வங்கிக்கு இழப்பு ஏற்படுத்திய எண்டீடிவி நிறுவனர் பிரனாய் வீட்டில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தவறனான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலை எண்டீடிவி மீதும் அதன் புரோமோட்டர்கள் மீதும் சிபிஐ ஏவிவிட்டுள்ளதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தொடர்ந்து பல்வேறு வழிகளில் தங்கள் மீது ஏவிவிடப்படும் இத்தகைய தாக்குதலை சோர்வில்லாமல் எதிர்கொள்வோம். இந்திய ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் குறைத்து மதிப்பிடும் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.
எங்களைப் போன்றோரை அழிக்க காத்திருக்கிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்..எங்கள் நாட்டுக்காக போராடுவோம்; இத்தகைய சக்திகளை முறியடிப்போம்” என எண்டீடிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பலரும் எண்டீடிவி நிறுவனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.