த. கலையரசன்
பாஸிசமும், முதலாளித்துவமும் எவ்வாறு கூட்டிணைந்து வேலை செய்கின்றன என்பதற்கு, இந்தியாவில் மாட்டிறைச்சி தடை ஒரு சிறந்த உதாரணம்.
மதத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்கும் மோடி அரசின் நரித்தனமான திட்டங்களை, பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை.
உலகளவில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. அதை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு மாட்டிறைச்சி தடை உதவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
வெளிநாடுகளில், குறிப்பாக பணக்கார மேற்கத்திய நாடுகளில், இன்றைக்கும் மாட்டிறைச்சியின் விலை அதிகம். ஆகவே, இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெருமளவு இலாபம் கிடைக்க வழியுண்டு.
இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், இது போன்ற சர்ச்சைக்குரிய உணவுப்பொருள் ஏற்றுமதிக் கொள்கை, ஏற்கனவே பல நாடுகளில் நடந்த மக்கள் எழுச்சிகளுக்கு காரணமாக இருந்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதியான உணவுப் பொருட்களுக்கு உள்ளூரில் தட்டுப்பாடு நிலவியதால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.
ஆனால், இந்தியாவில் அப்படியான மக்கள் எழுச்சி வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்குக் காரணம் மதம் மட்டுமல்ல, பாசிச மயமாக்கப் பட்ட சமூக அமைப்பும் தான். கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் மாட்டுக்காக நடந்த கொலைகள் திட்டமிட்டே நடத்தப் பட்டுள்ளன.
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக, மாடு திருடியதற்காக, மாடுகளை வியாபாரம் செய்தமைக்காக பலர் அடித்துக் கொல்லப் பட்டனர். மத வெறியூட்டப் பட்ட கும்பல்கள், அரச ஆதரவுடன் இந்தப் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருந்தன.
புரதச் சத்து மிக்க உணவான மாட்டிறைச்சி இந்திய மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுக்கப் பட்டுள்ளது. இது மக்களின் ஆரோக்கிய நலனில் எந்த அக்கறையுமில்லாத ஓர் அரசு கொண்டு வந்த திட்டம். அதன் பாதிப்புகள் எதிர்காலத்தில் உணரப்படும். ஒருவர் ஊட்டச் சத்தின்றி பட்டினி கிடந்தாலும், மாட்டிறைச்சி சாப்பிட முடியாத நிலைமை வந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் முதலாளிகளின் இலாபவெறிக்கு, இந்திய மக்கள் பலி கொடுக்கப் படுகின்றனர். இந்த அரசு அதை மதத்தின் பெயரில் செய்கின்றது. சிரியாவில் ஐ.எஸ். செய்த அத்துமீறல்களுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சிரியாவில் ஐ.எஸ். அரசும், உள்நாட்டில் பல பொருட்களை மதத்தின் பெயரால் தடை செய்து விட்டு, இரகசியமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். உதாரணத்திற்கு, அகழ்வாராய்ச்சிப் பொருட்களை குறிப்பிடலாம்.
ஐ.எஸ். “இஸ்லாத்திற்கு விரோதமான” புராதன சிற்பங்களை உடைக்கும் படங்களை அவர்களே ஊடகங்களுக்கு வெளியிட்டார்கள். ஆனால், இரகசியமாக அந்தக் கலைப் பொருட்களை மேற்கத்திய நாடுகளில் விற்பனை செய்தார்கள்.
சிரியாவின் ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய – பாஸிச இயக்கம். இந்தியாவின் பா.ஜ.க. ஒரு இந்து பாஸிச கட்சி. ஒரே கொள்கை, ஒரே அரசியல், ஒரே நடைமுறை. உலகின் எந்த நாடாக இருந்தாலும், பாஸிச சக்திகளின் குணங்குறிகள் ஒன்றாகவே இருக்கின்றன.
த. கலையரசன், பன்னாட்டு அரசியல் விமர்சகர்.