
திராவிட மாடு
…………………………….
மாட்டுக்கு கொம்பு சீவு
வண்ணம் தடவு
நம் திராவிட மாட்டுக்கு
மாட்டை கட்டிய கயிறை தறி
வரலாற்றின் பட்டிகளைத் திற
திராவிட மாட்டை அவிழ்த்து விடு
திராவிட மாடுகள் வயலில்
ஆழ உழுபவை
திராவிட மாடுகள்
வாடிவாசலில் சீறிப் பாய்பவை
திராவிட மாட்டுபால்
சத்துக்கள் நிறைந்தவை
திராவிட மாட்டுக்கறி
மனதிற்கு இச்சை தருபவை
மாட்டுத்திருடன்
அதிகாரத்தின் மாறுவேடங்களில் வருகிறான்
தந்திரமாக
பட்டிக்குள் நுழைகிறான்
நீ இப்போது
திராவிட மாடுகளை அவிழ்த்து
கையில் பிடித்துக்கொண்டு
மாட்டுச் சந்தைக்குச்செல்
மாடுகளை விற்று
உழவுக்கு தானியங்கள் வாங்கு
நமது நிலங்கள் பாழ்பட்டு விட்டன
நமது மாடுகள் தீவனமின்றி
வயல் வெளிகளில் செத்து விழுகின்றன
நமக்குத் தெரியும்
நம் மாடுகளை என்ன செய்ய வேண்டும் என்று
ஐய்யாயிரம் வருடங்களாக
இந்த மாடுகளை நாங்கள்
எங்களோடு பராமரித்து வருகிறோம்
மாட்டிற்கு எப்படி பிரசவம் பார்க்க வேண்டுமென்று
எங்களுத் தெரியும்
நோயுற்ற கன்றுகளுக்கு
என்ன மருந்து தர வேண்டும்
என்று எங்களுக்குத் தெரியும்
எந்தநேரம் எங்கள் மாடுகளுக்கு’
இணை சேர்க்க வேண்டும் என்று
எங்களுக்குத் தெரியும்
மாட்டுத்திருடர்கள் போன திசையை
எப்படிக் கண்டுபிடிப்பது என்று
எங்கள் ஜோசியர்களுக்குத் தெரியும்
மாட்டுத்திருடனுக்கு
ஒரு மண்ணும் தெரியாது
அவன் தரகனாக இருந்து
திருடனாக மாறியவன்
அவன் நம் மாடுகளை கவர்ந்து கொள்ள
இனிய மொழிகள் பேசுகிறான்
நன்கு வெந்த
ஒரு திராவிட மாட்டு மாமிசத்துண்டை எடுத்து
அவன் வாயில் திணி
மாட்டு சந்தைக்கு எங்கள்
மாடுகளை நாங்கள் அழைத்து செல்கிறோம்
சந்தையின் வழியில்
முள் வேலிகள் போடப்பட்டிருக்கின்றன
‘ மாற்றுப்பாதையில் செல்லவும்’’
என்று ஒரு அறிவிப்புப் பலகை
கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது
திராவிட மாடுகளுக்கு
திராவிட நாட்டில் ஒரு சந்தை
இருக்கிறது
திராவிட மாடுகள்
பொறுமை இழந்து
மண்ணைக் கிளறுகின்றன
எங்கோ ஒரு திராவிட மாடு
உக்கிரமாக கனைக்கிறது
நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டும்
28. 5. 2017
இரவு 10. 48
மனுஷ்ய புத்திரன்
முகப்புப் படம்: டி. என். ஜா எழுதிய The myth of holy cow நூலில் அட்டைப்படத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.