண்டவர்களாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அந்த மாதிரி மனநிலை இது. பேசுவது அண்ணன் தம்பிகளுக்குள் எழுதுவது எல்லாமே தெலுங்கு. ஆனால் உயிர் தமிழுக்கு. என் அம்மா வைத்த ரவி என்ற அழகான பெயர் அறிவழகன் ஆனது இப்படித்தான்.

என்னை எப்படியாவது திமுகவுக்குள் இழுத்து விட வேண்டும் என்று மிகவும் பாடுபட்டார்கள் சின்நைனா. அவர்களுக்கு என்னை என் நைனாவுக்குத் தெரிந்த அளவுக்குத் தெரியாது இல்லையா, அதுதான் காரணம். அதனால் அவருடைய குருநாதர்கள் அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி போன்றவர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். ரொம்ப ரொம்ப ஜாலியாகப் பேசுவார் மன்னை. இப்போதைய துரை முருகனைப் பார்த்தால் எனக்கு மன்னை தான் ஞாபகம் வருகிறார். ஆனால் மன்னை கருப்பாக இருப்பார். நான் அந்த இருவருக்கும் எடுபிடி வேலையெல்லாம் செய்து கொடுப்பேன். ஒருமுறை அன்பிலோடு அவர் காரிலேயே சென்னை வரை என்னை அழைத்து வந்தார். காரில் மன்னையும் இருந்ததால் அவர் அடித்த ஜோக்குகள் இன்றும் எனக்கு மறக்கவில்லை. எல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்து சமாச்சாரம்.

ஆண்டு ஞாபகம் இல்லை. ஒரு பெரிய திமுக மாநாடு திருச்சியில் நடந்தது. பொன்மலை வட்டச் செயலாளர் சின்நைனா. அந்த மாநாட்டுப் பந்தலைப் பார்த்து அசந்து போன கருணாநிதி அன்பிலை அழைத்துப் பாராட்ட, அன்பில் என் சின்நைனாவை அழைத்து இவன் தான் – பெயர் ராகவன் – எல்லாம் பண்ணினது என்று சொல்ல, அந்த நேரம் சின்நைனாவுக்கு வாழ்வின் குறிக்கோள் நிறைவேறியது.
நைனாவுக்கும் சின்நைனாவுக்கும் மூச்சே திமுகதான். please read it literally. அதாவது, சுவாசக் காற்று வரும் போது பாதி கருப்பாகவும் மீதி சிவப்பாகவும் வெளிவருவதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நானோ சம்ஸ்கிருதம் படித்துக் கொண்டு, இந்தி படித்துக் கொண்டு, ரவிஷங்கரின் சிதார் கேட்டுக் கொண்டு, ஹிப்பி முடி வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தேன். கேட்க வேண்டுமா? குடும்பத்தில் நான் ஒரு அந்நியனாகக் கருதப்பட்டதற்கு இலக்கியமெல்லாம் காரணம் இல்லை. திமுகதான் காரணம். அதனால்தான் தமிழ்நாடே வேண்டாம் என்று தில்லிக்கு ஓடி விட்டேன். அந்த வகையில் தமிழ்நாட்டை விட்டு ஓடிய பிராமணர்களைப் போல் தான் நானும்.
முடிந்தது. இதற்கு மேல் நாவலில் காணலாம்.

கருணாநிதி 4:

நான் பாட்டுக்கு ரொபர்த்தோ பொலான்யோவின் 1200 பக்க நாவல் 2666-ஐப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த கார்ல் மார்க்ஸ் என்னைக் கிளப்பி விட்டு விட்டார். சரி, இந்த நாலோடு முடித்துக் கொள்கிறேன்.
மன்னையோடும் அன்பிலோடும் காரில் சென்னை வந்து கொண்டிருந்த போது – சின்நைனா சென்னை வரவில்லை, அன்பிலின் வலது கையாக விளங்கினார் சின்நைனா ராகவன் – நான் மன்னை பற்றியும் அன்பில் பற்றியும் யோசித்தேன். என் வயது அப்போது 19. திருச்சி பெரியாரில் ஆங்கில இலக்கியம் பி.ஏ. முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஏன் ஊர்ப் பெயரை வைத்து இவர்களை அழைக்கிறார்கள் என்று ஓடியது யோசனை. கருணாநிதியின் பெயர் (அப்போது மனதில் கூட கலைஞர் என்று வராது, தலைவர் என்றோ கருணாநிதி என்றோதான் வரும். கலைஞர் என்று வந்தால் நீ சிந்தனையாளனே கிடையாது என் குருநாதர் ஜெயகாந்தன் சொல்லியிருந்தார்) கருணாநிதியின் ஊர்ப் பெயரோடு சேர்ந்து ஞாபகம் வந்தது. தலைவர் பேரிலேயே திமுக இருக்கிறது. திருக்குவளை மு. கருணாநிதி. மனதில் நினைத்ததை வாய் விட்டுச் சொல்லி விட்டேன் போல. மன்னைக்கு என்னை ரொம்பப் பிடித்து விட்டது. இனியும் சின்நைனாவோடு சேர்ந்தால் ஆள் என்னைத் தலைவரிடமே கொண்டு சேர்த்து விடுவார் என்று அதோடு தஞ்சாவூர் சரஃபோஜி வந்து பிஸிக்ஸில் சேர்ந்து குட்டிச் சுவர் ஆனேன்.

நான் மட்டும் மன்னை பேச்சைக் கேட்டு அவர்களோடனேயே போய் கருணாநிதியைப் பார்த்திருந்தால் மாணவர் அணியில் சேர்ந்து, இன்றைய தினம் துரை முருகனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருப்பேன். மனுஷ்ய புத்திரன் என்னை சாரு என்பதற்கு பதிலாக அண்ணே என்று தான் அழைத்திருக்க வேண்டும்.

விதி என்னை வேறு மாதிரி அழைத்துச் சென்றது. விதி அல்ல. அறம்தான் என்னைக் காப்பாற்றியது. நீதிதான் என்னைக் காப்பாற்றியது. தர்மம்தான் என்னைக் காப்பாற்றியது. அப்போது எனக்கு நீதியின் பாதையை, தர்மத்தின் பாதையைக் காண்பித்த ஆசான் ஜெயகாந்தனுக்கு நன்றி.

எழுத்தாளர் சாருநிவேதிதா தன்னுடைய முகநூலில் திமுக தலைவர் மு. கருணாநிதி குறித்து எழுதியுள்ள பதிவுகள் இவை. கருணாநிதி குறித்தும் திமுக குறித்து சாருவின் கருத்துகள் சமூக ஊடகங்களில் எதிர்வினைகளை கிளப்பியுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.