மாதவிடாய் வலி நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை!

கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

மாதவிடாய், குருதிப்போக்கு மற்றும் நாப்கின்கள் குறித்து பொதுவெளியில் நாம் பேச தொடங்கிவிட்டோம். ஆனால், மாதவிடாய் வலியை மட்டும் ஏன் இன்னும் இயல்பாக்கிக் கொண்டிருக்கிறோம்? இதில் பரிதாபம் என்னவென்றால், இக்கொடிய வலியை அனுபவிக்கும் பெண்களும் கூட இதை இயல்பு என்றழைப்பது தான்.

மாதவிடாய் வலி என்பது அதிகாரப்பூர்வமாக மாரடைப்பைப் போன்று கொடுமையானது என்று ஒரு ஆராய்ச்சியின் முடிவு வெளிப்படுத்துவதாகவும், பெண்களின் வலியை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிப்பது மருத்துவத் துறையிலுள்ள ஒரு பழக்கம் என்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் இனப்பெருக்க சுகாதாரப் பேராசிரியர் ஜான் கில்லெபோட் தெரிவித்தார்.

மாரடைப்பு இயல்பானதாக கருதப்படாத நிலையில், அதற்கான மருத்துவங்களை எடுத்துக் கொள்வதற்கு இரண்டாம் சிந்தனை கொடுக்கப்படாத நிலையில், ஏன் அதனை ஒத்த மாதவிடாய் வலியை மட்டும் தீவிரமாக கருதுவதில்லை?

ஆமாம்! பெண்களின் பிரச்சனைகளை விட ஆண்களின் பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் மரபான முன்னுரிமையே இதற்கு காரணம். மாதவிடாய் வலியை இயல்பாக்குவதும் கூட பெண்களையும், அவர்கள் பிரச்சனைகளையும் வழக்கமான பாலியல் கண்ணோட்டத்தின் காரணமாக புறக்கணிப்பதே ஆகும்.

இப்படியான தண்டிக்கும் தசைப்பிடிப்புகளையும், வலியையும் ஆண்கள் அனுபவிக்க வேண்டியிருந்திருந்தால், இதுநாள்வரையிலும் இதனை ‘இயற்கை’ என்று அழைத்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா?

menstral pain

இதற்கான விடை “நிச்சயமாக இல்லை” என்பதாகவே இருந்திருக்கும்! எனவே, மாதவிடாய் வலியை இயல்பாக்குவதென்பது பெண்களுக்கு எதிரானதும், ஆணாதிக்கமும் ஆகும்.

இந்த விஞ்ஞான உலகில், மாதவிடாய் வலிக்கு சிகிச்சையளிக்க பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ முறைகளை கையாண்டாலும், மாதவிடாய் வலியிலிருந்து திறம்பட நிவாரணமளிப்பதாக அறிவியல்ப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பது பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளும், கருத்தடை கருவிகளும் மட்டும் தான்.

ஆகவே, மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவோ அல்லது கருத்தடை கருவியை கர்ப்பப்பையில் பொருத்திக்கொள்ளவோ மருத்துவ பரிந்துரை வழங்கப்படுகிறது. அதன்படி செயல்பட்ட பெண்களும் வலி இல்லையென்றோ அல்லது ஒப்பீட்டளவில் குறைவான வலி மற்றும் குருதிப்போக்கு இருப்பதாகவோ தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய, அகன்ற கண்ணோட்டத்தில் சொல்லப்போனால் ஆசிய, பண்பாடானது கன்னித்தன்மை திணிப்பு மற்றும் பெண்களின் பாலியல் தேர்வில் விதிக்கப்படும் கட்டுப்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பதினால், அவளது திருமணம் வரையிலும் அவளுடைய கன்னித்தன்மை குறித்து பெருமைப்பட கட்டாயப்படுத்தப்படுகிறாள். இல்லாவிடில் அவளது வாழ்க்கையே பயனற்றதாகிவிடுகிறது.

ஒரு பெண் அவளது உடல் குறித்து வெளிப்படையாக பேசுவதோ, பாலியல் மற்றும் இதர உடலுணர்வுகள் குறித்து வெளிப்படுத்துவதோ பண்பாட்டு மீறலாக விமர்சிக்கப்படுகிறது.

மதத்தின் பார்வையில், மாதவிடாயின் உயிரியலும், மாதவிடாய் சுழற்சியில் இருக்கும் பெண்களும் சடங்குரீதியாக தூய்மையற்றதா(வர்களா)க நம்பப்படுவதன் விளைவாக, மாதவிடாய் காலத்தில் பண்பாட்டு மற்றும் சமூக வாழ்விலிருந்து அப்பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

அதன் பலனாக, இந்தியா போன்ற பழமைவாத பண்பாட்டு பின்புலத்திலிருந்து வரும் மருத்துவ பயிற்சியாளர்கள், பெண் மருத்துவர்கள் உட்பட, மாதவிடாய் வலியை அக்கறையோடு சிகிச்சையளிக்க வேண்டிய தீவிரமான உடல்நல பிரச்சனையாக கருதுவதில்லை. இல்லையேல், திருமணமாகாத பெண்கள் உடலுறவு, கர்ப்பத்தடை போன்றவைகள் தொடர்பானவற்றை தெரிந்துக் கொள்ளவோ, கலந்துரையாடவோ கூடாது என்ற பண்பாட்டு கடமைக்கினங்க மாதவிடாய் வலிக்கு கருத்தடை சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பதில்லை.

திருமணமாகாத பெண்கள் உடலுறவு குறித்தோ, தங்களின் உடலைக் குறித்தோ கூட எதுவும் தெரிந்துக்கொள்ள கூடாது எனும் அதேவேளையில், திருமணம் ஆனதும் தன் கணவன் விரும்பும்படியெல்லாம் பாலியல்ரீதியாக மனநிறைவடைய செய்ய வேண்டும், காலம் தாழ்த்தாமல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை, அவள் அதனை செய்ய தவறிவிட்டால், அதற்கான பழியும் அவள் மீதே சுமத்தப்படும்.

இப்பண்பாட்டு திணிப்புகளுக்கும், எதிர்பார்க்கப்படும் பயன்களுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருந்தாலும், அவைகளை பகுத்தறிவின் அடிப்படையிலான ஆய்விற்கு உட்படுத்துவதிலிருந்தும், மனித மேம்பாட்டிற்கு பங்காற்றுவதிலிருந்தும் ஒருவரது மதம் மற்றும் பண்பாடு சார்ந்த கண்மூடித்தனமான நம்பிக்கை தடுக்கிறது.

முதலில், பெண்களாகிய நாம், மாதவிடாய் என்பது மத சடங்கை விட உயிரியலுக்கு தொடர்புடையது என்னும் புரிதல் கொண்டு, நம் உயிரியல் பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் மிக குறைந்த முக்கியத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் அதே வேளையில், கன்னித்தன்மைக்கும் திருமணத்திற்கும் வாழ்வில் எதனுடனும் தொடர்பில்லை என்றுணராத வரை, நாம் மாதந்தோறும் இம்மரண வலியை அனுபவிக்க தான் வேண்டும்.

நமக்காக நாமே தான் செயல்பட வேண்டும், இல்லாவிடில், இந்த ஆணுலகம் இதனை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லாமையால் ஒருபோதும் இதுகுறித்து கவலைப்படப்போவதில்லை.

மேலும் இறுதியாக நினைவில் கொள்ளுங்கள் பெண்களே, மாதவிடாய் வலி நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை!

கிருபா முனுசாமி, வழக்கறிஞர்; சமூக செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.