விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே உள்ள தளவாழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. வயது 31. மென் பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இளையராஜா செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள இன்ஃபோசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஐந்து வருடமாக மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
திங்கள்கிழமை வேலைச் சென்ற கணவர் வீடு திரும்பாததை அடுத்து செவ்வாய்கிழமை அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் நேற்றிரவு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் உறங்கி ஓய்வெடுக்கும் அறையில்(dormitory) இளையராஜா இறந்து கிடந்ததை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
இளையராஜா நிர்வாணமாக இறந்துகிடந்தது சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெறும் என இன்ஃபோசிஸ் நிறுவனமும் காவல் துறையும் தெரிவித்துள்ளன.