எண்டீடிவி நிறுவனர் பிரனாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டிருப்பது ஊடகங்களை அச்சுறுத்தும் செயல் என்றும் இது அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி என்றும் பிரபல ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜ்தீப் சர்தாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2010 ல் பதியப்பட்ட வழக்கில் 2017-ல் சோதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ மற்றும் வருமானவரித்துறை வெளிப்படையாக விவரங்களைச் சொல்ல வேண்டும் இல்லையெனில் இது ஊடகத்தின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாகவே கருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்வாதி சதுர்வேதி, ‘சந்தேகமில்லாமல் பிரனாய் ராய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட செய்தியாகவே பார்க்க வேண்டும். சோரி (அருண் சோரி) என்னிடம் சொன்னதுபோல இது அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி!” என தெரிவித்துள்ளார்.
சல்மான் அனீஸ்: பிரனாய் ராயின் தேர்தல் திறனாய்வை ரசித்து பார்த்து வளர்ந்தவன் நான். அரசியலில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர். இந்தச் செய்தி என்னை பாதித்துள்ளது.
அஷுதோஷ்: எண்டீடிவி நிறுவனத்துக்காக மற்ற ஊடகங்கள் குரல் கொடுக்காதது வெட்கப்பட வேண்டியது. நாளை அவர்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்.
சகரிகா கோஷ்: பத்திரிகை அறத்துக்கு உதாரணமாக திகழ்ந்தவர் பிரனாய் ராய். இதை என்னால் நம்ப முடியவில்லை.
நிகில் வாக்லே: எண்டீடிவி மீதான சோதனை மூலம் நரேந்திரமோடி இங்கே அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி உள்ளதை அறிவுறுத்தியுள்ளார். யாரெல்லாம் இந்த அரசாங்கத்தை எதிர்க்கிறார்களோ அவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படும்!
பிரவீன் ஸ்வாமி: எமர்ஜென்ஸின் போதுதான் இது நடந்தது. எண்டீடிவி மீதான சோதனை அந்த கணத்தை வரையறுக்கிறது.
ஸ்ரீனிவாசன் ஜெயின்: இந்தச் செய்தி தெளிவாக ஒன்றைச் சொல்கிறது…சுதந்திரமான குரல்கள் ஊடகங்களில் ஒலிக்கும்போதெல்லாம், அவை ஒடுக்கப்படும். இது கருப்பு தினம்!
ராமச்சந்திர குஹா: ரூ 48 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார். அதானிகள் ரூ. 17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்களே… கௌதம் அதானி வீட்டில் அடுத்த சோதனையை எதிர்பார்க்கலாமா?