மத்தியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அரிசி பீருடன் பீஃப் பார்டி கொடுக்கப்படும் என மேகாலயா மாநிலத்தின் கரோ மாவட்ட பாஜக தலைவர் பச்சு சம்பூகோங் மராக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதற்கு தடை கொண்டுவந்த நிலையில் மேகாலயாவின் பாஜக தலைவர் ஒருவரே மாட்டிறைச்சி விருந்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி தவிர்க்க முடியாத உணவு.
இந்நிலையில் மேகாலயாவின் பாஜக முக்கிய தலைவரும் பாஜகவின் செய்தி தொடர்பாளருமான நலின் கோலி, ‘மாநில அரசுகள்தான் மாடுகள் வெட்டப்படுவது குறித்து ஒழுங்கு நடவடிக்கைகளை தீர்மானிக்கும். அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநிலத்தின் உணவு கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். வடகிழக்கு மாநில மக்கள் மாட்டிறைச்சியை உண்பார்கள், அதற்கேற்ற விதிமுறைகளைத்தான் அரசுகள் கொண்டுவரமுடியும்” என செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
ஆனால், பச்சுவின் அறிவிப்பு குறித்து கேட்ட போது, மாவட்ட தலைவர் நீக்கப்படுவார், அவராகவே வெளியேறவிரும்பினால் வெளியேறலாம்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய பச்சு, “நாங்கள் மாட்டிறைச்சி விழாவைக் கொண்டாடுவோம். ஏனெனில் மாட்டிறைச்சி எங்களுடைய பாரம்பரிய உணவு. காரோ மக்களான நாங்கள் மாட்டிறைச்சி இல்லாமல் வாழ முடியாது.
இந்த விவகாரத்தை கட்சி தீர்க்காவிட்டால் தானாகவே கட்சியை விட்டு நீங்குவேன். மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவந்தால் காரோ மலையில் பாஜகவுக்கு ஆதரவு ஒருபோதும் கிடைக்காது” என தெரிவித்திருக்கிறார்.
source: the telegraph