அராத்து
சமீபமாக நிறைய ஃபேக் சிறுகதைகள் படிக்க நேர்கிறது. எல்லா எழுத்தாளர்களுக்கும் இபோது “அதிர்ச்சி” அளிக்கும் சிறுகதைகளை எழுத ஆர்வமாக இருப்பது போலத் தெரிகிறது.
இங்கே “அதிர்ச்சி” என்றால் என்ன ? பெண் அல்லது மனைவி சோரம் போதல். அதிக பட்சம் இன்செஸ்ட் !
இதைத் தவிர நம் நாட்டில் இப்போது அதிர்ச்சி அளிக்கக் கூடியது ஏதுமில்லை.
ஜெயமோகனின் “வெற்றி” சிறுகதையை இந்த நள்ளிரவில் படித்து ஏமாற்றம் அடைந்தேன். முழுக்கவே போலியான சிறுகதை.
லிங்குசாமி சொன்னது போல, இதுவரை கற்ற மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார். மொத்த வித்தையில் ஒரு வித்தை கூட ஒரு நல்ல சிறுகதையாக உருமாற கைகொடுக்க வில்லை. சிறுகதை மொத்தத்தில் பல்லிளித்துக்கொண்டு நிற்கிறது.
சிறுகதைக்கு , ஆன்மாதான் முக்கியம். இந்த கதையில் ஒரு விடலைப் பையனின் ஆன்மாவை , தன்னுடைய இத்தனை ஆண்டு கால எழுத்து அனுபவத்தை வைத்துக்கொண்டு சீவி சிங்காரித்து இருக்கிறார்.
நான்லாம் யாரு தெரியுமா என காட்டுவதற்கு , வயதில் பெரியவர்கள் , வரலாறு , புராணம் , இரண்டாம் உலகப்போர் எல்லாத்தையும் துணைக்கு இழுத்து வியாக்கியானம் பேசுவார்கள். அதுபோல இந்தக் கதைக்கு ஜமீன்தார் , அந்தக்கால கிளப் , ஸ்டேண்டேர்ட் கார் போன்ற விவரணைகள். மேலும் நுணுக்கமான உளவியல் பார்வைகள் , விவரிப்புகள் . எல்லாம் எதற்கு ? ஒரு அரதப் பழசான சிந்தனைக்கு.
மாடர்ன் சிந்தனை என்பது கதைக் கருவிலும் , கதை சொல்லும் முறையிலும் மட்டும் இருந்தால் போதாது. கதையின் ஆன்மாவிலும் இருக்க வேண்டும். நவீன சிறுகதை 50 வருடம் முன்பே எங்கோ போய் விட்டது. இப்போது உட்கார்ந்து 100 ஆண்டுகளுக்கு முன்பான சிறுகதையை ஜெயமோகன் போன்ற ஆட்களே எழுதிக்கொண்டிருந்தால் எப்படி ?
இவ்வளவு விவரணைகளோடும் விளக்கங்களோடும் கதை எழுதி இருக்கும் ஜெமோ கதை எந்த ஊரில் நடக்கிறது , அந்த காஸ்மோபாலிட்டன் கிளப் எந்த ஊரில் இருக்கிறது என்றும் சொல்லி இருக்கலாம்.
அடல்ட்ரியைப் பற்றியோ , செக்ஸைப் பற்றியோ எழுதக்கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா ? அதை எப்படி எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். இந்தக்கதையில் ஜமீன் தார் கை அவள் மேல் படுவதாகக் கூட எழுதவில்லை ஜெமோ. ஆனால் குமட்டிக்கொண்டு வருகிறது. ஃபெட்டிஷ் என்று சொல்வார்களே, அதைவிட ஒரு படி அதிக அருவருப்பாக அசூசையாக இருக்கிறது, கதையில் ஜெமோ கொண்டு வரும் சமய சந்தர்ப்பங்கள்.
வலிய திணிக்கப்பட்ட போலியான மிகப் பழைய சிந்தனையைக் கொண்ட கதை.
எழுத்தாளர் அராத்து தனது முகநூலில் எழுதிய பதிவு இது.